படிவம் 7 தொடர்பாக காங்கிரஸ் கட்சி எந்த விதமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது? எத்தனை நீக்கங்கள் பதிவாகியுள்ளன?
இதுவரை நடந்த கதை: தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தில் (Special Intensive Revision (SIR)), வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக மொத்தமாக விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி 29 அன்று, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) எழுதிய கடிதத்தில், தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கும், தேர்தல் ஆதாயத்தைப் பெற பாஜகவின் தவறான முயற்சிகளைத் துணிச்சலுடன் செயல்படுத்துவதற்கும் "முறையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள்" மூலம் படிவம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து வந்த தி இந்துவின் செய்தியில், தாங்கள் கையொப்பமிட்டதாகக் கூறப்படும் படிவம் 7 விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று கூறிய நபர்களும் கண்டறியப்பட்டனர்.
படிவம் 7 என்றால் என்ன?
இறப்பு, நகல் அல்லது குடியிருப்பு மாற்றம் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் மற்றொரு நபரின் அல்லது ஒருவரின் சொந்த பெயரைச் சேர்ப்பதை எதிர்ப்பதற்கு படிவம் 7 பயன்படுத்தப்படுகிறது. வயது, குடியுரிமை அல்லது தவறான பிரதிநிதித்துவம் காரணமாக தகுதியற்ற வாக்காளர்களை நீக்கவும் இதைப் பயன்படுத்தலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் கீழ் உருவாக்கப்பட்ட வாக்காளர் பதிவு விதிகள், 1960-ன் பிரிவு 13(2)-ன் படி, "பதிவில் ஒரு பெயரைச் சேர்ப்பதற்கான ஒவ்வொரு ஆட்சேபனையும் (a) படிவம் 7-ல் இருக்க வேண்டும் மற்றும் (b) அந்தப் பட்டியலில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பாக முகவர்களும் (Booth Level Agents (BLAs)) ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம். முன்னதாக, அதே பாகத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே ஆட்சேபனையைத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 2022-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் ஒரு தொகுதியில் உள்ள எந்தவொரு வாக்காளரும் ஆட்சேபனை தெரிவிக்க அனுமதிக்கும் வகையில் படிவம் 7-ஐத் திருத்தியது மற்றும் அதன் வரம்பை விரிவுபடுத்தியது. இருப்பினும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ஒரு தனிநபர் ஐந்துக்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தால், அனைத்து உரிமைகோரல்களையும் தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer (ERO)) கண்டிப்பாகச் சரிபார்க்க வேண்டும்.
படிவம் 7 விண்ணப்பம் பெறப்பட்டவுடன், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (Booth Level Officers (BLO)) வாக்காளரின் முகவரி மற்றும் தகுதியை நேரில் சரிபார்க்க வேண்டும். இறப்புகளுக்கு, அவர்கள் மூன்று அண்டை வீட்டாரின் கையொப்பங்கள் மற்றும் இறப்புச் சான்றிதழுடன் உறுதிப்படுத்துகிறார்கள். வாக்காளர் இல்லாவிட்டால், அந்த நபர் இடம் மாறிவிட்டாரா என்பதைச் சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூன்று முறை வருகை தந்து, பின்னர் விசாரணைக்கான அறிவிப்பை வெளியிடுகிறார்கள். புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர்கள் வாக்காளர் பதிவு அதிகாரியின் முடிவை மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்.
நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)), எவ்வளவு விரிவானது?
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, சிறப்பு தீவிர திருத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 50.94 கோடிக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய 51 கோடி வாக்காளர்களில் 99.94% பேர் இதில் இடம் பெற்றிருப்பார். தற்போது சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் SIR நடந்து வருகிறது. திருத்தம் ஒரு அட்டவணையைப் பின்பற்றுகிறது. மேலும், இந்த சுருக்கப்பட்ட காலக்கெடுவிற்கு எதிராக, படிவம் 7 மூலம் கோரப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் நீக்குதல்களின் அளவு நடைமுறை நியாயத்தன்மை மற்றும் நிர்வாகத் திறன் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போதைய SIR-ன் ஒரு பகுதியாக 9 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களின் வரைவுப் பட்டியலில் இருந்து 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. திருத்தத்திற்கு முன்பு, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 51 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, எண்ணிக்கை 44.4 கோடியாகக் குறைந்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் "ASD" பிரிவின்கீழ் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது இல்லாதவர்கள், மாற்றப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் அல்லது நகல் வாக்காளர்கள். உத்தரபிரதேசத்தில் 2.89 கோடி பெயர்கள் நீக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 97 லட்சமும் குஜராத்தில் 74 லட்சமும் பெயர்கள் நீக்கப்பட்டன.
என்ன செய்ய வேண்டும்?
தற்போது நடைபெற்று வரும் SIR-ல் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தமாக வாக்காளர்களை நீக்குவதற்காக, பெயர் குறிப்பிடாத அல்லது மோசடி செய்பவர்கள் படிவம் 7 விண்ணப்பங்களை மொத்தமாக சமர்ப்பிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. தவறான அறிவிப்பை தாக்கல் செய்வது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 32-ன் கீழ் தண்டனைக்குரியதாகும். ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், லட்சக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக பின்தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சாயி பாண்டே ஒரு சுயதொழில் எழுத்தாளர்.
Original article : What is the current controversy around Form 7? -Saee Pande