முதன்முறையாக 'உலகளாவிய தெற்கு' (Global South) எனப்படும் வளரும் நாடுகளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
திங்கட்கிழமை முதல், புது டெல்லியில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த உச்சிமாநாடு (AI Impact Summit 2026) நடைபெற உள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய விவாதங்களின் மையப்புள்ளியாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைக்கு சாத்தியமான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கும் தனது திறனை வெளிப்படுத்தவும், வளர்ந்து வரும் நாடுகள் (Global South) அமைப்பின் முக்கிய குரலாக தன்னை நிலைநிறுத்தவும், உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையை கைப்பற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதன்முறையாக வளர்ந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பில் (Global South) நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவை பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு, பாரத் மண்டபத்தில் நடைபெறும் 'இந்தியா செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த கண்காட்சி 2026' (India AI Impact Expo 2026) நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும் என்றும்; இங்கு அரசின் கொள்கைகள் செயல்பாட்டுடன் இணைவதையும், புத்தாக்கங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைவதையும், தொழில்நுட்பம் நாட்டின் குடிமக்களுக்குப் பயன்படுவதையும் காண முடியும் என்று பிரதமர் அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய விவாதத்தின் சமீபத்திய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது கடந்த நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பிளெட்ச்லி பூங்காவில் (Bletchley Park) நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாட்டிலிருந்து' தொடங்கியது. அங்கு 28 நாடுகள் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய 'பிளெட்ச்லி பிரகடனத்தில்' (Bletchley Declaration) கையெழுத்திட்டன. கடந்த மே மாதம் 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற சியோல் உச்சிமாநாடு (Seoul Summit), பாதுகாப்போடு சேர்த்து கண்டுபிடிப்புகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. மேலும், பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் நடந்த பாரிஸ் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு (AI Action Summit), நடைமுறை பயன்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதே சமயம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்குக் குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்கின்றனர்.
இந்தியாவின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. முந்தைய உச்சிமாநாடுகள் பெரிய அளவிலான அபாயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், புது தில்லி தற்போது "மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்" (People, Planet, and Progress) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவின் நோக்கம் நடைமுறை உலகப் பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதாகும். இது ஒரு செயற்கை நுண்ணறிவு வல்லரசாக உருவெடுக்கும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் (Global South) கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் திட்டத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த உச்சிமாநாடு உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு (AI) நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்ட பொருளாதாரக் காரணிகளை மாற்றக்கூடும் என்ற கவலைகள் உள்ளன. உலகத் தலைவர்களும் நிறுவனத் தலைவர்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தங்களின் திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கங்கள், தொழில்முறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
45-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர் குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். சீனாவுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சீனப் பிரதிநிதிகள் குழு இதில் பங்கேற்க உள்ளது.
கூகுள் (Google), ஓப்பன் ஏஐ (OpenAI), ஆந்த்ரோபிக் (Anthropic), மைக்ரோசாப்ட் (Microsoft), அடோப் (Adobe) மற்றும் குவால்காம் (Qualcomm) போன்ற உலகின் முன்னணி மற்றும் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதப் பிரதமர் இவர்களுக்கு இரவு விருந்து அளிப்பதோடு, ஒரு வட்டமேசை மாநாட்டிலும் உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா செயற்கை நுண்ணறிவுத் (IndiaAI Mission) திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவை (AI) அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதுதானென்றும் அத்துடன், இந்தியப் பொறியாளர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கி வரும் சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறைத் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI), ஒரு சில நாடுகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் வெறும் பயனாளர்களாக மட்டுமே இருக்கின்றன. இந்தத் தரவுத் தொகுப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால், அதன் முடிவுகளில் ஒருதலைப்பட்சமான போக்கு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தரவுத் தொகுப்புகள், கணினித் திறன், மாதிரிகள், வழிமுறைகள் மற்றும் செயலிகள் போன்ற செயற்கை நுண்ணறிவு வளங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவது இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து வழிநடத்தும் ஏழு கருப்பொருள் பணிக்குழுக்கள் (Thematic working groups), உறுதியான முடிவுகளை முன்வைக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு பொதுமை முன்முயற்சி (AI Commons), நம்பகமான செயற்கை நுண்ணறிவு கருவிகள், பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு மற்றும் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளின் தொகுப்புகள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகள் ஆகியன ஆகும்.
உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சி, எதிர்கால வேலைவாய்ப்புகள் மற்றும் தற்போதுள்ள பணிகளில் அதன் தாக்கம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய அங்கமாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, தற்போது ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் அத்துறையின் சில சேவைகள் தேவையற்றதாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். அதோடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகப்படியான மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், தற்போதுள்ள சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு திட்டவரைவை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு, மேலாண்மை, நெறிமுறை சார்ந்த பயன்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் விவாதிக்கப்படும். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்காக உள்ளூர் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவது உட்பட, இந்தியாவின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (Sovereign AI) குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பாதிக்கிறது, எதிர்கால வேலைகளுக்குத் தேவையான புதிய திறன்கள் எவை, மற்றும் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவியாக இருக்கும் என்பது குறித்த விரிவான விவாதங்களும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளை (Language Models) அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில், சில அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Sarvam AI மற்றும் Bharatgen ஆகியவற்றின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்ட' மாதிரிகளும் இடம்பெறும் என்கின்றனர். மேலும், கணினி வன்பொருள் (Hardware) தொடர்பான அறிவிப்புகள், குறிப்பாக இந்தியாவின் தரவு மைய திறனை விரிவாக்கும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
original article : AI summit begins today, real-world solutions on table -Soumyarendra Barik