முக்கிய அம்சங்கள்:
கலாச்சார அமைச்சகம் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களை பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், நாடு முழுவதிலுமிருந்து பாரம்பரிய பாதுகாப்பில் அனுபவமுள்ள 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் அதன் முன்மொழிவு கோரிக்கைக்கு (Request for Proposal (RFP)) விண்ணப்பித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தெரியவந்துள்ளது.
ஜனவரி 12-ஆம் தேதி முன்மொழிவு கோரிக்கை முடிவடைந்ததும், விண்ணப்பங்களைச் சரிபார்த்து, பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களைப் பட்டியலிடுவதற்காக அமைச்சகம் ஒரு உள்நிலைக் குழுவை அமைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த செயல்முறைக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தனியார் நன்கொடையாளர்கள் இந்த நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களில், இந்திய தொழிலியல்த்துறை (ASI), மாநில தொழிலியல் துறைகள், மத்திய பொதுப்பணித் துறை (Central Public Works Department (CPWD)) அல்லது மாநில பொதுப்பணித்துறை ஆகியவற்றின்கீழ் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதில் அல்லது பாதுகாப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் தேசிய கலாச்சார நிதிக்கு (National Culture Fund (NCF)) இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்கும் நன்கொடை நிறுவனத்திற்கு, தங்களுக்கு விருப்பமான பாரம்பரியப் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர்.
— நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், பணிகள் நன்கொடையாளர் நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், திறமையான நிபுணர்களைக் கொண்ட ஒரு தேசியக் குழுவை உருவாக்க உதவும் என்று தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report (DPR)) செயல்படுத்துவது, பாரம்பரியப் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய தொல்லியல் துறை/சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின்கீழ், திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், அந்தப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது உறுதி செய்யப்படும்.
முன்னதாக, அரசாங்கத்தின் ‘ஒரு பாரம்பரியச் சின்னங்களைத் தத்தெடுப்போம்’ (Adopt a Heritage) திட்டம், நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் நினைவுச்சின்னங்களில் உள்ள நுழைவுச்சீட்டு சாளரங்கள், கழிப்பறைகள், நுழைவாயில்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த அனுமதித்தது. இருந்தபோதிலும், முதல்முறையாக தனியார் நன்கொடையாளர்கள் இப்போது நினைவுச்சின்னங்களில் நடைபெறும் உண்மையான பாதுகாப்புப் பணிகளுக்கு நிதியளிக்கவும், அதில் பங்கேற்கவும் முடியும்.
உங்களுக்குத் தெரியுமா?
— தேசிய கலாச்சார நிதியம் 1996-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் ரூ.20 கோடி ஆரம்ப நிதியுடன் உருவாக்கப்பட்டது. அடிப்படை நிதியைத் தக்கவைத்துக்கொண்டு, நினைவுச்சின்னங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வட்டித் தொகையைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. அன்று முதல், பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் 140 கோடி ரூபாய் தேசிய கலாச்சார நிதியத்திற்கு வந்துள்ளது. இந்த நிதி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் 100 பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய கலாச்சார நிதியம் ஒரு மன்றம் மற்றும் ஒரு செயற்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரின் தலைமையில் இயங்கும் இந்த மன்றத்தில், நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் அறக்கட்டளைகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். செயற்குழுவிற்கு (Executive Committee) கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்குகிறார்.
தேசிய கலாச்சார நிதியத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகள் 100% வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை என்பதால், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) மூலம் பெருநிறுவனங்கள் அதனுடன் கூட்டு சேர ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
Original Article : What is the National Culture Fund? -Khushboo Kumari