வெளிநாட்டு பொருளாதாரப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல். -சச்சின் குப்தா

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார நிலையற்றத் தன்மையின் தாக்கங்களை எதிர்கொள்ள, அரசு பல்வேறு கட்டமைப்பு சார்ந்த  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் நிலைமை சீரடையும் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டினாலும், அவை இந்தியாவின் அதிக பொருளாதாரத் தாங்கும் திறனை சோதித்துள்ளன. இந்தச் சம்பவம், எரிசக்தி விலைகள், நாணய அழுத்தங்கள் போன்றவைகளின் மூலம், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எவ்வளவு உணர்திறன் கொண்டதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.


குறைந்துவரும் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) மற்றும் அந்நியப் பங்கு முதலீடு (Foreign Portfolio Investment (FPI)) ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் ஆகியவற்றின் கூட்டு விளைவால் ரூபாய் மதிப்பு  குறைவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.


இதன் விளைவாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)) மற்றும் செலுத்து இருப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட அழுத்தம், டாலர் வெளியேற்றத்தைத் தடுக்கவும் புதிய மூலதன வரவுகளை ஈர்க்கவும் அரசாங்கத்தையும் ரிசர்வ் வங்கியையும் தலையிட வேண்டிய சூழலை உருவாக்கியது.


உடனடித் தளர்வாக இருந்தாலும், கொள்கைரீதியான பதில்  ஒரு முக்கியமான பார்வையை வழங்குகிறது: இந்தியா அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளுக்கு எதிர்வினையாற்றவில்லை. மாறாக, அடிக்கடி நிகழும் உலகளாவிய நிலையற்றத் தன்மைக்கு எதிராக தனது வெளிப்புறப் பாதுகாப்புகளைத்  வலுப்படுத்துகிறது.


தங்கத்தின் மீதான அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான ஏற்றுமதி வரிகள் உள்ளிட்ட ஆரம்பகால ராஜதந்திர நடவடிக்கைகள், சிறிதளவே நிவாரணம் அளித்தன.


ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தேவையை உணர்ந்து, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் (RBI) வெளிநாட்டு மூலதனத்தை நேரடியாக ஈர்ப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த உத்தியைத் தொடங்கின.


முக்கிய  முயற்சிகள்


(i) நிலையான புலம்பெயர் மூலதனத்தை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நாணயத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் (Incentivising Foreign Currency Non-Resident (FCNR)) வைப்புத்தொகைகளை ஊக்குவித்தல். ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு புதிய வைப்புத்தொகைகளைத் திரட்டுவதற்காக, செப்டம்பர் 30, 2026 வரை, 3-5 வருட கால அவகாசத்துடன் ஒரு சலுகைக் கட்டண பாதுகாப்பை வழங்கும், இதன் மூலம் இந்த வைப்புத்தொகைகளுக்கான அசல் சலுகை கட்டண செலவை திறம்பட ஏற்கும். இந்திய ரிசர்வ் வங்கி, FCNR(B) வைப்புத்தொகைகளுக்கு சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio (SLR)) மற்றும் பணக் கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR)) ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம் 4 சதவீதம் வரை செயல்திறன் அதிகரிக்கும். மேலும், முக்கிய வங்கிகள் இந்த நன்மைகளின் ஒரு பகுதியை, அத்தகைய வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 200 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்துவதன் மூலம், கிடைக்கும் பலன்களில் ஒரு பகுதியை வைப்பீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன. இதுபோன்ற தகுதியுள்ள வைப்புத்தொகைகளின் அடிப்படையில் கடன் பெறும் வசதியையும் (leverage) ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.


(ii) பொதுத்துறை நிறுவனங்கள் (public sector undertakings (PSUs)) மற்றும் வணிக வங்கிகளுக்கு, 3-5 ஆண்டுகளுக்குள் முதிர்வடையும் வெளிநாட்டுக் கடன்களுக்கு  1.5 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


(iii) உலகளாவிய முதலீட்டாளர் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, அரசுப் பத்திரங்கள் (G-Secs) மீதான பிடித்தம் மற்றும் மூலதன ஆதாய வரிகளை  நீக்கியுள்ளது.


இந்த நடவடிக்கைகளால் $50 பில்லியன் அமெரிக்க  அதிகமான முதலீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணவீக்கம் தொடர்பான முரண்பாடு


இந்த உத்தியின் முதன்மைச் சவால் ஒரு செவ்வியல் பேரியல் பொருளாதார (macroeconomic) முரண்பாட்டில் உள்ளது: பெரிய அளவிலான டாலர் வரவுகளை ஈர்ப்பதற்கு, மத்திய வங்கி அதற்கு இணையான ரூபாய் பணப்புழக்கத்தை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.


வழங்கல் தரப்பில் உள்ள கடுமையான பலவீனங்கள் இந்தப் பணப்புழக்கம் சார்ந்த அபாயத்தை மேலும் தீவிரப்படுத்துகின்றன. பருவமழைக் காலத்தில் 'எல் நினோ' அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், உணவுப்  பணவீக்கத்தின் (food inflation) அபாயம் அதிகரிக்கிறது.



மேலும், உலகளாவிய எரிசக்தி விலைகளின் தாக்கத்தை சில்லறை வர்த்தகப் பொருளாதாரம் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், ஒரு லிட்டருக்கு  ₹15-20 வரையிலான விலை உயர்வை தற்போது நிறுத்தி வைத்துள்ளன. படிப்படியான விலை மாற்றங்களை நோக்கி அரசு தவிர்க்க முடியாமல் நகரும்போது, ​​பரவலான பணவீக்கம் தீவிரமடையும். இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களை  தற்போது தளர்த்த வாய்ப்பில்லை.



இந்த உள்நாட்டு நிலைப்பாடு உலகளாவிய சூழ்நிலைகளை வெளிக் காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில், நிதி விரிவாக்கம் மற்றும் குறையாத பணவீக்கம் காரணமாக 10 ஆண்டு கால கருவூலப் பத்திரங்களின் வருவாய் (Treasury yield) வருமான விகிதம் 4.5 சதவீதத்திற்கு மேல்   அதிகமாக உள்ளது.


 நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில்  மீண்டும் வருதல்


உடனடிப் பொருளாதாரக் கண்ணோட்டம் மந்தமாக இருந்தாலும், இந்தியாவின் முக்கியப் பொருளாதாரக் குறிகாட்டிகள் முக்கிய மீண்டும் வரும் திறனைக் காட்டுகின்றன.


முக்கிய துறைகளில் நிறுவனங்களின் லாபத்திறன் மீண்டும் அதிகரித்து வருகிறது. வாகனம்  மற்றும் வங்கித் துறை போன்ற முக்கியத் தொழில்கள், வரி விதிப்புகளின் சுமையையும் உலகளாவிய வர்த்தகப் பிரச்சனைகளையும் மீறி, கணிசமான முன்னேற்றங்களைப் பதிவு செய்து வருகின்றன.


இது போன்றப் பெருநிறுவனங்களின் சக்திக்கு, நான்காம் காலாண்டில் பதிவான 7.8 சதவீத வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அடித்தளமாக அமைந்துள்ளது.


இறுதியாக, இந்தியா நிதிப் பற்றாக்குறை, அதிகரித்த பணவீக்கம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கச் செலவினங்கள் போன்ற அபாயங்களுடன் ஒரு தற்காலிகக் கட்டத்திற்குள் நுழைகிறது. இருப்பினும், தற்போதைய நெருக்கடி பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்புச் சிக்கலால் உருவானதல்ல. இது முக்கிய  நிகழ்வுகளால்  ஏற்பட்ட ஒன்றாகும். எனவே, மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் மோதல் தீர்க்கப்பட்டால், பின்னவடைவை அடைந்துள்ள இந்தியா பொருளாதாரம் எதிர்காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.


கட்டுரையாளர் கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.


Original Link: Strengthening external sector defences.


Share: