கடந்த பதினைந்து ஆண்டுகளில், 'டீப்-டெக்' (Deep-tech) என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஒரு பிரபலமான சொல்லாக மாறியுள்ளது.
கடந்த வாரம், மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), இந்தியாவில் எந்த வகையான நிறுவனங்கள் 'டீப் டெக்' (Deep Tech) தொடக்கநிலை நிறுவனங்கள் எனக் கருதப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டது.
‘டீப்-டெக்’ நிறுவனங்கள் என்றால் என்ன?
டீப்-டெக் (Deep-tech) என்பது கடந்த 15 ஆண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு சொல்லாகும். இதற்குத் துல்லியமான வரையறை இல்லை என்றாலும், இது அதிக முதலீடு தேவைப்படும் மற்றும் புதிய அறிவியல் அல்லது பொறியியல் கொள்கைகளின் அடிப்படையில் புதிய தயாரிப்புகள் அல்லது அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களைக் குறிக்கிறது. வணிக மாதிரிகள், செயலிகள், சந்தைப்படுத்தல் அல்லது நிதி ஆகியவற்றின் மூலம் மட்டுமே புதுமைகளைப் புகுத்தும் புத்தொழில்களிடமிருந்து இந்த நிறுவனங்களை இச்சொல் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஐபிஎம் (IBM) அல்லது ஜெராக்ஸ் (Xerox) போன்ற நிறுவனங்கள் அவற்றின் ஆரம்ப ஆண்டுகளில் எவ்வாறு தொழில்நுட்ப நிறுவனங்களாகக் கருதப்பட்டனவோ, அதேபோல் குவாண்டம் கணினிகளை உருவாக்கும் அல்லது புதிய செயற்கைக்கோள்களை அல்லது விண்வெளி ராக்கெட்டுகளை வடிவமைக்கும் ஒரு புத்தொழில், ஸ்விக்கி (Swiggy), சோமாட்டோ (Zomato) அல்லது அமேசான் (Amazon) போன்றவற்றின் மறுஉருவாக இருக்கும் மற்றொரு நிறுவனத்தைவிட டீப்-டெக் (Deep-tech) என்று தன்னை அடையாளப்படுத்தும். ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ஆன்த்ரோபிக் (Anthropic), டீப்மைண்ட் (DeepMind) போன்றவை தற்போதைய சொற்களில் டீப்-டெக் என்று வகைப்படுத்தப்படலாம்.
இந்தியா ‘டீப் டெக்’ என்பதை எவ்வாறு வரையறுக்கிறது?
இந்தியாவின் டீப் டெக் (Deep Tech) துறையிலான அதிகாரப்பூர்வ ஈடுபாடு, 2023-ஆம் ஆண்டு முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட கொள்கை ஆவணத்துடன் தொடங்கியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பொறியியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் ஒரு வலுவான தொடக்கநிலை நிறுவனங்களுக்குச் சாதகமான (Startup) சூழலை உருவாக்குவதற்கான ஒரு உத்திமுறை சார்ந்த கட்டமைப்பாக டீப் டெக் விவரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்கு டீப் டெக் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று இந்த ஆவணம் கருதுகிறது. இது இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஆதரிக்கவும், "தற்சார்பு இந்தியா" (Atmanirbhar Bharat) திட்டத்தின்கீழ் தொழில்நுட்பத் தற்சார்பை அடையவும், மற்றும் தார்மீக அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஒன்பது முன்னுரிமைப் பகுதிகளைப் பட்டியலிடுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், அறிவுசார் சொத்துரிமைகளை வலுப்படுத்துதல், நீண்ட கால நிதியுதவியை உறுதி செய்தல் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள் "மரணப் பள்ளத்தாக்கு" (Valley of Death) என்றழைக்கப்படும் சவாலைத் தாண்ட உதவுவதற்கான ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் போன்றவை இதில் அடங்கும். "மரணப் பள்ளத்தாக்கு" என்பது போதுமான நிதி திரட்ட முடியாமல் ஆரம்பத்திலேயே மூடப்படும் நிறுவனங்களைக் குறிக்கும் ஒரு குறிப்புச் சொல்லாகக் கூறப்படுகிறது.
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் வரையறைப்படி, ‘டீப் டெக்’ (Deep Tech) என்பது என்ன?
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்படி (DPIIT), 10 ஆண்டுகளுக்கும் குறைவான பழமையான அல்லது ₹100 கோடிக்கும் குறைவான வருவாய் கொண்ட நிறுவனமே "புத்தொழில் நிறுவனம்" (Startup) எனப்படும். இருப்பினும், ஒரு புதிய அரசிதழ் அறிவிப்பின்படி, "டீப்-டெக்" (Deep-tech) நிறுவனங்கள் 20 ஆண்டுகள் வரையிலும் மற்றும் ₹300 கோடி வரையிலான வருவாய் வரையிலும் தங்களை தொடக்கநிலை நிறுவனம் என்று அழைத்துக்கொள்ளலாம். இது அத்தகைய நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சித் தேவையையும் மற்றும் தயாரிப்பு உருவாக்கத்திற்குத் தேவைப்படும் கூடுதல் காலத்தையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் 'டீப்-டெக் தொடக்கநிலை நிறுவனம்' (deep-tech startup) என்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையிடம் (DPIIT) சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிறுவனம் சாதாரண தொடக்கநிலை நிறுவனமா அல்லது டீப்-டெக் தொடக்கநிலை நிறுவனமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கே (DPIIT)உள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு, அமைச்சகங்களுக்கு இடையிலான ஒரு சான்றிதழ் வாரியம் (Inter-Ministerial Board) வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கின்றனர். தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பாளர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரதிநிதி, உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரதிநிதி உள்ளிட்டோர் அந்த வாரியத்தில் முக்கிய உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தொடக்கநிலை நிறுவனங்கள், தங்கள் முக்கிய நோக்கத்திற்கு (புதிய அறிவை உருவாக்குதல்) தொடர்பில்லாத துறைகளில் முதலீடு செய்யக் கூடாது. உதாரணமாக, வீடு மனை விற்பனை, ஊகத்தின் அடிப்படையில் முதலீடு செய்யப்படும் சொத்துக்கள் (Speculative assets), அல்லது பங்குகள் மற்றும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அந்த நிறுவனத்தின் பணிக்கு மிக அவசியமானவை என்றால் மட்டுமே அனுமதிக்கப்படும். டீப்-டெக் (Deep-tech) தொடக்கநிலை நிறுவனங்கள் தங்களின் பெரும்பாலான நிதியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவே செலவிட வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க புதிய அறிவுசார் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது உருவாக்கி வர வேண்டும். மேலும், அவற்றை வணிகரீதியாகப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். பொதுவாக, இவ்வகை நிறுவனங்கள் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவற்றுக்கு அதிகப்படியான முதலீடு, உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் என்பதோடு, தொழில்நுட்பம் அல்லது அறிவியல்ரீதியான அதிகப்படியான நிச்சயமற்றத் தன்மைகளும் இருக்கும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் டீப்-டெக் (Deep Tech) துறையில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?
மத்திய அரசு தொழில்நுட்பம் சார்ந்த தொடக்கநிலை (Startups) நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துவதால், இந்த வரையறைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)), சுமார் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான 'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிதியை' (Research and Development Innovation Fund (RDI Fund)) நிர்வகிக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படும். இந்த நிதியின் ஒரு பகுதி, நிதி நிறுவனங்கள் போன்ற பிற மேலாளர்கள் மூலம் டீப்-டெக் (Deep-tech) தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிதி பெறும் நிறுவனங்களுக்கு 2% முதல் 4% வரையிலான குறைந்த வட்டியில், 15 ஆண்டுகள் வரை கடன்கள் வழங்கப்படலாம் என்று அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அத்தகைய தொடக்க நிறுவனங்களுக்கான சர்வதேச சூழலமைப்பு என்ன?
தேசிய டீப்-டெக் புத்தாக்கக் கொள்கை (Draft National Deep Tech Startup Policy (NDTSP)) 2023-ஆம் ஆண்டின் வரைவு அறிக்கை, உலகளவில் இத்துறையில் சிறப்பாகச் செயல்படும் சில திட்டங்களையும் அமைப்புகளையும் முன்மாதிரிகளாகக் குறிப்பிடுகிறது. பெல்ஜியம்: வல்லோனியா பிரஸ்ஸல்ஸ் புத்தொழில் லாஞ்ச்பேட் (Wallonia Brussels Startup Launchpad (WSL)), யுனைடெட் கிங்டம்: யுகே கேட்டபுல்ட் (U.K. Catapult), ஜெர்மனி: எக்சிஸ்ட் (EXIST) திட்டம், கனடா: இன்னோவேஷன் சூப்பர் கிளஸ்டர்ஸ் முன்முயற்சி, அமெரிக்கா: சிறு தொழில் புத்தாக்க ஆராய்ச்சி (Small Business Innovation Research (SBIR)) மற்றும் சிறு தொழில் தொழில்நுட்ப பரிமாற்றம் (Small Business Technology Transfer (STTR)) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இத்தகைய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் முக்கியமான அமைப்புகளாகக் கூறப்பட்டுள்ளன.
Original article : India’s new startup rules for deep tech -Jacob P Koshy