2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் புதிதாக என்ன இருக்கிறது? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி: 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பான 16வது கணக்கெடுப்பிற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கும் விதமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை வீடுகளைப் பட்டியலிடும் பணி (house-listing operations) நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


இந்தியாவின் தலைமைப்பதிவாளர் அலுவலகம் (Registrar General of India (RGI)) வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசமும் இந்தக் காலக்கெடுவிற்குள் 30 நாட்கள் கொண்ட ஒரு காலவரம்பில் இந்தச் செயல்முறையை மேற்கொள்ளும்.


 முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில், இந்த அறிவிப்பு, வீடு வீடாகச் சென்று பட்டியலிடுவதற்கு முந்தைய 15 நாட்களுக்கு சுய கணக்கெடுப்பை முறையாக வழங்குகிறது. இது கணக்கெடுப்பாளர் வருகை தருவதற்கு முன்பு வீடுகள் டிஜிட்டல் முறையில் விவரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.


1948-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 17A-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான களத்தை அமைத்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத அறிவிப்பை மீறுகிறது.


அரசாங்கத்தால் முன்னர் கோடிட்டுக் காட்டப்பட்டபடி, 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். 2026-ல் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து 2027-ஆம்  ஆண்டின் தொடக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கீடு நடைபெறும். மக்கள்தொகைக் கணக்கீட்டிற்கான குறிப்புத் தேதி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 ஆகவும், லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பனி சூழ்ந்த மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2026 ஆகவும் இருக்கும்.


  பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரைத் தவிர, 1931-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும், முதல் நாடு முழுவதும் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு இது என்பதால், இந்தக் கணக்கெடுப்பு கூடுதல் அரசியல் மற்றும் நிர்வாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மேலும், அரசியலமைப்புரீதியான தடை நீக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு இது அடிப்படையாக அமையும்.


வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தில் (house-listing phase), வீடுகளின் நிலைமைகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்காக, நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டிடம் குறித்தும் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பாளர்கள் கட்டிடத்தின் பயன்பாடு, கட்டுமானப் பொருள், அறைகளின் எண்ணிக்கை, உரிமை நிலை, நீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதி, சமையல் எரிபொருள் மற்றும் தொலைபேசிகள், வாகனங்கள், தொலைக்காட்சிகள் போன்ற சொத்துக்களின் உரிமை போன்ற விவரங்களைப் பதிவு செய்வார்கள்.


2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான, வீட்டுப் பட்டியல் அட்டவணையில் 34 நெடுவரிசைகள் இடம்பெறும். வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் புதிய கேள்விகள் இதில் இடம்பெறும். இணையம் கிடைப்பது, மொபைல் போன்கள் மற்றும் திறன்பேசிகளின் உரிமை, குடியிருப்புக்குள் குடிநீர் அணுகல், எரிவாயு இணைப்பு வகை, வகை வாரியாக வாகன உரிமை மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பின்தொடர்வுகளுக்கான அலைபேசி எண் ஆகியவை இதில் இடம்பெறவுள்ளது. குடும்பம் எந்த வகையான தானிய உணவைச் சாப்பிடுகிறது என்று ஒரு புதிய கேள்வி கேட்கப்பட உள்ளது


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக (India’s first digital census) இருக்கும். காகித அடிப்படையிலான அட்டவணைகள் ஒரு காப்புப் பிரதியாகப் பராமரிக்கப்பட்டாலும், டிஜிட்டல் தரவு சேகரிப்புக்கு வழங்கப்படும் அதிக ஊதியத்தின் உதவியுடன், முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பு (universal digital enumeration) நடைபெறும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதன்கிழமை அறிவிக்கப்பட்ட சுய-கணக்கெடுப்பு விருப்பம் இந்த மாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இணைய வழியில் சுய-கணக்கெடுப்பை நிறைவு செய்யும் குடும்பங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் (unique ID) வழங்கப்படும். சரிபார்ப்பின்போது இந்த எண்ணை கணக்கெடுப்பாளரிடம் காண்பிப்பதன் மூலம், வீட்டு வருகைகளின்போது செலவிடப்படும் நேரம் கணிசமாக குறையும்.


இந்த மாற்றத்திற்காக, உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு வசதிகளுடன் கூடிய அலைபேசி செயலிகள், வீடுகளின் புவியிடக்குறித்தல், குறைந்த இணைய இணைப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடி தரவு சேகரிப்பு மற்றும் மேகக் கணினி அடிப்படையிலான பதிவேற்றங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் அடிப்படைக் கட்டமைப்பை இந்தியாவின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் ஏற்கனவே உருவாக்கிவிட்டது. ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு, அதிகாரிகள் பிழைகளை ஏறக்குறைய நிகழ்நேரத்தில் மேற்பார்வையிடவும் சரிசெய்யவும் உதவும்.


2026-ஆம் ஆண்டில் வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தைத் தொடர்ந்து, வயது, கல்வி, தொழில், மதம், சாதி, இடம்பெயர்வு மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற தனிநபர் அளவிலான தரவுகளை உள்ளடக்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 20-21 நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்பு முடிந்த 10 நாட்களுக்குள் தற்காலிக மக்கள்தொகை மொத்த விவரங்கள் வெளியாகும் என்றும், இறுதித் தரவுகள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்தப்படாத முதல் நாடு தழுவிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தனிநபர்கள் கணக்கிடப்பட்டனர். இருப்பினும், இது ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை உள்ளடக்கவில்லை.


இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (first synchronous census) 1881-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அது டபிள்யூ. சி. புளோடன் (W.C. Plowden) என்பவரால் நடத்தப்பட்டது.


2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, ஒட்டுமொத்தமாக 16வது பத்தாண்டு கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு 8-வது கணக்கெடுப்பாகவும் இருக்கும்.


2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மார்ச் 1, 2011 நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகை 1.21 பில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு இது 1.41 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட மக்கள்தொகை 143.6 கோடியாக இருக்கும் நிலையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் செலவு ஒரு நபருக்கு தோராயமாக ரூ.101.8 ஆக இருக்கும்.

 Original Article :  What’s new in Census 2027? -Khushboo Kumari , Roshni Yadav

Share: