இந்த வழக்கு, அசாம் மாநிலத்தில் உள்ள 'வெளிநாட்டு தீர்ப்பாயங்கள்' (Foreigners Tribunals) மற்றும் சில நிகழ்வுகளில், முன்பு செயல்பாட்டில் இருந்த 'சட்டவிரோதமாக குடியேறிவர்களை (கண்டறிதல்) தீர்ப்பாயங்கள்' (Illegal Migrants (Determination) Tribunals) ஆகியவற்றில் நடைபெற்ற நடவடிக்கைகளிலிருந்து உருவானது.
குடிரிமை மற்றும் வெளிநாட்டவர் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் செயல்முறை "நியாயமானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும் மற்றும் தகுந்த காரணங்களை உள்ளடக்கியதாகவும்" இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மனுதாரர்களை வெளிநாட்டவர் என்று அறிவித்த உத்தரவுகளை உறுதிசெய்த கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ரத்து செய்த நீதிமன்றம், இந்த வழக்குகளை மறுவிசாரணைக்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களுக்கே திருப்பி அனுப்பியது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெளிநாட்டினரை அடையாளம் காண்பதில் அரசுக்கு ஆர்வம் இருந்தாலும், அது போன்ற நிலையைத் தீர்மானிக்கும் செயல்முறை நியாயமானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும், தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
இந்த வழக்கு எதைப் பற்றியது?
அசாம் மாநிலத்தில் உள்ள 'வெளிநாட்டவர் தீர்ப்பாயங்கள்' (Foreigners Tribunals) மற்றும் சில சூழல்களில், தற்போது செயல்பாட்டில் இல்லாத 'சட்டவிரோத குடியேறிகள் (கண்டறிதல்) தீர்ப்பாயங்கள்' (Illegal Migrants (Determination) Tribunals) ஆகியவற்றில் நடைபெற்ற நடவடிக்கைகளிலிருந்து இந்தவழக்கு உருவானது. இவை அனைத்திலும், மேல்முறையீட்டாளர்கள் 'வெளிநாட்டவர்' என்று அறிவிக்கப்பட்டனர். மேலும், இந்த முடிவுகள் குவஹாத்தியில் உள்ள அசாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட பொதுவான குறைபாடுகளை கொண்ட வாதம், இந்த அறிவிப்புகள் ஒரு தரப்பு வாதம் மட்டுமே கேட்கப்பட்ட நடைமுறைகள் (ex parte proceedings) மூலமாகவோ அல்லது நடைமுறையில் அது போன்ற தன்மையைப் பெற்ற நிகழ்வுகள் மூலமாகவோ மேற்கொள்ளப்பட்டன. மேலும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிடுவதற்கு மேல்முறையீட்டாளர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமலேயே அவர்களின் நிலை குறித்த சட்டரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அறிவிப்பாணை வழங்கப்பட்ட விதம், விசாரணைக்கான வாய்ப்பு, இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்த ஆவணங்கள் மற்றும் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட சான்றுகள் போன்றவற்றை பயனுள்ள வகையில் ஆய்வு செய்தல் உள்ளிட்ட சட்டபூர்வ மற்றும் நியாயமான விசாரணைக்கான குறைந்தபட்சத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தமலேயே, ஒரு தரப்பு வாதம் மட்டுமே கேட்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் ஒருவரை 'வெளிநாட்டவர்' என்று தானாக அறிவிக்க முடியுமா என்பதே நீதிமன்றத்தின் முன் முக்கிய கேள்வியாக இருந்தது.
என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது?
ஒரு வழக்கின் விசாரணை ஒரு தரப்பினர் இல்லாமலேயே (ex-parte) நடைபெற்றாலும், தீர்ப்பாயம் தனது நீதி வழங்கும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். வழக்கில் தொடர்புடைய நபர் (Proceedee) ஆஜராகாததால், அவருக்கு தனது தரப்பில் சாட்சிகள் அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு இழக்கப்படலாம். ஆனால், அதனால் தீர்ப்பாயத்தின் பொறுப்பு குறையாது. மாநில அரசு சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் உண்மையிலேயே அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானவையா என்பதை தீர்ப்பாயம் சுயமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
தீர்ப்பாயத்தின் முன் முறையான வாதங்கள் எதுவும் இல்லாமல் மேல்முறையீட்டாளர்கள் வெளிநாட்டினர்களாக அறிவிக்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே, மேல்முறையீட்டாளர்கள் தங்கள் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், அரசு தனது சான்றுகளை முன்வைக்கவும், சட்டத்திற்கு ஏற்ப தீர்ப்பாயம் புதிதாக தீர்ப்பை வழங்கவதற்கு ஏதுவாக, இது போன்ற வழக்குகள் மறுவிசாரணைக்காக சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
வெளிநாட்டினர் சட்டம், 1946 (Foreigners Act) மற்றும் வெளிநாட்டினர் (தீர்ப்பாயங்கள்) ஆணை, (Foreigners (Tribunals) Order, 1964)-ஐ மேற்கோள்காட்டிய உச்சநீதிமன்றம் பின்வருமாறு கூறியது: இந்தச் சட்ட அமைப்பில் ஒன்றுக்கொன்று துணைபுரியும் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது, தாம் வெளிநாட்டவர் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof) வழக்கில் தொடர்புடைய நபரின்மீது உள்ளது. இரண்டாவது, நியாயமான விசாரணை நடைமுறையைப் பின்பற்றுவது, தேவையான மற்றும் பயனுள்ள அறிவிப்பாணை வழங்குவது, அரசால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை முறையாகப் பரிசீலிப்பது, காரணங்களுடன் கூடிய தீர்ப்பை வழங்குவது ஆகியவை தீர்ப்பாயத்தின் கடமையாகும். இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. மாறாக, அவை ஒன்றுக்கொன்று துணையாகச் செயல்படுகின்றன. 1946-ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ், சுமை (Burden of Proof) இருந்தாலும், அது 1964-ஆம் ஆண்டு ஆணையின் பத்தி 3-ல் வழங்கப்பட்டுள்ள நடைமுறைப் பாதுகாப்புகளின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
நீதிமன்றம் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தது?
2024-ஆம் ஆண்டு முகமது ரஹீம் அலி என்கிற அப்துர் ரஹீம் எதிர் அசாம் மாநிலம் மற்றும் பிறர் (Md. Rahim Ali @ Abdur Rahim v. State of Assam and Others) வழக்கு உட்பட பல்வேறு முந்தைய தீர்ப்புகளை நீதிமன்றம் அடிப்படையாக எடுத்துக் கொண்டது. பிரிவு 9-ன் கீழ் சுமத்தப்படும் பொறுப்பு என்பது, வெறும் குற்றச்சாட்டு அல்லது ஆதாரமற்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கையைத் தொடர அனுமதிப்பதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்று நீதிமன்றம் விளக்கியது. நடவடிக்கையைத் தொடங்குவதற்கு அதிகாரிகளிடம் ஏதேனும் உறுதியான அடிப்படை ஆதாரம் இருக்க வேண்டும். அதேவேளையில், நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபருக்கு, அவர் எதிர்கொள்ள வேண்டிய வழக்கின் சாராம்சம் குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும்.
நீதிமன்றம் இயற்கை நீதி (Principles of Natural Justice) மற்றும் இந்திய அரசியலமைப்பின் அனுச்சேதங்கள் 14 மற்றும் 21 பற்றியும் விரிவாக விவாதித்தது.
அரசியலமைப்பின் பிரிவு 14-ல் ‘எந்த ஒரு நபரும்’ (any person) என்ற சொல்லும், பிரிவு 21-ல் ‘எந்த நபரின்’ (no person) என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளும் இந்தியக் குடிமக்களுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சட்டத்தின்முன் அனைவரும் சமயம் (Equality before Law), சட்டங்களின் சமமான பாதுகாப்பு (Equal Protection of Laws), உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (Life and Personal Liberty) ஆகிய அடிப்படை உரிமைகள் இந்தியாவின் எல்லைக்குள் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும். வெளிநாட்டிவர் தீர்ப்பாயத்திற்கு (Foreigners Tribunal) முன் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவர், இறுதியில் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தவறக்கூடும். இருப்பினும், அது போன்ற முடிவை மேற்கொள்ளும் செயல்முறையானது, நியாயம், பகுத்தறிவு மற்றும் தன்னிச்சையான போக்கு இல்லாத நிலை ஆகிய அரசியலமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், 1996-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எதிர் அருணாச்சலப் பிரதேச மாநிலம் (National Human Rights Commission v. State of Arunachal Pradesh) வழக்கில் உருவக்கப்பட்ட கொள்கையையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. குடியுரிமை குறித்து சந்தேகம் உள்ளவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை மறுக்கலாம் என்ற வாதத்தை அந்த வழக்கில் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழான பாதுகாப்பைப் பெற வெளிநாட்டினருக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், நடைமுறையானது "நியாயமானதாகவும், நீதியானதாகவும், பகுத்தறிவுடன் கூடியதாகவும்" இருக்க வேண்டுமே தவிர, "தன்னிச்சையானதாகவோ, அடக்குமுறை சார்ந்ததாகவோ அல்லது கற்பனை சார்ந்ததாகவோ" இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 1978-ஆம் ஆண்டு 'மேனகா காந்தி எதிர். இந்திய ஒன்றியம்' (Maneka Gandhi v. Union of India) வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நபர் வெளிநாட்டவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான வழிமுறையை ஒரு சட்டம் உருவாக்கும்போது, இந்தக் கோட்பாடு நேரடியாகப் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பின் விளைவுகள் என்ன?
இந்தத் தீர்ப்பின் வரம்பு குறித்தும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. “மேல்முறையீட்டாளர்களில் யாருடைய குடியுரிமை கோரிக்கையின் உண்மைத் தன்மையையும் நாங்கள் ஆய்வு செய்யவில்லை. அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் நம்பகத்தன்மை, ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை, தொடர்புடைய தன்மை அல்லது போதுமான தன்மை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தக் கேள்விகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்கள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், சட்டத்தின்படி தன்னிச்சையாகத் தீர்மானிக்க வேண்டியவை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
குடியுரிமை மற்றும் வெளிநாட்டவர் என்ற தகுதி (Foreigner Status) போன்றவை மிக உயர்ந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்றும் நீதிமன்றம் கூறியது. குடியுரிமையைப் பெறுதல், குடியுரிமை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் குடியுரிமை தொடர்பான மாற்ற விவாகரங்கள் குறித்து வரைமுறைகளை வகுப்பதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அரசியலமைப்பின் 11-வது பிரிவு பாதுகாக்கிறது.
தனித்தனியாகப் பார்க்கும்போது, வெளிநாட்டினர் சட்டம், 1946 (Foreigners Act, 1946) மற்றும் வெளிநாட்டினர் (தீர்ப்பாயங்கள்) ஆணை, 1964 (Foreigners (Tribunals) Order, 1964) ஆகியவை, ஒருவர் வெளிநாட்டவரா இல்லையா என்ற கேள்வியை தீர்ப்பாயத்திடம் (Tribunal) பரிந்துரைத்து, அதனை சட்டப்படி தீர்மானிப்பதற்கான நடைமுறையை (Statutory Mechanism) வழங்குகின்றன.
மேலும், ஒரு நபர் வெளிநாட்டவரா என்பது குறித்த விவகாரங்கள் தீர்ப்பாயத்திற்கு (Tribunal) அனுப்பப்பட்டு அங்கு தீர்மானிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை 1946-ஆம் ஆண்டின் சட்டமும், 1964-ஆம் ஆண்டின் ஆணையும் வழங்குகின்றன. இந்தியக்குடியுரிமையைக் கோருவதற்குச் சட்டப்படி தகுதிபெறாத நபர்கள், நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், பொய்யான கோரிக்கைகள் அல்லது நடைமுறை தொடர்பான தாமதங்கள் ஆகியவற்றின் மூலம் அத்தகைய தகுதியைப் பெற்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசுக்கு நியாயமான மற்றும் மிக முக்கிய பொறுப்பு உள்ளது.