வடஇந்தியாவில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கும், கடும் வெப்ப அலைகள் வீசுவதற்குமான காரணங்கள் யாவை? -அஞ்சலி மாரார்

 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் இதேபோன்ற ஒரு நிலை காணப்பட்டாலும், இவ்வளவு சீக்கிரமாகவே வெயில் காலம் தொடங்குவது என்பது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 


இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில், பிப்ரவரி மாதத்திற்குரிய இதமான குளிர் காலமானது, இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவியது. வெப்பநிலையானது இயல்பைவிட 8°C முதல் 13°C வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது. மேலும், இது அதிகாரப்பூர்வமாக வெப்ப அலை சூழலாகக் கருதப்படுகிறது.


இயல்பைவிட வெப்பமான மார்ச் மாதம்


இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தனது மார்ச் மாத முன்னறிவிப்பில், மேற்கு இமயமலைப் பகுதிகள், தீபகற்ப இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் பகல் நேர வெப்பநிலையானது இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தது. மேலும், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிக நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரித்தது. அதே போலவே, இந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே வெப்பநிலையானது அதிகரித்து காணப்பட்டது. 


இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே வெப்பநிலை 25°C-க்கு மேல் பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அதிகாரி ஒருவர் கூறுகையில், சிம்லாவில் பொதுவாக மார்ச் மாதத்தில் வெப்பநிலை 25°C-ஐத் தாண்டுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரிவித்தார். வழக்கமாக சிம்லாவில் கோடைக்காலம் மே மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில்தான் உச்சத்தை எட்டும் என்றும் ஆனால், அங்கு வெப்ப அலைகள் வீசுவது மிகவும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த வாரம் இதேபோன்ற ஒரு நிலை நிலவியது. தற்போது அங்கு வெப்பநிலை மிக அதிகமாக உள்ளதாகவும் இது இன்னும் 2 முதல் 3 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும், அங்கு வரவிருக்கும் 'மேற்கத்திய இடையூறு' (Western Disturbance) காரணமாக இந்த வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய இடையூறுகள் என்பது ஈரப்பதமான காற்றைச் சுமந்து கொண்டு கிழக்கு நோக்கி நகரும் ஒரு காற்று மண்டலமாகும். இவை ஈரான் நாட்டிற்கு அப்பால் உருவாகி, மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி வருகின்றன. இவை பொதுவாக குளிர்காலங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். 





இந்த அசாதாரணமான வானிலைக்குப் போதிய மழையில்லாத வறண்ட குளிர்காலமே முக்கியக் காரணமாக அமைந்தது. சாதகமான வானிலை அமைப்புகள் ஏதும் உருவாகாததால், 1901-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிப்ரவரி மாதம் மூன்றாவது மிக வறண்ட மாதமாகப் பதிவானது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா முழுவதும் பெய்த சராசரி மழையளவு வெறும் 16 மி.மீ மட்டுமே ஆகும். இது வழக்கமான அளவைவிட 60% குறைவாகும். இக்காலகட்டத்தில் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு ஆகிய இரண்டுமே மிகக் குறைவாகவே காணப்பட்டன.


கடந்த நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் போதிய அளவில் மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) ஏற்படாததே இதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக, குளிர்கால மழையின் பெரும்பகுதியை இந்த காற்று மண்டலங்களே கொண்டு வருகின்றன. அத்துடன், கடலில் இருந்து மத்திய மற்றும் வடஇந்திய பகுதிகளுக்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும் மேற்கத்திய காற்றுகளும் (Westerly winds), கிழக்கத்திய காற்றுகளும் (Easterly winds) ஒன்றாகச் சந்திக்கும் 'சங்கமித்தல்' நிகழ்வு இம்முறை நடைபெறவில்லை என்பதையும் வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மழை இல்லாத வறண்ட குளிர்காலங்கள், கோடை முன்கூட்டியே தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. ஏனெனில், போதிய மழைப்பொழிவு இல்லாதபோது மண் மிக விரைவாக வெப்பமடைகிறது. பொதுவாக, மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது, கோடையின் தொடக்கத்தில் அந்த ஈரப்பதம் முதலில் ஆவியாகும். ஆனால், மழை குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்போது, வறண்ட நிலம் மிக வேகமாக வெப்பமடைந்து ஒட்டுமொத்த வெப்பநிலையும் அதிகரிக்கிறது.


பயிர்கள் வெப்பத்தின் தாக்கத்தை உணர்கின்றன


திடீரென உயரும் வெப்பநிலையானது, தற்போது அறுவடைக்குத் தயாராக நிலத்தில் இருக்கும் ரபி (rabi) பருவப் பயிர்களை உடனடியாகப் பாதிக்கும் என்கின்றனர். 


கடுகு, கோதுமை, கடலை (Gram), நிலக்கடலை, எள், சோளம், குங்குமப்பூ  ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் மற்றும் ஆப்பிள் போன்ற பழவகைகளுக்கும் கூடுதல் கவனிப்பு தேவைப்படும். மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அடிக்கடி நீர் பாய்ச்சுமாறு வேளாண் தொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இருப்பினும், இது உள்ளூர் நீர் ஆதாரங்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். 


Original article :  What is driving the early summer and heat-wave conditions in north India? -Anjali Marar

Share: