தொழிலாளர் சலுகைகளின் விரிவாக்கம், அவர்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் அவர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.
இந்தியா கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes), தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, வருமானப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் நிதிநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சிதறிக் கிடந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம், தொழிலாளர் நிர்வாகத்தை நவீனப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் தொழிலாளர்களுக்குச் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்தச் சட்டங்கள் முயல்கின்றன.
சில தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், இந்தத் தொழிலாளர் சட்டங்களை உற்று நோக்கினால், இந்தச் சீர்திருத்தங்கள் முக்கியமாக நீண்டகாலமாக உள்ள இடைவெளிகளைச் சரிசெய்யவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களை முறையான நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்காகவுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வரையறையின் சீர்திருத்தம்
நிதி உள்ளடக்கத்தின் (Financial inclusion) ஒரு முக்கிய விளைவு "ஊதியம்" என்பதற்கான வரையறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். இதற்கு முன்பு, பல நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைக் (social security contributions) குறைப்பதற்காக, அடிப்படை ஊதியம் (basic pay, அகவிலைப்படி (dearness allowance) மற்றும் இருப்புப்படி (retaining allowance) ஆகியவற்றை மொத்தச் சம்பளத்தில் வெறும் 30% முதல் 35% வரை மட்டுமே வைத்திருந்தன. தற்போது, இந்த ஊதியமானது மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். இந்த மாற்றத்தால் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்ற பலன்களுக்கான பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் இது ஊழியர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது குறிப்பிட்ட காலப் பணியாளர்கள் (Fixed-term employees) ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை (Gratuity) பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இது நவீன தொழிலாளர் சந்தையின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதோடு, குறுகிய கால ஒப்பந்தப் பணிகளிலும் பணிக்கொடை கிடைப்பதை உறுதி செய்கிறது.
பல ஆண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தில் (fixed-term) பணிபுரிந்த தொழிலாளர்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தனர். ஆனால், பணிக்காலம் முடிந்து செல்லும்போது அவர்களுக்கு எந்தவிதமான நிதிப்பலன்களும் கிடைப்பதில்லை. தற்போது பணிக்கொடை (Gratuity) வசதியை இவர்களுக்கும் நீட்டிப்பதன் மூலம், குறுகிய கால வேலையும் சேமிப்பிற்கும் மற்றும் வருமான பாதுகாப்பிற்கும் ஒரு வழியாக மாறுகிறது. வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவை வெறும் ஓய்வுக்கால பலன்களாக மட்டுமல்லாமல், நிதி உள்ளடக்கம் மற்றும் சேமிப்பிற்கும் உதவும் கருவிகளாகச் செயல்படும் என்கின்றனர். இது தொழிலாளர்கள் பணத்தைச் சேமிக்கவும், நிதி அபாயங்களை குறைக்கவும் மற்றும் பணி மாற்றங்களின் போது பாதுகாப்பாக இருக்கவும் பெரிதும் உதவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் TCS, Infosys, HCLTech மற்றும் L&T போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிதிச்சுமையை அதிகரித்துள்ளன. ஏனெனில், இந்த நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தப் பணிகளில் அதிகப்படியானோர் ஈடுபட்டுள்ளனர்.
பணிக்கொடை வழங்க வேண்டிய கட்டாயத்தால் நிறுவனங்களுக்கு 'கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு' ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகளைச் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இந்த கூடுதல் செலவானது தொழிலாளர்களின் வருமானப் பாதுகாப்பையும், வாங்கும் திறனையும் மேம்படுத்துகிறது. இது அதிக நுகர்வு, சேமிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும். சமூகப் பாதுகாப்புப் பலன்கள் அதிகரிப்பது என்பது, நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அல்ல என்றும் மாறாக, உழைப்புக்குக் கிடைக்கும் நியாயமான பங்கு என்கின்றனர். மேலும், இது வேலைவாய்ப்பில் சமநிலை, கண்ணியம் மற்றும் நீண்டகால உறுதித் த்தன்மையை மேம்படுத்துவதில் தொழிலாளர் சட்டங்களின் பங்கினை மிகச்சரியாக எடுத்துக் காட்டுகிறது.
பேரியல் பொருளாதார தாக்கம்
தொழிலாளர் சட்டங்களின்கீழ் உள்ள நிதி உள்ளடக்கம் என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட துறை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நன்மைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளது. தற்காலிகத் தொழிலாளர்கள் (Gig workers), இணையம் சார்ந்த தொழிலாளர்கள் (platform workers) மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படுவது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. இந்திய தொழிலாளர் சட்ட வரலாற்றில் முதன்முறையாக, இந்தத் தொழிலாளர்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு காப்பீடு, வருங்கால வைப்புநிதி (PF) மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது வேலை மாறும்போதோ இந்தச் சலுகைகளைத் தொடர்ந்து பெறும் வசதி, குறிப்பாக புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் நீண்டகாலமாக நிலையான நிதி அமைப்புகளிலிருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தனர். 'ஊதியச் சட்டத் தொகுப்பு' (Code on Wages) அனைத்து துறைகளுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிறது. மேலும், ஊதியத்தில் தேவையற்ற பிடித்தங்களை தவிர்ப்பதோடு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதையும் இது கட்டாயமாக்குகிறது.
ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் வருமானத்தை நிலைப்படுத்துவதுடன், முறையான பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்புத் திறனையும் மேம்படுத்துகின்றன.
வருமானத்தை தொழிலாளர்களுக்குப் பிரித்தளிப்பது முக்கியமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துகிறது. வருமானப் பாதுகாப்பு அதிகரிப்பது தொழிலாளர்களின் வாங்கும் திறனை உயர்த்துகிறது. இது அதிக நுகர்வு, மேம்பட்ட சேமிப்புப் பழக்கம் மற்றும் முறையான நிதி நிறுவனங்களுடன் (வங்கிகள் போன்றவை) அதிகத் தொடர்பை ஏற்படுத்த வழிவகுக்கிறது. பங்குதாரர்களின் வருமானம் பெரும்பாலும் நிதிச் சந்தைகளிலோ அல்லது வெளிநாட்டுச் சொத்துக்களிலோ முதலீடு செய்யப்படலாம். ஆனால், தொழிலாளர்களின் வருமானம் பெருமளவில் உள்நாட்டுப் பொருளாதாரத்திலேயே சுழற்சிக்கு உள்ளாகிறது, இது நாட்டின் தேவையை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை உருவாக்குகிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், தொழிலாளர் சட்டங்கள் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. தொழிலாளர்களின் நிதிநிலையை வலுப்படுத்துவதன் மூலம், அவை பொருளாதார அதிர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, சமூக நிலைத்தன்மைக்கும் பங்களிக்கின்றன.
முந்தைய தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானவை.
இந்த மேம்பாடுகள் இருந்தபோதிலும், சில தொழிற்சங்கங்கள் இன்னும் இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) எதிர்ப்பதோடு, அவை தொழிலாளர்களுக்கு எதிரானது என்றும் விவரிக்கின்றன. முறையான அமலாக்கம் குறித்த சிக்கல்கள் நியாயமானவை என்றாலும், அவற்றை முற்றிலுமாக எதிர்ப்பது அந்தச் சட்டங்களில் உள்ள உண்மையான நன்மைகளைப் புறக்கணிப்பதாக அமையும் என்கின்றனர். சில சமயங்களில், வேலைநிறுத்த அழைப்புகள் சட்டத்தின் உண்மையான விதிகளுக்கு எதிராக இருப்பதைவிட, சீர்திருத்தங்களை நோக்கிய எதிர்ப்பினால் தூண்டப்படுவதாகவே தெரிகிறது. இது பெருமளவு தொழிலாளர் சார்புடைய மற்றும் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த பொதுமக்களின் புரிதலைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் மாற்றமின்றி அப்படியே இருக்க முடியாது. முந்தைய தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானதாகவும் வேகமாக மாறிவரும் தொழிலாளர் சந்தைக்குப் பொருந்தாததாகவும் மாறியிருந்தன. அவற்றை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைப்பது, விதிமுறைகளைப் பின்பற்றுவதை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் பயனளிக்கும் ஒரு தெளிவான முறையை உருவாக்குகிறது.
இந்தியாவின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், வெறும் ஒழுங்குமுறை மாற்றங்களாக மட்டும் பார்க்கப்படாமல், நிதி உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய ஒரு முக்கியமான கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும். பணிக்கொடை சலுகையை விரிவுபடுத்துதல், சமூக பாதுகாப்பு வளையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக இருந்த சட்டரீதியான தடைகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலம், இந்தச் சட்டங்கள் பொருளாதார மதிப்பை மூலதனத்திலிருந்து உழைப்பாளர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் மாற்றியமைக்கின்றன. இது வருமானப் பாதுகாப்பை மேம்படுத்தி, நிதி சார்ந்த கண்ணியத்தை உறுதிப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சியை சமூக நீதியுடன் இணைக்கிறது. இந்தத் தொழிலாளர் சட்டங்களின் உண்மையான வெற்றி, வெறும் எதிர்ப்பிலோ அல்லது வெற்றுப் பேச்சிலோ இல்லை என்றும் மாறாக, இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு தொழிலாளியும் ஆக்கப்பூர்வமாகப் செயல்படுவதிலேயே அடங்கியுள்ளது என்கின்றனர்.
ஆர். முகுந்தன், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) நியமிக்கப்பட்ட தலைவராகவும், டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
original article : The labour codes redefine wages, empower the worker -R. Mukundan