குறைமின்கடத்தி 2.0 முக்கியப்பகுதிகள் யாவை? இது முதல் கட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இந்தியா ஏன் குறைமின்கடத்தி (semiconductor) உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது? கைப்பேசி உற்பத்தித் திட்டம் எது போன்ற ஊக்கத்தொகைகளை வழங்குகிறது?
தற்போதைய செய்தி:
ஜூலை 15 அன்று, மத்திய அமைச்சரவை 'இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்' (India Semiconductor Mission (ISM)) இரண்டாம் கட்டம் மற்றும் 'கைப்பேசி உற்பத்தித் திட்டம்' (Mobile Phone Manufacturing Scheme (MPMS)) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முறையே ₹1.27 லட்சம் கோடி மற்றும் ₹62,500 கோடியாகும். இந்தியாவில் அடுத்தகட்ட செமிகண்டக்டர் உற்பத்தி, ஒன்றிணைப்பு (assembly) மற்றும் பொதியிடல் (Packaging) வசதிகளை ஊக்குவிப்பதையும், அதேவேளையில் நாட்டில் கூடுதல் கைப்பேசி ஒன்றிணைப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளைத் தொடர்வதையும் இந்தத்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத்திட்டத்தின் ஐந்தாண்டு காலப்பகுதியில் ₹4 லட்சம் கோடி முதலீடு, ₹2 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியும் நடைபெறும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இந்த திட்டம் முதல் கட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின் முதல் கட்டம் ₹76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், 2022-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, குஜராத்தின் சானந்தில் அமைந்துள்ள Micron நிறுவனத்தின் நினைவக (Memory Chip) சிப் பொதியிடல் (Packaging) ஆலை போன்ற பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு 50% வரை மூலதன மானியம் (Capital Subsidy) வழங்கும் அதிகாரம் இந்தத்திட்டத்திற்கு வழங்கப்பட்டது. சிறிய மின்னணு உதிரிபாகங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கும்' (Electronics Component Manufacturing Scheme) நிதி ஒதுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத்தின் துல்லியமான விவரங்களை விளக்கும் அரசிதழ் (Gazette) அறிவிப்பு அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MeitY)) கூடுதல் செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா ஆகியோர், திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட செயல்பாட்டு வரம்பு குறித்து சில விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்திய குறைமின்கடத்தி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், முதல் கட்டத்தில் பகுதியளவில் மட்டுமே உள்ளடக்கப்பட்ட துறைகளையும் சேர்த்து, இனி மின்னணு உற்பத்திச் சூழலமைப்பின் பரந்த பகுதிகளை கொண்டு இந்தத்திட்டம் செயல்படுவாதகும். இதில், முந்தைய கட்டத்தில் ஓரளவு மட்டுமே கவனிக்கப்பட்ட துறைகளும் இப்போது இடம்பெற்றுள்ளன. திட்டத்தில், முதல் கட்டத்தில் சிறிதளவு மட்டுமே கவனம் செலுதப்பட்ட துறைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சிப் வடிவமைப்புத் திறமைகளை (Chip Design Talent) ஊக்குவித்தல், மூலதன இயந்திரங்கள் (Capital Machinery), சிப் உற்பத்தி ஆலைகளில் பயன்படுத்தப்படும் பெரிய உபகரணங்கள், குறைமின்கடத்தி தரத் தூய்மையுடைய (Semiconductor-grade) இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.
குறைந்த அளவிலான ஊக்கத்தொகைகள் இருந்தாலும், இந்தியாவில் குறைமின்கடத்தி துறை அதிக ஈர்ப்புமிக்கதாக மாறக்கூடும் என்பதால், புதிய திட்டத்தின் கீழ் மூலதன மானியங்கள் 30-40% ஆகக் குறைக்கப்படும் என்று சின்ஹா தெரிவித்தார். இது போன்ற திட்டங்களை ஈர்ப்பதற்காக, மாநில அரசுகள் அடையாள விலைக்கு நிலத்தை வழங்குவதோடு, மத்திய அரசு வழங்கும் சலுகைகளுக்கு அதிகமாக தங்கள் சொந்த சலுகைகளையும் வழங்கி அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, மத்திய அரசு நிலத்திற்கான ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
முதல் கட்டத்தின் முடிவுகள் என்னவாக இருந்தன?
முதல் கட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 உற்பத்தி மற்றும் பொதியிடல் (Packaging) அலகுகளில், ₹1.64 லட்சம் கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை குறைமின்கடத்தி பொதியிடல் (Semiconductor Packaging) அலகுகளாகும். இது போன்ற வகையான 9 அலகுகள் குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அசாம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலிக்கான் உற்பத்தி அலகும், ஒரு கேலியம் நைட்ரைடு (Gallium Nitride) அடிப்படையிலான மைக்ரோ எல்.இ.டி. (Micro LED) காட்சித் திரை உற்பத்தி (Fabrication) அலகும் அமைக்கப்பட்டுள்ளன. டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை 2028-ஆம் ஆண்டில் வணிகரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
இந்தத் திட்டத்தில், வடிவமைப்பு-இணைந்த ஊக்கத்தொகை (Design-Linked Incentive (DL)I) திட்டமும் இடம்பெற்றுள்ளது. திட்டத்தின்கீழ் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறைமின்கடத்தி வடிவமைப்பிற்குத் தேவையான அதிக விலை கொண்ட மென்பொருட்களுக்கான உரிமங்களை அரசு பெற்று, அவற்றை பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. அதேபோல், புதுப்பிக்கப்பட்டு வரும் மொஹாலி குறைமின்கடத்தி ஆய்வகம், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை (chips) உற்பத்திக்கு முந்தைய இறுதி வடிவமைப்பாக மாற்றும் (tape out) பணிக்கான ஒரு மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியா ஏன் குறைமின்கடத்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது?
கோவிட்-19 காலகட்டத்தின் விநியோகச் சங்கிலித் தடைகள் முதல், சீனாவுடனான வர்த்தகப் போரின்போது அமெரிக்கா விதித்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் வரை, இந்தியா உலகளாவிய மின்னணு மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அதிகரித்துள்ளன. சிப் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் நிறுவனங்களைக் கொண்ட நெதர்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளின் நிலையை எட்டுவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும், உள்நாட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியமானது என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய வசதிகளில் இலக்காகக் கொள்ளப்பட்ட சிப்புகள் எந்தளவு அதிநவீனமானவை?
மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசிகள் 7 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான செயலாக்க முனையைக் கொண்ட “முன்னோடி” தர சிப்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், மத்திய அரசு 28 நானோமீட்டர் சிப்களின் உற்பத்தியையே இலக்காகக் கொண்டுள்ளது. இவை “பாரம்பரிய செயல்முறை முனைகள் (Legacy Process Nodes)” மூலம் தயாரிக்கப்படும் சிப்கள் ஆகும். தினமும் பயன்படுதப்படும் மின்னணு சாதனங்களில், அளவும், கணினி செயல்திறனும் முக்கியக் கட்டுப்பாடுகளாக இல்லாததால், இத்தகைய 28 நானோமீட்டர் சிப்களுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கினார்.
இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்' (IIndia Semiconductor Mission (ISM)) 2.0 முன்னேறிச் செல்லும்போது, அதுபோன்ற சிப்களுக்கான உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமை (domestically owned intellectual property) மற்றும் ஆராய்ச்சியின் அளவை மேம்படுத்துவதன் மூலம், குறைமின்கடத்தி சூழலமைப்பு முன்னணி செயல்முறை முனைகள் (Frontier Nodes) நோக்கி முன்னேறும் என்று அரசு நம்புகிறது. இந்தியாவில் குறைமின்கடத்தி வடிவமைப்பாளர்கள் (Semiconductor Designers) அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவோ அல்லது அவற்றை சார்ந்தே பணியாற்றுகின்றனர். இதனால், உரிமக் கட்டண (Royalties) வருவாயும், தொழில்நுட்ப நிபுணத்துவமும் உள்நாட்டு தொழில்துறைக்கு வெளியே இருக்கின்றன.
கைப்பேசி உற்பத்தித் திட்டம் (Mobile Phone Manufacturing Scheme (MPMS)) ஏன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது
உலகம் முழுவதும் விற்பனையாகும் iPhone-களில் அதிகரித்து வரும் ஒரு பகுதி இந்தியாவில் ஒன்றிணைக்கப்பட்ட கைபேசிகளாக இருந்தாலும், அவற்றில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உதிரிபாகங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட (Indian-designed) கைபேசிகள் சந்தையில் மிகக் குறைவாகவே உள்ளன. கைப்பேசி உற்பத்தித் திட்டம், உள்நாட்டு கைபேசி ஒன்றிணைப்பு (Domestic Phone Assembly) திறனை விரிவுபடுத்துவதன் மூலம் துணைத் தொழில் சந்தையை வளர்ப்பதற்கும், அதே நேரத்தில் உள்நாட்டு வடிவமைப்பு (Domestic Design) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and Development (R&D)) நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, கைபேசிகளில் இடம்பெறும் உள்ளூர் வடிவமைப்பின் அளவைப் பொறுத்து, 2.25% முதல் 5% வரை ஊக்கத்தொகைகளை (Incentives) வழங்கும் வகையில் இந்தத்திட்டம் உருவக்கப்பட்டுள்ளது.