மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) மறுசீரமைப்பு, அதில் உள்ள குறைகளை நீக்கி, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. -சௌமியா காந்தி கோஷ்

புதிய சட்டம், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இலக்கை அடைய முயற்சிக்கிறது. தற்போதுள்ள 100 நாட்கள் வேலை திட்டத்துடன் ஒப்பிடும்போது, எதிர்காலத்தில் விருப்பமுள்ள குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை இது படிப்படியாக அதிகரிக்கும் என்கின்றனர்.


முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)), விக்சித் பாரத் 2047 (Viksit Bharat 2047) திட்ட இலக்குடன் இணைக்கும் வகையில், வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) (VB-G RAM G)) மூலம் மேற்கொள்ளப்பட்ட பெரிய சீரமைப்பு நடவடிக்கையானது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மிகவும் பரபரப்பான சூழலில், ஆதரவு தரவுகள் இல்லாத உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் காரணமாக, இந்த புதிய சட்டத்தின் விதிகளை உண்மை அடிப்படையிலும் ஒப்பீட்டுரீதியிலும் ஆராய்வது அவசியமாகிறது.


முதலாவதாக, புதிய சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முன்னர் இருந்த 100 நாட்கள் வரம்பைவிட, விருப்பமுள்ள குடும்பங்களுக்கான வேலை நாட்களை படிப்படியாக அதிகரிக்கும். இருபது ஆண்டுகள் கடந்த பிறகும், சுமார் 7.5–8 சதவிகித குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலையை நிறைவு செய்துள்ளன. மேலும், ஒரு குடும்பத்திற்கான சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட தேக்கமடைந்துள்ளது (2021–25 நிதியாண்டில் 50.4 நாட்கள், 2007–13-ஆம் நிதியாண்டில் 45.9 நாட்களுடன் ஒப்பிடுகையில்). எனவே, இந்த மாற்றம் மிகவும் அவசியமாகிறது. 2025-ஆம் நிதியாண்டில், சுமார் 5 கோடி குடும்பங்கள் என்ற அளவில் கோவிட் பெருந்தொற்றுக்கு  முந்தைய சராசரி எண்ணிக்கைக்கு அருகில், 5.78 கோடி குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGA) பயனடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன


இரண்டாவதாக, ஒரு மத்தியத் துறை திட்டத்திலிருந்து (90:10 என்ற விகிதம்) மத்திய நிதியுதவித் திட்டமாக (60:40 என்ற விகிதம்) மாறியதன் காரணமாக மாநிலங்கள் மீது அதிக நிதிச்சுமை ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த நடவடிக்கை ஆதரிக்கப்படவில்லை. கடந்த 19 ஆண்டுகளில் (2006-07 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை), மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக (MGNREGA) ரூ. 9.95 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் (ரூ. 7.8 லட்சம் கோடி) 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2024-25-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை ஒதுக்கீடு ரூ. 86,000 கோடி ஆகும். இது 2006-07-ஆம் நிதியாண்டில் இருந்த ரூ. 11,300 கோடியுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச தொகையாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 2014-15 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இறுதி ஒதுக்கீடுகள் நிதிநிலை மதிப்பீடுகளைவிட ரூ.1.6 லட்சம் கோடி அதிகமாக இருந்தன. இதற்கு மாறாக, 2014-15-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வழக்கமாக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதைவிட குறைவாகவே இருந்தன. ஒன்றிய அரசின் பங்கு 2026-27-ஆம்  நிதியாண்டுக்குள் சுமார் ரூ. 95,692 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்கின்றனர். தனித்தனியாகப் பார்த்தால், மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 3 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாகக் கடன் வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மூன்றாவதாக, அதிக உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்குப் போதுமான ஊதியத்தை உறுதி செய்வதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) மோசமாகச் செயல்பட்டுள்ளது. ஏனெனில், ஊதியமானது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. ஒரு நாளின் சராசரி ஊதியம், 2007–2012-ஆம் நிதியாண்டுகளில் சுமார் ₹88 ஆக இருந்தது, அது இப்போது சுமார் ₹267 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், உண்மையான மதிப்பில் ஊதியமானது, 2008–2012-ஆம் நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2025 நிதியாண்டில் வெறும் 10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது, குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாக இருப்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது தொழிலாளர்களுக்கு சிறந்த இழப்பீட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து குறைந்த பணவீக்கம் இருப்பது, மக்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உண்மையான ஊதிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இச்சட்டம், முன்னர் இருந்த தகுதியிழப்பு விதிகளை நீக்கியுள்ளது. இதனால், தகுதியுள்ள தொழிலாளர்கள் யாரும் விலக்கப்படாமல் இருக்க, வரவிருக்கும் வேலைகள் குறித்து மாநிலங்கள் இப்போது முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நான்காவதாக, தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாத வேலைகள் மூலம் கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறது. இந்த குறுகியகால அணுகுமுறை, உற்பத்தி செய்யும் சொத்துக்களை (நீடித்த பயனுள்ள வளங்களை) உருவாக்காத திட்டங்களை அதிகம் ஊக்குவித்தது. அதன் விளைவாக, 2021 முதல் 2025-ஆம் நிதியாண்டுகளில், மாநிலங்கள் கோரிய வேலை நாட்களுக்கும் உண்மையில் வழங்கப்பட்ட வேலை நாட்களுக்கும் இடையே சராசரியாக 13.3% வித்தியாசம் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சுமார் 9.6 கோடி கிராமப்புறச் சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 84 சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2014-15 முதல் 2024-25 நிதியாண்டு வரை) கட்டப்பட்டவை ஆகும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் முக்கியக் கவனம், நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை எதிர்ப்புத்திறன் ஆகியவற்றின்மீது உள்ளது. மேலும், இது வளர்ச்சியடைந்த இந்தியா தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு தொகுப்பின்கீழ் (Viksit Bharat National Rural Infrastructure Stack) சொத்துக்களைத் திரட்டுதல் (aggregation) மற்றும் புவி-குறியிடுதல் (geo-tagging) மற்றும் பிரதமரின் கதி சக்தி (PM Gati Shakti) போன்ற பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் பலன்களை அதிகப்படுத்த முடியும் என்கின்றனர். உதாரணமாக, தானியங்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகள் (godowns) பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சாலைகளின் தொகுதிகளுக்கு அருகில் திட்டமிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படுவதால், பெரிய அளவிலான சந்தை அணுகலை சாத்தியமாக்கும் என்கின்றனர்.


ஐந்தாவது, தேவை அடிப்படையிலான அமைப்பிலிருந்து (demand-driven system) நெறிமுறை நிதி முறைக்கு (normative funding) மாறுவது, உள்ளூர் தேவைகள் மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் மாநிலம் சார்ந்த நிதிஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் என்கின்றனர். இந்த அணுகுமுறை, மானியங்களில் ஏற்படும் ஆண்டுக்கு ஆண்டு ஏற்ற இறக்கங்களைக் குறைக்கும், முதன்மைப் பகுதிகளைக் கண்டறியும் மற்றும் மாநிலங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆணையத்தின் வரிப் பகிர்வுக்கு ஏற்றதாக முன்மொழியப்பட்ட இந்த மாதிரி, சமபங்கு (எடுத்துக்காட்டாக, கிராமப் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை) மற்றும் செயல்திறன் குறிப்பாக, பெண்களின் பங்கேற்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துகிறது. இத்தகைய ஒன்றிய உதவி அமைப்பால் பெரும்பாலான மாநிலங்கள் பயனடையும் என்றும் தெரிவிக்கின்றனர்.


ஆறாவதாக, 73-வது அரசியலமைப்புத் திருத்தம், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புற சுயாட்சியை அறிமுகப்படுத்தியது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், கிராமப் பஞ்சாயத்துகளை, உள்ளூர் தேவைகளைக் கண்டறிந்து, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) திட்டத்தின் நோக்கம் தொலைநோக்குப் பார்வையில் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய திறன்கள், டிஜிட்டல் விழிப்புணர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் வலியுறுத்துகின்றன.


ஏழாவதாக, கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற வறுமை பெரிதும் குறைந்துவிட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான செலவு இப்போது வறுமைக் கோட்டுக்கான மொத்த செலவில் வெறும் 10% மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது கிராமப்புறங்களில் வருமானங்கள் பெரிதும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆகவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை இனி கிராமப்புறங்களில் நிலவும் வறுமையுடன் மட்டும் தொடர்புபடுத்துவது பொருத்தமற்றதாகிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.


வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (கிராமப்புறம்) (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)) (VB-G RAM G))ஸஎன்பது, நல்லெண்ணத்துடன் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தை, மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தொடர்ந்து பொருத்தமாக வைத்திருக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இது, பொறுப்புடைமை, கடமை உணர்வு, வெளிப்படைத்தன்மை, வளங்களைப் பங்கிடுதல், மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இது மிகவும் நலிவடைந்த  பிரிவினருக்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது. சமூக-பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தத் திட்டத்திற்கு உள்ளது. இந்த துணிச்சலான சிந்தனை, புறக்கணிக்கப்படுவதற்குப் பதிலாக, ஆதரிக்கப்பட வேண்டும். ஏனெனில், இதைச் செயல்படுத்த வேண்டிய நேரம் உண்மையிலேயே வந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.


எழுத்தாளர், 16-வது நிதிக் குழுவின் உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Prime Minister's Economic Advisory Council (PMEAC)) உறுப்பினர், மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆவார்.

 Original Article : MGNREGA overhaul plugs gaps, keeps up with changing times. -Soumya Kanti Ghosh

Share: