இறந்த உறுப்பினர்களுக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் போன்ற உறுப்பினர் சேவைகளில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சார்ந்த தாமதங்களைக் குறைப்பதற்காக, தானியக்கமாக்கல் மற்றும் விதிமுறை சார்ந்த செயலாக்கத்தின் மூலம் அதன் சேவை வழங்கும் முறையை நவீனமயமாக்குவதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போதைய செய்தி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation (EPFO)) சமீபத்தில் தனது சந்தாதாரர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், "திட்டமிடப்பட்ட தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்தும்" பணியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, கோரிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கணக்குப் புத்தகங்களைப் (Passbooks) பதிவிறக்கம் செய்தல் போன்ற உறுப்பினர் சேவைகள் ஜூன் 26 முதல் ஜூலை 1 வரை தற்காலிகமாகக் கிடைக்காது என்று EPFO கூறியுள்ளது. மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பு (Centralised IT-Enabled System (CITES)) திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியக்கமாக்கல் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயலாக்க முறைகள் மூலம் தனது சேவை வழங்கும் வழிமுறையை நவீனமயமாக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முயற்சி செய்து வருகிறது. 'மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்' (Centre for Development of Advanced Computing) மூலம் வடிவமைக்கப்பட்ட இந்தத்திட்டம், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நடைமுறையானது சேவைகளை மேலும் வெளிப்படையானதாக மாற்றுவதுடன், சந்தாதாரர்களுக்குத் தடையற்ற சேவைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நம்புகிறது.
தற்போதைய சேவைகள்
இறந்த உறுப்பினர்களுக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பது மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ்களை வழங்குவது போன்ற உறுப்பினர் சேவைகளில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நடைமுறைத் தாமதங்களை எதிர்கொள்கிறது. தற்போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒவ்வொரு கள மற்றும் மண்டல அலுவலகத்திலும் தனித்தனி தரவுத்தளங்களைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. உறுப்பினர்கள் ஒரு மண்டல அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். பல சூழல்களில், ஓய்வுபெற்ற பயனாளிகளும், கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க, தாங்கள் பணிபுரிந்த அலுவகங்களில் உள்ள மண்டல அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இறந்த உறுப்பினர்களின் பயனாளிகளும் ஓய்வூதியம் அல்லது பிற கோரிக்கைகளுக்காக அந்தந்த மண்டல அலுவலகங்களை அணுக வேண்டிய சூழல் இருந்தது. தற்போது, இந்த அமைப்பின் செயல்பாடுகள் 120-க்கும் மேற்பட்ட தனித்தனி (Decentralised) தரவுத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து மைய அளவில் கண்காணிக்கும் வசதி இல்லை. பெரும்பாலான கோரிக்கைகளுக்கு வேலையளிப்பவரின் ஒப்புதல் தேவைப்படுவதால், கணக்குகளின் செயல்பாடுகள் "வேலையளிப்பவரை மையமாகக் கொண்டவை" என்ற புகார்கள் எழுந்துள்ளன.
சேவைகளை மையப்படுத்துதல்
மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பு (Centralised IT-Enabled System (CITES)) நாடு முழுவதற்குமான ஒரே மையப்படுத்தப்பட்ட அமைப்பு மற்றும் ஒரே தேசிய தரவுத்தளத்தை வழங்குகிறது. இதன் மூலம், தற்போது எந்த வருங்கால வைப்பு நிதி (PF) அலுவலகமும் உறுப்பினரின் சேவை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இனி உறுப்பினர்கள் அல்லது பயனாளிகள், தங்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு பெறவும், விளக்கங்களைப் பெறவும், நாட்டின் எந்த வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தையும் அணுக முடியும். உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer) முறையில் வாடிக்கையாளர் விவரங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளை, இந்த புதிய தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம். உறுப்பினர்கள் தற்போது பயன்படுத்தி வரும் அனைவருக்குமான கணக்கு எண் (Universal Account Number (UAN)) மற்றும் அதற்கான கடவுச்சொல் (Password) ஆகியவற்றையே பயன்படுத்தி இந்த புதிய அமைப்பில் உள்நுழைய முடியும். 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பு, இதுவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றில் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியப் பணம் வழங்கும் முறை (Centralised Pension Payment System) முக்கியமான ஒன்றாகும். மூத்த அதிகாரிகளின் தகவலின்படி, இந்த மையப்படுத்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக, பல லட்சம் கோடி மதிப்புள்ள தரவுப் பதிவுகள் (Data Records) அனைத்தும் புதிய மையப்படுத்தப்பட்ட அமைப்பிற்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.
செயல்முறை
இந்தச் செயல்முறை ஜூன் 26 அன்று தொடங்கி, ஜூன் 30-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகச் சேவைகள் பாதிக்கப்படும். அனைவருக்குமான கணக்கு எண் (Universal Account Number (UAN)) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர் இணையதளத்தில் உள்நுழையும்போது, உறுப்பினர்கள் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் இடைமுகத்தை அணுக முடியும். இந்த இடைமுகத்தில் உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் விவரங்கள், வருங்கால வைப்பு நிதி இருப்புகள், கோரிக்கையின் நிலை, ஓய்வூதியத்திற்குரிய சேவைப் பதிவுகள் மற்றும் பெறப்பட்ட பலன்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகங்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்தலாம் மற்றும் இந்த அமைப்புமுறை மூலம் மின்னணு முறையில் கேள்விகளை எழுப்பலாம். உறுப்பினர்கள் இந்தக் கேள்விகளுக்கு இணையவழியில் பதிலளிக்கலாம். இது விரைவான தீர்வுக்கு வழிவகுக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைக் குறைக்கிறது. இதன் மூலம் கோரிக்கை நிராகரிப்புகளையும் குறைக்கிறது.
உறுப்பினர்களுக்கான நன்மைகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு, இந்த மையப்படுத்தப்பட்ட அமைப்பு, ஒரே உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட அனைவருக்குமான கணக்கு எண்ணின் கீழ், அவர்களின் முந்தைய உறுப்பினர்களின் கணக்குகள் அனைத்தையும் பார்க்க அனுமதிக்கிறது. வருங்கால நிதி திரட்டல்கள், சேவைப் பதிவுகள் மற்றும் கோரிக்கைகளின் தற்போதைய நிலை ஆகியவை உறுப்பினருக்குக் காட்டப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூற்றுப்படி, இந்த புதிய இடைமுகம் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. துல்லியமான சேவை வரலாற்றைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், விரைவான தீர்வுகளுக்கு வழிவகுக்கிறது. உறுப்பினர்கள் தொடக்க நிலையிலேயே ஏதேனும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகளைக் கண்டறிந்து, இடைமுகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றித் தெளிவான தகவல்களை வழங்கலாம். உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து எடுக்கக்கூடிய தகுதியான தொகையை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய இடைமுகம், உறுப்பினர்கள் இறந்தபின் வழங்கப்படும் இறப்பு கோரிக்கைகள் (Death Claims) தீர்வு செயல்முறையை எளிமையாக்கும். அதிகாரிகளின் கூற்றுப்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இலக்கான வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகத்துடன் (Unified Payments Interface (UPI)) இணைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனையாக இது அமையும்.
Original article : What is Centre’s new EPFO upgrade? -A. M. Jigeesh