ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவு அதிகரித்துள்ளதா? -இந்திரனில்

  ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) சுகாதார மற்றும் குடும்ப நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. இதற்கு மாறாக, பெருந்தொற்று காலத்தில் மிதமாக அதிகரித்த ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவினம், பெருந்தொற்றுக்குப் பிறகு குறைந்துள்ளது.


2017-ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy (NHP)), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.15 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினத்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 2.5 சதவீதமாக உயர்த்துவதாக உறுதியளித்தது. கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசின் சுகாதார நிதிநிலை அறிக்கை எதிரிபார்த்த அளவு வளர்ச்சி அடையாததால், இந்த இலக்கு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. மொத்த பொதுச் செலவினத்தில் ஒன்றிய அரசின் பங்கு 40%-ஆக இருக்க வேண்டும் என்று தேசிய சுகாதாரக் கொள்கை முன்மொழிந்தது. ஒன்றிய அரசின் செலவினம் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.29% என்ற நிலையிலிருந்து 1%-ஆக அதிகரிக்க வேண்டும் — இதற்கு ஒதுக்கீடுகளைக் குறைந்தது மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டியது முக்கியமானதாகிறது.


பொது சுகாதாரத்திற்கான குறைந்த செலவு


பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுகாதாரத்திற்கான பொதுச் செலவினம் பல ஆண்டுகளாக குறைவாகவே உள்ளது. உதாரணமாக, 2021-ல் பூட்டானின் தனிநபர் (per capita) சுகாதாரச் செலவு இந்தியாவின் செலவை விட 2.5 மடங்கு அதிகமாக இருந்தது. அதே சமயம் இலங்கையின் செலவு மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மற்ற அனைத்து BRICS நாடுகளும் இந்தியாவைவிட தனிநபர் சுகாதாரத்திற்காக 14 முதல் 15 மடங்கு அதிகமாகச் செலவிட்டன. இதேபோல், தாய்லாந்து மற்றும் மலேசியாவும் இந்தியாவைவிட தனிநபர் சுகாதாரத்திற்காக குறைந்தபட்சம் 10 மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன.


கோவிட் தொற்று ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக சுகாதாரத்திற்கான பொதுச் செலவு ஓரளவு அதிகரித்துள்ளது. பொதுச் செலவின் பெரும்பகுதி ஒன்றிய அரசை விட மாநிலங்களால் ஏற்பட்டது. கோவிட் தொற்றுக்குப் பிறகும் மாநிலங்கள் இத்தகைய அதிகரிப்பைத் தக்கவைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடுகள் 2017-18-ஆம் ஆண்டில் 0.67%-லிருந்து 2025-26 பட்ஜெட் செலவினம் (BE) விளக்கப்படம் 1-ன் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1%-ஆக அதிகரித்துள்ளன. இதேபோல், இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த மாநில பட்ஜெட்டுகளில் சுகாதார செலவினத்திற்கான பங்கு 5%-லிருந்து 5.6%-ஆக அதிகரித்துள்ளது.


இதற்கு நேர்மாறாக, தொற்றுநோய் காலத்தில் மிதமாக அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஒன்றிய அரசின் சுகாதாரத்திற்கான செலவு, தொற்றுநோய்க்குப் பிறகு குறைந்துள்ளது. விலைவாசி உயர்வின் விளைவைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2025-26 பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீடு, 2020-21-ல் உண்மையில் செலவிடப்பட்டதைவிட 4.7% குறைவாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக, மத்திய அரசின் சுகாதாரச் செலவு 2020-21-ஆம் ஆண்டில் 0.37 சதவீதத்திலிருந்து 2025-26-ஆம் ஆண்டில் 0.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின்போது சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட மிதமான முன்னுரிமைகூட, உடனடி அவசரநிலை முடிந்த பிறகு குறைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்தக் காலகட்டத்தில், ஒன்றிய அரசின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறையின் பங்கு 2.26%-லிருந்து 2.05%-ஆக குறைந்துள்ளது.


மேல் வரி (Cess)பற்றி 



2018-2019-ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் கல்வி வரி (Health and Education Cess (HEC)) ஒருவரின் மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் 4%-ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேல்வரி, சுகாதாரத்திற்கான தற்போதைய அரசாங்க செலவினங்களை விரிவுபடுத்தவும், ஏழை மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், சுகாதார மற்றும் கல்வி வரியாக (HEC) ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், சுகாதார வரவுசெலவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படாமல், அதற்குப் பதிலாக வரி வருவாயை ஈடுசெய்யப் (tax resources) பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, 2023-24 நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் கல்வி வரி மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ரூ.71,180 கோடி ஆகும். இதில் நான்கில் ஒரு பங்கு சுகாதாரத் துறைக்குச் சென்றது, இது சுமார் ரூ.17,795 கோடி ஆகும். இந்த வரித் தொகையைத் தவிர்த்துப் பார்த்தால், 2020-21 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு உண்மையான மதிப்பில் 22.5% குறைந்துள்ளது என்பதை நாம் கவனிக்கிறோம். வரைபடம் 2 இதை தெளிவாக காட்டுகிறது.


குறைக்கப்பட்ட திட்டங்கள்


2014-15 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் சுகாதாரச் செலவினங்களில் 75.9% தேசிய சுகாதார இயக்கம் போன்ற திட்டங்கள் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. காலப்போக்கில், இது தொடர்ந்து குறைந்து 2024-25-ஆம் ஆண்டில் 43%-ஐ எட்டியது. இது அடிப்படை சுகாதார சேவைகளைப் பராமரிக்க போதுமானதாக இல்லை. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதற்கான முக்கிய செலவுகளை மாநில அரசுகள் ஏற்கின்றன என்பதையும், அவை ஒன்றிய அரசால் போதுமான அளவு வளப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், இந்தப் போக்கு சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒன்றிய அரசிடமே உள்ளதாக காட்டுகின்றன.


எந்த சுகாதாரத் திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டை இழந்தன. எந்தத் திட்டங்கள் அதிக நிதியைப் பெற்றன என்பதை ஆராய்வதன் மூலம், சுகாதாரத் துறையில் ஒன்றிய அரசின் உண்மையான முன்னுரிமைகளை கண்டறியலாம். தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா போன்ற பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள், கடினமான காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டபோதிலும், கடுமையான நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளன.


2005-ல் தொடங்கப்பட்ட தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission (NHM)), ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியத் திட்டமாகும். இருந்தபோதிலும், கடந்த ஏழு ஆண்டுகளில், இந்த திட்டத்திற்கான செலவினம் குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2018-19 நிதியாண்டுகளுக்கு இடையில், 2017-18 நிதியாண்டில் ஏற்பட்ட திடீர் உயர்வால், தேசிய சுகாதார இயக்கத்திற்கான செலவினம் சராசரியாக 7.4% வளர்ச்சி கண்டது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், தேசிய சுகாதார இயக்கத்திற்கான செலவினம் சராசரியாக 5.5% குறைந்துள்ளது.

இந்திரனில் ஹரியானாவில் உள்ள ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் அரசாங்கம் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியில் சுகாதாரப் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.


Original Article : Has health spending by the Centre increased? -Indranil

Share: