இந்தியத் தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)), சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கு (Micro, Small and Medium Enterprises (MSME)) ஆதரவளிக்கும் வகையில் வியாழக்கிழமை அன்று நான்கு முக்கியத் திட்டங்களை முன்மொழிந்தார். அவை, விதிமுறைகளை எளிமையாக்குதல், டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துதல், சிறு தவறுகளைக் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து நீக்குதல் மற்றும் காலாவதியான சட்டங்களை அகற்றுதல் ஆகியவையாகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொழில் தொடங்குவதை எளிதாக்குவது குறித்த அகில இந்திய அளவிலான தணிக்கை மாநாட்டில் இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (CAG) கே. சஞ்சய் மூர்த்தி தெரிவித்தார். அப்போது, 'தொழில்முனைவோரை ஊக்குவித்தல், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையானது முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஒரு நாட்டின் தொழில் போட்டித்திறனைக் குறைப்பதோடு, அதன் வளர்ச்சியை முடக்கிவிடும் என்று குறிப்பிட்டார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) சீர்திருத்தங்களுக்கு ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்குச் சிறந்த கொள்கை நோக்கம் மட்டும் போதாது என்றும் அதற்குத் துறைகளுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்புகள், நிலையான அமலாக்கம் மற்றும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தொடர்ச்சியான கருத்துக்களும் அவசியம் என்று இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து (MSME) அரசு மேற்கொள்ளும் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (CAG) தெரிவித்துள்ளார். இது கொள்முதல் தொடர்பான தணிக்கைகளின் அவசியத்தை உணர்த்துகிறது. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தணிக்கை அறிக்கை, வட்டார அளவில் (Block-level) நடத்தப்பட்ட முதல் விரிவான தணிக்கைகளில் ஒன்றாகும் என்றும், இதே போன்ற தணிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 'தொழில் செய்வதை எளிதாக்குதல்' (Ease of Doing Business (EoDB)) மற்றும் 'வாழ்க்கையை எளிதாக்குதல்' ஆகியவை இந்தியத் தலைமைத் தணிக்கையாளரின் முன்னுரிமை பெற்ற துறைகளாகக் கருதப்படுகிறது. இவை மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் என்று மூர்த்தி கூறினார்.
தரவுகளின் அடிப்படையிலான தணிக்கை மற்றும் முடிவெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஏனெனில், ஒரு சிறந்த கொள்கையை உருவாக்க நம்பகமான தரவுகள் மிகவும் அவசியமாகிறது. அரசின் திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியுள்ள நிலையில், தணிக்கையாளர்கள் வழக்கமான தணிக்கை முறைகளை மட்டும் பின்பற்றாமல், வலுவான தரவுப் போக்குகள் உள்ள துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அரசுப் பணிகளில் செயல்திறனை அதிகரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கு இடையே புதுமையான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் தலைமைத் தணிக்கையாளர் சுட்டிக்காட்டினார்.
சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைப்பதிலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள சிரமங்களைக் களைவதிலும் அரசுக்கும் தொழில் துறைக்கும் இடையே நிலவும் சிறப்பான ஒத்துழைப்பு குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.சி.எல். தாஸ் பேசினார். இவர்களுடன் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் சௌரப் கார்க் மற்றும் TeamLease நிறுவனத்தின் தலைவர் மணீஷ் சபர்வால் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் (EoDB) குறித்த அகில இந்திய அளவிலான தணிக்கை (Horizontal Audit), ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது அரசின் செயல்பாடுகளைத் திறன்மிக்கதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய முன்னுரிமைகளுடன் இணைந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாகக் கருதப்படுகிறது. இந்தத் தணிக்கை 2021–22-ஆம் ஆண்டு முதல் 2025–26-ஆம் ஆண்டு வரையிலான காலத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கான கள ஆய்வுகள் (Field Audits) 2026–27-ஆம் ஆண்டுக்கான தணிக்கைத் திட்டத்தின்கீழ் நடைபெறும் என்றும் மேற்கு வங்க முதன்மை கணக்காய்வுத் தலைவர் அலுவலகத்தின் (Audit-II) தலைமையில் நடைபெறும் இத்தணிக்கையில், அனைத்து மாநில தணிக்கை அலுவலகங்களும் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தணிக்கையில் (Audit) ஒன்றிய அமைச்சகங்கள், மாநில அரசுத் துறைகள், மாவட்ட அளவிலான நிறுவனங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தணிக்கையாளரின் (CAG) கூற்றுப்படி, இந்தத் தணிக்கையின் முடிவுகள் அரசு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், விதிமுறைச் சிக்கல்களைக் குறைக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இது ஒரு வெளிப்படையான மற்றும் ஆதரவான வணிகச் சூழலை உருவாக்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) தங்களின் உற்பத்தித்திறன், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்த வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Original Article : CAG suggests four-pronged strategy for MSMEs