நோயைக் குணப்படுத்தும் மருத்துவச் சிகிச்சைக்கான எளிதான வாய்ப்புகளும் மற்றும் வலுவான மருத்துவக் கட்டமைப்புகளும் இந்தியாவின் சுகாதாரக் கொள்கைக்கு அடித்தளமாக அமைய வேண்டும்.
மற்ற பொதுக் கொள்கைகளைப் போலவே, பொது சுகாதாரக் கொள்கைகளும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஒரு தேசம் தனது மக்கள்தொகை ஈவுத்தொகையின் (demographic dividend (உழைக்கும் வயதில் அதிக மக்கள் இருக்கும் நிலை)) பலன்களைப் பெற முயலும்போது, இது ஒரு முக்கியப் பங்களிப்பாளராகவும் விளங்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் சுகாதாரக் கொள்கைகளின் முக்கிய இலக்குகளில் ஒன்று, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை (universal health coverage (UHC)) உறுதி செய்வதாகும். இது, ஒவ்வொரு தனிநபரும் நிதிச் சிரமமின்றித் தேவையான சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆதாரங்கள் வேறுவிதமாகச் சுட்டிக்காட்டினாலும், மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களே பெரும்பாலும் பொதுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொது நிதியுதவி பெறும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் விஷயத்தில் இதைக் காணலாம். சமீபத்திய ஆண்டுகளில் பொது சுகாதாரக் கொள்கையின் மாறிவரும் தன்மை குறிப்பாகக் கவலையளிக்கிறது. ஏனெனில், இது பெரும்பாலும் முறையான சான்றுகளின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, மக்களுக்குக் குறைந்தபட்ச மருத்துவப் பலன்களைக் கூட உத்தரவாதப்படுத்த முடியவில்லை.
தனியார் துறையில் அதிகரித்து வரும் கட்டணங்கள் மற்றும் பொது சுகாதரத் துறையில் உள்ள குறைவான தரம் ஆகியவற்றால் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் கணிசமாகக் குறைந்து வரும் இந்தச் சூழ்நிலையில், பொது சுகாதாரக் கொள்கைகளால் மக்களின் இந்த மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. அரசாங்கத்தின் இரண்டு சமீபத்திய முன்னெடுப்புகளான, ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Ayushman Bharat Health and Wellness Centres) மற்றும் டிஜிட்டல் சுகாதார இயக்கம் (Digital Health Mission) ஆகியவை இந்தக் குறைபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன.
விளக்கம்
2018-ஆம் ஆண்டில் ஒரு கொள்கை முன்முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Ayushman Bharat Health and Wellness Centres), சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும், இறுதியில் நடந்தது என்னவென்றால், அடிமட்ட நிலையில் செயல்படும் சுகாதார நிறுவனங்களான சுகாதார துணை மையங்கள் (sub-centres (SC)), ஆரம்ப சுகாதார மையங்கள் (primary health centres (PHC)) மற்றும் சமூக சுகாதார மையங்கள் (community health centres (CHC)) ஆகியவற்றின் பெயர்களும் அடையாளங்களும், "சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம்" (Health and Wellness Centre) என்ற சொல் கட்டாயமாகச் சேர்ப்பதன் மூலம் மாற்றப்பட்டன. காலப்போக்கில், அடிமட்ட நிறுவனங்களின் அடையாளமும் அவற்றின் அதிகார வரம்புகளும், மாவட்ட சுகாதார அமைப்பிற்குள் அவற்றின் பங்களிப்பின் அடிப்படையில் உருவாகியுள்ளன. ஒரு பொதுவான திட்டத்தின் பயன்பாடு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே அவற்றின் உண்மையான அதிகார வரம்பு குறித்து கணிசமான தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த "சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு" அணுகுமுறையின் மற்றொரு விளைவு என்னவென்றால், ஒட்டுமொத்த மக்கள் தொகையின் ஆரோக்கிய விளைவுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தனிமனித நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் மாறத் தொடங்கியுள்ளது. நல்வாழ்வை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால், அக்கோட்பாடு துல்லியமாக வரையறுக்க முடியாததாகவும் மற்றும் தனிப்பட்ட கண்ணோட்டத்தைச் சார்ந்ததாகவும் உள்ளது.
நல்வாழ்வு (wellness) என்ற கருத்தாக்கம் குறித்த ஒரு வரலாற்று ஆய்வு, அது ஆரம்பத்தில் நோயின்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதையும், பெரும்பாலும் உடல்நலக்குறைவுக்கு முரணாகக் கருதப்பட்டது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இது 'சுகாதாரம்' (health) என்ற சொல்லுக்கு மாற்றாகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. 1950-களில், நல்வாழ்வு இயக்கம், ஆரோக்கியத்தை அதன் உயிரியல் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டு கருத்தாக்கம் செய்வதன் மூலம், நேர்மறையான நல்வாழ்வு (positive well-being) என்ற கருத்தைப் பிரபலப்படுத்தியது. மனநல சிகிச்சை மாதிரியும் இதேபோல் குணப்படுத்துதலின் உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை வலியுறுத்தியது. இந்த முன்னேற்றங்களால் ஈர்க்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) சுகாதாரத்தை வெறும் நோயின்மை என்பதைத் தாண்டிய ஒன்றாக வரையறுத்தது. இது நேர்மறையான நல்வாழ்வு குறித்த கருத்தை ஊக்குவிக்க உதவியது. காலப்போக்கில், நல்வாழ்வு என்பது உடலியல் சார்ந்த ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன, ஆன்மீக, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களையும் உள்ளடக்கி விரிவடைந்தது. இது ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலை வழங்கியது. இருப்பினும், பொது சுகாதாரத்தில், முக்கியத்துவம் சுகாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தது. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையாகும். சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் எவ்வாறு மக்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கான திறனைத் தீர்மானிக்கின்றன என்பதை இந்த அணுகுமுறை அங்கீகரிக்கிறது.
நல்வாழ்வு அணுகுமுறையைவிடச் சுகாதார மேம்பாட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு காரணம், சுகாதார மேம்பாட்டை மிகவும் துல்லியமாகவும் நடைமுறைக்குச் சாத்தியமான வகையிலும் அளவிட முடிந்தது என்பதாகும். மக்கள் தொகையின் ஒட்டுமொத்த நல்வாழ்வை (Well-being) அளவிடுவதற்கு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான அளவீடுகள் எதுவும் இல்லை. ஏனெனில், இந்த நல்வாழ்வு என்ற கருத்து ஒவ்வொரு தனிமனிதரைப் பொறுத்தும், அவர்களின் சொந்தக் கண்ணோட்டத்தைப் பொறுத்தும் முற்றிலும் மாறுபடக்கூடியது. ஆரோக்கிய மேம்பாட்டைப் போலல்லாமல், 'நல்வாழ்வு' என்ற கருத்து அதன் முழுப் பொறுப்பையும் தனிநபர்கள் மீதே சுமத்துகிறது. அதாவது, மனிதர்கள் தங்களின் ஆரோக்கியம் சார்ந்த தேர்வுகளைத் தாங்களாகவே மாற்றியமைத்துக் கொள்ளும் திறனையும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறது. அப்படிச் செய்வதன் மூலம், ஒருவருடைய ஆரோக்கியத்தை ஆரோக்கியமான சூழல், வறுமை, சமூகம் போன்ற வெளிப்புறக் காரணிகள்தான் தீர்மானிக்கின்றன என்பதை இந்த நல்வாழ்வு என்ற கருத்து பல நேரங்களில் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறது.
சுகாதாரத்தை தனிநபர்மயமாக்கல்
ஒட்டுமொத்த மக்கள்தொகையின் ஆரோக்கிய நிலையை ஆராய்வதிலிருந்து, தனிமனித நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மாற்றம், பொது சுகாதாரக் கொள்கையால் கொண்டுவரப்பட்ட ஆரோக்கியம் சார்ந்த புதிய விவாதத்தின் விளைவே ஆகும். இதன் பொருள் என்னவென்றால், முன்பு குடிநீர், உணவு மற்றும் ஊட்டச்சத்து, நாள்பட்ட நோய் மேலாண்மை, அவசரகால சிகிச்சை, தாய்-சேய் நல சேவைகள் உள்ளிட்ட தடுப்பு, மேம்பாடு, குணம் மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளில் உள்ள பற்றாக்குறைகளைக் கொண்டு ஆரோக்கிய நிலை மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது, அது படிப்படியாகத் தனிமனித நல்வாழ்வை அடைவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு மாற்றப்பட்டு வருகிறது. இந்த கவன மாற்றம், சுகாதார ஆலோசகர்களின் வளர்ச்சிக்கும், பொது சுகாதாரத்தின் பெயரில் தனிமனித நல்வாழ்வை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகளின் பெருக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.
சுகாதாரத்தின் முடிவுகள் முக்கியமாகத் தனிமனித நல்வாழ்வின் அடிப்படையில் மட்டுமே பார்க்கப்படும்போது, மக்களுக்கு இன்னும் மிக முக்கியமாகத் தேவைப்படும் பரந்த அளவிலான பூர்த்தி செய்யப்படாத சுகாதாரத் தேவைகளைத் திட்டமிட்டுப் பதிவு செய்யத் தவறும் அபாயம் ஏற்படுகிறது. தற்போதைய பரவலான விவாதம் என்ன சொல்கிறது என்றால், தனிமனித நல்வாழ்வை அடைவதுதான் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் இறுதி இலக்கு என்பதாகும். இது ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. மேலாண்மையில் உள்ள ஒரு பிரபலமான கொள்கை கூறுவது போல, "உங்களால் எதை அளவிட முடியவில்லையோ, அதை உங்களால் மேம்படுத்தவும் முடியாது". நல்வாழ்வு என்பது இயல்பாகவே ஒவ்வொரு நபரின் மனநிலையைப் பொறுத்து மாறுபடும் ஒன்று என்பதால், கொள்கைகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, சுகாதாரக் கட்டமைப்புகளைத் திறம்பட மதிப்பிடும் திறனைக் குறைத்துவிடும். மேலும், மருத்துவ வசதிகள் கிடைப்பதிலும் சேவைகளை வழங்குவதிலும் உள்ள உண்மையான குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்வதைப் பாதிக்கும்.
சமீபத்திய ஆண்டுகளில், மற்றொரு முக்கியப் பொது சுகாதார கொள்கை முன்முயற்சியானது, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் (Ayushman Bharat Digital Health Mission (ABDHM)) ஆகும். இதன் முக்கிய நோக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு அட்டை (Ayushman Bharat Health Account (ABHA)) எனப்படும் தனிப்பட்ட சுகாதார அடையாள அட்டை (ID) மூலம் ஒவ்வொரு தனிநபருக்கும் சுகாதார தகவல்களின் டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதாகும். கூடுதலாக, இந்தத் திட்டத்திற்கான சுகாதார வசதிகள், சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் சுகாதார காப்பீடு தொடர்பான தகவல்களின் பதிவேடுகளை பராமரிக்க முயல்கிறது.இருப்பினும், சுகாதாரப் பதிவுகள் மற்றும் உள்கட்டமைப்பு விவரங்களைக் கொண்ட ஒரு தகவல் போர்ட்டலால் (Information portal) மட்டுமே, மருத்துவ வசதிகள் போதிய அளவில் கிடைக்காமல் இருக்கும் சவால்களைச் சரிசெய்துவிட முடியாது. மேலும், அளவிடக்கூடிய அளவிலான நன்மைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்திற்கு (ABDHM) ஆண்டுதோறும் சுமார் ₹300 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கப்படுவதையும் இது நியாயப்படுத்தவில்லை.
மருத்துவச் சேவைகளைப் போதிய அளவில் பெற முடியாததற்கான காரணங்கள்
இந்தியாவில் தகுந்த மருத்துவ வசதிகள் கிடைக்காமைக்கு, தனியார் துறையில் உள்ள அதிகப்படியான மருத்துவச் செலவுகளும், அரசுத் துறையில் தரமான மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாததுமே முதன்மைக் காரணங்கள் என்பது அனைவரும் அறிந்ததாகும். வெறும் தனிநபர்களின் மருத்துவப் பதிவுகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் விவரங்களை உள்ளடக்கிய தரவுத்தளங்களை உருவாக்குவதால் மட்டுமே மருத்துவ வசதிகளை மேம்படுத்திவிட முடியாது. மருத்துவ அமைப்பை வலுப்படுத்துவதற்குத் தகவல்தான் முதல்படி என்ற வாதத்தை முன்வைத்தால், அத்தகைய தகவல்களை வழங்கும் ஏராளமான அறிக்கைகளும் தரவுகளும் ஏற்கனவே நம்மிடம் உள்ளன.
ஒரு தனிநபரின் சுகாதாரப் பதிவேட்டில் உள்ள தகவல், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு அட்டை (ABHA) மூலம், சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மிகவும் போதுமானதாகவும், மக்கள்தொகையின் பெரும் பகுதியினருக்கு கட்டுப்படியாகாததாகவும் இருக்கும் போது, சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை எவ்வாறு உத்தரவாதம் செய்ய முடியும் என்பது மிகவும் பொருத்தமான கேள்வியாகும். ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு அட்டையை (ABHA) வைத்திருந்தாலும், அனைத்து சுகாதார வசதிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்கள் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டிருந்தாலும், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கு இன்னும் வலுவான நிறுவன வழிமுறை தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் (ABDHM), தற்போதைய வடிவமைப்பில், கவனிப்பை வழங்குவது பற்றி அதிகம் கூறவில்லை. இது முதன்மையாக தனிநபர்கள், சுகாதார வசதிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் பற்றிய தகவல்களை உருவாக்குகிறது. இக்கூறுகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தனித்தனியாகவே செயல்படுகின்றன.
எனவே, இவ்வளவு பெரிய அளவில் தரவுகளைச் சேகரிப்பதற்கான வலுவான பொது சுகாதாரக் காரணத்தைக் கண்டறிவது கடினமாக உள்ளது. தற்போதைய கொள்கை முன்முயற்சிகளில் இல்லாதது, இந்தியாவின் மூன்றடுக்கு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின்கீழ் கருதப்படும் பொது சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகும். மாறாக, இந்த நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றன.
பெரும்பாலான மக்களுக்கு, நோயைக் குணப்படுத்தும் மருத்துவச் சேவை என்பது உடனடியாகவும் அவசியமாகவும் தேவைப்படும் ஒரு விஷயமாகும். இத்தகைய அடிப்படை மருத்துவத் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், மக்கள் நோய் வராமல் தடுக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுகாதார நடவடிக்கைகள் குறித்துச் சிந்தித்து, அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். பொது சுகாதாரக் கொள்கைகள் மக்களின் இத்தகைய உண்மையானத் தேவைகளை உணர்ந்து செயல்படத் தவறும்போது, அவை மக்களின் உண்மையானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வெறும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மருத்துவச் சேவை வழங்குநர்களின் முன்னுரிமைகளை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் ஒரு கருவியாக மாறும் அபாயம் ஏற்படுகிறது.
மேத்யூ ஜார்ஜ், கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
Original Link: Reconnect public health with people’s needs