வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்சித் பாரத்) அடைவதற்கு இளைஞர்களின் தலைமைத்துவம் மிகவும் அவசியமானது. - மான்சுக் மாண்டவியா

இந்தியாவின் பரந்த இளைஞர் சக்தி என்பது மக்கள்தொகை சார்ந்த ஆதாயத்தைவிட மேலானது; அதுவே தேசத்தின் மிகப் பெரிய சொத்து ஆகும்.


இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி என்பது இன்று புதிய சிந்தனைகளை உருவாக்கும் இளைஞர்களால் வடிவமைக்கப்படும் என்கின்றனர். நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சிறப்பான ஆட்சி முறை, மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக முன்னேறுவதைப்  பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சிந்தனைகள் பல்கலைக்கழக வளாகங்கள், சமுதாயங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், வகுப்பறைகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்கள் எனப் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றன. இளைஞர்களிடம் யோசனைகள் இருக்கிறதா என்பது இனி கேள்வியல்ல; மாறாக, நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் வகையில் அவர்களது கருத்துகளைப் பயன்படுத்த நம்பகமான ஒரு வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதே முக்கியப் பிரச்சினை. விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் (Viksit Bharat Young Leaders Dialogue - (VBYLD)) அத்தகைய ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, இந்த தேசத்தின் எதிர்காலம் வெறும் கொள்கைகள் அல்லது நிறுவனங்களால் மட்டுமல்லாமல், அதன் இளைஞர்களின் கற்பனை, தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலால் வடிவமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இளைஞர் சக்தி (யுவ சக்தி) என்பது வெறும் மக்கள் தொகைப் பலம் மட்டுமல்ல; இது இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பலம் ஆகும். இந்த ஆற்றலானது புதுமைகளைப் புகுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் துணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



மாற்றத்தை வழிநடத்துங்கள்


இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவியா பல சூழல்களில்—பல்கலைக்கழகங்கள், கிராமப்புறங்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகள்—ஆகியவற்றில் இந்திய இளைஞர்களுடன் உரையாடியாதாகக் குறிப்பிடுகிறார். இதில் அவரைக் கவர்ந்தது என்னவென்றால், அவர்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்கள் என்பதுதான் என்று சுட்டிக் காட்டுகிறார். கிராமப்புற இளைஞர்களைச் சந்தித்ததபோது அவர்கள்  தங்கள் கிராமங்களில் முறைசாரா கற்றல் மையங்களை அமைத்திருந்தனர் என்றும் குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், அவர்கள் உள்ளூர் தீர்வுகளின் மூலம் கல்வி மற்றும் திறன்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தனர் என்பதையும் குறிப்பிடுகிறார். இத்தகைய அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும்போது, அவர்கள் பங்களிப்பு என்பது வெறுமனே பங்கேற்றல் என்பதையும் கடந்து  தலைமைத்துவ பண்புகளும்  மேம்படும் என்றும் குறிப்பிடுகிறார்.


பிரதமர் நரேந்திர மோடியின் உரையால் ஈர்க்கப்பட்டு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை பொது வாழ்வுக்கு கொண்டுவரும் நோக்கில், 'விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல்' திட்டம் தொடங்கப்பட்டது. இது தேசிய இளைஞர் விழாவின் புதிய வடிவமாக ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. விக்சித் பாரத் கலந்துரையாடலில் 30 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் மாநில அளவில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சி புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு 3,000 இளைஞர்கள் பிரதமருடன் நேரடியாகக் கலந்துரையாடினர். பல மணி நேரம் அவர்களது கருத்துக்களைக் கேட்ட பிரதமர் அந்த இளைஞர்களை பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்க ஊக்கப்படுத்தினார்.




2047-ஆம் ஆண்டிற்கான இந்தியாவை வடிவமைத்தல்


இளைஞர்களின் எண்ணிக்கை என்பதையும் கடந்து, இந்தக் கலந்துரையாடலை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியது அவர்களின் ஈடுபாட்டின் தன்மைதான். 2047-ஆம் ஆண்டு இந்தியாவை வடிவமைப்பதில் இந்திய இளைஞர்களின் குரல்கள் முக்கியம் என்பதை அது எழுத்து மற்றும் உணர்வுரீதியாகத் தெளிவாக அங்கீகரித்தது. தேசிய பிரச்சினைகளைப் பற்றி விமர்சனரீதியாக சிந்திக்கவும், தீர்வுகளை முன்மொழியவும், மற்றும் அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை மிகப்பெரிய தேசிய அளவிலான கண்ணோட்டத்தில் அணுகவும் ஊக்குவிக்கப்பட்டனர்.


இளைஞர் தலைமைத் தளத்தின் வலிமையானது அதன் எண்ணிக்கையில் மட்டும் இல்லை, மாறாக அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில்தான் உள்ளது. கருத்துக்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களில் உள்ள பல்வகைமை இந்த முன்முயற்சியிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள்—அதாவது மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அடிமட்ட தலைவர்கள்—ஒரே தளத்தில் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். பல்வேறு நிலைகளில் இருந்து பல தரப்பு இளைஞர்கள் ஈடுபடுவதால், கருத்துக்கள் யாருடைய ஊர், மொழி போன்ற பின்னணிகளால் வரையறுக்கப்படுவதில்லை. விவாதங்களும் கருத்துப் பரிமாற்றமும் செம்மையாக வடிவம் பெறும், இதன் விளைவாக, இந்த கலந்துரையாடல் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பேசுவதற்கான வாய்ப்பையும் அனைவரும் கேட்பதற்கான இடத்தையும் உறுதிப்படுத்துகிறது.


இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் தொடங்கி, சுதந்திர இந்தியாவின் அடித்தள நிறுவனங்களை உருவாக்கியது வரை, நாட்டின் முக்கியமான தருணங்களில் இளைஞர்கள் எப்போதும் மையப் பங்கு வகித்துள்ளனர். இன்று, நாடு மீண்டும் தன் இளைஞர்களிடம் வெறும் பங்கேற்பை மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சியை ஒன்றாக உருவாக்குவதில் தலைமை தாங்குவதற்கும், சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.


"அதன் முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் (Viksit Bharat Young Leaders Dialogue - (VBYLD)) 2026, ஒரு தேசிய இளைஞர் கூட்டமைப்பில் இருந்து உலகளாவிய அணுகுமுறையைக் கொண்ட ஒரு தளமாக மாறுகிறது. பாரதத்திற்கான வடிவமைப்பு ('Design for Bharat') மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம் ('Tech for Viksit Bharat') போன்ற புதிய முன்முயற்சிகளும், இந்திய இளைஞர் புலம்பெயர்ந்தோரை (Indian youth diaspora) உள்ளடக்கியிருப்பது போன்ற மேம்பாடுகள் இந்த உரையாடலை தேசிய எல்லைகளைக் கடந்து விரிவுபடுத்துகின்றன.


விக்சித் பாரத் வினாடி வினாப் போட்டி (Viksit Bharat Quiz), (விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் (Viksit Bharat Young Leaders Dialogue - (VBYLD)) 2026) திட்டத்தின் முதல் கட்டத் தேர்வாக அமைந்தது. இதில் 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் இது, இதுவரையில் இல்லாத மிகப்பெரிய இளைஞர் பங்கேற்பு நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அடுத்து வரும் நாட்களில், நாடு முழுவதிலுமிருந்து வந்த பங்கேற்பாளர்கள், இந்தியாவின் மற்றும் உலகத்தின் முன்னணி ஆளுமைகளுடன் கலந்துரையாடுவார்கள். இதன் மூலம் அவர்கள், பல்வேறு துறைகள் மற்றும் பகுதிகளைக் கடந்து செல்லும் நடைமுறை நுண்ணறிவு, கருத்துக்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.


உரையாடலை இயக்கமாக மாற்றுதல்


(விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் (Viksit Bharat Young Leaders Dialogue - (VBYLD)) 2026) திட்டத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், அது இளைஞர்களுக்குப் பேசுவதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் சொல்வதைப் பரிசீலிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சுவாமி விவேகானந்தரின் நினைவாக நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் இளைஞர்களுடன் நேரடியாக உரையாற்றுவார் என்றும் அவர்களின் கருத்துக்களையும், இந்தியாவின் எதிர்காலத்தை அவர்கள் எவ்வாறு வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதையும் அவர் கேட்டறிவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


விவாதிப்பதற்கான ஒரு மேடையாக இருப்பதைக் காட்டிலும், விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் (Viksit Bharat Young Leaders Dialogue) என்பது இளம் இந்தியர்களை முன்னின்று வழிநடத்தவும், தேசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், மேலும் அவர்களின் இலக்குகளை வளர்ச்சியடைந்த  இந்தியாவை உருவாக்குவதை நோக்கிச் செலுத்தவும் தூண்டும் ஓர் இயக்கமாகக் கருதப்படுகிறது.


தலைமை தாங்கும் தன்னம்பிக்கை மற்றும் சேவை செய்யும் அர்ப்பணிப்பு கொண்டவர்களால் தான் ஒரு வளர்ச்சியடைந்த பாரதம் வடிவமைக்கப்படும் என்று அதற்கு இந்தியாவின் இளைஞர்களும் தயாராக உள்ளனர். மேலும், நாடும் அவர்களுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


மன்சுக் மாண்டவியா, இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மத்திய அமைச்சராக உள்ளார்.


Original Article : Youth leadership is key to Viksit Bharat -Mansukh Mandaviya

Share: