இந்திய சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)) விநியோக முறை என்பது செயல்பாட்டு ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர, அதிகப்படியான கையிருப்பைச் சேமித்து வைப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. தற்போது நிலத்தடி சேமிப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான உறுதியான திட்டங்கள் ஏதும் இல்லை. இத்தகைய சேமிப்பு வசதிகள் இல்லாததை இந்தியாவின் உள்கட்டமைப்பு பலவீனமாக சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடுகளுக்கு இடையே, இறக்குமதி மூலமாக குறிப்பாக ஏழைக் குடும்பங்களிடையே அதன் பயன்பாட்டை இந்தியா பெருமளவில் அதிகரித்திருந்தாலும், நீண்டகாலத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு (LPG) இருப்புகளை உருவாக்குவதற்கு இணையான திட்டம் ஏதும் இல்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
இந்தியாவின் இறக்குமதியில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வருவதாலும், இந்தியாவிடம் போதிய அளவிலான மாற்றுச் சேமிப்பு வசதிகள் குறைவாக இருப்பதாலும், அங்கு ஏற்படும் பாதிப்புகள் நாட்டின் விநியோகத்தை மிக விரைவாகப் பாதிக்கின்றன. ஆனால், மோட்டார் வாகன எரிபொருட்களைப் பொறுத்தவரை நிலைமை மாறுபட்டது. கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தயாரிப்புகளின் இருப்பு சுமார் இரண்டுமாத கால நுகர்வுக்குத் தேவையான அளவைப் பூர்த்தி செய்யும் அளவில் உள்ளதால், வாகன எரிபொருட்களுக்கு உடனடித் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய சமையல் எரிவாயு விநியோக முறை என்பது செயல்பாட்டு ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர, அதிகப்படியான கையிருப்பைச் சேமித்து வைப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை. தற்போது நிலத்தடி சேமிப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான உறுதியான திட்டங்கள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இது போன்ற சேமிப்பு வசதிகள் இல்லாததை ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு பலவீனமாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தரவுகளின்படி, இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி 2011–12-ஆம் ஆண்டு முதல் 2024–25-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மூன்று மடங்கு அதிகரித்து, சுமார் 20 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 60% இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும், இந்த இறக்குமதிச் சார்பு நிலையானது 2015-ஆம் ஆண்டில் இருந்த 47% என்ற அளவிலிருந்து தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில், ஜனவரி மாதத்திற்குள்ளேயே இறக்குமதி 18 மில்லியன் டன்களையும் கடந்துவிட்டது. இந்தியா ஒவ்வொரு மாதமும் சுமார் 3 மில்லியன் டன் சமையல் எரிவாயுவை (LPG) பயன்படுத்துகிறது. இதன் மூலம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமையல் எரிவாயு நுகர்வோர் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறன் இந்த மாதாந்திரத் தேவையில் பாதியளவைவிடக் குறைவாகவே உள்ளது. மேலும், பெரும்பாலான சேமிப்பு வசதிகள் எண்ணூர் (Ennore) போன்ற இறக்குமதி முனையங்களில் உள்ள சேமிப்புத் தொட்டிகளிலேயே அமைந்துள்ளன.
இந்தியாவில் நீண்டகாலச் சேமிப்பிற்காக மங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் மொத்தம் 1.4 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு நிலத்தடி சமையல் எரிவாயு (LPG) சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதில் விசாகப்பட்டினம் வசதி 2007-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சமையல் எரிவாயு பயன்பாடு மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, மங்களூருவில் 80,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய கிடங்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய ஒரு நாள் பயன்பாட்டுக்கு மட்டுமே போதுமானதாகும். ஒட்டுமொத்தமாக, 1.4 லட்சம் டன் நிலத்தடி சேமிப்பு என்பது இந்தியாவின் இரண்டு நாட்களுக்கும் குறைவான சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் தினசரி சமையல் எரிவாயு (LPG) தேவை தற்போது சுமார் 80,000 டன்களாக உள்ளது. இதில் 85 சதவீதத்திற்கும் அதிகமான அளவு வீடுகளின் பயன்பாட்டிற்காகவே செலவிடப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது மொத்தம் 33 கோடி வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகள் உள்ளன. இதில் சுமார் 10 கோடி இணைப்புகள் 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டவை ஆகும். ஏழைக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிவாயுவை வழங்குவதையும், இதன் மூலம் விறகு அடுப்புகள், வரட்டி மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்தும் கடினமான வேலையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டதோடு, எரிவாயு உருளைகள் வாங்குவதற்கு மானியமும் அளிக்கப்பட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு அதிகரித்ததற்கும், அதன் இறக்குமதி உயர்ந்ததற்கும் இத்திட்டமே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) ஏற்கனவே உள்ள இரண்டைத் தவிர, கூடுதலாக நிலத்தடி குகை சேமிப்பு நிலையங்களை (Caverns) அமைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று தெரிவித்தது. இதில் மங்களூரு நிலத்தடி சேமிப்பு நிலையம் 2025-ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவுடன் ஆண்டுக்கு 2.2 மில்லியன் டன் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இருப்பினும், பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து வரும் சரக்குக் கப்பல்களைப் போலல்லாமல், அமெரிக்காவிலிருந்து வரும் சரக்குக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைய சுமார் 45 நாட்கள் ஆகின்றன.
நிலத்தடி குகைகள் ஒரு தீர்வாக அமையலாம்
ஐரோப்பிய நாடுகள் தனது மொத்த ஆண்டு எரிவாயு பயன்பாட்டில் சுமார் 25 சதவீதத்தைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் வணிக நுண்ணறிவு நிறுவனமான ‘Rystad Energy’ எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு (liquified Natural Gas (LNG)) ஆராய்ச்சிக்கான மூத்த ஆய்வாளர் கிறிஸ்டோஃப் ஹால்சர் கூறுகையில், ஐரோப்பாவின் நிலத்தடி சேமிப்புத் திறன் அதன் ஆண்டு திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி அளவைவிட சுமார் 150 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
90 நாட்களுக்குத் தேவையான அவசரகால கையிருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற விதி எண்ணெய்க்கு (Oil) இருப்பதைப் போல, ஐரோப்பிய நாடுகளிடம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் உத்திமுறை எரிவாயு இருப்பு (Strategic Gas Reserve) எதுவும் இல்லை என்கின்றனர். அத்தகைய ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் (EU) கட்டாயப்படுத்தவும் இல்லை என்றும் 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் பொது எரிவாயு நிலையங்களுக்கான சேமிப்பு இலக்குகளை நிர்ணயித்தாகவும் கூறப்படுகிறது. இதன்படி, சந்தை இடையூறுகள் மற்றும் தொழில்நுட்ப வரம்புகள் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, உறுப்பு நாடுகள் குளிர்காலத்திற்கு முன்பாக தங்களது சேமிப்புக் கிடங்குகளில் 90% வரை எரிவாயுவை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக ஹால்சர் தெரிவித்தார்
எரிவாயு சேமிப்பிற்காக இந்தியாவை மூன்று புவியியல் மண்டலங்களாகப் பரந்த அளவில் பிரிக்கலாம் என்கின்றனர். இதில் மிகவும் நம்பகமானது தீபகற்பக் கேடயம் (Peninsular Shield) ஆகும். இது தீபகற்ப இந்தியாவின் சுமார் 60% பகுதிக்கு அடியில் அமைந்துள்ள கிரானைட், நீஸ் (Gneiss) மற்றும் சார்னோகைட் (Charnockite) ஆகிய பழங்காலப் பாறை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு சமையல் (LPG) எரிவாயு குகை சேமிப்பகங்களும் (Gas Caverns) இந்தப் பாறையின் மீதே கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில், நிலத்தடி சேமிப்பு குகையானது ப்ரீகாம்பிரிய கால ஜிணைஸ் (Precambrian gneiss) பாறை அடுக்குகளுக்கு இடையே, நிலத்தடி மட்டத்திலிருந்து 162 முதல் 196 மீட்டர் ஆழத்தில், நீரியல் கட்டுப்பாட்டுக் கொள்கையை (Hydraulic containment principle) பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
மங்களூரில், சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ள பாறை அடுக்கு கிரானைடிக் நீஸ் (Granitic Gneiss) வகையைச் சேர்ந்தது. இதன் தரைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 141 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் பொறியியல் நுட்பம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதோடு, அங்குள்ள பாறையமைப்பும் இத்தகைய கட்டுமானங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது மண்டலம் தக்காணப் பீடபூமி (Deccan Traps) ஆகும். இது மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சுமார் 5,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய ஒரு பரந்த எரிமலைப் பாறை (basalt) பீடபூமியாகும். இருப்பினும், இந்தப் பாறை அமைப்புகள் சேமிப்பு வசதிகளை உருவாக்குவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேற்கு கடற்கரையில் புதிய சமையல் எரிவாயு (LPG) முனையத்தை வடிவமைத்து வரும் ‘Engineers India Limited’ நிறுவனம், அங்கு பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ராஜஸ்தானின் பிகானேர்-பார்மர் பகுதியில் உள்ள உப்புப் படிமங்கள் மூன்றாவது மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பாறை உப்புப் படிமங்களை நிலத்தடி குகைச் சேமிப்பகங்களாகப் (Cavern storage) பயன்படுத்த முடியும் என்றும் உப்புப் பாறைக் குகைகள் கட்டுவதற்கு மலிவானவை, விரைவானவை, இயற்கையிலேயே கசிவு ஏற்படுத்தாதத் தன்மை கொண்டவை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதில் கச்சா எண்ணெயை மிக வேகமாகச் செலுத்தவும் வெளியேற்றவும் முடியும் என்கின்றனர். தற்போது பார்மரில் (Barmer) ஒரு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதுடன், கச்சா எண்ணெய் குழாய்களும் இப்பகுதி வழியாகச் செல்கின்றன. எனவே, இந்த உப்புப் பாறைக் குகை தொழில்நுட்பத்தைப் பெற ‘Engineers India Limited’ நிறுவனம் ஜெர்மனியின் ‘DEEP’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணா-கோதாவரி, காம்பே மற்றும் மும்பை கடலோரப் பகுதிகளில் உள்ள வற்றிப்போன இயற்கை எரிவாயு தேக்கங்களை (Depleted gas reservoirs) பயன்படுத்துவது குறித்த நான்காவது விருப்பம் தற்போது ஆய்வில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.