மேற்காசிய நெருக்கடிக்கு மத்தியில் ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?



பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas) இந்த உத்தரவானது, இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான நான்கு முன்னுரிமைப் பிரிவுகளை அடையாளம் காண்கிறது. இது கடந்த ஆறு மாதங்களில் அந்தந்தப் பிரிவுகள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவின் அடிப்படையிலும், தற்போதைய எரிவாயு இருப்பைப் பொறுத்தும்  தீர்மானிக்கப்படுகிறது.


மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எரிபொருள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், நாட்டின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இருப்பு குறைவாக உள்ளதாலும், இந்த எரிபொருளை நம்பியிருக்கும் "முன்னுரிமை துறைகளுக்கு"  இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக, அரசாங்கம் கடந்த திங்கள் கிழமையன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தைப் (Essential Commodities Act (ECA) பயன்படுத்தியது.


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2026 இயற்கை எரிவாயு (வழங்கல் ஒழுங்குமுறை) ஆணையின்படி (2026 Natural Gas (Supply Regulation) Order), லட்சக்கணக்கான நுகர்வோரைப் பாதிக்கும் துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் மற்ற துறைகளுக்கு வழங்கும் முன்பாக, வீடுகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)), வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas (CNG)) மற்றும் சமையல் எரிவாயு (LPG) உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 




இந்தியா தனது தினசரி இயற்கை எரிவாயுத் தேவையை (சுமார் 190 மில்லியன் கன மீட்டர்) பூர்த்தி செய்ய, அதில் பாதியளவை திரவ இயற்கை எரிவாயுவாக (Liquified Natural Gas (LNG)) இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தே வருகின்றன. அதேபோல், இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சுமார் 80 சதவீத விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே இந்தியாவிற்கு வந்தடைகிறது.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?


பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி, விநியோகம், வழங்கல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act, 1955) இயற்றப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமானது பதுக்கல் அல்லது கள்ளச்சந்தை காரணமாகத் தடைப்பட்டால், அது மக்களின் இயல்பான அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி (Essential Commodities Act), கால்நடைத் தீவனம், நிலக்கரி மற்றும் அதன் வழிப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் அதன் சாதனங்கள், பருத்தி மற்றும் கம்பளி துணிகள், 1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் அவற்றின் தயாரிப்புகள், கச்சா பருத்தி, கச்சா சணல் மற்றும் மத்திய அரசு அறிவிக்கை மூலம் சேர்க்கும் இதர பொருட்கள் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. கொரொனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை (Hand Sanitisers) ஒன்றிய அரசு தற்காலிகமாக இந்தப் பட்டியலில் சேர்த்தது, பின்னர் ஜூலை மாதத்தில் அவற்றை நீக்கியது குறிப்பிடத்தக்கது.


அசல் சட்டத்தின்கீழ், "அத்தியாவசியப் பண்டம்" என வகைப்படுத்தப்பட்ட எந்தவொரு பொருளுக்கும் (packaged product), குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. 


ஜூன் மாதம் 2020-ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சில பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கியது. இதன் பொருள் என்னவென்றால், போர், பஞ்சம், அதீத விலை உயர்வு அல்லது கடுமையான இயற்கை பேரிடர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே அரசு அவற்றின் விநியோகத்தையும் விலையையும் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்களில் அடங்கும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே, தனிநபர்கள் அல்லது வணிகர்கள் இந்தப் பொருட்களை எவ்வளவு இருப்பு வைக்கலாம் என்பதற்கான வரம்புகளையும் அரசாங்கத்தால் நிர்ணயிக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


திருத்தப்பட்ட சட்டத்தின்படி, தோட்டக்கலைப் பயிர்களின் சில்லறை விற்பனை விலை 100% உயர்ந்தாலோ அல்லது நீண்டநாள் சேமிக்கக்கூடிய வேளாண் உணவுப் பொருட்களின் விலை 50% உயர்ந்தாலோ மட்டுமே அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், உள்நாட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக (Public Distribution System) இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கின்றனர். 


தற்போதைய உத்தரவு எதை வலியுறுத்துகிறது 


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இந்த உத்தரவானது, இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான நான்கு முன்னுரிமைப் பிரிவுகளை அடையாளம் காண்கிறது. இது கடந்த ஆறுமாதங்களில் அந்தந்தப் பிரிவுகள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவின் அடிப்படையிலும், தற்போதைய எரிவாயு இருப்பைப் பொறுத்தும்  தீர்மானிக்கப்படுகிறது.


வீட்டு உபயோகத்திற்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (Domestic Piped Natural Gas (PNG)) பயன்பாட்டிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு, கடந்த ஆறு மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவில் 100% முழுமையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) தயாரிக்கப் பயன்படும் இயற்கை எரிவாயு மற்றும் அத்தியாவசிய குழாய் வழி செயல்பாடுகளுக்குத் தேவையான எரிவாயு ஆகியவையும் அடங்கும்.



இரண்டாவது முன்னுரிமை உரத் தொழிற்சாலைகளுக்கு (Fertiliser plants) வழங்கப்படுகிறது. இவை கடந்த ஆறு மாதங்களில் தாங்கள் பயன்படுத்திய சராசரி எரிவாயு அளவில் 70 சதவீதத்தைப் பெறும் என்றும் இந்த உத்தரவின்படி, ஒதுக்கப்பட்ட எரிவாயுவை அத்தொழிற்சாலைகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் சான்றிதழை ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மூலமாக பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவிடம் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) அவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 



மூன்றாவது பிரிவில் தேயிலை தொழிற்சாலைகள், உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தேசிய எரிவாயுக் கட்டமைப்பு (National Gas Grid) மூலம் விநியோகம் பெறும் இதர தொழில்முறை நுகர்வோர் ஆகியோர் அடங்குவர். இவர்களுக்கு அவர்களின் ஆறுமாத கால சராசரி பயன்பாட்டில் 80% எரிவாயு வழங்கப்படும் என்றும் நான்காவது பிரிவில் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் (City Gas Distribution Companies) இணைக்கப்பட்டுள்ள வணிக மற்றும் தொழில்முறை நுகர்வோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கும் அவர்களின் ஆறுமாத கால சராசரி பயன்பாட்டில் 80% அளவு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகள் மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சமையல் எரிவாயுவை பதுக்குவதைத் தடுப்பதற்காக, ஒரு எரிவாயு உருளை முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையையும் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான வீட்டு உபயோகம் அல்லாத துறைகளுக்கு, இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் எரிவாயு தேவைகள் குறித்த கோரிக்கைகளை ஆய்வு செய்ய, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று நிர்வாக இயக்குநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைச்சகம் அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Original Link: What is the Essential Commodities Act, invoked by the Centre amidst the West Asian crisis?


Share: