ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி ஜனநாயகம் தொடர்பான விவாதத்தில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது என்ன?
தற்போதைய செய்தி :
ஜம்மு-காஷ்மீரின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் (District Development Councils (DDCs)) அமைப்பதன் மூலம் மறுசீரமைத்தது, சட்ட மற்றும் அரசியலமைப்புரீதியான விவாதங்களுக்கு உட்பட்ட ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாவட்ட மேம்பாட்டுக் குழுக்கள், 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று ஐந்தாண்டு கால பதவிக்காலத்தை நிறைவு செய்தன. புதிய தேர்தல்கள் நடத்தப்படாததாலும், கடந்த சில ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாத நிலையில் இருந்ததாலும், மாவட்ட வளர்ச்சிக் குழுக்களின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. நேரடி உள்ளாட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு அமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் (DDCs), அதை ஆதரிப்பவர்களால் அடிமட்ட மக்களாட்சி மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன. இருந்தபோதிலும், விமர்சகர்கள், இவை அந்த மாநிலத்தில் ஜனநாயக அதிகாரப் பரவலை (Democratic Decentralisation) வலுப்படுத்துவதற்குப் பதிலாகத் தடையாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் எவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன?
370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்ய முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களில் ஒன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல அரசியலமைப்புச் சட்ட அமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பதே ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளை உருவாக்கும் 73 மற்றும் 74-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது இந்த வாதத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. இந்த ஒருங்கிணைப்பு, வழக்கமான மற்றும் கட்டாயத் தேர்தல்களை உறுதி செய்வதையும், அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?
வழக்கமான அரசியலமைப்புச் சட்டக்கட்டமைப்பு, குடிமக்கள் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும், தெளிவாக வரையறுக்கப்பட்ட பல வகையான தேர்தல் முறையின் அடிப்படையில் செயல்படுகிறது:
நகர்ப்புறங்கள்: இதனின் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகரப்பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன.
கிராமப்புறங்கள்: இதனின் கீழ், கிராமப் பஞ்சாயத்துகள் (கிராமத் தலைவர்கள்), வட்டார வளர்ச்சிக் குழுக்கள் (Block Development Councils (BDCs)) மற்றும் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் (Zila Parishads) ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று அடுக்கு அமைப்புகள் செயல்படுகின்றன.
அரசியலமைப்பின் 243ZD பிரிவின்கீழ் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டிய மாவட்டத் திட்டக்குழு (District Planning Committee (DPC)), பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் தயாரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து, அவற்றை முழுமையான மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டமாக உருவாக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஒரு சுதந்திரமான நிர்வாக அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லாமல், மாவட்டத் திட்டக்குழு (District Planning Committee (DPC)), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, கீழ்மட்டத் திட்டமிடலை எளிதாக்கும் ஒரு அமைப்பை போல செயல்படுவதே திட்டக் குழுவின் (DPC) நோக்கமாகும். இந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக, அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் ஜனநாயக ரீதியிலான அதிகாரப் பரவலாக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே மாவட்டத் திட்டக்குழு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாவட்ட அளவிலான திட்டக்குழுக்களுக்கு (DPCs) அரசியலமைப்புச் சட்டம் முக்கியத்துவம் வழங்கியிருந்தாலும் நாடு முழுவதும் அவற்றின் செயல்பாடுகள் சீரற்ற நிலையிலேயே உள்ளன. கேரளா போன்ற சில மாநிலங்ககளைத் தவிர, பல திட்டக்குழுக்கள் செயல்படாமல் உள்ளன.
மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் (District Development Councils (DDCs)) மாவட்டத் திட்டக்குழுக்களிலிருந்து (District Planning Committee (DPC)) எவ்வாறு வேறுபடுகின்றன?
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் (DDCs) சட்டமன்ற செயல்முறைக்கு பதிலாக நிர்வாக உத்தரவின் மூலம் உருவாக்கப்பட்டன. அரசு, மாவட்ட வளர்ச்சிக் குழுக்களை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளாகவும், அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அமைப்பாகவும் கூறி வந்தாலும், நிர்வாக (Governance) கட்டமைப்பிற்குள் பல முக்கிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்று வாதிடப்படுகிறது.
விமர்சகர்களின் கருத்துப்படி, மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் அமைப்பு, ஏற்கனவே உள்ள மாவட்ட ஊராட்சிகள் (Zila Panchayats) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அமைப்புகளைப் புறக்கணிக்கிறது. அடிமட்ட உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து உருவாகும் வளர்ச்சி முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட வேண்டிய மாவட்டத் திட்டக்குழு (DPC) போல இல்லாமல், மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் (District Development Councils (DDCs)) என்பது நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட துணை (Parallel) நிர்வாக அமைப்பாக செயல்படுகிறது. இதன் விளைவாக, வாக்காளர்களுக்கும் உண்மையில் அதிகாரத்தைப் பயன்படுத்தும் அமைப்புக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாக மாறுகிறது.
முக்கிய வேறுபாடு என்னவென்றால், மாவட்டத் திட்டக்குழுவானது அடிமட்டத்திலிருந்து உருவாக்கப்படும் ஆணைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உள்ளூர் ஜனநாயகத்தை வலுப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், மாவட்ட வளர்ச்சிக்குழுக்கள் (DDCs) மேல்மட்டத்திலிருந்து செயல்பட்டு, கீழ்மட்டத்தில் உள்ள அமைப்புகளுடன் போட்டியிடுகின்றன. அவை ஜனநாயக அதிகாரப்பரவலுக்கான கருவியாக இல்லாமல், அதிகாரத்துவ (Bureaucratic) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கருவியாகவே செயல்படுகின்றன.
மாவட்ட வளர்ச்சிக்குழுவின் கட்டமைப்பு, சமமற்ற பிரதிநிதித்துவம் (unequal representation) குறித்த கவலைகளை எழுப்புகிறது. மாவட்டங்களுக்கிடையிலான இடங்களின் ஒதுக்கீடு மக்கள் தொகை வேறுபாடுகளைப் போதுமான அளவில் காட்டவில்லை; இதனால், சீரான அரசியல் முக்கியத்துவம் என்ற கோட்பாடு பலவீனப்படுகிறது.
உதாரணமாக, 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்ரீநகருக்கும், ஏறக்குறைய 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் கிஷ்த்வாருக்கும் ஒரே எண்ணிக்கையிலான மாவட்ட வளர்ச்சிக் குழு இடங்கள் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது, தனிநபர் சார்ந்த அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துகிறது.
மாவட்ட வளர்ச்சி குழுக்கள் (DDCs), திறன்மிகு நகரத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் “சிறப்பு நோக்கங்களை கொண்ட வாகனங்களுடன்” (special purpose vehicles) ஒப்பிடப்படுகின்றன. அவை அதிகாரப் பரவலாக்கம் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன. ஆனால், மூலதனத்தால் இயக்கப்படும், அதிகாரத்துவரீதியாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்புகளாகச் செயல்படுகின்றன. சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் முயற்சிகளை மாவட்ட வளர்ச்சி குழுக்களால் எளிதில் கைவிட முடியும் என்பதால், அவை ஆளுகைக்குத் துணையாகச் செயல்படுவதைவிட, ஆளுமைக்கு மாற்றாகவே செயல்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 280 மாவட்ட மேம்பாட்டுக் குழு (DDC) உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், மறைமுகமான ஒரு ‘துணை நாடாளுமன்றம்’ போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுரீதியாக, நிலையத்தன்மை இல்லாத பகுதிகளில், மாவட்ட அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மாநில சட்டமன்றங்களை வலுவிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சட்டமன்றம் பல ஆண்டுகளாக பலவீனமான நிலையில் இருந்ததால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிகளிடம் இருக்க வேண்டிய முக்கிய நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள், மாவட்ட வளர்ச்சிக்குழுவின் (DDC) மூலம் மத்திய அரசின் (Union Administration) கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி ஜனநாயகத்திற்கான முன்னேறிச் செல்லும் வழி என்ன?
உண்மையான உள்ளாட்சி ஜனநாயகத்தை நிர்வாக அல்லது சட்டரீதியான நடைமுறையாக குறைத்துவிட முடியாது. இது அடிப்படையில் ஒரு அரசியல் சார்ந்த விவகாரமாகும். மையப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சேவை செய்யும் நிர்வாகக் கட்டமைப்பாக இல்லாமல், மாநில வாக்காளர்களுக்குப் பொறுப்பு அளிக்கும் வகையிலும், நிதி அதிகாரங்கள் மற்றும் வலுவான அடித்தளம் கொண்டதாகவும் உள்ளாட்சி அமைப்புகள் இருக்க வேண்டும். இதற்கு, 73 மற்றும் 74-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின்கீழ் வரையறுக்கப்பட்ட மாவட்டத் திட்டக்குழு (DPC) மாதிரியை மீண்டும் நடைமுறைப்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும்.
டிகேந்தர் சிங் பன்வார் ஓர் எழுத்தாளர், நகர்ப்புறச் செயல்பாட்டாளர், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.