பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கு ’இரு குழந்தைகள்’ விதிமுறையை உச்சநீதிமன்றம் ஏன் கேள்விக்குள்ளாக்கியது? -அமால் ஷேக்

பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கான இரு குழந்தைகள் விதிமுறை குறித்த விவாதத்தை உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் மீண்டும் கிளப்பியுள்ளன. இது தொடர்பான சட்டம், முந்தைய நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மக்கள்தொகைச் சூழலியல் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களைப் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் சட்டங்கள், அவற்றின் உண்மையான நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுகின்றனவா என்று உச்சநீதிமன்றம் ஜூலை 14 அன்று கேள்வி எழுப்பியது.


நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தைச் (declining fertility rate) சுட்டிக்காட்டி, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகவே இக்கொள்கை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இன்று, பல மாநிலங்கள் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இக்கொள்கை தொடர வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ஜாவேத் vs ஹரியானா மாநிலம் (Javed vs State of Haryana) வழக்கை மேற்கோள் காட்டி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.


நீதிமன்றம், வழக்கறிஞர் ருக்மினி போப்டே என்பவரை நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக (friend of the court) நியமித்து, மற்ற மாநிலங்களில் இதேபோன்ற இரு குழந்தைகள் தகுதி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டது. மேலும், மனுதாரரின் வழக்கறிஞரான பதிவு வழக்கறிஞர் (Advocate-on-Record) பிரதீக் பாம்பார்டேவிடம், இது தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த அமர்வு உத்தரவிட்டது.


வழக்கின் உண்மை விவரங்கள்


2023-ம் ஆண்டில், மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் உள்ள ககோடா கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர், சர்பஞ்ச் (தலைவர்) மங்களா பீம்ராவ் இங்கிளே என்பவருக்கு மூன்றாவது குழந்தை இருப்பதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டினார். புகார்தாரர், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளிப் பதிவேடுகளை ஆதாரமாகக் காட்டி, ஓராண்டுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இங்க்ளே (Ingle) தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறினார்.


தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை இங்க்ளே மறுத்தார். ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், அண்டை மாவட்டமான அகோலா மாவட்டத்தில் உள்ள ஹிவர்கேட் கிராமப் பஞ்சாயத்தால் வழங்கப்பட்டது என்றும், தான் புல்டானா மாவட்டத்தில் உள்ள ககோடாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார். மேலும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பெயர் கொண்டிருப்பதாலேயே அந்தக் குழந்தை தனக்குரியது என்று ஆகிவிடாது என்று வாதிட்டு, ஆவணங்களைச் சமர்ப்பித்த அதிகாரிகளைக் குறுக்கு விசாரணை செய்யக் கோரி அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இருப்பினும், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.


அக்டோபர் 2024-ல், மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்துகள் சட்டம்-1959-ன் (Maharashtra Village Panchayats Act) பிரிவு 14(1) (j-1)-ன் கீழ் இங்கிள் தகுதியிழப்புக்கு உள்ளானார் என்று கூடுதல் மாவட்ட ஆட்சியர் அறிவித்து, அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். இந்த முடிவை எதிர்த்து, கூடுதல் ஆணையரிடம் அவர் செய்த மேல்முறையீடு ஏப்ரல் 2025-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.




மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, தனது ஆகஸ்ட் 2025 உத்தரவில், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆணையரின் முடிவுகளை நீதிமன்றம் உறுதி செய்தது. அவரது, மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள், இங்க்ளே தகுதியிழப்புக்கு உள்ளானார் என்ற முடிவை ஆதரிப்பதாக நீதிமன்றம் கூறியது.


சட்டம் என்ன சொல்கிறது?


மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்துகள் சட்டம்-1959-ன் பிரிவு 14(1)(j-1), ஒரு நபருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர் பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது தொடர்ந்து பதவியில் இருப்பதையோ தடை செய்கிறது.


இருப்பினும் இந்தச் சட்டப்பிரிவு, திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும், திருத்தம் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் விலக்கு அளிக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது ஏற்கனவே கர்ப்பங்கள் (pregnancies) இருந்ததையும் இது கணக்கில் கொள்கிறது.


திருத்தத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ள எவரும் பஞ்சாயத்து பதவியில் நீடிக்க முடியாது. ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகத் தங்கள் உள்ளாட்சிச் சட்டங்களில் இதேபோன்ற விதிகளைக் கொண்டுள்ளன.


உச்சநீதிமன்ற முன்மாதிரி


ஜாவேத் vs ஹரியானா மாநிலம்-2003 (Javed vs State of Haryana) என்ற வழக்கில், இரண்டு குழந்தைகள் தொடர்பான தகுதி நீக்கச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை உச்சநீதிமன்றம் முதன்முதலில் ஆய்வு செய்தது. இந்த வழக்கு, 1994-ம் ஆண்டின் ஹரியானா பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் (Haryana Panchayati Raj Act) பிரிவு 175(1)(q) தொடர்பானதாகும். இப்பிரிவு, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஒருவரை சர்பஞ்ச் (பஞ்சாயத்துத் தலைவர்), பஞ்ச் (பஞ்சாயத்து உறுப்பினர்), அல்லது பஞ்சாயத்து சமிதி (ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்) அல்லது ஜிலா பரிஷத்தின் உறுப்பினர் (மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர்) பதவியை வகிக்கத் தகுதியற்றவராக்கியது.


நீதிபதி ஆர்.சி.லஹோதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விதிமுறையை உறுதி செய்தது.


தேர்தலில் போட்டியிடும் உரிமையை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது என்ற வாதத்தின்மீது, நீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தது. அவை, ஜனநாயகத்திற்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவசியமானதாக இருந்தாலும், அது அடிப்படை உரிமையோ அல்லது பொதுச் சட்டத்தின் (common law) கீழான உரிமையோ அல்ல. இந்த உரிமை, முற்றிலும் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு உரிமை (statutory right) என்று நீதிமன்றம் கூறியது. இத்தகைய உரிமையை உருவாக்கும் ஒரு சட்டப்பேரவையே அதற்கான நிபந்தனைகளையும் தகுதிநீக்க விதிகளையும் வகுக்க முடியும்.


சட்டம் தன்னிச்சையானது (arbitrary) என்பது குறித்து, “இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட நபர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இல்லாத நபர்களிடமிருந்து தெளிவாக வேறுபடுத்தப்படக்கூடியவர்கள்” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வகைப்பாட்டுடன் தொடர்புடைய குடும்ப நலன் அல்லது குடும்பக் கட்டுப்பாடுத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், தகுதியிழப்பானது “ஒரு ஊக்கமின்மையை உருவாக்குவதன் மூலம் அந்த நோக்கத்தை அடைவதை” நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அது கூறியது.


அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் முன்வைக்கப்பட்ட சவாலைப் பொறுத்தவரை, பொதுப் பதவியில் நீடிக்கும் அதே வேளையில் குழந்தைகளைப் பெறுவதற்கான கட்டுப்பாடற்ற உரிமையும் தனிநபர் சுதந்திர உரிமையில் அடங்கும் என்ற வாதத்தை அந்த அமர்வு நிராகரித்தது. மேலும், அரசியலமைப்புப் பிரிவு 21 இன் பொருள் எவ்வளவு பரந்த அளவில் விளக்கிக் கூறப்பட்டாலும், அப்பிரிவு உத்தரவாதம் அளிக்கும் வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமையை இச்சட்டம் மீறுகிறது என்று வாதிடுவது பயனற்றது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நீதிமன்றம் தனது தீர்ப்பின் முக்கியப் பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டதாவது, "ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்க விரும்பினால், தற்போதைய சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை உண்டு. இருப்பினும், அதற்காக அவர் ஒரு சிறிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அது, பஞ்சாயத்தில் ஒரு பதவியை வகிக்கும் தகுதியை இழப்பதாகும்” என்று கூறியது. இந்தத் தகுதியிழப்பு, “மக்களின் சமூக-பொருளாதார நலன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என்ற பாராட்டத்தக்க நோக்கத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், தேசிய மக்கள்தொகைக் கொள்கைக்கு இணக்கமானதாகவும் உள்ளது” என்று தீர்ப்பளித்து, ஹரியானா விதிமுறையை உறுதி செய்தது.


கருவுறுதல் விகிதம் குறைவது ஏன் முக்கியமானது?


உச்சநீதிமன்றத்தின் கருத்துகணிப்புகள் இந்தியாவில் நிகழும் ஒரு பரந்த மக்கள்தொகை மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அரசாங்க ஆய்வுகளின்படி, நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)), அதாவது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.1 என்ற மாற்று நிலைக்குக் (replacement level) கீழே குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு காலத்தில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திய பல மாநிலங்கள், தற்போது வயதான மக்கள்தொகை மற்றும் குறைந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவற்றுடன் போராடி வருகின்றன.


சில மாநிலங்கள் ஏற்கனவே பெரிய குடும்பங்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. ஜூன் மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 1.5 ஆகக் குறைந்து, மாற்று அளவைவிட மிகவும் குறைவான நடவடிக்கையைத் தொடர்ந்து, இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரொக்க ஊக்கத்தொகையை அறிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் மொத்த கருவுறுதல் விகிதம் சுமார் 1.1 ஆக இருந்துவரும் சிக்கிம் மாநிலமும், குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக நிதி ஊக்கத்தொகைகளையும் குழந்தை பராமரிப்பு ஆதரவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.




இந்த சரிவானது, உயர்ந்து வரும் கல்வி நிலைகள், மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு, நகரமயமாக்கல் மற்றும் குறிப்பாகப் பெண்களிடையே மாறிவரும் சமூக, பொருளாதாரத் தேர்வுகள் ஆகியவற்றுடன் பரவலாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பெரிய குடும்பங்களைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள், அவற்றின் அசல் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுகின்றனவா என்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, மாறிவரும் மக்கள்தொகைச் சூழலே அடிப்படையாக அமைந்தது.


Original Link: Why the Supreme Court questioned the two-child rule for panchayat elections?.

Share: