மாநில அரசுகளுக்கான நிதி நெருக்கடி -ஜெயன் ஜோஸ் தாமஸ்

 மாநில அரசுகளின் செலவினங்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளிலும், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பொருளாதாரத் துறைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. கேரளாவில், இது போன்ற செலவினங்கள் 1960-களிலிருந்து சமூக முன்னேற்றத்தை மேம்பத்தியுள்ளன. செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி பொதுவாகச் சந்தைக் கடன்கள் (market borrowings) மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

கேரளாவும் தமிழ்நாடும் இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதாரரீதியாக முன்னேறிய முக்கிய மாநிலங்களாகும். இருப்பினும், மாற்ற இந்திய மாநிலங்களைப் போலவே, இந்த இரு அரசாங்கங்களின் நிதிநிலையும் நெருக்கடியில் உள்ளது. இரு மாநில அரசாங்கங்களும் சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கைகள், அவற்றின் நிலுவையில் உள்ள கடன் கவலையளிப்பதாக விவரித்துள்ளன. மாநில அரசாங்கக் கடன் என்பது பெரும்பாலும் நிதி மேலாண்மைக் குறைபாட்டின் விளைவாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது மாநில அரசுகளின் வளர்ச்சி இலட்சியங்களுக்கும் (Development Aspirations), அவற்றின் குறைந்த நிதித் திறனுக்கும்  அவற்றின் வரையறுக்கப்பட்ட நிதி வசதிக்கும் இடையிலான முரண்பாட்டைப் வெளிக்காட்டலாம்.


நிதி நெருக்கடி


அரசாங்கத்தின் செலவினங்கள் அதன் வரி மற்றும் பிற வருவாய்களைவிட அதிகமாகும்போது பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன. இதனால் பல ஆண்டுகளாகக் கடன்கள் அதிகமாகி வருகின்றன. இந்தியாவில், வரிகளை உயர்த்தும் அதிகாரம் பெரும்பாலும் ஒன்றிய அரசிடம் இருந்தாலும், ஒட்டுமொத்த அரசாங்கச் செலவினங்களில் முக்கியப்பங்கு மாநில அரசுகளால் ஏற்கப்படுகிறது. மாநில அரசின் செலவினங்களில் பெரும்பகுதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளிலும், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பொருளாதாரத் துறைகளிலும் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கேரளாவில், 1960-களிலிருந்து சமூகநலத் துறைகளில் மாநில அரசு அதிக அளவில் செலவினம் செய்வது, சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பொது நடவடிக்கையின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வருகிறது. அனைத்து இந்திய மாநிலங்களின் சராசரியுடன் ஒப்பிடும்போது, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இந்தச் செலவினம் முறையே 30% மற்றும் 20% அதிகமாக இருந்தது. இதற்கு மாறாக, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் இந்தச் செலவினம் முறையே 35% மற்றும் 40% குறைவாக இருந்தது. இந்தத் தகவல்கள், 2020–2023-ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் மாநில நிதியியல்: வரவு-செலவுத் திட்டங்கள் குறித்த ஓர் ஆய்வு (State Finances: A Study of Budgets) என்ற ஆய்வு அறிக்கையின் பகுப்பாய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை.


மாநிலங்கள் தங்களின் செலவினங்களை, முக்கியமாக மாநில சரக்கு மற்றும் சேவை வரி (State Goods and Services Tax (SGST)) மற்றும் விற்பனை வரி ஆகியவற்றை உள்ளடக்கிய தங்களின் சொந்த வருவாய்கள் மூலமாகவும்,  ஒன்றிய அரசிடமிருந்து பெறும் நிதிப் பரிமாற்றங்கள், மானியங்கள் மற்றும் கடன்கள் மூலமாகவும் ஈடுசெய்கின்றன. மாநிலங்களின் சொந்த வருவாயில் முக்கியமானவை மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் விற்பனை வரி ஆகும். கேரளா, தனது சொந்த வரிவருவாயை திரட்டுவதில் சாதனை பெற்றுள்ளது. தனிநபர் அடிப்படையில் (Per Capita) கணக்கிடும்போது, கேரளாவின் சொந்த வரி வருவாய், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சராசரியைவிட 1.5 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், 2023–24 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீட்டில் (Tax Devolution) கேரளாவுக்குக் கிடைத்த பங்கு 1.92% மட்டுமே. இது, அதே ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கேரளாவின் 2.6% மக்கள்தொகைப் பங்கைவிடக் குறைவாக இருந்தது.











வரவுகளைவிட செலவினங்கள் அதிகமாக இருப்பது, மாநிலங்கள் சந்தைக் கடன்கள் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மாநிலங்கள் வட்டி செலுத்துகின்றன என்பது விளக்கப்படங்கள் 1 மற்றும் 2 மூலம் தெரிய வந்துள்ளது.


தனக்குக் கிடைத்துள்ள குறைந்த அளவிலான நிதி வளங்களில், கேரளா மாநிலம் எதிர்கால உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் 10% மட்டுமே மூலதனச் செலவினமாக (Capital Expenditure) ஒதுக்க முடிந்துள்ளது. மீதமுள்ள பெரும்பகுதி வருவாய்ச் செலவினங்களாக (Revenue Expenditure) அல்லது தினசரி நிர்வாகச் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. மாநிலத்தின் மொத்த வரவு செலவு அறிக்கை செலவினத்தில் ஐந்தில் ஒரு பங்கு 20% அரசு ஊழியர்களின் ஊதியங்களுக்காக செலவிடப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறைப் பணியாளர்கள் ஆவர். ஓய்வூதியச் செலவினம் மொத்த வரவு செலவு அறிக்கைசெலவினத்தில் 15.3%-ஆக இருந்தது. அதேபோல், சந்தையில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிச் செலுத்துதல் மொத்த வரவு செலவு அறிக்கை செலவினத்தில் 16.5%-ஆக இருந்தது என்று விளக்கப்படம் 2 மூலம் தெரிய வந்துள்ளது.


கேரளா எதிர்கொள்ளும் முதலீட்டு சவால்


இது போன்ற காரணிகளால் கேரளா ஒரு நிதிநெருக்கடிக்கு இடையே சிக்கியுள்ளது. ஓய்வூதியங்களைக் குறைத்தல் மற்றும் பணியாளர்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வருவாய் செலவினங்களைக் குறைத்து கூடுதல் நிதிச் சூழலை உருவாக்க முயன்றால், சமூகநலத் துறையில் மாநிலம் வைதுள்ள முக்கிய பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே வேளையில், நவீன மற்றும் அறிவுசார்ந்த பொருளாதாரத் துறைகளில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டுமானால், உள்கட்டமைப்பு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, பொதுப் போக்குவரத்து ஆகிய துறைகளில் மாநில அரசின் நேரடித் தலையீட்டின் மூலம் வரும் முதலீடுகள் கேரளா மாநிலத்திற்குத் தேவைப்படுகின்றன. படித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசால் செய்யமுடியாத காரணத்தினால், அவர்கள் பெருமளவில் கேரளாவைவிட்டு வெளியேறி வருகின்றனர்.


கேரளாவில், அரசின் பலவீனமான நிதித் திறன், ஆடம்பரமாகக் கட்டப்பட்ட வீடுகள், விலை அதிகமாக உள்ள  கார்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தங்கக் கடைகள் அதிகமாக உள்ளன. இந்த முரண்பாடு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


2023-ஆம் ஆண்டில், கேரளாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளின் (Scheduled Commercial Banks) கடன்-வைப்பு விகிதம் 66% மட்டுமே இருந்தது. இது தேசிய சராசரியான 76%-ஐ விடக் குறைவாகும். அதேசமயம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 100%-ஐத் தாண்டியுள்ளது. வங்கிக் கடனைவிட வங்கி வைப்புத்தொகை அதிகமாக இருப்பது, கேரளாவில் பயன்படுத்தப்படாத சேமிப்பின் அளவைக் காட்டும் ஒரு குறிகாட்டியாகும். 2016 மற்றும் 2026-க்கு இடையில், கேரளா தனது உபரி சேமிப்பின் ஒரு பகுதியையாவது முதலீட்டில் செலுத்தியிருந்தால், மாநில அரசின் மூலதனச் செலவினம் குறைந்தபட்சம் இரு மடங்காக உயர்ந்திருக்க முடியும் என்று விளக்கப்படங்கள் 3 மற்றும் 4 தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கடன் வாங்கும் வாய்ப்பு


சீனாவில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்த பெரிய முதலீடுகளின் முக்கியப்பகுதி மாகாணங்கள் மற்றும் கீழ்மட்ட உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளுக்கு நிதியளிக்க, உள்ளாட்சி அமைப்புகள் சீன வங்கிகளிடம் உள்ள அதிக உள்நாட்டு சேமிப்பு நிதியைப் பயன்படுத்தி அதிக அளவில் கடன் பெறுகின்றன. அதே சமயம், அவற்றின் முயற்சிகள் மத்திய அரசின் திட்டமிடல் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நிதிப் பரிமாற்றங்களுக்குத் துணையாக, உள்ளாட்சிப் பத்திரங்களை (local government bonds (LGBs)) விற்பனை செய்தல், நில விற்பனை மற்றும் உள்ளாட்சி நிதி வழங்கும் வழிமுறைகள் (local government financing vehicles (LGFVs)) வழியாக வரவு செலவுத் திட்டத்தை தாண்டி கடன் பெறுதல் ஆகியவற்றின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டுகின்றன.


இந்தியாவில், மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் கடன் செலவும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. மாநில அரசுகள், சந்தையில் கடன் வாங்குவதற்காக வெளியிடும் மாநில வளர்ச்சிக் கடன்கள் (State Development Loans (SDLs)) எனப்படும் பத்திரங்களுக்கு 6.5% முதல் 7.5% வரை வட்டி செலுத்துகின்றன. இது, ஒன்றிய அரசு கடன் வாங்கும் வட்டி விகிதத்தைவிட 0.25 முதல் 0.75 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகவும், சீன உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வங்கி அமைப்பிலிருந்து கடன் வாங்குவதற்கான செலவை 2% விட கணிசமாக அதிக செலவுடையதாகவும் உள்ளது.


அதிக வட்டிச் சுமையானது, மாநில அரசுகளின் கடன் பிடியை மேலும் இறுக்குகிறது.


இந்தியாவில் வெளியிடப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பத்திரங்கள் (Government Bonds) பெரும்பாலும் வணிக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிதி நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள், அரசாங்கத்தின் நிதிநிலையை ஆதரிப்பதற்காக, பொதுமக்களிடமிருந்து தாங்கள் திரட்டும் சேமிப்புகளைப் பயன்படுத்துகின்றன. உண்மையில், அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் என்பது அதன் சொந்த மக்களுக்குச் செலுத்தவேண்டிய கடனாகும். நலத்திட்டங்களையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்க கடன் பெறும் அரசு, அளவுக்கு மீறி சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் அரசைவிட, சமூக நலனுக்கான மிக உயர்ந்த நோக்கத்திற்குச் சேவை செய்கிறது.


ஒரு குடும்பம் தங்கள் குழந்தையை தொலைதூரத்தில் உள்ள கல்வி நிலையத்தில் படிக்க அனுப்புவதற்காக தங்களின் வாழ்நாள் சேமிப்பை முழுமையாகச் செலவிட வேண்டிய நிலையைவிட, தங்கள் மாவட்டத்திலேயே ஒரு பொதுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக அந்தச் சேமிப்பு பயன்படுத்தப்படுவதை அதிகம் விரும்பும்.


மாநில அரசுகள் நன்கு திட்டமிடப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, உள்நாட்டு சேமிப்புகளை எளிதாகவும் குறைந்த செலவிலும் அணுகக்கூடிய நிதி சார்ந்த கட்டமைப்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன.


ஜயன் ஜோஸ் தாமஸ், தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology) பொருளியல் பேராசிரியராகவும், ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் வருகைதரு ஆய்வாளராகவும் உள்ளார்.


Original article : The fiscal tightrope for State governments. -Jayan Jose Thomas

Share: