மத்திய இந்தியாவின் "பசுமை நுரையீரல்" என்று அழைக்கப்படும் ஹஸ்தியோ-அரந்த் வனப்பகுதியில் உள்ள 1,742.6 ஹெக்டேர் அடர்ந்த காடுகளைப் பயன்படுத்தவும், அங்குள்ள 4.48 லட்சம் மரங்களை வெட்டவும் ராஜஸ்தான் மாநில மின் உற்பத்தி நிறுவனம் (Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Limited) அனுமதி கோரியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அதன் கென்டே விரிவாக்க நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக (Kente Extension coal mine) இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்குப் ஈடாக, ராஜஸ்தானில் உள்ள ஏற்கனவே இருக்கும் பிற வன நிலங்களில் மரங்களை நடவு செய்யப்போவதாக அந்த நிறுவனம் முன்மொழிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய அம்சங்கள்:
• ராஜஸ்தான் மாநில மின் உற்பத்தி கழகமான (Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Limited), தனது சப்ரா (Chhabra) மற்றும் சூரத்கார் (Suratgarh) நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக, அக்டோபர் மாதம் 2015-ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றது. தற்போது, அதானி குழுமம் அந்த நிலக்கரி சுரங்கத்தை மேம்படுத்தி இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
• வனப்பகுதிகளை வேறு பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கு அனுமதி வழங்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள வன ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)), பொதுத்துறை நிறுவனத்தின் இந்த முன்மொழிவை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
• சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியமான, இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், ‘Parsa’ மற்றும் ‘Parsa East Kete Basan’ ஆகிய திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதி சுரங்கத் தொழிலுக்கு அனுமதி இல்லாத பகுதி அல்லது 'தடை செய்யப்பட்ட மண்டலமாக' வகைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
• வன (பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) சட்டம், 1980-ன்படி (Van Sanrakshan Evam Samvardhan Adhiniyam, 1980), காடுகள் அழிக்கப்படுவதற்கு ஈடாக மரம் வளர்க்க (ஈடுசெய்யும் காடு வளர்ப்பு), காடு அல்லாத நிலங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை காடு வளர்ப்பிற்காகத் தரம் குறைந்த வனப்பகுதிகள் அல்லது இதர நிலங்கள் பயன்படுத்தப்பட்டால், அதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். காடு அல்லாத நிலங்கள் கிடைக்காத பட்சத்தில், வருவாய் வன நிலங்களில் காடு வளர்ப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். இவை அரசுப் பதிவேடுகளில் காடு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத அல்லது வனத்துறையினரால் நிர்வகிக்கப்படாத நிலங்களாகும். 'ஆரஞ்சு வன நிலங்கள்' (வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகள்) இந்த வகையிலேயே வருகின்றன. இத்தகைய நிலங்களைச் சட்டப்பூர்வமாக மாநில வனத்துறையின் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்வது அவசியமாகும்.
• கடந்த மார்ச் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டம் குறித்து ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 3,236.08 ஹெக்டேர் பரப்பளவில், 81 இடங்களில் ஈடுசெய் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலங்கள் ஏற்கனவே காடுகளாகவோ அல்லது வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களாகவோ (ஆரஞ்சு வன நிலங்கள்) உள்ளன. மேலும், இதில் 1,051 ஹெக்டேர் நிலப்பரப்பு 'மிதமான அடர்த்தி கொண்ட காடு' வகையைச் சார்ந்தது என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• நிலக்கரியின் உள்நாட்டுப் பயன்பாடு (Captive use of coal) என்பது, ஒரு நிறுவனம் நிலக்கரியைத் தனது சொந்தத் தேவைக்காக மட்டுமே சுரங்கம் தோண்டி எடுப்பதைக் குறிக்கும். குறிப்பாக, இந்த நிலக்கரியானது எஃகு தயாரிப்பு, மின்உற்பத்தி மற்றும் சிமெண்ட் உற்பத்தி போன்ற அந்த நிறுவனத்தின் முதன்மைத் தொழில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அந்த நிறுவனத்திற்கு அனுமதி இருக்காது.
• ஹஸ்தியோ அரந்த் வனப்பகுதி அதன் அபரிமிதமான பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக "சத்தீஸ்கரின் நுரையீரல்" என்று அழைக்கப்படுகிறது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையின் (Indian Council of Forestry Research and Education (ICFRE)) கூற்றுப்படி, ஹஸ்தியோ அரந்த் என்பது "மத்திய இந்தியாவின் மிகப்பெரிய பிரிக்கப்படாத காடு" ஆகும். இது மனிதத் தலையீடு இல்லாத, இயற்கையான சால் மரங்கள் (Shorea robusta (Sal)) மற்றும் தேக்கு மரக் காடுகளால் உருவானதாகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பழங்குடியின மக்கள் வாழும் பிராந்தியத்தில், சர்குஜா, கோர்பா மற்றும் சூரஜ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஹஸ்தியோ-அரந்த் நிலக்கரி வயல் (Hasdeo-Arand Coalfield) பரவியுள்ளது. இது மொத்தம் 1,879.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
• இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (Wildlife Institute of India) 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஹஸ்தியோ அரந்த் நிலக்கரி சுரங்கப் பகுதியில் (HAC - Hasdeo Arand Coalfield) உள்ள ஒன்பது விலங்கு இனங்கள், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1-ன்கீழ் சிறப்புப் பாதுகாப்பு பெற்றுள்ளன. இந்த இனங்களில் யானை, சிறுத்தை, கரடி, இந்திய சாம்பல் ஓநாய், தேன் வளைக்கரடி (Honey Badger), நான்கு கொம்பு மான், இந்திய அழுங்கு (Pangolin), மலபார் அணில் (Giant Squirrel) மற்றும் பழுப்புநிறப்புள்ளிப் பூனை (Rusty-Spotted Cat) ஆகியவை அடங்கும். மேலும், ஹஸ்தியோ பகுதி 92 பறவை இனங்கள், 25 பாலூட்டி இனங்கள் மற்றும் 16 பாம்பு இனங்களுக்குப் புகலிடமாக உள்ளது. இது யானைகளுக்கு வாழ்விடமாகவும், அவை இடம்பெயர்வதற்கான பாதையாகவும் இருப்பதுடன், புலிகளின் நடமாட்டத்திற்கான ஒரு முக்கியப் பாதையாகவும் செயல்படுகிறது.
• 2021-ஆம் ஆண்டு இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விச் சபையின் (ICFRE) அறிக்கையின்படி, இங்கு 640 வகையான பூக்கும் தாவரங்கள், 128 வகையான மருத்துவக் குணங்கள் கொண்ட தாவரங்கள் மற்றும் 40 வகையான மரக்கட்டை தரும் மரங்கள் காணப்படுகின்றன.
Orginal article: Why Hasdeo Arand is referred to as the “lungs of Chhattisgarh”? -Priya Kumari Shukla