பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்றால் என்ன?, அவை ஏன் கவனம் பெற்றுள்ளன? -குஷ்பூ குமாரி

 கொங்கண் பகுதியில் உள்ள 107 கிராமங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான வரலாற்றுக்கு முந்தைய பாறைச் செதுக்கல்களை (Petroglyphs) ஆய்வு செய்வதற்காக மகாராஷ்டிர அரசு ₹15 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்றால் என்ன?, வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகங்களைப் புரிந்துகொள்ள அவை எவ்வாறு உதவுகின்றன?


தற்போதைய நிகழ்வு என்ன? 


கொங்கன் பகுதி முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான வரலாற்றுக்கு முந்தைய பாறைச் செதுக்கல்களின் தோற்றம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை அறிவியல் பூர்வமாகப் பகுப்பாய்வு செய்யவும், வகைப்படுத்தவும், விளக்கமளிக்கவும் மகாராஷ்டிர அரசு செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதன் மூலம், தொழில்நுட்பத்தைத் தொல்லியலுடன் இணைக்கிறது. இந்த நடவடிக்கை, இந்தப் பண்டைய தளங்களுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தரநிலையைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியை கணிசமாக வலுப்படுத்தக்கூடும்.




முக்கிய அம்சங்கள் :


1. பாறைச் செதுக்கல்கள் (Petroglyphs) என்பவை, மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான இரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள செம்மண் பீடபூமிப் பகுதிகளில் காணப்படும் விலங்கு உருவங்கள் அல்லது மனித உருவங்களின் கல் சிற்பங்கள் ஆகும். இந்தச் சிற்பங்களில் முக்கியமாக ஆமைகள், யானைகள், மயில் மற்றும் காண்டாமிருகம் உள்ளிட்ட உருவங்கள் அடங்கியுள்ளன. 2017 மற்றும் 2023-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகளின் போது இவை கண்டறியப்பட்டன.


புவிக்குறி ஓவியங்கள் (geoglyphs) என்றால் என்ன?


1. புவிக்குறி ஓவியங்கள் (geoglyphs) என்பவை செம்மண் பீடபூமிகளின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்ட ஒரு வகையான வரலாற்றுக்கு முந்தைய பாறைக்கலையாகும். பாறையின் மேற்பரப்பின் ஒரு பகுதியை வெட்டுதல், குத்துதல், செதுக்குதல் அல்லது தேய்த்தல் போன்றவற்றின் மூலம் அவை உருவாக்கப்படுகின்றன. யுனெஸ்கோ பட்டியலில் "கொங்கன் புவிக்குறி ஓவியங்கள்" (Konkan geoglyphs) குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற இடங்களில், பாறைச்செதுக்கல் (petroglyph) என்ற சொல்லும் (அதாவது, "பாறைச் சின்னம்/எழுத்து") பயன்படுத்தப்படுகிறது. யுனெஸ்கோ பட்டியலின்படி, பாறைச்செதுக்கல்களும் புவிக்குறி ஓவியங்களும் (geoglyphs) ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், இரண்டுக்குமே பாறையின் மேற்பரப்பில் பகுதிகளை அகற்றும் அல்லது ஒரு சின்னத்தைப் பொறிக்கும் திறன்கள் தேவைப்படுகின்றன.


2. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தச் சிற்பங்களின் தோற்றம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது. மேலும், கி.மு. 7,000 முதல் கி.மு. 5,000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ஆரம்பக்காலத்தைக் கொண்ட ஹரப்பா நாகரிகத்தைவிட இது பழமையானவை என்பதை உணர்த்துகிறது. இந்தச் சிற்பங்கள் சராசரியாக 50 சதுர மீட்டர் நீளமும் 20 சதுர மீட்டர் அகலமும் கொண்டவை.



3. 2025-ம் ஆண்டில், இந்தக் கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் (Tentative List) சேர்க்கப்பட்டன. இருப்பினும், இவை இன்னும் நிரந்தர உலகப் பாரம்பரிய தரநிலைப் பெறவில்லை. இந்தப் பாறைச் செதுக்கல்களின் எண்ணிம மதிப்பீடு மற்றும் ஆவணப்படுத்தலை (digital assessment and documentation) மேற்கொள்வதற்காக, மாநில அரசு தற்போது ஐஐடி-மெட்ராஸின் தொழில்நுட்பப் புத்தாக்க மையமான 'ஐஐடி பிரவர்தக்' (IIT Pravartak)-ஐ நியமித்துள்ளது.


ஒரு தளம் முதலில் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு யுனெஸ்கோவிற்குச் சமர்ப்பிக்கப்படும் இந்தியாவின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஒரு தளத்தை முறையாகப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு, அது தற்காலிகப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது யுனெஸ்கோவின் நிபந்தனையாகும்.


4. மகாராஷ்டிர அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் இயக்குநரகத்தின் இயக்குநர் தேஜஸ் கார்கே, கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் குதிரை அல்லது காளையைச் சித்தரிக்கும் எதுவும் இல்லை என்று கூறினார்.



5. “குதிரை உருவங்கள் இல்லாதது, இந்தச் சிற்பங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதையும், காளைகள் இல்லாதது அவை விவசாயத்திற்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. எனவே, இந்தச் சிற்பங்களின் தோற்றம் இடைக்கற்காலம் (Mesolithic Era) அல்லது நடுக்கற்காலத்தைச் (Middle Stone Age) சேர்ந்தது என்பது எங்களுக்குத் தெளிவாகியது,” என்று கார்கே மேலும் கூறினார்.


இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் மற்றும் கலை வடிவங்களில் காளைகளும் குதிரைகளும் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இங்கு கி.மு. 1500 முதல் 1000-க்கு இடைப்பட்ட காலத்தில் குதிரைகள் வந்தன. அதேசமயம், கி.மு. 9000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது.


6. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய IITM பிரவர்தக் (IITM Pravartak) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர் ராமன், பாறைச் செதுக்கல்களின் உயர் தெளிவுத்திறன் கொண்ட வான்வழிப் புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு அமைப்பைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் என்றும், அதன் மூலம் விடுபட்ட கோடுகள் மற்றும் சிதைந்த பகுதிகளை சீரமைக்கும் அதே வேளையில், அவற்றிலுள்ள வடிவங்கள் அடையாளம் காணப்படும் என்றும் தெரிவித்தார்.


7. பின்னர், நிபுணர்கள் அந்தச் சிறு உருவங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்து, மெசபடோமிய நாகரிகம் அல்லது அந்தக் காலகட்டத்தில் இருந்த வேறு எந்த நாகரிகத்தைச் சேர்ந்தவை போன்ற, உலகம் முழுவதும் காணப்படும் மற்ற பாறைச் செதுக்கல்களுடன் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தச் செதுக்கல்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வரையப்பட்ட ஒவ்வொரு உருவத்தின் பின்னணியில் உள்ள காரணமும் கண்டறியப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவின் முதல் பாறைச் செதுக்கல் பாதுகாப்புப் பூங்கா (Petroglyph Conservation Park) லே (Leh) பகுதியில் உள்ள சிந்து காட்-இல் (Sindhu Ghat) திறக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவால் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுப்பாடற்ற சுற்றுலா, விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விழிப்புணர்வின்மை ஆகியவற்றால் பெருகிவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல நூற்றாண்டுகள் பழமையான பாறைச் செதுக்கல்களுக்கு (petroglyphs) ஒரு பிரத்யேக பாதுகாப்பு இடமாகச் செயல்படுவதே இந்தப் பாறைச் செதுக்கல் பூங்காவின் நோக்கமாகும்.


வரலாற்றுக்காலப் பகுப்பாய்வு மற்றும் பெயரிடல்


1. மனித வரலாற்றின் மிகத் தொடக்கக் கட்டத்தைப் பற்றிய ஆய்வு, வரலாற்றுக்கு முந்தைய காலம் (Prehistory) என்று அழைக்கப்படுகிறது. இது, எழுத்து முறைகள் தோன்றுவதற்கு முன்பு மனித சமூகங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தைத் தொடர்ந்து வருவது வரலாற்று தொடக்கக் காலம் (Proto-history) ஆகும். வரலாற்று தொடக்கக் காலம் (Proto-history) என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் வரலாற்றுக்கும் இடைப்பட்ட காலமாகும். இது, எழுத்து முறையை வளர்த்துக் கொள்ளாத, ஆனால் சமகாலக் குழுவின் எழுத்துப்பூர்வப் பதிவுகளில் குறிப்பிடப்பட்ட மக்களைக் குறிக்கிறது.


2. தொழில்நுட்பரீதியாக, மனித ‘வரலாறு’ எழுத்தின் வருகையுடன் தொடங்கியது. அதற்கு முந்தைய அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய காலம்’ (prehistory) ஆகும். இது முதன்மையாக தொல்பொருள் சான்றுகளை (கடந்த காலத்தின் பௌதீக எச்சங்கள்) கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பினும், இனவரைவியல் ஆய்வும் (மனித கலாச்சாரங்கள், சமூகங்கள் பற்றிய ஆய்வு) முக்கியமான நுண்ணறிவுகளை வழங்க முடியும்.


3. 19-ம் நூற்றாண்டில், டேனிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியன் யுர்கென்சன் தாம்சன் (Christian Jürgensen Thomsen), மனிதகுலத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை கற்காலம் (Stone Age), பின்னர் வெண்கலக் காலம் (Bronze Age), இறுதியாக இரும்புக் காலம் (Iron Age) என அறிவியல் பூர்வமான முறையில் முதன்முதலாகக் காலப்பிரிவு செய்தார். நமது இனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட யுர்கென்சனின் இந்தக் காலவரிசை, பல்வேறு கலாச்சாரங்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அன்று முதல் ஒரு கோட்பாடாக உயர்ந்துள்ளது.


4. சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (mya), இன்றைய எத்தியோப்பியாவில் ஹோமினிட்கள் (hominids) முதன்முதலில் கற்கருவிகளை பயன்படுத்தியபோது கற்காலம் தொடங்கியது. சுமார் 6,000-4,000 BP (தற்காலத்திற்கு முன்பு) வரை நீடித்த இந்தக் காலகட்டம், மனித வரலாற்றின் 99%-ஐ உள்ளடக்கியுள்ளது. இது மேலும் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, பழைய கற்காலம் (Palaeolithic), இடைக்கற்காலம் (Mesolithic) மற்றும் புதிய கற்காலம் (Neolithic) ஆகும்.


5. சில இடங்களில் சுமார் 11,650 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த பழங்கற்காலம், பழமையான கற்கருவிகளின் பயன்பாடு மற்றும் வேட்டையாடி-உணவு சேகரிக்கும் வாழ்க்கைமுறை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இடைக்கற்காலம் என்பது பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட ஒரு மாறுதல் காலமாகும். மேற்கு ஆசியாவில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தொடங்கிய புதிய கற்காலம், நிலையான விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.


அறிவியல் ஆய்விற்காக அனுப்பப்பட்ட ராகிஹர்கி தொல்பொருட்கள்


1. ஹரப்பா நாகரிகம், எகிப்து மற்றும் மெசபடோமியாவுடன் சேர்ந்து, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செம்பு அடிப்படையிலான உலோகக் கலவைகளால் செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது ஒரு வெண்கலக் கால நாகரிகமாக அடையாளம் காணப்படுகிறது.


2. சமீபத்தில், ஹரியானாவின் ராகிகர்ஹி என்ற ஹரப்பன் தளத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள், அறிவியல் ஆய்வுக்காக, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் (Archaeological Survey of India (ASI)), மத்திய கலாச்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தேசிய ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மானுடவியல் ஆய்வுத் துறையிடம் (Anthropological Survey of India (AnSI)) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.


3. தொல்-மானுடவியல் (palaeoanthropological) ஆராய்ச்சி (மனிதப் பரிணாம வளர்ச்சியின் பல்துறை ஆய்வு), மூலக்கூறு உயிரியல் மற்றும் டி.என்.ஏ ஆய்வுகள் ஆகியவற்றின் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மனித எச்சங்கள் அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நுட்பங்கள், பண்டைய மக்கள் எப்படி இருந்திருக்கலாம் என்பதை ஆராயவும், மூதாதையர் மற்றும் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறியவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளன.


4. ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ராகிகர்ஹி, சுமார் 550 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து, இந்தியாவின் மிகப்பெரிய ஹரப்பன் தளங்களில் ஒன்றாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் முற்கால ஹரப்பன் காலகட்டம் (சுமார் கி.மு. 3300-2600) முதல் முதிர்ந்த ஹரப்பன் காலகட்டம் (சுமார் கி.மு. 2600-1900) வரை மக்கள் வசிப்பிடமாக இருந்தது.


5. அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், களிமண் செங்கல் கோட்டைகள், தெருக்கள் மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் குடியிருப்புக்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலும், மட்பாண்டங்கள், சுடுமண் சிலைகள் மற்றும் பொறிக்கப்படாத முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இவ்விடம் நன்கு வளர்ந்த கைவினை மரபு கொண்டிருப்பதையும் பறைசாற்றுகிறது.


Original article : What are petroglyphs and why are they in the news? -Khushboo Kumari

Share: