இந்திய அறிவுசார் அமைப்பு (Indian Knowledge System (IKS)) மையங்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) கட்டமைப்பில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, 'இந்திய அறிவுசார் அமைப்பு' (Indian Knowledge System(IKS)) என்ற திட்டம், பாரம்பரிய இந்திய ஞானத்தை நவீனக் கல்விப் பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. இந்தியாவின் பூர்வீக அறிவுசார் வரலாற்றை மீட்டெடுப்பதற்கும், ஒரு முறைசாரா கலாச்சார விருப்பத்தை கல்வியின் ஒரு பகுதியாக உயர்த்துவதற்கும் நியாயமான முயற்சியாக உள்ளன. இருப்பினும், இன்று முன்னெடுக்கப்படும் இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) அந்த இலக்கை அடையவில்லை.
உண்மையான இந்திய அறிவுசார் அமைப்பு (IKS), என்பது பாணினியின் (Panini) மொழியியல், நியாய தர்க்கவியல் பள்ளி (Nyaya school of logic), கேரள கணித மரபு (Kerala school of mathematics), வூட்ஸ் எஃகு உருவாக்கம் (development of Wootz steel) போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், ஐஐடி-மண்டியின் (IIT-Mandi) இயக்குனர் லட்சுமிதர் பெஹெரா போன்றவர்களின்கீழ் நிறுவனமயமாக்கப்படும் தற்போதைய இந்திய அறிவுசார் அமைப்பானது (IKS), "புராண அறிவியல்", வரலாறாகச் சித்தரிக்கப்படும் புராணக் கதைகள், தொழில்நுட்பமாக மாற்றப்படும் சடங்குகள் மற்றும் அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கக்கூடிய தன்மையை வெளிப்படையாகப் புறக்கணிக்கிறது.
இந்திய அறிவுசார் அமைப்பின் (IKS) மிகவும் தீவிரமான வடிவம், 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) மூலம் முறைப்படுத்தப்பட்டது. இது உலோகவியல் மற்றும் பண்டைய கணிதத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் தொடங்கியது. பின்னர், வரலாற்று ஆய்விற்கும் மதக் கோட்பாட்டு மறுமலர்ச்சிக்கும் இடையிலான வேறுபாட்டை இது தொடர்ந்து குறைத்து வந்தது. தற்போது ஐஐடி-கரக்பூர், ஐஐடி-காந்திநகர், ஐஐடி-பம்பாய் மற்றும் ஐஐடி-கான்பூர் ஆகிய இடங்களில் இந்திய அறிவுசார் அமைப்பின் (IKS) மையங்கள் உள்ளன. குறிப்பாக, கான்பூர் மற்றும் மண்டி ஆகிய இடங்களில் உள்ள மையங்கள், "உணர்வு" (consciousness), மறுபிறவி மற்றும் "வேத" உயிரியல் தொடர்பான "ஆராய்ச்சியில்" முன்னணியில் உள்ளன. இச்சொற்கள் மேற்கோள் குறிகளுக்குள் இடப்பட்டுள்ளன. ஏனெனில், இந்திய அறிவுசார் அமைப்பைப் (IKS) போலவே, பெயரளவில் அவை எதைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றனவோ, உண்மையில் அவை அதைக் குறிப்பதில்லை.
போலி அறிவியலின் ஆதரவாளர்கள்
இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்களின் ஆதரவாளர்கள், இந்திய மனநிலையை "காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க" (decolonise) முயற்சிப்பதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், இந்தக் கூற்றை தீவிரமாக எடுத்துக்கொள்வது கடினம். 19-ம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சிக் காலத்தில், ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் பிரபுல்ல சந்திர ரே போன்ற ஆளுமைகள், இந்திய அடையாளத்தை முறையான அறிவியல் ஆய்வுகளுடன் ஒருங்கிணைத்தனர். காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது என்பது போலி அறிவியலுக்கு வழிவகுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்கள் நிரூபித்தனர். இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை ஐஐடி-க்களின் கட்டமைப்பிற்குள் புகுத்தத் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், தங்கள் அரசியல்-மதக் கோட்பாடுகளுக்கு அறிவியல் அங்கீகாரம் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க, இந்த நிறுவனங்களின் நற்பெயரைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றன. சமீபத்தில், ஐஐடி-மண்டி (IIT-Mandi) மற்றும் ஐஐடி-கான்பூர் (IIT-Kanpur) ஆகியவை மறுபிறவி குறித்த 'அறிவியல்' சார்ந்த ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்ட ஒரு "சிறப்பு அமர்வை" நடத்தின. குழந்தைகளிடம் காணப்படும் 'முன்ஜென்ம நினைவுகளை' (past life memories) கண்டறிய, எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி தரவுகள் (Electroencephalography (EEG) data) மற்றும் ஜோதிட ரீதியான ஜாதகக் குறிப்புகளைப் பயன்படுத்துவதை இத்திட்டம் முன்மொழிந்தது. சர்ச்சைக்குரிய அமைப்பாகக் கருதப்படும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் 'உணர்வுசார் ஆய்வுகள் துறை'யைச் (Department of Perceptual Studies(DOPS)) சேர்ந்த பேச்சாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு உயர்கல்வித் துறையில் ஒரு நெருக்கடியை வெளிப்படுத்தியது. போலி அறிவியல் (pseudoscience) இப்போது முழுமையாக நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. இதில் பங்கேற்ற ஐஐடி-க்கள் (IITs), தங்கள் கல்விசார் தகுதிகளை மதக் கோட்பாட்டு நம்பிக்கைகளுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. வட இந்தியாவில் உள்ள ஆறு வயது சிறுவன் ஒருவனின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உலகளாவிய மெய்யியல் சார்ந்த கூற்றை (metaphysical claim) ஆதரிப்பதற்கான "முறையான வழிமுறையை" உருவாக்குவது குறித்து அந்த நிகழ்வில் பங்கேற்ற 'ஆய்வாளர்கள்' விவாதித்தனர். சாதாரண மொழியில் சொல்வதானால், இத்தகைய சான்றுகள் வெறும் "தனிப்பட்ட அனுபவக் குறிப்புகள்" (anecdotes) என்றே அழைக்கப்படுகின்றன.
ஒரு குழந்தையின் நரம்பியல் எதிர்வினை மறுபிறவிக் கோட்பாட்டை 'உறுதிப்படுத்த' முடியும் என்று கூறுவது, இந்தியத் தத்துவத்தின் சிறந்த மரபுகளுக்கே இழைக்கப்படும் அவமதிப்பாகும். அந்த மரபுகள் காலத்தின் விசித்திரமான நிகழ்வுகளாகத் திகழ்வதால் சிறந்தவையாக இருக்கவில்லை. மாறாக, அவற்றைப் பின்பற்றியவர்கள் தங்களுக்குக் கிடைத்த உண்மைகளைப் பற்றி நேர்மையாகவும் கவனமாகவும் சிந்தித்ததாலேயே அவை சிறந்தவையாகத் திகழ்கின்றன. இன்று நம்மிடம் உள்ள அறிவியல் உண்மைகள் தெரிந்திருந்தும், வெறும் ஒரு நபரை மட்டும் கொண்ட 'ஆய்வை' நம்புவதும், அல்லது இருமைவாதக் கோட்பாட்டை (உடல்-மனம் வேறுபட்டவை என்ற மறுபிறவிக் கொள்கை) நிரூபிக்க ஒரு பௌதீகக் கருவியான எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபியை (Electroencephalography (EEG) பயன்படுத்துவதும் அபத்தமானதாகும்.
'முந்தைய பிறவி' வாழ்க்கைத் துணையின் புகைப்படங்கள் போன்ற "முந்தைய பிறவி தொடர்பான தூண்டுதல்களை" அக்குழந்தையிடம் காட்டி, அதன் மூளையின் எதிர்வினையைப் பதிவு செய்ய அந்த 'ஆய்வாளர்கள்' திட்டமிட்டனர். சோதனைக்கு முன்னதாகவே அக்குழந்தையுடன் "பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது" மற்றும் "முந்தைய பிறவி குடும்பம்" என்று கூறப்படுபவர்களிடமிருந்து புகைப்படங்களைச் சேகரிப்பது ஆகியவை அவர்களின் செயல்முறையில் அடங்கியிருந்தன. இதன் விளைவாக, ஆராய்ச்சியாளர்கள் தாங்களே பின்னர் கண்டுபிடித்ததாகக் கூறும் தூண்டுதல்களை உருவாக்குகிறார்கள். இது 'உறுதிப்படுத்தல் சார்பு' (confirmation bias) என்று அழைக்கப்படுகிறது. இதனுடன் ஜோதிடத்தையும் இணைப்பது முற்றிலும் அர்த்தமற்றது.
"மேற்கத்திய" அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) மையங்கள் உணர்வுசார் ஆய்வுகள் துறையுடன் (Department of Perceptual Studies(DOPS)) கைகோர்த்தன. ஆனால் உணர்வுசார் ஆய்வுகள் துறையின் (DOPS) பணிகள் அவற்றின் தளர்வான ஆய்வு முறைகளுக்காகப் பெயர் பெற்றவை. இறப்பிற்கும் மறுபிறவி என்று கூறப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், 'முந்தைய பிறவி குடும்பமும்' 'தற்போதைய குடும்பமும்' சந்திப்பதற்கும், தொடர்புகொள்வதற்கும், மறுபிறவி குறித்த கலாச்சாரக் கதைக்கு ஏற்ப தங்கள் தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும் போதுமான வாய்ப்புகள் இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், மறுபிறவி மீது ஏற்கனவே நம்பிக்கை கொண்ட கலாச்சாரங்களில் மட்டுமே "முந்தைய பிறவி நினைவுகள்" பெரும்பாலும் பதிவாகின்றன என்ற உண்மையையும் அந்த 'ஆய்வாளர்கள்' ஆராயவில்லை.
கட்டாயப்படுத்தும் அணுகுமுறை
மாணவர் வன்முறை மற்றும் பாடநூல் திருத்தங்கள் மூலம் வெளியில் இருந்து கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்த முயற்சித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்துத்துவத் திட்டம் இப்போது மேலிருந்து கீழாக அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளிருந்தே மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறைக்கு மாறியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள் (doctoral students) அந்த "சிறப்பு அமர்வில்" கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. களப்பணியாகப் பேய்களைத் தேடுவதற்கு இந்த மையங்கள் ஐஐடி-யின் நிதியையும் ஆராய்ச்சிப் பணியாளர்களையும் பயன்படுத்தியுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023-ம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி, உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் முக்கியமாகக் கல்விக்காக இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) பாடங்களை எடுக்க வேண்டும். ஐஐடி-களின் நிர்வாகிகள், தங்கள் நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறோம் என்பதை அறிந்திருந்தாலும், அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களின் நோக்கம் அறிவியல் தலைமைத்துவம் அல்ல, அது உள்நாட்டு சித்தாந்த ஒருங்கிணைப்பு ஆகும்.
ஐஐடி-களில் பரவிவரும் போலி அறிவியலின் சீரழிவு, காலனித்துவ நீக்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான கோட்டை இன்னும் காணும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு, உயர்மட்ட இந்தியத் திறமையாளர்களை இடம்பெயர ஊக்குவிக்கும். இந்த "சிறப்பு அமர்வுகள்" காரணமாக, சிறந்த சர்வதேச விஞ்ஞானிகள் ஐஐடி பட்டங்களைத் தாழ்வாகக் கருதத் தொடங்குவது, ஒரு மேல்நிலை இந்தியக் கல்வியை உலகளாவிய பகுத்தறிவுத் தரங்களிலிருந்து பிரிப்பதன் மூலம் "தன்னிறைவு" (atmanirbhar) என்ற கருத்துக்கு வலு சேர்க்கும். இறுதியில், இந்தச் சுழற்சி முடிவுக்கு வந்து, இந்திய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட நாகரிகத் திட்டத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தால் மட்டுமே மதிப்பிடப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
Original Link: A Trojan horse has breached the IITs