குடிமக்களின் நலன்களும் இயற்கை வளப் பாதுகாப்பும் -கலைசெல்வன் பெரியசாமி

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், அங்கு சட்டப்பூர்வமாக நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளர்களைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது அரசாங்கத்தின் மிக முக்கியக் கொள்கையாக மாறியிருப்பது முற்றிலும் சரியானதுதான். தென்னிந்தியாவின் கடைசி இயற்கைச் சதுப்புநிலங்களில் ஒன்றான, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் தளமாக (Ramsar Site) அங்கீகரிக்கப்பட்ட சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், வெள்ளப் பாதிப்பைக் குறைப்பதிலும், நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் அது கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும், இந்தச் சதுப்புநிலம் மற்றும் அதனைச் சுற்றி அமையவிருக்கும் 'கட்டுப்பாட்டுப் பகுதி' (Influence Zone) ஆகியவற்றின் காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்,        அங்கு சட்டப்பூர்வமாக நிலம் வாங்கியுள்ள ஆயிரக்கணக்கான நில உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இது சுற்றுச்சூழல் மேலாண்மை, மக்களின் சொத்துரிமை மற்றும் அரசு அமைப்புகளின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) முன்பு நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள புதிய ஒரு கிலோமீட்டர் 'கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்' (Influence Zone) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority (CMDA)) விதித்துள்ள கட்டுப்பாடுகள் பல முக்கியமான கவலைகளை எழுப்பியுள்ளன.                      உதாரணமாக, இந்த 8,537 ஏக்கர் 'கட்டுப்பாட்டுப் பகுதியில்' ஏறக்குறைய 85% முதல் 90% வரையிலான பகுதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தின்கீழ் (Second Master Plan 2008) ஏற்கனவே குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழில்சார்ந்த செயல்பாடுகளுக்காக "வளர்ச்சிப் பகுதி" (Development area) என்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சதுப்புநிலத்தின் துல்லியமான எல்லை, இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் நீண்டகால ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை இன்னும் ஆய்வு நிலையிலேயே இருப்பதாகப் பல்வேறு அரசு முகமைகள் பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளன.


இந்தக் கட்டுப்பாடுகளின் விளைவுகள் தற்போது தெரியத் தொடங்கிவிட்டன. பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் குடியிருப்பு மனைகளிலும் வீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மாதச் சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், தங்களது குடும்பத்திலேயே முதல்முறையாக வீடு வாங்குபவர்கள், சிறு தொழிலதிபர்கள் மற்றும் பல வருட நிதி தியாகங்களுக்குப் பிறகு சட்டப்பூர்வமாக சொத்து வாங்கிய நடுத்தரக் குடும்பத்தினர் ஆவர். இத்தகைய குடும்பங்களுக்கு, நிலம் என்பது வெறும் ஒரு நிதிச் சொத்து மட்டுமல்ல. எனவே, நிலம் சார்ந்த இந்தத் தெளிவற்ற அல்லது நிலையற்ற சூழல் அவர்களின் நிதித் திட்டமிடலை மட்டுமன்றி, மன அமைதியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.


20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சட்டவிதிகளையும் முறையாகப் பின்பற்றி, ஒரு சாதாரண குடியிருப்பு மனையை வாங்கிய ஒரு குடிமகனின் சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம். அவர் அதற்கான பதிவுச் கட்டணங்களை முறையாகச் செலுத்தினார், சொத்து வரிகளை வழக்கமாகத் தாக்கல் செய்தார், மேலும் வங்கிக் கடன்களையும் மிகச் சரியாகத் திருப்பிச் செலுத்தி வந்தார்.                  ஆனால் இன்று, அவருடைய நிலம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு "கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்" (Influence Zone) வருவதால், எதிர்காலத்தில் அங்கு கட்டுமான அனுமதிகள் கிடைக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளார்.  ஏனெனில், அந்த மண்டலத்திற்கான புதிய கட்டுப்பாட்டு விதிகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன.


சமநிலையின் அவசியம்


தாமதமாகும் சொந்த வீட்டுக்கனவோடு தொடர்புடைய சமூகப் பாதிப்புகள் உண்மையானவை மற்றும் முக்கியமானவை என்றாலும், அவை அரிதாகவே தொழில்நுட்ப அறிக்கைகளிலோ அல்லது திட்டமிடல் ஆவணங்களிலோ இடம்பெறுகின்றன. வீடு வாங்குவதைத் தள்ளிப்போடும் முடிவுகள் ஓய்வூதியத் திட்டமிடல், குழந்தைகளுக்கான கல்வி முதலீடுகள், குடும்பப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கின்றன.                               மேலும், சட்டவிதிமுறைகளில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, ஒட்டுமொத்த வணிகச் சங்கிலியிலும் உள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து கட்டுமானத் துறை, பொறியியல், கட்டிடக்கலை, போக்குவரத்து, கட்டுமானப் பொருட்கள் விநியோகம் மற்றும் வீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நம்பியிருக்கும் ஏராளமான சிறு வணிகத் துறைகளைப் பெருமளவில் பாதிக்கக்கூடும்.


கொட்டிவாக்கத்திலிருந்து செம்மஞ்சேரி வரை நீளும் பழைய மகாபலிபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப வழித்தடமானது சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, இதில் சுமார் 60% (2,850 ஏக்கர்) 'கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியாக' (Influence Zone) உள்ளது.                             தற்போதைய கட்டுப்பாடுகளின் காரணமாக, சென்னையின் மிக முக்கியமான மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த வழித்தடத்தின் பெரும் பகுதி, புதிய மேம்பாட்டு அனுமதிகளைப் பெறுவதில் இப்போது நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், பள்ளிக்கரணை சதுப்புநில விவாதத்தின் மற்றொரு பகுதி இன்னும் ஆராயப்படாமலேயே உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் (CMDA) வரையறுக்கப்பட்ட 'ராம்சார் தளம்' (Ramsar Site) எல்லைக்குள், சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட தனியார் நிலங்களும் இருப்பதாகக் கூறப்படுபவைதான் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கடந்தகால நில நிர்வாகம், பத்திரப் பதிவுகள் மற்றும் வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்து பல கேள்விகள் எழக்கூடும். இதற்கான பதில்கள், தற்போது விவாதிக்கப்பட்டு வரும் 'பாதுகாக்கப்பட்ட இடைவெளிப் பகுதி' (Buffer zone) சிக்கலைவிட, மிகவும் சிக்கலான ஒரு நிர்வாகச் சவாலை வெளிப்படுத்தலாம்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தனிமைப்படுத்துவதாகவோ அல்லது மக்களைத் தண்டிக்கும் ஒரு செயல்முறையாகவோ மாறிவிடக்கூடாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாப்பது என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை, அது மிக முக்கியமானது. அதேநேரத்தில், சட்டப்பூர்வமாகச் சொத்துக்களை வாங்கிய குடிமக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளும் சம அளவில் முக்கியமானவை ஆகும். ஒரு முதிர்ந்த ஜனநாயகம் இந்த இரண்டு பக்கங்களையும் ஒருசேரப் பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கான 'ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம்' (Integrated Management Plan (IMP)) நிறைவடையும் நிலையை நோக்கிச் செல்லும்போது, முறையான விதிமுறைகள், பொதுமக்களுடனான ஆலோசனைகள் மற்றும் நியாயமான இடைக்கால நடவடிக்கைகள் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் குடிமக்களின் நலனையும் சமமாகக் கருத்தில் கொள்ள உதவிகரமாக இருக்கும்.


எழுத்தாளர் ஒரு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர் ஆவார்.


Original Link: Citizens interests and conservation 


Share: