இந்தத் திட்டத்தின்கீழ் உள்ள பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி பெற்றவர்களில் 70% பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி மக்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் பிரதம மந்திரி - திறமையும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கானத் (Pradhan Mantri – Dakshta Aur Kushalta Sampann Hitgrahi (PM-DAKSH)) திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் குறுகியகாலப் பயிற்சி வகுப்புகளை முடிக்கும் மாணவர்களில் குறைந்தது 70 சதவீதம் பேருக்கு பயிற்சி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை நிறுவனங்கள் இந்த இலக்கை அடையத் தவறினால், ஒரு மாணவருக்கான பயிற்சிச் செலவில் 30 சதவீதத் தொகையை அரசு வழங்காது என்றும் அந்தத் தொகை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் இதில் 44 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி தக்ஷதா அவுர் குஷலதா சம்பன்ன ஹித்கிராமி (PM-DAKSH) திட்டம் என்பது 2020-21-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒன்றிய அரசின் திட்டமாகும். தகுதியுள்ள நபர்களுக்குத் தரமான நிறுவனங்கள் மூலம் தொழில்முறைத் திறன்களை வழங்கி, அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. பட்டியலினத்தவர் (Scheduled Castes (SC)), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Castes (OBC)), பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (Economically Weaker Sections (EWS)), சீர்மரபினர் (Denotified Tribes (DNTs)), தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கான திறன்சார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தத் துறையின்கீழ் இயங்கும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் — தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)), தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Backward Classes Finance and Development Corporation (NBCFDC)), மற்றும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC)) ஆகியன தகுதியுள்ள இளைஞர்களுக்குத் தேவையான கடனுதவி, பயிற்சி மற்றும் நிதி உதவிகளை வழங்குகின்றன. இவை இளைஞர்கள் கல்விக்குப் பிறகு புதிய திட்டங்களைத் தொடங்கவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் மற்றும் தொழில்முனைவோராக உருவெடுக்கவும் உதவுகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களுமே நிர்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இலக்கை அடைவதில் தோல்வியடைந்துள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பட்டியலினத்தவர் நலனுக்காகச் செயல்படும் தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் (NSFDC) திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்றவர்களில் 49.8 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், திரிபுரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பு விகிதம் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), 2021 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் பயிற்சி பெற்றவர்களில் 48.9 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக (DNTs) செயல்படும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் (NSKFDC) திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில், 23 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2023–24-ஆம் ஆண்டில் 25 மாநிலங்களில் 16 மாநிலங்கள் இத்திட்டத்தின்கீழ் ஒருவருக்குக் கூட பயிற்சி அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போது 2024–25-ஆம் நிதியாண்டு முதல், பிரதம மந்திரி - திறமையும் திறனும் கொண்ட பயனாளிகளுக்கானத் (PM-DAKSH) திட்டமானது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்கீழ் உள்ள பிரதம மந்திரி திறன் வளர்ச்சித் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Original article : Less than half of those trained under PM-DAKSH scheme for SCs, BCs, DNTs got jobs -Nitika Francis