கார்பன் உமிழ்வு குறைப்பு முதல் முன்னுரிமையாக இருக்கக் கூடாது -ஜேக்கப் பி கோஷி

 முந்தைய பொருளாதார ஆய்வறிக்கைகளில், உணவு உற்பத்திக்கும் வாழ்வாதாரத்திற்கும் உலகளாவிய அச்சுறுத்தல் என்று காலநிலை மாற்றமானது விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிலக்கரி மற்றும் பெட்ரோல் பயன்பாட்டிலிருந்து வெளியேறி, மற்ற எரிசக்திக்கு மாறுவதற்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2025-26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அத்தியாயத்தில் ஒரு முக்கியமான கருத்தைக் குறிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், அது மனித நாகரிகத்தையே அழித்துவிடும் அளவிற்கு இருக்காது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலான திடீர் கட்டுப்பாடுகளை விதிப்பதைவிட, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சரியான திட்டங்களில் முதலீடு செய்வதே கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வலுவான மற்றும் நிலையான வழியாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முந்தைய ஆய்வறிக்கைகளில், பருவநிலை மாற்றம் என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு உலகளாவிய அபாயம் என்று 'பொருளாதார ஆய்வு அறிக்கை' குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடுகளைக் குறைக்க வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், தற்போதைய புதிய அறிக்கை, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதைவிட, அதன் பாதிப்புகளுக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. சர்வதேச பருவநிலை பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்த அறிக்கை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 


கடந்த ஆண்டில், உலகளாவிய எரிசக்தி சார்ந்த கார்பன் வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


அரசிடம் இருக்கும் குறைவான நிதியை, குறுகிய கால காலநிலை இலக்குகளை அடைவதற்காக மட்டும் சுகாதாரம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளிலிருந்து எடுத்து செலவிடக்கூடாது என்று இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் தான் ஒரு சமூகத்தை வலிமையுள்ளதாகவும், பாதிப்புகளைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் மாற்றுகிறது. எனவே, வளர்ச்சி என்பது காலநிலை நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இருக்காமல், அதற்குத் துணையாக இருக்க வேண்டும். உண்மையில், ஒரு நாட்டின் வளர்ச்சியே மக்கள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.


இந்தியாவின் மிகப்பெரிய காலநிலை மாற்ற இடைவெளிக்கு மொழியே தடையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 


காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளை இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கு (Renewable energy) மிக வேகமாக மாறுவதில் உள்ள அபாயங்களை இந்த அறிக்கை விளக்குகிறது. உதாரணமாக, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் சிறந்து விளங்கும் நெதர்லாந்து நாட்டில், இந்த மின்உற்பத்தி மிக வேகமாக விரிவடைந்ததால் அங்கிருக்கும் மின் விநியோகக் கட்டமைப்பு பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது பழைய காலத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பு, புதிய வேகத்திற்கு ஏற்ப இயங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக மின் தட்டுப்பாடு, தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு தருவதில் தாமதம் மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மின்சாரத்தைக் குறைத்துப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை கொள்கை சார்ந்தது அல்ல என்றும் மாறாகக் கட்டமைப்பு வசதிகள்  சார்ந்தது என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.


காலநிலை மாற்றமும் காலநிலை நீதியும்: பொருளாதார வளர்ச்சியையும் பசுமை மாற்றத்தையும் சமநிலைப்படுத்த இந்தியாவின் முயற்சிகள்.


ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட பெரிய மின்சாரக் கட்டமைப்பு தோல்விக்கு, அதிகப்படியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  உற்பத்தியின்போது ஏற்பட்ட நிலைத்தன்மையற்ற தன்மையும், மாறிவரும் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படாத  மின் விநியோக முறையுமே காரணமாகக் கூறப்படுகிறது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலுக்கு எதிரான விமர்சனம் அல்ல என்றும் மாறாக, போதிய பாதுகாப்பு வசதிகள், மாற்று ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மேலாண்மைத் திறன் இல்லாமல், மிக வேகமாகக் சிக்கலான அமைப்புகளைப் புகுத்துவது, அந்தத் திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்குவதற்குப் பதில் பலவீனமானதாக மாற்றிவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில்கேட்ஸ், கடந்த ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்து தனது கருத்தை மாற்றிக்கொண்டதை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது என்பது மனிதர்களின் துயரங்களை அதிகப்படுத்தும் வகையில் அமையக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C அல்லது 2°C இலக்குகளைப் போலன்றி, உலகம் 3°C வெப்பமடைந்தாலும்கூட மனிதர்கள் வாழக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


போதிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி இல்லாமல், இந்தியாவின் காலநிலை மாற்ற இலக்குகளை (குறிப்பாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது) அதிகரிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது மற்றும் அது நியாயமானதும் அல்ல என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பெட்ரோல், நிலக்கரி போன்ற எரிபொருட்களிலிருந்து சுமூகமாக மாறுவதற்கு, அணுசக்தி போன்ற நம்பகமான மாற்று எரிசக்தி ஆதாரங்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். அத்துடன், கார்பன் வெளியேற்றம் எப்போது உச்சத்தைத் தொட்டு குறையத் தொடங்கும் என்பதற்கான தெளிவான திட்டமும் அவசியமாகிறது. 


அடுத்த பத்தாண்டுகளை இந்தியா வெறும் 'காலநிலை மாற்றக் கொள்கை' சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் தயார்நிலை ஆகியவற்றோடு இணைந்து செயல்படும் வகையிலான ஒரு பரந்த 'எரிசக்தி வியூகமாக' (Energy Strategy) இதனைத் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சிறந்த வணிக நடைமுறைகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் 'கவனமான மாற்றங்கள்' முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, இடர்-சார்ந்த ஒழுங்குமுறைகள் (Risk-based regulation), சந்தை சார்ந்த கருவிகள், டிஜிட்டல் வழி இணக்க முறைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான நிர்வாகம் ஆகியவை சூழலியல் பாதுகாப்பிற்கும் வணிக வளர்ச்சிக்கும் இடையே ஒரு பாலமாக அமைகின்றன.


 Original Article : Cutting carbon emissions should not be top priority -Jacob P Koshy

Share: