அரசு 2026-27 முதல் SC, OBC, DNT மாணவர்களுக்கான பள்ளிப் படிப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டத்திற்கான குடும்ப வருமான வரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளது. -அபினய் லக்ஷ்மண்


சமூக நீதி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்களால் நடத்தப்படும் உதவித்தொகை திட்டங்களில் பரவலான மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


2026-27 நிதியாண்டு முதல் பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes (SC)), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Extremely Backward Classes (EBC)) மற்றும் சீர்மரபினர் (Denotified), நாடோடி (Nomadic) மற்றும் பகுதியளவு-நாடோடி பழங்குடியினருக்கான (Semi-Nomadic Tribes (DNT)) பட்டப் படிப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கான (post-matric scholarship schemes) ஆண்டு குடும்ப வருமான தகுதி அளவுகோல்களை ₹2.5 லட்சத்திலிருந்து ₹4.5 லட்சமாக உயர்த்த மத்திய சமூகநீதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


துறைரீதியாக தொடர்புடைய சட்டமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ள அரசாங்கம், SC, ST, OBC மற்றும் DNT சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக சமூகநீதி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்கு பரவலான திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கான பட்டப் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகளுக்கான பெற்றோரின் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.




மேலும், பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகை (National Overseas Scholarship (NOS)) திட்டத்தை "பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை திட்டம்" (Baba Saheb Dr.Bhim Rao Ambedkar Overseas Scholarship Scheme) என்று மறுபெயரிடவும், இந்தத் திட்டத்தின்கீழ் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை 125-லிருந்து 250-ஆக அதிகரிக்கவும், பராமரிப்பு கொடுப்பனளவை 25% அதிகரிக்கவும், சுகாதாரத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இடமளிக்க ஒரு புதிய வகையை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.


பட்டியல் பழங்குடியினர் (ST) மாணவர்களுக்கான இதேபோன்ற தேசிய வெளிநாட்டு உதவித்தொகை (NOS) திட்டமும் திருத்தப்பட்டு வருவதாகவும், இதில் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 50-ஆக அதிகரிக்கவும், நிதி உதவியை $15,400-லிருந்து $19,250-ஆக உயர்த்தவும் ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சட்டமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது.


இதனுடன் கூடுதலாக, பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) இலவச பயிற்சித் திட்டம் போன்ற திட்டங்களில் சில மாற்றங்களை அரசாங்கம் முன்மொழிகிறது. இதில் பரிந்துரைத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் உதவித்தொகையின் அளவை இரட்டிப்பாக்குவதும், மாநில பல்கலைக்கழகங்களையும் பயிற்சி வழங்க அனுமதிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு அப்பால் உள்ள பட்டியல் வகுப்பினர் (SC) மாணவர்களுக்கான உயர் வகுப்பு உதவித்தொகைகள், நிலையான எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, "நிறைவு சார்ந்த" (saturation-based) திட்டமாக மாற்றப்பட முன்மொழியப்பட்டுள்ளது.


கூடுதலாக, "SC, ST, OBC, EBC மற்றும் DNT-களுக்காகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்காகவும் கூடுதலாக மத்திய பல்கலைக்கழகங்களில் அதிக திறன் கொண்ட விடுதிகளை" கட்டுவதற்காக, "சாம்ராஸ்" (SAMRAS) என்ற புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.



பட்டியல் வகுப்பினர்களுக்கான (SC) பள்ளிப்படிப்புக்கு பிந்தைய உதவித்தொகைக்கு முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உதவித்தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டில் 1% ஒதுக்குவதற்கான திட்டமும் அடங்கும்.


அடுத்த நிதிச் சுழற்சியில் (2026-27 முதல் 2030-31 வரை) திட்டங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள், அந்தந்த அமைச்சகங்களால் செலவு நிதிக் குழுவிடம் முன்மொழியப்படுகின்றன. இது அடுத்த நிதிச் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்து சரியான நேரத்தில் முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில் மாற்றங்களுக்கான திட்டங்கள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான துறை சார்ந்த நிலைக்குழுவுடனான அதன் தொடர்புகளின் போது அரசாங்கம் இந்த திட்டங்களை வெளிப்படுத்தியது.


இந்தக் குழு கடந்த ஆண்டு பல உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு தகுதிக்கான அளவுகோல்களை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், இந்தத் திட்டங்களின்கீழ் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. புதன்கிழமை, சமூக நீதி மற்றும் பழங்குடி விவகார அமைச்சகங்களுக்கு இந்தக் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கை குறித்த அறிக்கைகளில், உதவித்தொகை, பயிற்சி மற்றும் விடுதித் திட்டங்களில் மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் குறித்து அரசாங்கம் சமர்ப்பித்த பதில்களை கவனத்தில் கொண்டது.


ஒத்திசைவு இல்லாமை


சமூக நீதி அமைச்சகத்தின் செலவினம் நிதியாண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை பூர்த்தி செய்யவில்லை என்று சட்டமன்றக் குழு கவலை தெரிவித்தது. 2024-25 நிதியாண்டில் பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கான கணிசமான அளவு நிதி அமைச்சகத்தால் ஒப்படைக்கப்பட்டது என்பதையும் அது சுட்டிக்காட்டியது. இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த நிதி குறைவாகப் பயன்படுத்தப்பட்டது என்று குழு முடிவு செய்தது.


புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட சட்டமன்றக் குழுவிடம் சமர்ப்பிப்புகளில், OBC, EBC மற்றும் DNT-களுக்கான பள்ளிப் படிப்பிற்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ், பட்டம் மற்றும் முதுகலை நிலைகளுக்கு (₹20,000 முதல் ₹25,000 வரை), பட்டங்கள், டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்களுக்கான தொழில்முறை படிப்புகளுக்கு (₹13,000 முதல் ₹15,000 வரை) மற்றும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு நிலைகளுக்கு (₹5,000 முதல் ₹7,000 வரை) ஆண்டுதோறும் உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கூடுதலாக, இந்தத் திட்டத்தின் கீழ், XI மற்றும் XII வகுப்புகளில் தொடரப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ₹2,000 கூடுதலாக வழங்கப்படும்.


மேலும், பட்டியல் வகுப்பினர் (SC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான (OBC) இலவச பயிற்சி திட்டத்தின் கீழ், 3,500 இடங்களை 7,000 இடங்களாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிகிறது. இந்த புதிய மொத்த இடங்களில், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 3,000 இடங்களையும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு 2,000 இடங்களையும் ஒதுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, "மாணவர்களை மையமாகக் கொண்ட பயன்முறையை" (student-centric mode) அறிமுகப்படுத்தவும் திட்டங்கள் உள்ளன. மீதமுள்ள 2,000 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதன் கீழ் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பயிற்சி மையங்களில் படிக்கலாம். 


சமூகநீதி அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கை குறித்த அறிக்கையில், கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளை ஆபத்தான முறையில் சுத்தம் செய்வதால் ஏற்படும் இறப்புகளை நிவர்த்தி செய்வதற்கான நமஸ்தே (NAMASTE) திட்டத்திற்கு கூடுதல் ஒதுக்கீடுகள் தேவை என்று சட்டமன்றக் குழு குறிப்பிட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST சட்டம்) முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தபோதிலும், "ஏழு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் மட்டுமே சிறப்பு காவல் நிலையங்கள் உள்ளன" என்பது "அதிர்ச்சியை" வெளிப்படுத்துகிறது.


அடுத்த நிதி சுழற்சிக்காக செலவு நிதிக் குழுவிற்கு (Expenditure Finance Committee (EFC)) அனுப்பப்பட்ட திட்டங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகைகளை அதிகரிக்கவும், சிறப்பு காவல் நிலையங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நிதியைத் திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமன்றக்குழு கூறுகிறது.


Original Link: Government plans to raise income limit for post-matric scholarship for SCs, OBCs, DNTs from 2026-27 onwards


Share: