முக்கிய அம்சங்கள்:
— ஆரம்பகட்ட உற்சாகம் குறைந்த பிறகு, ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் மற்றுமொரு முன்தேதியிட்ட வரி குறித்து வெளியான அறிவிப்பாகும். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சவரன் தங்கப் பத்திரங்கள் (sovereign gold bonds (SGBs)) மூலம் ஈட்டப்படும் மூலதன ஆதாயங்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— தங்கத்தின் விலை குறைவாகவும், நிலையாகவும் இருந்த 2015-16 காலகட்டத்தில் (அதாவது 2011-12-ஆண்ட காலகட்டத்தில் உச்சத்திலிருந்து விலை குறைந்திருந்த போது), ஒன்றிய அரசு இந்த 'தங்கப் பத்திரத் திட்டத்தை' (SGB) அறிமுகப்படுத்தியது. ஆனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வதற்கு முன்பே, 2024-ஆம் ஆண்டில் இந்தப் பத்திரங்களை வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது.
— அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையேயான தங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) நிபந்தனை இதுதான்: நீங்கள் தங்கத்தைப் பத்திரமாக (Paper Gold) வாங்குகிறீர்கள், அதைத் திரும்ப விற்கும்போது பணமாகப் பெற்றுக் கொள்கிறீர்கள். தங்கத்தின் விலை உயர்வதால் கிடைக்கும் லாபமோ அல்லது விலைக் குறைவால் ஏற்படும் நஷ்டமோ - அது முதலீட்டாளரையே சாரும் என்றும் தங்கத்தின் விலை உயர்ந்து உங்களுக்கு லாபம் கிடைத்தால், அதற்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டது. அதே சமயம் தங்கத்தின் விலை குறைந்து நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தையும் நீங்களே ஏற்க வேண்டும்.
— தற்போது தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கடந்தகால முதலீடுகளுக்கும் சேர்த்து 12.5% நீண்டகால மூலதன ஆதாய வரி (long-term capital gains tax (LTCG)) விதிக்கப்பட உள்ளது. குருசேவ் (Khrushchev) சொன்னதைச் சற்றே மாற்றிச் சொன்னால், அரசாங்கத்தின் நிலைப்பாடு இப்படித் தோன்றுகிறது: 'என்னுடையது என்னுடையதுதான்; உன்னுடையதும் என்னுடையதுதான்!'
— முன்தேதியிட்ட வரி விதிப்பது (Retrospective taxes) பேராசை நிறைந்தது மற்றும் அநீதியானது மட்டுமல்ல என்றும் அது சட்டத்திற்குப் புறம்பானதாகவும் கருதப்பட வேண்டும். மேலும், இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தை ஒரு குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும், அறிவற்றதாகவும் மற்றும் வளர்ச்சிக்கு இடையூறாகவும் செயல்படுவது போல காட்டுகின்றன.
— தங்கப் பத்திரங்கள் (Gold Bonds) மூலம் அரசாங்கத்திற்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. இந்தத் தங்கப் பத்திரத் திட்டம் (SGB), தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைத்தது. அதன் விளைவாக, நாட்டின் 'நடப்புக் கணக்கு இருப்பு' (Current Account Balance) அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையாமல் நிலையாக இருக்க உதவியதோடு சில நேரங்களில் ரூபாயின் மதிப்பு உயரவும் இந்தத் திட்டம் வழிவகுத்தது.
— முன்தேதியிட்ட வரிகளை விதிக்கும் முறை (Retrospective taxes), இந்தியாவின் நிதிநிலைத் திட்டம் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் விதத்தைப் பாதிக்கிறது. நிதிநிலைத் திட்ட முடிவுகளை ரகசியமாக வைத்திருப்பது என்பது காலனித்துவ காலத்துப் பழைய நடைமுறை என்றும், 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்கிற இலக்கை நோக்கி நாம் பயணிக்கும் இந்த காலத்திலும் அதை இன்னும் பின்பற்றுவது சரியல்ல என்றும் வாதிடுகின்றனர்.
— கடந்த பத்து ஆண்டுகளாக, நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முறையை இன்னும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 200 ஆண்டுகள் பழமையான இந்த ரகசியம் காக்கும் முறையைத் தொடரவேண்டிய அவசியம் இல்லை என்றும் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முறையானது வெளிப்படையாகவும், பலரது ஆலோசனைகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அதே சமயம் இறுதி முடிவுகளை மட்டும் கொள்கை வகுப்பாளர்கள் எடுக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
— நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, பொருளாதாரத்தின் முக்கியப் பிரச்சனையான 'தனியார் முதலீட்டு வளர்ச்சி மந்தமாக இருப்பதை' சரிசெய்ய ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் பல பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.
— மொத்த உள்நாட்டு உற்பத்தியில் Gross Domestic Product (GDP)) தனியார் முதலீட்டின் பங்கு, அதன் முந்தைய உச்ச அளவான 30 சதவீதத்திலிருந்து சுமார் 10 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. இந்திய முதலீடுகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன, ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்கு வருவதில்லை. நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு (Net Foreign Direct Investment (FDI)) தொடர்ந்து சரிந்து வருகிறது. சொல்லப்போனால், 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு, நமது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு
ஒப்பிடுகையில் இப்போதுதான் நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) மிகக் குறைந்த அளவில் சரிந்துள்ளது.
— 2012-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த 'முன்தேதியிட்ட வரி விதிப்பு' (Retrospective tax) மற்றும் 2015-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட 'மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்' (Model Bilateral Investment Treaty) ஆகியவற்றால் தனியார் முதலீடுகள் வெகுவாகக் குறைந்தன. அந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இந்திய நிறுவனத்திற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டால், முதலில் ஐந்து ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க முயல வேண்டும் என்றும் அதில் தோல்வியடைந்தால் மட்டுமே, இந்திய நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
— இத்தகைய கடுமையான விதிகளால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற முடிவெடுத்தனர். மாற்றியமைக்கப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Investment Treaty (BIT)), மூன்று ஆண்டுகால இடைவெளி மற்றும் ஒரு சர்வதேச நீதிபதியை நியமிக்க பரிந்துரைக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் ஒரு சிறிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— ஒன்றிய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்படும் ஒரு வகை கடன் பத்திரங்களே தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds (SGBs)) ஆகும். இதில் ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கத்திற்கு நிகரானது. இந்தப் பத்திரங்களை நீங்கள் இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market) வர்த்தகம் செய்ய முடியும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பெறலாம். அரசு தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், இந்தத் தங்கப் பத்திரங்கள் ஒரு நிலையான வட்டிவிகிதத்தை வழங்குவதால், முதலீட்டாளர்களுக்குத் தகுந்த வருமானமும் கிடைக்கிறது.
Original article : What is retrospective tax? -Khushboo Kumari