இரண்டு ஐயங்கார் பிரிவுகளுக்கு இடையேயான யார் முதலில் வழிபாடு செய்வது என்பது குறித்த 200 ஆண்டுகாலப் பிரச்சினை, இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. -அருண் ஜனார்த்தனன்

தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ வைணவர்களின் இரண்டு பிரிவுகளும் ஒரே தத்துவஞானியைப் பின்பற்றி ஒரே தெய்வத்தை வழிபடுகின்றன. இருந்த போதிலும், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜசுவாமி கோயிலில் செய்யப்படும் வழிபாடுகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது.


தமிழ்நாட்டில் நடக்கும் இந்த மதச் சண்டை ஆன்மீகத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உலகியல் சார்ந்த விவகாரத்தைப் பற்றியது. யார் முன் வரிசைகளில் நிற்பது, யார் முதலில் மந்திரங்களை உச்சரிப்பது, அதிகாலையில் தெய்வத்தின் முன் உள்ள கல் மண்டபத்தில் யாருடைய குரல் முதலில் ஒலிக்க வேண்டும் என்பது போன்ற விவகாரங்களைப் பற்றியதுதான்.


காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவராஜசுவாமி கோயிலின் கருங்கல் மண்டபங்களுக்குள், இந்தச் சிக்கல்கள் நூற்றாண்டுக்கும் மேல் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. கோயில் சடங்குகளை வடிவமைத்துள்ளன, இப்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளன. இந்த வாரம், அமைதியான தீர்வைக் கண்பதற்காக, உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌலை நடுவராக நியமித்துள்ளது.


இந்த சர்ச்சை ஸ்ரீ வைஷ்ணவர்களின் இரண்டு பிரிவுகளான தென்கலை மற்றும் வடகலை பிரிவினருக்கு இடையே நிலவுகிறது. இந்த இரண்டு பிரிவினரும் ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இரண்டு பிரிவினரும் 10-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியான ராமானுஜரைப் பின்பற்றுகிறார்கள். இருவரும் ஒரே தெய்வத்தை வணங்குகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினரும் ஒரு வெவ்வேறு ஆன்மீகப் பரம்பரையைச் சார்ந்திருப்பதாகக் கூறி, சடங்கு வழிபாடுகளின் போது தங்களின் சொந்த மந்திரங்களை உச்சரிக்கும் உரிமையைக் கோருகின்றனர்.


நவம்பர் 2025-ல் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல, இந்தச் சர்ச்சை வழிபாட்டுச் சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக இரண்டு மதக் குழுக்களுக்கு இடையே எழுந்துள்ளது. இந்த முரண்பாடு 200 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது.


இந்த சர்ச்சை எதைப் பற்றியது?


நுழைவு அல்லது நம்பிக்கை பற்றியது அல்ல. மாறாக, சடங்கு வரிசை பற்றியது. இந்த விவகாரம், நீதிமன்றம் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் 'அத்யாபக மிராசு' எனப்படும் கோயில் சேவைகளைச் செய்வதோடு தொடர்புடைய ஒரு பதவி பற்றியே சுழல்கிறது.


இந்தப் பதவிக்கு குறிப்பிட்ட கடமைகள் உள்ளன: நாலாயிர திவ்யப் பிரபந்தம் (4,000 தமிழ் பாசுரங்கள்) பாராயணத்தை வழிநடத்துவது, பாராயணத்திற்கு முன் ஒரு மங்கள வாழ்த்து மந்திரத்தை உச்சரிப்பது மற்றும் இறுதிப் புகழ்ச்சிப் பாடலுடன் முடிப்பது ஆகியவை அந்தக் கடமைகளாகும்.


தென்கலை பிரிவினர், இந்தப் பதவியும், அதன் காரணமாக இந்தப் பாராயணங்களை வழிநடத்தும் உரிமையும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று கூறுகின்றனர். 15-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி மணவாள மாமுனிகளைப் போற்றும் தங்களின் 'ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்' என்ற மங்கள வாழ்த்து மட்டுமே பிரபந்தத்திற்கு முன் பாடப்பட வேண்டும் என்றும், தங்களின் 'வாழி திருநாமம்' மட்டுமே பூஜையை முடிக்கும் பாடலாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


வடகலை சம்பிரதாயம், 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி வேதாந்த தேசிகரை போற்றும் இச்சம்பிரதாயம், தங்களுக்கும் ராமானுஜ தயாபாத்ரம் என்ற தங்கள் சொந்த தனியனையும், தேசிகருடன் தொடர்புடைய பாசுரங்களையும் பாட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுகிறது.  இந்த வேறுபாடு — யாருடைய வார்த்தைகள் (தொடக்க மந்திரம்/தனியன்) வழிபாட்டைத் தொடங்கி, யாருடைய வார்த்தைகள் (முடிவு வாழி திருநாமம்) வழிபாட்டை முடிக்கின்றன என்பதே — வழக்கின் மையமான பிரச்சினையாகும்.  


இது ஏன் நீதிமன்ற விவகாரமாக இருக்கிறது?


ஏனெனில் அது தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. நவம்பரில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு முந்தைய வழக்குகளை கவனமாகக் கண்டறிந்தது: 1882-ஆம் ஆண்டில் (கிருஷ்ணசாமி தாதாச்சாரியார் மற்றும் பிறர் vs கிருஷ்ணமாச்சாரியார் மற்றும் பிறர்), கூடுதல் அமர்வு, ஒரு வரையறுக்கப்பட்ட செயல்பாட்டைத் தவிர, காஞ்சிபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவின் பிரத்யேக உரிமை அதியபாக மிராசி (Adhiapaka Mirasi) என்று தீர்ப்பளித்தது. வடகலை பிரிவினர் சாதாரண பக்தர்களாக வழிபாட்டில் கலந்துகொள்ளலாம். ஆனால், தனிப்பட்ட மந்திரங்களை உபசரிக்க கூடாது என்று நீதிமன்றம் கூறியது.


1915-ஆம் ஆண்டில், பூஜை மற்றும் ஊர்வலங்களின் போது, ​​தென்கலை மந்திரத்தை மட்டுமே கூற முடியும் என்று நீதிமன்றம் மீண்டும் கூறியது. வடகலையினர் பங்கேற்கலாம். ஆனால், தனி மந்திரக் குழுவை உருவாக்க முடியாது. 1939 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், சடங்குத் தலைமை மற்றும் முன் வரிசை சபை பதவிகள் தென்கலை அதியபாக மிராசிதர்களுக்குச் சொந்தமானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தின (மிராசி என்றால் பரம்பரை உரிமைகள், இந்த விவகாரத்தில் மிராசிதர்கள் என்றால் பரம்பரை அலுவலக உரிமையாளர்கள் ஆவார்). சுருக்கமாக, நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை ஒரு மத நம்பிக்கையாகக் கருதாமல், ஒரு பாரம்பரிய விவகாரமாகவும், கோயில் கடமைகளுடன் தொடர்புடைய உரிமைகளாகவும் கருதியுள்ளன.


தற்போதைய மோதலுக்கு என்ன காரணம்?


நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல மனுக்கள் இப்போது ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தென்கலை பிரிவினர் தங்களின் பாராயணங்களுக்கு இடையூறு செய்யப்படுவதாகக் கூறி காவல்துறை பாதுகாப்பு கோரினர். வடகலை பிரிவினர், வழிபாட்டின்போது தங்கள் மந்திரங்களை உச்சரிப்பதைத் தடுத்த கோயில் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு மனு, வேதாந்த தேசிகரின் 750-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாடல்களைப் பாட அனுமதி கோரியது பற்றியது. முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.


அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட பழைய நீதிமன்றத் தீர்ப்புகளைச் பின்பற்றி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறு என்று வடகலை மனுதாரர்கள் கூறினர். இது, மக்களுக்குத் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்கும் (freedom of religion) இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவுக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிட்டனர். பரம்பரை கோயில் பணிகளை முடிவுக்குக் கொண்டுவந்த 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் திருத்தச் (Tamil Nadu Hindu Religious & Charitable Endowment Amendment Act) சட்டத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தச் சட்டத்திற்குப் பிறகு மதச் சடங்குகளைச் செய்வதற்கான (mirasi) பழைய பரம்பரை உரிமைகள் தொடர முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.


உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


நவம்பர் 2025-ல் உயர்நீதிமன்ற தீர்ப்பில், மத சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், பிரிவு 25 முழுமையானது அல்ல என்றும் இது பொது ஒழுங்கு மற்றும் மற்றவர்களின் உரிமைகளுக்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது


குறிப்பிட்ட, பாத்திரங்களை மையமாகக் கொண்டு சடங்குகள் நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்டு வரும் கோவில்களில், ஒரே நேரத்தில் நிகழும் போட்டி மந்திர உச்சரிப்புகள் உறுதியாக இருக்கும் சடங்கு ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று நீதிமன்றம் விளக்கியது. இவ்வாறு, பரம்பரையாக மந்திரம் கூறிவருபவர்களின் பங்கை வரையறுக்கும் முந்தைய ஆணைகள் நடைமுறையைத் தொடர்ந்து நெறிப்படுத்தி வந்தன.


இப்போது உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது?


உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி S. K. கவுலை முதன்மை மத்தியஸ்தராக நியமித்த நீதிமன்ற அமர்வு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் கோயில் சடங்கு வரலாற்றை நன்கு அறிந்த இரண்டு நிபுணர்களை இணைக்க அனுமதித்தது.

200 ஆண்டுகால வாதம்


200 ஆண்டுகளுக்குப் பிறகும், முதல் வரிசையில் யார் நிற்கிறார்கள், யார் பாடலைத் தொடங்குகிறார்கள், தெய்வத்திற்கு முன் யாருடைய பரம்பரை பெயரிடப்பட்டுள்ளது என்ற வாதம் அப்படியே உள்ளது. மன்றம் மட்டுமே மாறிவிட்டது.


நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இவை பதவி மற்றும் முன்னுதாரணம் தொடர்பான கேள்விகள் பற்றியதாக பார்க்கிறது. பக்தர்களைப் பொறுத்தவரை, இவை சொந்தம் என்ற உணர்வு தொடர்பான கேள்விகள் பற்றியதாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தீர்ப்புகள், தடை உத்தரவுகள் மற்றும் மேல்முறையீடுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு ஒரு புதிய சட்டக் கோட்பாட்டிற்கு அல்லாமல், மீண்டும் ஒரு உரையாடலுக்கே திரும்பியுள்ளது.


காகிதத்தில் ஒரு தொழில்நுட்ப விதியாகத் தோன்றுவது, நடைமுறையில் மிகவும் தனிப்பட்ட விவகாரமாக உள்ளது. முதலில் மந்திரங்களை உச்சரிப்பது என்பது வெறும் பேசுவது மட்டுமல்ல. அது பாரம்பரியத்தைக் காப்பவர் (custodian of tradition) என்பதைக் காட்டுகிறது. தெய்வத்தின் முன் சபையின் முதல் வரிசைகளில் நிற்பது என்பது வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வரும் நடை முறையாகும்.


நீதிபதி கௌலின் மத்தியஸ்த முயற்சி, நீதிமன்றங்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யக்கூடும்: யார் முதலில் மந்திரம் உச்சரிப்பது என்பது குறித்து சண்டையிடாமல், இரண்டு சமூகத்தினரும் ஒன்றாக அதன்முன் நின்று வழிபாடு  தெய்வத்தின் முன் பிராத்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும்.


 Original Article : 200-year dispute between two Iyengar sects, now in top court  — who prays first? -Arun Janardhanan

Share:

பொருளாதார ஆய்வறிக்கை 2025-26 -குஷ்பூ குமாரி

பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, இந்தியாவின் முதல் 'ஞாயிற்றுக்கிழமை நிதிநிலை அறிக்கை' (Sunday Budget) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான 2025-26-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025–26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) சமர்ப்பித்தார். இந்த ஆய்வறிக்கை, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. 



பொருளாதார ஆய்வறிக்கை 2025-26: முக்கிய அம்சங்கள்


#1 பொருளாதார நிலை


2025–26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திறன் (Potential growth rate) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 6.5%-லிருந்து 7%-ஆக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7.2%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டிற்கான 7.4% வளர்ச்சியை விடக் குறைவான மதிப்பீடாகும். 2026-ஆம் நிதியாண்டில் 'தனியார் இறுதி நுகர்வுச் செலவு' (Private Final Consumption Expenditure) 7.0% வளர்ச்சியை எட்டியுள்ளது; இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 61.5% பங்கைக் கொண்டுள்ளது. இது 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகக் கூறப்படுகிறது. 


#2 வெளிநாட்டு வர்த்தகத் துறை


2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 6.1% வளர்ச்சியாகும். குறிப்பாக, சேவைத் துறையின் (Services sector) ஏற்றுமதி 387.6 பில்லியன் டாலர்களை எட்டியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வர்த்தகப் பற்றாக்குறை நிலவினாலும், சேவைத் துறை மூலமான வருமானமும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணமும் அந்தப் பற்றாக்குறையைச் சமன் செய்ய உதவுகின்றன. இதனால் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல்களுக்கு இடையிலும், உலக சந்தைகளை நிலையான முறையில் அணுகுவதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் அதிகரித்துவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreement (FTAs)) நாட்டின் வர்த்தக உத்திக்கு (Trade Strategy) பெரும் துணையாக நிற்கின்றன.



#3  வேளாண் மற்றும் உணவு மேலாண்மை


இந்தியாவின் தேசிய வருமானத்தில் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் வெறும் ஐந்தில் ஒரு பங்கு (1/5) பங்களிப்பையே வழங்குகின்றன. ஆனால், நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 46.1% பேர் இத்துறையிலேயே பணியாற்றுகின்றனர். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வேளாண் தொழில்துறை மிக முக்கியமானது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


இந்தியாவின் விவசாயத் துறை சமீபகாலமாக வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், அதன் உற்பத்தித் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் பெரும் சவால்களைச் சந்தித்து வருவதாக 'பொருளாதார ஆய்வு அறிக்கை' தெரிவித்துள்ளது. உரத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரித்தல், நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்துதல் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை (வெவ்வேறு பயிர்களை விளைவிப்பது) ஊக்குவித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


#4 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்


உலகளாவிய மூலதனச் சந்தைகளில் (Global capital markets) நிதி ஏராளமாக உள்ள போதிலும், காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கு (Climate action) மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கான (Green transition) முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உள்நாட்டு நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. சீனா தவிர்த்த வளர்ந்து வரும் நாடுகள், சர்வதேச காலநிலை நிதியில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.


#5 சுகாதாரம்


இந்தியாவின் சுகாதாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது, சிகிச்சை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மக்கள் தொகையே நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்பதை இது அங்கீகரிக்கிறது. அதே வேளையில், சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் டிஜிட்டல் அடிமைத்தனம் (Digital Addiction) மற்றும் திறன்பேசிகள் பயன்படுத்தும் நேரத்தால் (Screen-time) ஏற்படும் மனநலப் பாதிப்புகள் குறித்தும் இந்த ஆய்வு கவலை தெரிவிக்கிறது.


மனநலச் சேவைகளை மேம்படுத்த, 'டெலி-மானஸ்' (Tele-MANAS) திட்டத்தை வெறும் அவசரகால ஆலோசனைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், டிஜிட்டல் அடிமைத்தனம் (Digital Addiction) தொடர்பான சிக்கல்களைக் கையாளவும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இணையப் பாதுகாப்பு (Cyber Safety) குறித்த கல்வி, சக நண்பர்கள் மூலம் வழிகாட்டுதல் (Peer Mentoring), பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி, திறன்பேசிகள் பயன்படுத்தும் நேரத்தை (Screen Time) மேலாண்மை செய்யப் பெற்றோர்களுக்குப் பயிற்சி அளித்தல், வயதிற்கு ஏற்ற டிஜிட்டல் பயன்பாட்டு விதிகளை உருவாக்குதல், தீங்கான உள்ளடக்கங்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 


#6 கல்வி


எட்டாம் வகுப்பிற்குப் பிறகும் அதிகமான மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது; ஏனெனில், இடைநிலைக் கல்வியில் (Secondary level) மாணவர் சேர்க்கை இன்னும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் தொடக்கக் கல்வி அளவில் அனைவரும் பள்ளியில் சேருவது கிட்டத்தட்ட சாத்தியமாகிவிட்டாலும், அது மாணவர்களின் கற்றல் திறனை (Learning outcomes) சமமாக மேம்படுத்தவில்லை. குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு பிந்தைய நிலையில், நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 52.2 சதவீதம் மட்டுமே உள்ளது.


பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training (DIET)) மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (State Council of Educational Research and Training (SCERT)) நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல் மற்றும் பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர் மற்றும் சமூகத்தினரை ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கிய (inclusive) மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட கற்றல் சூழலை உருவாக்க முடியும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.


#7 இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) சுற்றுச்சூழல் அமைப்பின் பரிணாம வளர்ச்சி


செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் போதிய வசதிகள் இல்லாமையைக் கருத்தில்கொண்டு, இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. அவசரப்பட்டு எந்த ஒரு திட்டத்திலும் சிக்கிக்கொள்வதையோ அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதையோ தவிர்க்க, நமது திட்டங்களை முறைப்படி வரிசைப்படுத்த வேண்டும். முதலில், பல்வேறு துறைகளை ஒன்றிணைக்க வேண்டும், பிறகு திறன்களை மேம்படுத்த வேண்டும், இறுதியாக மட்டுமே கட்டாயமான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அப்போதுதான் நிறுவனங்களும் சந்தை நிலவரங்களின் போக்கிற்கு ஏற்ப இணைந்து வளர முடியும் என்பதையும் சுட்டிக்கட்டியுள்ளது. 


#8 பணவீக்கம்


பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது, இருப்பினும் வரும் காலங்களில் இது சற்று அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை பெருமளவு குறைந்ததன் காரணமாக, சில்லறை பணவீக்க விகிதமானது 2025–26 நிதியாண்டில் 1.7 சதவீதமாகக் குறைந்து, ஒரு தெளிவான சரிவைக் காட்டியுள்ளது.


#9 2026-ஆம் ஆண்டிற்கான மூன்று உலகளாவிய சூழல்கள்


"வரும் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை (Survey), உலகளவில் ஏற்படக்கூடிய மூன்று விதமான நெருக்கடிச் சூழல்களைப் பட்டியலிட்டுள்ளது: முதலாவது, '2025-ஆம் ஆண்டில் இருந்த அதே நிலை தொடர்வது'; இரண்டாவது, உலக நாடுகள் தங்களுக்குள் பிளவுபட்டு ஒழுங்கற்ற முறையில் செயல்படுவது; மூன்றாவது, நிதி, தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் தனித்தனியாக வராமல் ஒன்றோடொன்று கலந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது. இந்த மூன்று சூழல்களிலும் இந்தியாவுக்கு இருக்கும் பொதுவான ஆபத்துகள் - வெளிநாட்டு முதலீடுகள் குறைவதும், அதன் விளைவாக இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் பாதிப்புகளும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த பாதிப்புகள் எந்த அளவிற்குப் பெரியதாக இருக்கும் மற்றும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


#10 சுதேசி - ஒரு கட்டுக்கோப்பான செயல்முறை


2025-26-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, ‘உள்நாட்டு உற்பத்தி’ (சுதேசி) என்பது தற்போது 'தவிர்க்க முடியாதது மற்றும் அவசியமானது' என்று கூறியுள்ளது. ஏனெனில், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் கார்பன் வரி விதிமுறைகள் (Carbon border rules) காரணமாக உலகளாவிய வர்த்தகம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது; இது 'எளிமையான உலகமயமாக்கல்' (Naïve globalisation) முடிவுக்கு வந்ததைக் காட்டுகிறது. மேலும், இந்திய நிறுவனங்கள் நீண்டகாலத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும், உலக அளவில் போட்டியாளர்களாக உருவெடுப்பதிலும் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


நிறுவனங்களின் செயல்பாட்டு கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்த ஆய்வறிக்கை ஒரு முக்கியமான கருத்தைக் கூறியுள்ளது. அதில், மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளுக்கான வாய்ப்புகள் எப்போதும் எளிதாகக் கிடைத்துவிடும் என்றோ அல்லது அவை நிரந்தரமாக நீடிக்கும் என்றோ இனி நாம் எதிர்பார்க்க முடியாது; அத்தகைய சவாலான உலகில்தான் இன்று இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது.


"#11 வாக்குகளுக்காகச் செய்யப்படும் நிதி விரயங்கள் குறித்த கவலை


இந்த ஆய்வறிக்கை சில முக்கியப் பொருளாதாரக் கவலைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது: முதலாவதாக, வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்படும் இலவசங்கள் மற்றும் சலுகைகள் (Fiscal Populism); இரண்டாவதாக, மக்களுக்கு நேரடியாகப் பணமாக வழங்குவதால் (Cash Transfers) உள்கட்டமைப்பு போன்ற நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி (Capital Expenditure) குறைந்துவிடுவது; மூன்றாவதாக, மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரிப்பது. இதனால், வருவாய் உபரி (Revenue Surplus) கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை 2019 நிதியாண்டில் 19-ஆக இருந்தது, 2025-ஆம் நிதியாண்டில் 11-ஆகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 


#12 பரிந்துரைகள்


இந்தியா உலகளாவிய மூலதன வரவை (Global Capital Flows) நம்பியிருப்பதால், வரும் ஆண்டில் பணப்புழக்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு (Survey) கூறியுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்களின் பாதிப்புகள் பின்னாளில் தெரியக்கூடும். மேலும், பணப்புழக்கம் குறைதல், மூலதன வரத்து பாதிக்கப்படுதல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிதல் போன்ற அபாயங்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் நிலை மதிப்பை கொண்ட மெய்நிகர் நாணயங்கள் (Stablecoins) போன்ற காரணங்களால் இந்தியாவின் முதலீடுகள் வெளியேறுவது, நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அபாயமாகக் கூறப்படுகிறது. 


அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அரசு துரிதமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அதேபோல், இந்தியாவில் மக்களின் வருமானம் உயரும்போது, உள்ளூர் உற்பத்தி அதிகரித்தாலும் இறக்குமதிகளும் இயல்பாகவே அதிகரிக்கும். எனவே, இந்த வளர்ந்துவரும் இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்ட, ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் மூலம் போதுமான அந்நியச் செலாவணியை இந்தியா அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. 


பொருளாதார ஆய்வறிக்கை குறித்து


1. பொருளாதார ஆய்வறிக்கை என்பது, முடிவடையப் போகும் ஒரு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பற்றி விரிவாக விளக்கும் ஒரு அறிக்கையாகும். இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51 ஆம் ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு வரை, இது நிதிநிலைத் திட்ட அறிக்கையுடன் இணைத்தே தாக்கல் செய்யப்பட்டது.


2. 2010-11 முதல் 2020-21-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தொகுதிகளாக (Two Volumes) வெளியிடப்பட்டது. அதில் ஒரு கூடுதல் தொகுதியானது, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (Chief Economic Adviser (CEA)) ஆளுமையையும் தனித்துவமான சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. அது பெரும்பாலும் பொருளாதாரத்தின் முக்கிய சிக்கல்கள் மற்றும் விவாதங்களைப் பற்றி விரிவாகக் கையாண்டது. பின்னர் 2022-23-ஆம் ஆண்டு முதல், இந்த ஆய்வறிக்கை மீண்டும் பழையபடி ஒரே ஒரு தொகுதியாக மாற்றப்பட்டது.


3. பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றோ, அல்லது அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றோ அரசாங்கத்திற்கு எந்தவிதமான அரசியலமைப்புச் சட்டக் கடப்பாடும் இல்லை என்கின்றனர். அந்த அறிக்கையில் உள்ள அனைத்து ஆலோசனைகளையும் நிராகரிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு இல்லை என்றாலும், அதன் முக்கியத்துவம் கருதியே இந்த அறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.


 Original Article : Economic Survey 2025-26 -Khushboo Kumari

Share:

கிராமப்புற வளர்ச்சி குறித்த காந்தியடிகளின் கொள்கை என்ன? -குஷ்பூ குமாரி

நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) பெயரை விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Aajeevika Mission (Gramin) (VB-G RAM G)) என மாற்றியதற்காக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.


முக்கிய அம்சங்கள்:


— மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின்கீழ் 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS), இந்தியக் கிராமப்புறங்களில் அடிப்படை வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக பிப்ரவரி மாதம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் பெயருக்கு முன்னால் 'மகாத்மா காந்தி' என்ற பெயர் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி, 2009-ஆம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டது.


— ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நலத்திற்கு கிராமப்புறங்களின் தற்சார்பு நிலையே மிக முக்கியம் என்ற காந்தியின் தத்துவத்தை மேற்கோள் காட்டி, அந்தத் திட்டத்திலிருந்து காந்தியின் பெயரை நீக்கியதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.


— காந்தியின் கிராம சுயராஜ்ஜியம்: காந்தி தனது எழுத்துக்களில், கிராமங்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் அவற்றின் சுயசார்பு நிலையையே  முதன்மையாகக் கொண்டிருந்தார்.


— நகரங்களின் வளர்ச்சியை நான் ஒரு தீய சக்தியாகவும், மனிதகுலத்திற்கே நேர்ந்த துரதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன்... ஆங்கிலேயர்கள் இந்தியாவின் நகரங்களைப் பயன்படுத்தி இந்தியாவைச் சுரண்டினார்கள். அந்த நகரங்களோ இந்தியாவின் கிராமங்களைச் சுரண்டின. கிராமங்களின் ரத்தத்தை சிமெண்டாகக் கொண்டுதான், நகரங்கள் என்னும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இன்று நகரங்களின் ரத்த நாளங்களை வீங்கச் செய்துகொண்டிருக்கும் அந்த ரத்தம், மீண்டும் கிராமவாசிகளின் ரத்த நாளங்களில் பாய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 1946-ஆம் ஆண்டில் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


— அவருடைய பேச்சுக்கேற்ற செயலும் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணமாக, 1917-ஆம் ஆண்டில் அவர் தனது முதல் பெரிய சத்தியாகிரகத்தை வழிநடத்திய பீகாரின் சம்பாரண் (Champaran) பகுதியையும், மகாராஷ்டிராவில் அவர் உருவாக்கிய சுயசார்பு கொண்ட சேவாகிராம் ஆசிரமத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


— காந்தி தனது 'ஹரிஜன்' (Harijan) மற்றும் 'யங் இந்தியா' (Young India) ஆகிய இதழ்களில் இது குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார். ஜூலை மாதம் 26-ஆம் தேதி, 1942-ஆம் ஆண்டு 'ஹரிஜன்' இதழில் கிராம சுயராஜ்யம் (Gram Swaraj) என்ற கருத்தை முன்வைத்தார். அதில், எனது கிராம சுயராஜ்யக் கனவு என்பது, ஒரு கிராமம் தனக்கேற்ற அடிப்படைத் தேவைகளுக்குத் தன் அண்டை இடங்களைச் சார்ந்து இருக்காமல், ஒரு முழுமையான குடியரசாகத் தன்னிச்சையாகச் செயல்படுவதாகும்; அதேநேரத்தில், மற்ற விஷயங்களுக்காகப் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 


— சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில், அரசாங்கத்தின் கொள்கைகள் நகரங்களை மையப்படுத்திய வளர்ச்சியை நோக்கியே இருந்தன. இதனால் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால், வேலைதேடி பெரும் தொழில் நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிராமங்களில் இருந்து வந்த மக்கள், குடிசைப் பகுதிகளில் தரம் குறைந்த சூழலில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், வேலைக்காக நகரங்களை நோக்கியே சென்றனர்.


— காந்தியின் 'கிராம சுயராஜ்யம்' என்ற கருத்துக்கு என்ன ஆனது? நிதி, அரசியல் மற்றும் நிர்வாகம் என அதிகாரத்தை உண்மையான முறையில் மக்களிடமே ஒப்படைப்பது என்பது இன்னும் எட்டாத கனவாகவே உள்ளது. இது பெரும்பாலும் உயர்மட்டங்களில் உள்ளவர்களின் அரசியல் விருப்பத்தையும், அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு இருக்கும் தயக்கத்தையுமே சார்ந்துள்ளது. இந்த மனப்போக்கை மாற்றுவதற்கு வெறும் கொள்கை மாற்றங்களோ அல்லது நிதி ஒதுக்கீடுகளோ மட்டும் போதாது, அதையும் தாண்டிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்தியக் கிராமங்களின் நிர்வாகம் குறித்த சட்டமானது, மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கைகளில் ஒன்றின் வெளிப்பாடாகும். கிராம மக்கள் தங்களின் கிராம நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்ற 'பஞ்சாயத்து ராஜ்' அமைப்பை அவர் எப்போதும் ஆதரித்தார். அதாவது, பள்ளிக்கூடங்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை மேம்படுத்துவதில் அந்தந்த ஊர் மக்களே பங்குகொள்வதை காந்தியடிகள் வலியுறுத்தினார்.


— உண்மையில், 1947-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி ஒரு தன்னார்வ அமைப்பாக மாற வேண்டும் என்று காந்தி விரும்பினார். இந்த அமைப்பு இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் 'பஞ்சாயத்து' போன்ற அமைப்புகளைக் கொண்டு, கிராம மக்களுடன் இணைந்து 'கிராமங்கள் தற்சார்பு நிலையை' (Gram swaraj) அடையப் பாடுபட வேண்டும் என்பதே அவரது விருப்பம். காந்தி இந்த கருத்தின் மூலம் எதைக் குறிப்பிட்டார் என்பதையும், இந்தச் சட்டம் ஏன் ஒரு மைல்கல்லாக முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


 Original Article : What was the Gandhian idea of rural development?     -Khushboo Kumari


Share:

பசுமை எஃகு (Green steel) இந்தியாவின் காலநிலை இலக்குப் பாதையை வடிவமைக்க முடியும் -சஞ்சீவ் பால்

கார்பன் திறனற்ற தொழில்நுட்பங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முடக்குவது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


இந்தியா ஒரு திருப்புமுனையில் உள்ளது. கடந்த ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பிரேசிலின் பெலேமில் நடைபெற்ற COP30 மாநாட்டின் பிரதிநிதிகளிடையே உரையாற்றியதாவது, ​​திருத்தப்பட்ட மற்றும் மேலும் லட்சியமான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை (Nationally Determined Contribution (NDC)) சமர்ப்பிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது திருத்தப்பட்ட உறுதிமொழியுடன் மட்டுமல்லாமல், பொருளாதாரம் முழுவதும் கார்பன் நீக்கத்திற்கான தெளிவான திட்டங்களுடன், கார்பன் நீக்கம் செய்ய கடினமாக இருக்கும் துறைகள் உட்பட, ஒரு தலைவராக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.


இங்கு எஃகுத் துறையைவிட முக்கியமான தொழில் வேறு எதுவும் இல்லை.


வழிநடத்த ஒரு வாய்ப்பு


வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, எஃகுத் துறை இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு அடித்தளமாகும். இது உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உண்மையில், இந்தியாவின் முழுத் திறனையும் வெளிக்கொணர, எஃகு உற்பத்தி தற்போதைய ஆண்டுக்கு சுமார் 125 மில்லியன் டன்களிலிருந்து நூற்றாண்டின் நடுப்பகுதியில் 400 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரிக்க வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவிலான வளர்ச்சி முன்னோடியில்லாதது. இது தவிர்க்க முடியாமல் ஒரு பெரும் செலவைக் கோரும். தற்போது, ​​எஃகுத் துறை இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தில் சுமார் 12% உற்பத்தி செய்கிறது. இதற்குக் முக்கியக் காரணம், இந்தத் துறை இன்னும் நிலக்கரியை அதிகமாகச் சார்ந்திருப்பதே ஆகும்.


மற்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப் போலவே, இந்தியாவும் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைவதோடு, தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிசெய்யும் இரட்டை சவாலை எதிர்கொள்கிறது.


இந்த இரண்டு இலக்குகளையும் அடைவதற்கு மிக முக்கியமானது, அதிக கார்பன் உமிழ்வு உள்கட்டமைப்பில் முடக்குவதைத் தவிர்ப்பது. இன்று எஃகுத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் எஃகுத் துறையின் நீண்ட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இந்த மாற்றத்தில் தொலைநோக்குப் பார்வை இல்லையென்றால், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கார்பன் திறனற்ற தொழில்நுட்பங்களைச் சிக்கிக் கொள்ளக்கூடும். இது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நடுத்தர முதல் நீண்டகாலத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தை ஈடுபாடுடையதாக மாற்றாது.


உலகளாவிய சந்தைகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. உலகெங்கிலும் உள்ள நாடுகள் எஃகுத் துறையை மாற்றுவதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை நாம் காண்கிறோம். உதாரணமாக, சீனா, எஃகு தயாரிப்பில் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, அதன் ஸ்கிராப் அடிப்படையிலான இரண்டாம் நிலை எஃகு உற்பத்தியையும், பசுமை ஹைட்ரஜனில் முதலீட்டையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் சுமார் இருபதாண்டுகளாக கார்பனை நீக்கும் பயணத்தில் உள்ளது. அதன் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) பிராந்தியத்திற்கு எஃகு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தூய்மையான எஃகு தயாரிப்பிற்கு மாறுவதை உந்துகிறது.


குறைந்த கார்பன் உற்பத்தியை நிரூபிக்க முடியாத நாடுகள் கடுமையான எல்லை வரிவிதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உயர்தர ஏற்றுமதி சந்தைகளுக்கான அணுகலை இழக்க நேரிடும் மற்றும் உலகம் அவசரமாகத் தேவைப்படும் எரிசக்தி மாற்றத்தில் பின்தங்கியவர்கள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். பசுமை எஃகு உற்பத்தி துறையில் முன்கூட்டியே செயல்படும் நாடுகள் ஒரு தெளிவான போட்டிக்கான நன்மையை அடையும். இந்தியாவின் எஃகுத் துறை தாமதப்படுத்த முடியாது. இந்த எச்சரிக்கைகள் நீண்டகாலமாக இந்தியாவின் எஃகுத் துறையால் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துறை ஏற்கனவே சரியான திசையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. டாடா ஸ்டீல் வெடிப்பு உலைகளில் ஹைட்ரஜனை செலுத்துவதை முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் ஒப்பந்தங்களை அளவிடுகிறது மற்றும் கார்பன் பிடிப்பு தீர்வுகளை ஆராய்ந்துள்ளது. இதற்கிடையில், JSW ஸ்டீல் மற்றும் JSPL ஆகியவை பசுமை ஹைட்ரஜன் ஒருங்கிணைப்பை ஆராய்ந்து வருகின்றன. அதேநேரத்தில், இந்திய எஃகு ஆணையம் (Steel Authority of India Limited (SAIL)) வெடிப்பு உலைகளை நவீனமயமாக்கி குறைந்த கார்பன் உற்பத்தி வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.


இந்த மாற்றம் நிறுவனங்களுக்குள் உள்ள உயர்மட்டத் தலைமையால் இயக்கப்படுகிறது. இதற்கு துணிச்சலான இராஜதந்திர தேர்வுகளும் புதுமைகளில் நீடித்த முதலீடும் தேவை. இந்த முன்னேற்றம் முக்கியமானது என்றாலும், இந்தத் துறை இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.


இந்தத் தொழில் துறை முன்னோடித் திட்டங்களிலிருந்து செயல்விளக்க ஆலைகளுக்கும் நகர வேண்டும். பின்னர் முழு அளவிலான பூஜ்ஜியத்திற்கு அருகிலான கார்பன் தொழில்நுட்பங்களுக்கும் விரைவாக நகர வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர எஃகு உற்பத்தியாளர்கள், அதிக கார்பன் திறன் கொண்ட எஃகு உற்பத்தி செய்ய கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் காலநிலை அவசரநிலையின் யதார்த்தத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.


இந்தத் துறை இனி வழக்கம்போல வணிக ரீதியாக அதிக கார்பன் கொண்ட வெடிப்பு உலை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யக்கூடாது. அனைத்து புதிய உற்பத்தித் திறன்களும் கூடிய விரைவில் குறைந்த அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகிலான கார்பன் கொண்டதாக இருக்க வேண்டும்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொள்கை முன்னேற்றம்


இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பொறுப்பான நிர்வாகிகள் மற்றும் வாரியங்கள் துறையின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இங்குதான் நீண்டகால தொழில்துறை திட்டமிடலை வழிநடத்தும் நிலையான கொள்கை அறிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன.


எஃகுத் துறைக்கு வழிகாட்டுவதில் இந்தியா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், அரசாங்கம் பசுமை எஃகு வரைபடத்தை வெளியிட்டது. இது இந்தத் துறையின் கார்பன் நீக்கத்திற்கான நடைமுறைத் திட்டத்தை அமைத்தது. டிசம்பர் 2024-ல் பசுமை எஃகு வகைப்பாட்டை வெளியிடப்பட்டதன் மூலம், அத்தகைய வரையறையை முறைப்படுத்திய முதல் நாடாக இந்தியா மாறியது. கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) கீழ் 253 எஃகு அலகுகளுக்கான புதுப்பிக்கத்தக்க திறன் மற்றும் கார்பன் உமிழ்வு தீவிர இலக்குகளை விரிவுபடுத்தும் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், வேகத்தைக் காட்டுகின்றன.


இருப்பினும்கூட, வகைப்பாட்டியல் தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆன பிறகும், நிலக்கரி அடிப்படையிலான வெடிப்பு உலைகளிலிருந்து முதலீட்டை உண்மையில் மாற்றுவதற்கான கொள்கை ஊக்கத்தொகைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும், இந்தியா தனது பொருளாதாரத்தில் விலையுயர்ந்த பழங்கால தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து சேர்க்கும் ஒரே நாடாக இருக்கும் அபாயம் உள்ளது.


பசுமை எஃகுக்கான தடைகள் குறிப்பிடத்தக்கவை ஆனால் அவற்றை தீர்க்கக்கூடியவை. வரையறுக்கப்பட்ட விநியோகம் மற்றும் பசுமை ஹைட்ரஜனின் அதிக விலை, தொழில்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போதுமானதாக இல்லாதது, இந்தியாவில் ஒரு சிறிய மற்றும் முறைசாரா ஸ்கிராப் சந்தை, மற்றும் இடைநிலைப் எரிபொருளாக நிலையான, மலிவு விலையில் இயற்கை எரிவாயுவின் தேவை. மற்ற சவால்கள் கார்பன் பிரித்தெடுப்பிற்காக இயற்கை கார்பன் சேமிப்பு இடங்களைக் கண்டறிந்து மேம்படுத்துதல், பசுமை எஃகு திட்டங்களுக்கு நீண்டகால குறைந்த செலவிலான கடன்கள் இல்லாதது மற்றும் தொழிலாளர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் தேவை ஆகியவை ஆகும். இந்தச் சிக்கல்களில் பல கொள்கை மற்றும் முதலீடு தொடர்பானவை. கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் காணப்பட்டதைப் போல, இந்தத் துறைகளில் இந்தியா விரைவாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, அரசாங்கம் இந்தத் துறைக்கு ஒரு நியாயமான ஒழுங்குமுறை ஆணையமாகச் செயல்பட வேண்டும். மேலும் தொழில்துறை அதன் மூலதன முதலீடுகளைத் திட்டமிட தெளிவான, கடுமையான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கார்பன் உமிழ்வு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இதில் கார்பன் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும். இது மதிப்புச் சங்கிலி மூலம் பசுமை எஃகு செலவை பரப்புவதற்கான பொருத்தமான வழிமுறையை வழங்கும்.


ஐரோப்பாவில், ஒரு டன் CO2-க்கான கார்பன் விலை 90-100 டாலரை எட்டிய பின்னரே, பூஜ்ஜியத்திற்கு அருகிலான உமிழ்வுத் தொழில்நுட்பங்கள் சாத்தியமானவையாக மாறின. இந்தியா தனது சொந்த கார்பன் உமிழ்வு இலக்குகளை திட்டமிடும்போது இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.


பசுமை எஃகு வகைப்பாடு நன்கு சமூகமயமாக்கப்படுவதையும், பசுமை எஃகுக்கான பொது கொள்முதல் கொள்கை மூலம் உள்நாட்டு சந்தையை உருவாக்குவதையும், பொருத்தமான சான்றிதழ் வழிமுறைகள் மற்றும் லேபிளிங் மூலம் பசுமையான தயாரிப்புகளை மேம்படுத்துவதையும் நாம் காண வேண்டும்.


எஃகு தொழில் ஹைட்ரஜன் அடிப்படையிலான உற்பத்திக்கு மாறும்போது, ​​இயற்கை எரிவாயு ஒரு இடைநிலை எரிபொருளாகச் செயல்படும். எஃகுத் துறைக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை அரசாங்கம் ஒரு முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். பசுமை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் அல்லது இயற்கை எரிவாயுவிற்கான குழாய்கள் அல்லது கைப்பற்றப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றக் குழாய்களுக்கான உள்கட்டமைப்பை நிறுவனங்களால் சொந்தமாக அமைத்துக்கொள்ள முடியாது. பசுமை எஃகு மேம்பாட்டிற்கான முக்கியப் பகுதிகளில் மையங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். இந்த மையங்கள் நிறுவனங்கள் உள்கட்டமைப்புச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும்.


குறைந்த கார்பன் உற்பத்திக்கு சுமார் 30% முதல் 50% வரை அதிக மூலதனம் தேவைப்படுகிறது. இந்தக் கொள்கைகள் இந்திய முன்னுதாரணத்தில் பொருத்தமானவை மற்றும் அவசரமானவையாக ஆக்குகிறது. இந்த மாற்றத்தை சாத்தியமாக்க எஃகு உற்பத்தியாளர்களுக்கு சில நிதி ஆதரவும் தேவைப்படலாம். இந்த மாற்றம் சமமாக இருப்பதை உறுதிசெய்ய சிறிய நிறுவனங்களுக்கு நிச்சயமாக சில கூடுதல் ஆதரவு தேவைப்படும்.


ஒரு இராஜதந்திரக் கட்டாயம் 


பசுமை எஃகு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. இது இந்தியாவின் காலநிலை இலக்குகள், பொருளாதார எதிர்காலம் மற்றும் நிலையான தொழில்துறையில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு மையமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, காலநிலை ராஜதந்திரம் மற்றும் சுத்தமான தொழில்நுட்ப அளவீடு ஆகியவற்றில் இந்தியா ஏற்கனவே உலகளாவிய தலைமையை நிரூபித்துள்ளது. இப்போது எஃகுத் துறைதான் அடுத்த எல்லை. இது ஒரு முக்கியமான சோதனையாகவும், ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் உள்ளது.


உறுதியான பெருநிறுவன நடவடிக்கையை வலுவான, சந்தைக்கு ஏற்ற கொள்கை கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், இந்தியா எஃகு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். இது பொருளாதாரப் போட்டித்தன்மையைப் பாதுகாக்கும் மற்றும் உலகளாவிய தொழில்துறை தரங்களை வடிவமைக்க உதவும்.


சஞ்சீவ் பால் எஃகுத் துறையில் ஒரு மூத்த நிபுணர். அவர் முன்பு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைத் தலைவராக இருந்தார்.


 Original Article : Green steel can shape India’s climate goals trajectory -Sanjiv Paul

Share:

2026-27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாலினக் கண்ணோட்டத்தில் இருந்து எதிர்பார்ப்புகள் -ஷ்ரவாணி பிரகாஷ், தனு எம்.கோயல், அஞ்சனா ரமேஷ்

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் அவர்களது நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன ?


இந்தியா தனது 2026–27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்குத் தயாராகி வரும் வேளையில், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு முக்கியமான ஆனால் கவனிக்கப்படாத தடையைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. அதுதான் பெண்களுக்கான 'நேரமின்மை'. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) பெண்களின் பங்களிப்பு சுமார் 18% மட்டுமே உள்ளது. இதற்கு அவர்கள் குறைவாக உழைக்கிறார்கள் என்பது காரணமல்ல; மாறாக, அவர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை மற்றும் அவை தேசிய வருமானத்தில் கணக்கிடப்படுவதும் இல்லை. இந்தியப் பெண்களில் சுமார் 40% பேர் மட்டுமே தொழிலாளர் சார்ந்த உற்பத்தி சந்தையில் உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் ஊதியம் இல்லாத வேளாண் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். அதே சமயம், வேலைக்குச் செல்லாத பெண்களில் 60% பேர், தங்களின் வீட்டு வேலைகளும் குடும்பப் பராமரிப்புமே தாங்கள் வேலைக்குச் செல்லாததற்குக் காரணம் என 'காலமுறை தொழிலாளர் படை ஆய்வில்' (Periodic Labour Force Survey (PLFS)) தெரிவித்துள்ளனர்.


பெண்களுக்குப் பொறுப்பான வீட்டுப் பராமரிப்புப் பணிகள், திறன் பற்றாக்குறை, வெளியில் சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் பெண்களின் உழைப்பிற்கு ஏற்ற கண்ணியமான வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது போன்ற - தேவை மற்றும் வழங்கல் (Supply and Demand) ஆகிய இருதரப்பு சிக்கல்களால் இந்நிலை உருவாகிறது. எனவே, பெண்களின் உழைப்பு முறையாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான நேரத்தை மற்ற சுமைகளிலிருந்து விடுவித்து, அதை உற்பத்தித் திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு ஒன்றிய நிதிநிலை அறிக்கை, குறிப்பாக பாலின வரவு செலவுத் திட்டம் (Gender Budget) ஒரு முக்கிய கருவியாகக் கருதப்படுகிறது. 


திட்டங்களை மறுசீரமைத்தல்


பெண்களின் நேரத்தைச் சேமிக்கவும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் 2026–27-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துகின்றனர். முதலாவதாக, பெண்கள் எந்தெந்த வேலைகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுகிறார்களோ, அந்தத் துறைகளில் முதலீடுகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். 2025-ஆம் ஆண்டின் நேரப் பயன்பாட்டு ஆய்வின்படி (Time Use Survey), பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகச் செலவிடும் நேரம் 2019-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 364 நிமிடங்களாக இருந்தது. அது 2024-ஆம் ஆண்டில் 366 நிமிடங்களாகச் சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஊதியம் பெறும் வேலைகளுக்காக அவர்கள் செலவிடும் நேரம் 68 நிமிடங்களிலிருந்து 76 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஊதியம் உள்ள மற்றும் ஊதியம் இல்லாத வேலைகளைச் சேர்த்து பெண்களின் மொத்த வேலை நேரம் அதிகரித்துள்ளது.


பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடு திட்டங்களில் (Gender Budget) பெரும் பங்கைக் கொண்டுள்ள நலத்திட்டங்களையும் சமூகத் திட்டங்களையும் மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களை வடிவமைக்கும் போதும் மதிப்பீடு செய்யும் போதும், பெண்கள் தங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள் (Time-use measures) என்பதைக் கணக்கில் கொள்வது மிக முக்கியமாகிறது. 


உதாரணமாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்ற பெருமளவிலான திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இது பெண்களை அதிகாரப்படுத்துவதாகக் கருதப்படுகிறது மற்றும் கணிசமான பாலின பட்ஜெட்டைக் கொண்டுள்ளது, ஏனெனில் வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வீட்டு உரிமையை ஒரு நிலையான சொத்திலிருந்து பெண்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் வசதியாக மாற்ற, இத்திட்டம் பட்ஜெட் மற்றும் அறிக்கையிடலின் அலகாக 'பாலின முழுமையான வீடு' (gender-complete house) என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் — அதில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம், மின்சார வசதி, செயல்படும் கழிப்பறைகள் மற்றும் சுத்தமான சமையல் எரிபொருள் உள்ளிட்ட நேரத்தை மிச்சப்படுத்தும் உள்கட்டமைப்புகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 


இந்த வசதிகள் வெவ்வேறு திட்டங்களின்கீழ் இருந்தாலும், அவை பெண்களின் நலன் சார்ந்த பார்வையோடு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டமானது  (Pradhan Mantri Awas Yojana (PMAY)) தண்ணீர் (ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission)), சுகாதாரம் (தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), மின்சாரம் (கூரை சூரிய மின்சக்தி (rooftop solar)) மற்றும் சமையல் எரிபொருள் (உஜ்வாலா (Ujwala)) போன்ற திட்டங்களுடன் தானாகவே இணைக்க வழிவகை செய்யலாம்.


பெண்களின் வேலைவாய்ப்பு என்பது ஒருங்கிணைக்கப்படாத மற்றும் போதிய நிதி வசதியில்லாத குழந்தை பராமரிப்பு சேவைகளால் பாதிக்கப்படுகிறது. தற்போது, பால்னா (Palna) காப்பகங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்து திட்டங்கள் (Prime Minister's Overarching Scheme for Holistic Nourishment (POSHAN)) தனித்தனியாகச் செயல்படுகின்றன. இதனால் ஒரே மாதிரியான உள்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டாலும், முழுமையான பலன் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


கர்நாடகாவின் 'கூசின மானே' (Koosina Mane) போன்ற திட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, பாலின வரவுசெலவுத் திட்டமானது (Gender Budget), குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், அங்கன்வாடிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கான நிதியை ஒருங்கிணைத்து, 'ஒரே பராமரிப்பு உள்கட்டமைப்பு சாளரத்தின்கீழ்' (Care Infrastructure Convergence Window) கொண்டு வரலாம். மேலும், எத்தனை மையங்கள் திறக்கப்பட்டன அல்லது எத்தனை வேளை உணவு வழங்கப்பட்டது என்பதை மட்டும் கணக்கிடாமல், பெண்களின் சேமிக்கப்பட்ட நேரம் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பராமரிப்பு நேரங்கள் போன்ற விளைவுகளைப் பற்றிய அறிக்கைகளையும் நிர்வகிக்க வேண்டியது அவசியமாகிறது. 


திட்டங்களை மறுவடிவமைப்பு செய்தல்


இரண்டாவதாக, நிதி ஒதுக்கீடுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைக்கும் முடிவுகளோடு ஒப்பிட வேண்டும். பாலின வரவுசெலவுத் திட்டம் படிப்படியாக வளர்ந்து, மத்திய நிதித்திட்ட அறிக்கையில் 8.9% அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1% என்கிற சாதனையை எட்டியுள்ளது. இருப்பினும், 2025–26-ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 75%-க்கும் அதிகமானவை பகுதி B (30-99% பெண்களுக்குரியது) மற்றும் பகுதி C (30%-க்கும் குறைவானது) ஆகியவற்றின் கீழ்தான் வருகின்றன. பாலின நலன் சார்ந்த திட்டங்கள் பெரும்பாலும் பொதுவான திட்டங்களோடு இணைக்கப்பட்டு விடுகின்றன என்பதையே இது காட்டுகிறது.


இருப்பினும், தற்போதுள்ள பல திட்டங்கள் பெண்களின் குறிப்பிட்டத் தேவைகளையோ அல்லது தடைகளையோ களையும் வகையில் மாற்றியமைக்கப்படவில்லை; மாறாக, அவை வெறும் 'பெண்களுக்கானத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு அமைச்சகமும் பாலின வரவு செலவுத் திட்டதின்கீழ் நிதியைப் பெறுவதற்கு முன்னரே, தங்கள் திட்டங்களில் பெண்களுக்கான அம்சங்கள் என்னென்ன என்பதைத் தெளிவாகத் திட்டமிட ஊக்குவிக்கப்பட வேண்டும்.


வேளாண் தொழில்துறையானது இந்தப் பாலின இடைவெளியைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் விவசாயத்திலேயே பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் ஊதியமில்லாத குடும்ப உழைப்பாளர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும், பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீட்டில் (Gender Budget) வெறும் 4.2% மட்டுமே இத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது.


இதில் பெரும் பகுதி பிரதமர் கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்திற்கே ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் முக்கியமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கே (நில உரிமையாளர்கள்) பயனளிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்களே ஆவர். ஆனால், பெண்களின் ஊதியமில்லா உழைப்பைக் குறைப்பதற்கு இத்திட்டம் எந்த ஒரு மேம்பாட்டு உதவிகளையும் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.


தொழிலாளர் பங்கேற்பு விகிதம்


மூன்றாவதாக, பெண்களின் உழைப்பிற்கான தேவையை (Demand) அதிகப்படுத்த வேண்டும்; அப்போதுதான் அவர்களின் நேரம் பயனுள்ள முறையில் செலவிடப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் 'பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடு' (Gender Budgeting) என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு வைத்துள்ள புதிய 'வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை' (Employment Linked Incentive (ELI)) திட்டத்தில், பாலின நிதி ஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும். மேலும், இந்த புதிய வேலைகளில் குறைந்தது 50% பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியறுத்துகின்றனர். 


இந்த நிதியைப் பயன்படுத்தி, பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு நேரடி ஊதிய மானியம் மற்றும் கூடுதல் சமூகப் பாதுகாப்பு போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தகப்படுகிறது. 


ஊரகப்பகுதிகளில், பெண்களே 50 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகளாக இருப்பதால், தற்போது விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Aajeevika Mission (Gramin) (VB-GRAM G)) என பெயர் மாற்றப்பட்டுள்ள MGNREGA (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.


விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்க (VB-GRAM G) திட்டத்தின்கீழ் உறுதி அளிக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125-ஆக உயர்த்தவும், வீட்டிற்கு அருகிலேயே வேலை மற்றும் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் போன்ற பெண்களுக்கு ஏற்ற அம்சங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதிக நிதி ஒதுக்கீடும், பாலின சமத்துவத்தில் தொடர்ச்சியான கவனமும் (சுமார் 50% பாலின நிதி ஒதுக்கீட்டைத் தக்கவைத்தல்) பெண்கள் வேலைவாய்ப்பில் ஏற்படும் இடையூறுகளைப் போக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பெண்கள் தொழில்முனைவு


நான்காவதாக, பெண்கள் தங்கள் தொழில்களை வளர்க்க உதவ வேண்டும். பெண்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் வருமானம் ஈட்ட உதவும் ‘பெண் தொழில்முனைவோர்’ துறைக்கு இப்போதும் போதிய நிதி கிடைப்பதில்லை. பட்ஜெட்டில் பெண்கள் நடத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) வெறும் 0.9% நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்படாத உற்பத்தி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 60% பெண்கள் வசம் இருந்தாலும், அவற்றில் 4% மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை தையல் தொழில் போன்ற மிகச்சிறிய, தனிநபரால் நடத்தப்படும் நிறுவனங்களாகவே உள்ளன.


இதற்கான ஒரு தீர்வு, பெண்களுக்கு அதிக அளவிலான நிதி (Funding) கிடைப்பதை உறுதி செய்வதாகும். முத்ரா (Mudra) கடன் திட்டத்தின்கீழ் 64% கணக்குகளைப் பெண்கள் கொண்டிருந்தாலும், வழங்கப்பட்ட மொத்தத் தொகையில் 42%-ஐ மட்டுமே அவர்கள் பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானவை 'சிஷு' (Shishu) கடன்களாகும் அதாவது, ₹50,000-க்கும் குறைவான கடன்தொகை ஆகும். இவ்வளவு சிறிய தொகை ஒரு தொழிலை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க போதுமானதாக இருப்பதில்லை.


பெண்கள் தங்கள் சந்தை அணுகலை விரிவுபடுத்தவும், பாரம்பரியத் துறைகளைத் தாண்டிப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து, குழந்தைப் பராமரிப்பு போன்ற பொதுக் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் நிதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, பெண்கள் தங்கள் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவும், வளர்ச்சி சார்ந்த முறையான வணிகங்களில் ஈடுபடவும் (வெற்றிகரமான பெண்கள் நடத்தும் ஜவுளி நிறுவனங்களைப் போல), சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பெண்களுக்கெனத் தனித்துவமான நிதி ஒதுக்கீடுகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


பெண்களின் திறன் மேம்பாடு


ஐந்தாவதாக, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருமாறி வரும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பெண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடங்களில் செயற்கை நுண்ணறிவு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால், பெண்களுக்குத் தேவையான திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காகப் பெண்களுக்கெனத் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் உதவித்தொகை போன்ற சிறப்பு வளங்களை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. 


2025-ஆம் ஆண்டிற்கான 'இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் ' (India AI Mission) போன்ற திட்டத்தில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ₹660 கோடி நிதி — இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 33% ஆகும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியில் பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த முயற்சி இன்னும் விரிவடைய வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் டிஜிட்டல் திறன்கள், பாலினப் பாகுபாடற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. அதேபோல், இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கிறதா அல்லது அதிகரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, காலக்கெடுவுடன் கூடிய மதிப்பீடுகள் மிகவும் அவசியமாகிறது. 


இறுதியாக, நிதிநிலைத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) என்ற அம்சம், பெண்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்பதைக் கொண்டு மதிப்பிடப்படக் கூடாது. மாறாக, அந்தத் திட்டங்கள் பெண்களின் நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாக மிச்சப்படுத்துகின்றன, அந்த நேரத்தை அவர்களின் சுய அதிகாரம், வருமானம் மற்றும் வாய்ப்புகளாக எப்படி மாற்றுகின்றன என்பதைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும்.


தனு எம். கோயல், சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) மூத்த ஆய்வாளராகப் (Senior Fellow) பணியாற்றுகிறார். ஸ்ராவணி பிரகாஷ் மற்றும் அஞ்சனா ரமேஷ் ஆகியோர் அதே அமைப்பின் 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள்' (Economic Policies for Women Led Development (EPWD)) திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆவர்.


 Original Article : Expectations from a gender lens in Budget 2026-27 -Shravani Prakash, Tanu M. Goyal, Anjhana Ramesh

Share: