சமீபத்திய ஐ.நா. அறிக்கையின்படி, நாடுகள் 'அமைதிக்கான முதலீடுகளைவிட, போர்க் கருவிகளுக்கான செலவினங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றன'.
ஏன் செய்திகளில்?
2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் "உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2026" என்ற அறிக்கை, 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.7% வளர்ச்சி அடையும் என்று கூறுகிறது. இது 2025-ஆம் ஆண்டிற்குக் கணிக்கப்பட்ட 2.8% வளர்ச்சியைவிட சற்றுக் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், முன்னர் கணிக்கப்பட்டதைவிட 40 அடிப்படைப் புள்ளிகள் அதிகம் என்கின்றனர். மேலும், அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் புதிய வர்த்தக நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாகவே நீடிக்கின்றன என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் (Department of Economic and Social Affairs (DESA)), வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டுடன் (United Nations Conference on Trade and Development (UNCTAD)) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து மண்டல ஆணையங்களுடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
1. ஐ.நா. அறிக்கையின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவச் செலவு 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இது குறைந்தது 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக அதிகமான வருடாந்திர உயர்வாகக் கருதப்படுகிறது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் உலகின் மிகப்பெரிய தொகையை ராணுவத்திற்கு செலவு செய்யும் முதல் 10 நாடுகள்தான் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 10 நாடுகளின் மொத்தச் செலவு, உலகளாவிய மொத்தச் செலவில் ஏறக்குறைய 75 சதவிகிதமாகும் என்கின்றனர்.
2. பாதுகாப்புச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான அதிகரிப்பு, மனித வளம், உள்கட்டமைப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி ஆதரவு ஆகியவற்றில் செய்யப்படும் நீண்டகால முதலீடுகளிலிருந்து நிதியை நாடுகள் அதிகளவில் ராணுவ செலவினங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது.
3. அந்த அறிக்கையின்படி, 2027-ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி சற்று உயர்ந்து 2.9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வளர்ச்சி 2010 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் காணப்பட்ட சராசரியான 3.2 சதவிகித வளர்ச்சியைவிட குறைவாகவே இருக்கும் என்கின்றனர். குறைந்த முதலீடு, அதிக கடன் மற்றும் பல நாடுகளில் உற்பத்தி திறனைக் குறைக்கும் வரையறுக்கப்பட்ட நிதிக்கட்டமைப்பு போன்ற காரணங்களால், உலகப் பொருளாதாரம் கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்ததைவிட மெதுவான வளர்ச்சிப் பாதைக்குப் போகக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் திறனை மேம்படுத்தினாலும், அதன் பலன்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு வேகமாகப் பகிரப்படும், எல்லாத் தரப்பு மக்களுக்குமான அணுகல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் இன்னும் நிச்சயமற்றத் தன்மை உள்ளதாகக் கூறப்படுகிறது.
4. ஐக்கிய நாடுகள் சபையானது 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை 20 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 6.6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி சற்று அதிகரித்து 6.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது. 2025-ஆம் ஆண்டுக்கு, இந்தியாவின் வளர்ச்சியை ஐ.நா. 7.4 சதவிகிதமாக மதிப்பிட்டுள்ளது. இது, மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் முடிவடையும் நிதியாண்டுக்காக இந்திய அரசு வெளியிட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீட்டிற்கு சமமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
5. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான நுகர்வோர் தேவையும் அதிக பொது முதலீடும் ஆதரவளிக்கின்றன. இந்த காரணிகள், அமெரிக்காவின் வரிகளின் தாக்கத்தை பெருமளவு சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் எளிமையான பணவியல் கொள்கை (monetary policy) ஆகியவை குறுகியகால ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.
6. இருப்பினும், அமெரிக்காவின் தற்போதைய அதிக வரி விகிதங்கள் தொடர்ந்தால், 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறன் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது. ஏனெனில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்கின்றனர்.
7. பல வளரும் நாடுகள் அதிக கடன், வரையறுக்கப்பட்ட அரசு செலவின திறன் மற்றும் மெதுவான வளர்ச்சியை எதிர்கொள்வதாக ஐ.நா. குறிப்பிட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) நோக்கிய முன்னேற்றம் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக எச்சரித்தார். மேலும், உலகளாவிய ஒற்றுமையை புதுப்பிக்கவும், கூட்டு நடவடிக்கையை வலுப்படுத்தவும் 2025-ஆம் ஆண்டில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
8. இந்த நடவடிக்கைகள் செவில்லா உறுதிமொழி (Sevilla Commitment), வேலைவாய்ப்பு, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்திய உலக சமூக உச்சி மாநாடு (World Social Summit), மற்றும் நிதி, தகவமைப்பு, மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கான ஆதரவு உட்பட வலுவான உலகளாவிய காலநிலைக் கூட்டுறவில் கவனம் செலுத்திய 30-வது காலநிலை மாநாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
செவில்லா உறுதிமொழி
1. வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கான 4-வது சர்வதேச மாநாடு (FfD4) ஜூன் மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 3-ஆம் தேதி வரை ஸ்பெயினின் செவில் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போது, வளரும் நாடுகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (SDGs) ஆண்டுதோறும் தேவைப்படும் 4 டிரில்லியன் டாலர் நிதியளிப்பு இடைவெளியைக் கையாள்வதற்காக, 'செவில்லா உறுதிமொழி' (Sevilla Commitment) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான அமெரிக்கா, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. வளர்ச்சிக்கான நிதியுதவி (Financing for Development (FfD)) என்பது நிதி ஓட்டங்கள் மற்றும் கொள்கைகளை பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளுடன் சீரமைப்பதற்கான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். 1997 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை (Agenda for Development) ஏற்றுக்கொண்டது, அது வளர்ச்சிக்கான நிதியுதவி குறித்து ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த பரிந்துரைத்தது.
3. பல நாடுகள் அதிகரித்துவரும் கடன், குறைந்து வரும் முதலீடு, குறைந்துவரும் சர்வதேச உதவி, மற்றும் ஏற்றப்படும் வர்த்தகத் தடைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றன. இந்த மாநாடு, ஆண்டுதோறும் உள்ள சுமார் 4 ட்ரில்லியன் டாலர் நிதியுதவி இடைவெளியைக் குறைக்க, வளர்ச்சியை ஆதரிக்க, மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்க, மற்றும் தற்போது காலதாமதமாகிவரும் ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதற்கான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
4. 2015-ஆம் ஆண்டு அடிஸ் அபாபா செயல் திட்டத்தின் (Addis Ababa Action Agenda) அடிப்படையில், செவில்லா உறுதிமொழி (Sevilla Commitment) நிலையான வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2030-ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சித் திட்டம் (2030 Agenda for Sustainable Development) மற்றும் அதன் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள், அத்துடன் தொடர்புடைய அனைத்து கொள்கைகளையும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
5. நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDG) காலக்கெடு நெருங்கிவரும் வேளையில், செவில்லா உறுதிமொழியானது (Sevilla Commitment) நிலையான வளர்ச்சிக்கான பெரிய அளவிலான முதலீட்டை அதிகரித்தல், கடன் மற்றும் மேம்பாட்டு நெருக்கடியைச் சமாளித்தல், மற்றும் சர்வதேச நிதி அமைப்பைச் சீர்திருத்துதல் போன்ற மூன்று முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது.
Original Article : UN’s World Economic Situation and Prospects Report 2026 -Khushboo Kumari