ஆரவல்லி மலைத்தொடர் என்பது எதைக் குறிக்கிறது என்பதை நிபுணர்கள் குழு தெளிவாக வரையறுக்கும் வரை, அந்தப் பகுதியில் மலைத்தொடரைப் பாதிக்கும் எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, ஹரியானா மாநில அரசு குருகிராம் மற்றும் நூ (Nuh) மாவட்டங்களில் செயல்படுத்தவிருந்த பிரம்மாண்டமான 'வன உலா’ (Jungle Safari) திட்டத்திற்குத் தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ள சமீபத்திய தலையீடு, குருகிராம் மற்றும் நுஹ் (Nuh) அருகே ஹரியானா அரசு திட்டமிட்டிருந்த பிரம்மாண்டமான 'வன உலா’ (Jungle Safari) திட்டத்திற்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வன உலா பூங்காக்களில் ஒன்றாக அமையவிருந்த இத்திட்டத்தை, ஒரு முக்கியமான சூழல் சுற்றுலா மற்றும் பல்லுயிர் பெருக்க முன்முயற்சியாக மாநில அரசு முன்மொழிந்திருந்தது.
ஆனால், கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி இது குறித்துத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், "ஆரவல்லி மலைத்தொடர்" என்பதன் சரியான வரைமுறை என்ன என்பதை நிபுணர்கள் குழு முடிவு செய்யும் வரை, அந்தப் பகுதியில் மலைத்தொடரைப் பாதிக்கும் எந்தவொரு செயல்பாட்டையும் முன்னெடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்த நீதிமன்ற உத்தரவு அந்தப் பிரம்மாண்ட திட்டத்திற்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் இது விளக்குகிறது.
ஹரியானா அரசின் 'வன உலா’ (Jungle Safari) திட்டம் என்ன?
ஆரவல்லி விலங்கியல் பூங்கா அல்லது ஆரவல்லி சஃபாரி பூங்கா என்று அழைக்கப்படும் இந்த 'வன உலா’ திட்டம், 2021–22 ஆம் ஆண்டில் ஹரியானா அரசால் உருவாக்கப்பட்டது.
சமீபத்திய ஆண்டுகளில் அதிவேக நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை கண்டுள்ள குருகிராம் மற்றும் நூஹ் (Nuh) மாவட்டங்களில் பரவியுள்ள ஆரவல்லி மலை அடிவாரத்தில், சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது.
பின்னர் அரசாங்கம் இதன் அளவை சுமார் 3,000-3,500 ஏக்கராகக் குறைத்த போதிலும், இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது உலகின் மிகப்பெரிய வன உலா பூங்காக்களில் ஒன்றாகத் திகழும் என்று கூறப்பட்டது. பொதுவாக ஒரு வன உலா பூங்கா என்பது மிருகக்காட்சிசாலையைவிடப் பெரியதாகவும், வனவிலங்கு காப்பகத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் என்கின்றனர்.
மாநில அரசு இந்தத் திட்டத்தை வெறும் சுற்றுலா முயற்சியாக மட்டும் பார்க்காமல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் புதுப்பிக்கும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட நிலங்களை முறையாக நிர்வகிக்கப்படும் சூழலியல் மண்டலங்களாக மாற்றும் ஒரு பாதுகாப்பு சார்ந்த திட்டமாக வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆரவல்லி மலைத்தொடரில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள், "சுற்றுச்சூழல் சுற்றுலா" (Eco-tourism) என்ற பெயரில் நடந்தாலும், அவை வனவிலங்கு நடமாட்டப் பாதைகளைத் துண்டிக்கும் மற்றும் கூடுதல் சூழலியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆரவல்லி திட்டத்தின் மீதான சட்டப் போராட்டம்
ஐந்து ஓய்வுபெற்ற இந்திய வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் People for Aravallis என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இணைந்து தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரவல்லி திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஏற்கனவே மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடருக்கு, இந்தத் திட்டம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாதிட்டனர்.
வியாழக்கிழமையன்று, இந்தச் வன உலா திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய உயர்மட்டக் குழுவிடம் (Central Empowered Committee (CEC)) சமர்ப்பிக்க அனுமதி கோரி ஹரியானா அரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோரை உள்ளடக்கியது), அரியானா மாநில அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ‘வன உலா’ திட்டத்தின் அறிக்கையைச் சமர்ப்பித்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு ஹரியானா அரசு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
சுற்றுச்சூழல் எல்லைகளை நிர்ணயிப்பது நீதித்துறையின் பணி அல்ல என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆரவல்லி மலைத்தொடரை வரையறுக்கும் பணியானது, நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலமே செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆரவல்லி மலைத்தொடரின் எந்தெந்தப் பகுதிகள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதில் தெளிவு கிடைக்கும் வரை, அங்குள்ள நிலப்பரப்பை மாற்றக்கூடிய எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆரவல்லி மலைத்தொடர்களுக்கான வரையறை
ஆரவல்லி மலைத்தொடர் உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்கள் வரை பரவியுள்ளது. இது மிகவும் பாதிப்படையக்கூடிய சூழலியல் அமைப்பைக் கொண்டது. சுரங்கத் தொழில், நிலச் சேதம் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான பல நீதிமன்ற வழக்குகளில் இந்த மலைத் டர் இடம்பெற்றுள்ளது.
ஆரவல்லி மலைத்தொடரை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதனைச் சரிசெய்ய, கடந்த ஆண்டு அரசாங்கம் உயரத்தின் அடிப்படையில் ஒரு சீரான வரையறையை முன்மொழிந்தது. அதன்படி, சுற்றியுள்ள பகுதியைவிட 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கும் எந்தவொரு நிலப்பகுதியும், அதன் சரிவுகள் மற்றும் அருகிலுள்ள நிலங்களுடன் சேர்த்து ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்டது.
இந்த வரையறையினால் பல மலைப்பகுதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, அரசின் அந்த வரையறையை ஏற்றுக்கொண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதத்தில் நிறுத்தி வைத்தது.
நீதிமன்றத்தின் தலையீடு இந்தத் திட்டத்திற்கு என்ன விளைவை ஏற்படுத்தும்?
ஹரியானா அரசு இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்விற்காக சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய நிலையில் அத்தகைய அறிக்கையைச் சமர்ப்பிக்கக்கூட உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
நடைமுறையில் பார்த்தால், ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை குறித்த தெளிவான முடிவு எடுக்கப்படும் வரை, இந்த 'வன உலா’ (Jungle Safari) திட்டத்தைத் தொடர முடியாது. அந்தத் தெளிவு இல்லாமல், சுற்றுச்சூழல் அனுமதிகள், நிலப் பயன்பாட்டு முடிவுகள் மற்றும் சட்டபூர்வமான அங்கீகாரங்கள் போன்றவை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என்கின்றனர்
ஆரவல்லி மலைத்தொடருக்கான வரையறை (Definition) நிர்ணயிக்கும் பணி எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பொறுத்து, இந்தத் தாமதமானது பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட நீடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இது ’வன உலா’ திட்டத்தை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பிற உள்கட்டமைப்பு அல்லது சுற்றுலாத் திட்டங்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் ஹரியானா அரசு என்ன திட்டமிட்டிருந்தது?
ஹரியானா அரசின் ’வன உலா’ (Jungle Safari) திட்டத்திற்கான வரைபடம் மிகவும் விரிவானது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, இந்தத் திட்டத்தில் பின்வருவன இடம்பெற உள்ளன:
தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளுக்கான பெரிய திறந்தவெளி பகுதிகள்.
புலிகள், சிங்கங்கள் போன்ற பெரிய பூனை வகை விலங்குகள் மற்றும் வெளிநாட்டு வகை விலங்குகளுக்கான பிரத்யேக இடங்கள்.
பறவை பூங்காக்கள், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கான பிரிவுகள்.
உள்ளூர் தாவரங்களைப் பாதுகாக்கும் மண்டலங்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்.
விளக்க மையங்கள், சுற்றுச்சூழல் தங்குமிடங்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் கூடிய சஃபாரி பயணங்கள்.
இந்தத் திட்டம் கனமான சிமெண்ட் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிலத்தின் இயற்கையான அமைப்பைப் பின்பற்றியே அமையும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்காகக் கண்டறியப்பட்ட நிலங்களில் பெரும்பாலானவை தரம் குறைந்த அல்லது காடு அல்லாத நிலங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிவியல் ரீதியான காடு வளர்ப்பு மற்றும் வாழ்விடங்களை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் பசுமைப் போர்வையை (செடி, கொடி, மரங்கள்) அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பெரும் முதலீடு தேவைப்படும் என்றும், அநேகமாக பொது-தனியார் பங்களிப்பு மூலம் இது செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
குறுகிய கால பொருளாதார தாக்கம்
குறுகிய காலத்தில், இந்தத் தாமதமானது குருகிராம் மற்றும் நுஹ் (Nuh) மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கலாம். கட்டுமானப் பணி மற்றும் செயல்பாட்டு காலங்களில் போக்குவரத்து, பராமரிப்பு, வனவிலங்கு மேலாண்மை மற்றும் உள்ளூர் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதுதவிர தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் பயண முகவர்கள் போன்ற வணிகங்களும் இதன் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக, ஹரியானாவின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்றாக நுஹ் மாவட்டம் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் இந்தச் ‘வன உலா’ திட்டத்தை, அப்பகுதியின் வளர்ச்சிக்கும் மற்றும் விவசாயத்தைத் தாண்டி பிற தொழில்களில் ஈடுபடுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகவும் கருதியிருந்தனர்.
நீண்ட கால தாக்கம்
சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா (Eco-tourism) மூலம் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைச் சார்ந்தே இருக்கிறது. ராஜஸ்தானின் தார் பாலைவனம் மேலும் விரிவடைவதைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், டெல்லி பகுதியின் 'பசுமை நுரையீரலாக' (Green lung) செயல்படுவதிலும், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதிலும் ஆரவல்லி மலைத்தொடர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
முறையற்ற வளர்ச்சியினால் சுற்றுச்சூழல் சீரழிந்தால், நீர் பற்றாக்குறை, மாசுபாடு அல்லது காலநிலை மாற்ற பாதிப்புகள் போன்ற நீண்டகாலப் பொருளாதார இழப்புகள், சுற்றுலாவால் கிடைக்கும் குறுகிய கால லாபத்தை விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது, தலைமை நீதிபதி காந்த் அவர்கள் பேசுகையில், ஒரு சார்பற்ற நிபுணர் குழு, நீதிமன்றம் ஏற்கும் வகையில் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு செயல்பாட்டையும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்தார். இந்த நிபுணர் குழுவிற்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் நிபுணர்களால் ஆனது அல்ல என்றும் ஒரு சுதந்திரமான அமைப்பின் வழிகாட்டுதலையே நீதிமன்றம் சார்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிபுணர் குழுவின் கருத்து வந்த பின்னரே, ‘வன உலா’ திட்டம் குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி காந்த் கூறினார். அவர் மேலும் கூறுகையில், முக்கியமான விஷயங்களில் நீதிமன்றம் முழுமையாக திருப்தி அடையும் வரை, இன்று ஒரு அங்குல நிலத்திற்கு கூட அனுமதி வழங்கப்படாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதனை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்பது பொருளல்ல, இந்த முழு விவகாரத்தையும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். ஆரவல்லி மலைத்தொடர் ஹரியானாவில் தொடங்கி அங்கேயே முடிவடைவது இல்லை என்றும் அது ராஜஸ்தானில் தொடங்கி அங்கேயே முடிவடைவதும் இல்லை. ஆரவல்லி என்பது ஒரு நீண்ட மலைத்தொடர், எனவே, ஆரவல்லியின் அனைத்து அம்சங்களையும் அதன் ஒட்டுமொத்தப் பரப்பையும் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஒரு தெளிவான தீர்வு வழங்கப்படும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
original article : How Supreme Court stance on Aravalli definition stalls Haryana’s ambitious Jungle Safari project?. -Varinder Bhatia