அணுகலுக்கான விலை : தொழிலாளர்களுக்கான சுகாதாரப் பரிசோதனை குறித்து…

மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான செலவு அதிகமாகவே உள்ளது.


புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளில் (new Labour Codes), ஏற்கனவே உள்ள ஒரு விதியைத் தொடர்ந்து, 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சுகாதாரப் பரிசோதனை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதுடன், இந்தத் திட்டம் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees’ State Insurance Corporation (ESIC)) மூலம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டது. இதில், நச்சு இரசாயனங்களைக் கையாளுதல் அல்லது கனரக இயந்திரங்களை இயக்குதல் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பரிசோதனைகள் கட்டாயமாகும். இவர்களுக்கு ஏதேனும், நோய் கண்டறியப்பட்டால், தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கும். தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிற்சாலைகள் சட்டம்-1948 (Factories Act), தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்டம்-1948(ESI Act) மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (Occupational Safety, Health and Working Conditions (OSH) Code) சட்டம்-2020 ஆகியவற்றின்கீழ் இந்தியாவில் ஏற்கனவே சில தொழிலாளர் சுகாதாரப் பாதுகாப்புகள் எழுத்துப்பூர்வமாக உள்ளன. இந்த புதிய திட்டத்திற்கு நன்கு நிதியளிக்கப்பட்ட தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்ட (ESI) நிதியிலிருந்து நிதியளிக்கப்படும். அதேநேரத்தில், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தால் பட்டியலிடப்பட்ட மருத்துவ வசதிகள் மூலம் கிடைக்கும் படுக்கைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் வலுப்படுத்தி வருகிறது. தற்போதைய செயல்பாட்டு ஆதாரங்கள், காப்பீடு பெற்ற தொழிலாளர்களே இத்திட்டத்தின் முக்கியப் பயனாளிகளாக இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றன.


இந்த முன்முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. தற்போது, 94 கோடி தொழிலாளர்களில் சுமார் 31 கோடி பேர் மட்டுமே இ-ஷ்ரம் இணையதளத்தில் (e-Shram portal) பதிவிட்டுள்ளனர். மேலும், பல மாநிலங்களில் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்துடனான (ESIC) அதன் ஒருங்கிணைப்பு இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. மேலும், ஆடைத் தொழிற்சாலையிலோ அல்லது வீட்டுப் பணியாளராகவோ பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு 'வேலையளிப்பவர்' (employer) இல்லாத பட்சத்தில், அவர் எவ்வாறு நீண்ட மகப்பேறு விடுப்பைப் பெற முடியும் என்பதையும் தொழிலாளர்த் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் கொடுக்கத் தவறிவிட்டார். பெண்களுக்கான வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகளுக்கு குறிப்பிட்ட மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், பல தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) முகாம்கள் நெரிசலாகவும் ஆண்களின் ஆதிக்கத்திலும் உள்ளன. இதற்கு முந்தைய பல திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டமும் சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவதில் ஏற்படும் வாய்ப்புச் செலவுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. இதனால், தொழிலாளர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒரு தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) மையத்தில் குறிப்பிட்ட சுகாதாரப் பரிசோதனைகளுக்கான வளங்கள் இல்லாத பட்சத்தில், ஒரு தொழிலாளியை மற்றொரு மையத்திற்குப் பரிந்துரைக்கக்கூடும். இது தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்லவும், கூடுதல் நேரத்தையும், செலவையும் ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. இந்தப் புதிய திட்டம், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், வெப்பம் தொடர்பான நோய்கள், தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் (ESI) கீழ் தொழில்சார் நோய்களாக வெளிப்படையாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், கட்டுமானம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். மறுபுறம், குப்பை சேகரிப்பவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஹெபடைடிஸ் (hepatitis) மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ் (leptospirosis) போன்ற தொற்று நோய்களால் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இந்தத் திட்டம் சுகாதாரப் பரிசோதனைகளை வழங்கினாலும், முன்கூட்டியே தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கவில்லை. அரசாங்கம், நடமாடும் தொழில்சார் சுகாதாரப் பிரிவுகள் மூலமாகவும், மேலும் அமைப்புசார் தொழிலாளர்களுக்காக தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (Occupational Safety, Health and Working Conditions (OSH) Code) சட்டம்-2020 குறிப்பிடுவது போல, அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் தொழிலாளர்களைச் சந்தித்து, பரிசோதனைகளுக்காக அவர்கள் செலவிடும் நேரத்திற்கு ஈடுசெய்யும் வகையில் டோக்கன்களை வழங்க வேண்டும். இல்லையெனில், இத்தகைய எந்தவொரு திட்டமும் ஏற்கனவே குறைபாடுள்ள அமைப்பை மேம்படுத்தாது.


Original Link: Cost to access: On health check-up for workers


Share: