Showing posts with label DGCA. Show all posts
Showing posts with label DGCA. Show all posts

ஏர் இந்தியா விமானிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கஞ்சா பயன்பாடு கண்டறியப்பட்டது: விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன மற்றும் அதற்கான தண்டனைகள் யாவை? - சுகல்ப் சர்மா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தால் (Directorate General of Civil Aviation (DGCA)) ஒரு கடுமையான வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி, மனநிலை மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்யப்படும் விமானிகள் மற்றும் விமானத் துறையின் பிற பணியாளர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புகேட்-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், அந்த விமானத்தை இயக்கிய முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டாவது போதைப்பொருள் பரிசோதனையில் கஞ்சா பயன்பாடு உறுதி (positive for marijuana) செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்தச் சம்பவத்தில் 24 பயணிகளும் விமானப் பணிப்பெண்களும் காயமடைந்தனர். தொடக்கத்தில், கடுமையான காற்றுக்கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாகவே, அந்த ‘Airbus A320’ விமானத்தின் ஹைட்ராலிக் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


விமான விபத்து புலனாய்வு அமைப்பு (Aircraft Accident Investigation Bureau (AAIB)) இந்தச் சம்பவத்தைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகிறது.


விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் (DGCA) கூற்றுப்படி, அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாடும், மனநலத்தைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் மிக எளிதாகக் கிடைப்பதும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்குப் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது பரிசோதனையில் உறுதி செய்யப்படும் விமானிகள் மற்றும் பிற விமானத்துறை ஊழியர்களுக்குக் கடுமையான விதிகளைப் இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) அமல்படுத்தியது. இந்தப் பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டால், முதன்முறையாகக் பிடிபடுபவர்களுக்குக் கட்டாய மறுவாழ்வுச் சிகிச்சை அளிக்கப்படும். அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அவர்களின் விமானச் சேவை உரிமமே ரத்து செய்யப்படும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


விமானப் போக்குவரத்துத் துறையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான பரிசோதனை விதிகள்


விமானப் போக்குவரத்து ஊழியர்களுக்கான போதைப்பொருள் பரிசோதனை குறித்து, இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'பொது விமானப் போக்குவரத்துத் தேவை' (Civil Aviation Requirements (CAR)) விதிகளானது, ஜனவரி மாதம் 31-ஆம் தேதி, 2022-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிகள் முக்கியமாக விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும். அதேசமயம், பாதுகாப்பு சார்ந்த முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிற விமானப் போக்குவரத்துப் பணியாளர்களான விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள், சான்றளிக்கும் பணியாளர்கள், பயிற்சி விமானிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.


விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணியாளர்களில் 10 சதவீதம் பேரை உள்ளடக்கிய தற்செயலான போதைப்பொருள் பரிசோதனைக்குக் கட்டாயம் உட்பட வேண்டும்.   பிற விமானப் பணியாளர்கள் வேலைக்கு பணியமர்த்தப்படும்போது அல்லது சில குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பிறகு பரிசோதிக்கப்படுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று புகேட்-டெல்லி (Phuket-Delhi) இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தொடர்ந்து இத்தகைய போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.


விமான நிறுவனங்கள் மற்றும் விமானப் பயிற்சிப் பள்ளிகள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் அமைப்புகள், மற்றும் வான்வழிப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்ற பிற அமைப்புகளும், தங்களது மற்ற ஊழியர்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மது அல்லது போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன.


இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் விதிகளின்படி, பணியாளர்களின் சிறுநீர் மாதிரிகள் ஆறு வகையான மனநலனைப் பாதிக்கும் போதைப்பொருட்களுக்காக கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவை: ஆம்பெட்டமைன்கள் மற்றும் ஆம்பெட்டமைன் வகை போதைப் பொருட்கள் (Amphetamines and amphetamine-type stimulants), அபின் மற்றும் அதன் துணைப் பொருட்கள் (Opiates and their metabolites), கஞ்சா (Cannabis / Tetrahydrocannabinol), கொகெயின் (Cocaine), பார்பிட்யூரேட்ஸ் (Barbiturates) மற்றும் பென்சோடியாசெபைன்ஸ் (Benzodiazepines) ஆகியவையாகும்.




பரிசோதனை நடைமுறை 


பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விமானி அல்லது ஊழியரின் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனி பாட்டில்களில் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படும். மாதிரி சேகரிக்கப்பட்ட உடனேயே, முதலாவது பாட்டிலில் உள்ள மாதிரியைக் கொண்டு முதற்கட்ட சோதனையான ‘Screening test’ தொடங்கப்படும். இந்த முதற்கட்ட பரிசோதனையின் முடிவில் 'Non-negative' (சந்தேகத்திற்குரியது) என்று வந்தால்—அதாவது, அவர்களின் உடலில் போதைப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்திற்கிடமாகத் தெரியவந்தால், அடுத்தகட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையின் (Confirmatory test) முடிவுகள் வரும்வரை, அந்த விமானி உடனடியாக விமானம் இயக்கும் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்.


ஏர் இந்தியா விமானியின் தொடக்கநிலை பரிசோதனை முடிவு உண்மையிலேயே சந்தேகத்திற்குரியதாகத்தான் (non-negative) இருந்தது.


இதையடுத்து, இரண்டாவது கொள்கலனில் உள்ள மாதிரியானது (Sample B), நிறப்பிகையியல் / நிறை நிறமாலைமானி (Gas Chromatography/Mass Spectrometry - GC/MS) அல்லது திரவ நிறப்பிகையியல் - நிறை நிறமாலைமானி (Liquid Chromatography-Mass Spectrometry - LC-MS) போன்ற மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தும் சோதனைக்காக குறிப்பிட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. மாதிரி A (Sample A) சந்தேகத்திற்குரியதாக இருந்தால், மாதிரி சேகரிப்பாளர், ஊழியர் (மாதிரி அளித்தவர்) மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மாதிரி B (Sample B), தகுந்த ஆய்வகத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகக் கண்டிப்பாக அனுப்பப்பட வேண்டும் என்று 'பொது விமானப் போக்குவரத்துத் தேவை (CAR) விதிகளில் கூறப்பட்டுள்ளது.


தற்போதைய நிகழ்வைப் போலவே, உறுதிப்படுத்தும் பரிசோதனையின் முடிவுகள் 'Positive' (போதைப்பொருள் பயன்பாடு உறுதி) என வந்தால், அந்த அமைப்பின் மருத்துவ அதிகாரி, மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரியை (Medical Review Officer (MRO)) கலந்தாலோசிக்க வேண்டும். இந்த போதைப்பொருள் பயன்பாடு உறுதி என்கிற முடிவானது போதைப்பொருள் பயன்பாட்டினால் வந்ததா, அல்லது சட்டப்பூர்வமான மருத்துவச் சிகிச்சை அல்லது பிற காரணங்களால் வந்ததா என்பதை இந்த மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) பரிசோதிப்பார். உதாரணமாக, 'Codeine' கலந்த வலிநிவாரணிகளை உட்கொள்வது, போதைப்பொருள் (Opiates) பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தவறான முடிவைக் காட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


இந்திய விமான ஓட்டுநர்கள் சங்கம் (Airline Pilots’ Association of India (ALPA)) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விமானிகள் சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்தியாவில் விற்கப்படும் சாதாரண சளி, இருமல், ஒவ்வாமை மற்றும் தூக்கத்திற்கான மருந்துகளில், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஆறு வகையான மருந்துப் பிரிவுகளைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் இருக்கக்கூடும்.  மேலும், ஓட்டுநர்கள் புதிய மருந்துகளை உட்கொள்வதற்குமுன், தங்கள் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், தாங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகளையும் உண்மையாகவும் நேர்மையாகவும் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) ஒருவேளை ஆய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) மற்றும் மருந்தக ரசீதுகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


போதைப்பொருள் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) ஒருவருக்கு போதைப்பொருள் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு (Positive) இருப்பதை உறுதிசெய்தால், அவர் மீது அடுத்தடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பணியாளர் ஒருவர் முதல்முறையாகப் போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினால், அந்நிறுவனம் மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரியின் ஆலோசனையோடு அவரை மறுவாழ்வுக்காக ஒரு சிறப்பு மருத்துவர், மனநல ஆலோசகர் அல்லது போதை மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர், அவர் மீண்டும் பணியில் சேர வேண்டுமானால், மறுபடியும் ஒரு போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்பட்டு அதில் அவருக்குப் பாதிப்பில்லை (Negative) என முடிவுவர வேண்டும். மேலும், நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியிடமிருந்து பணியில் ஈடுபடத் தகுதியானவர் என்பதற்கான உடற்தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும்.

முதல் தவறுக்குக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பிய ஒரு ஊழியருக்கு, இரண்டாவது முறையாகவும் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதிசெய்யப்பட்டால், அவருடைய உரிமம் (Licence) மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படும். அதேநேரத்தில், அவர் மூன்றாவது முறையாகவும் பரிசோதனையில் தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவருடைய உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


போதைப்பொருள் பரிசோதனை செய்ய மறுப்பதை, பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டதற்குச் சமமான தீவிரமான குற்றமாக இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) கருதுகிறது. முதல்முறையாகப் பரிசோதனை செய்ய மறுக்கும் ஊழியர் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், 48 மணி நேரத்திற்குள் போதைப்பொருள் பரிசோதனை செய்து அதில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறத் தவறினால், அவரது உரிமம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் (Suspension) செய்யப்படும். மேலும், அவர் மீண்டும் பணியில் சேர்வதற்குமுன் மறுவாழ்வுப் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.


மேலும், "ஒரு நபர் இரண்டாவது முறையும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள மறுத்தால் அல்லது முதல் முறை மறுப்பிற்குப் பிறகு செய்யப்படும் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவருடைய ஓட்டுநர் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் (Suspended) செய்யப்படும் என்றும் இதற்கு பிறகும் தொடர்ச்சியாக இந்த விதிமீறலில் ஈடுபட்டால் அவரது உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்" என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


Original Link: Marijuana found in Air India pilot’s test: How pilots are tested for drugs, and the punishment that can follow.

Share: