இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. ஆனால், இராஜதந்திர ரீதியாக செலவுகள் மற்றும் அதற்கான சலுகைகள் குறித்த கடினமான கேள்விகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆகஸ்ட் 25, 2026 அன்று, பெய்ஜிங்கில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளுக்கு (Special Representatives (SR)) இடையேயான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தினர். அன்று மாலை இரு தரப்பிலிருந்தும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பொதுவானதாகவும் எச்சரிக்கையுடனும் இருந்தன. குறிப்பாக, கடந்த ஓராண்டாக இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பிடித்திருந்த "ஆரம்பகட்டத் தீர்வு" (early harvest) என்ற சொல்லை அவர்கள் தவிர்த்தனர். ஒரு நாள் கழித்து, இரு தரப்பினரும் “8 அம்ச முடிவுகள் மற்றும் ஒருமித்த கருத்துகள்" (Eight Points of Outcomes and Consensus) என்ற அறிக்கையை வெளியிட்டனர். அதன் 3-வது அம்சம் அந்தச் சொல்லை மீண்டும் நிலைநிறுத்தியது. ஒரு வருடத்திற்கு முன்பு இரு தரப்பு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணிக்குழு அமைப்பின் (Working Mechanism for Consultation and Coordination (WMCC)) கீழ் அமைக்கப்பட்ட எல்லை வரையறைக்கான நிபுணர் குழுவும், எல்லை மேலாண்மைக்கான செயற்குழுவும், “முறையே எல்லை வரையறை மற்றும் எல்லை மேலாண்மையின் ஆரம்பகட்ட மற்றும் கணிசமான தீர்வு (Early and Substantial Harvest) குறித்த விவாதங்களை முன்னெடுக்கும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அவை அமைக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, தங்களின் தனிப்பட்ட செயல்பாட்டு விதிகளை ஒப்புக்கொள்வதே அவற்றின் முதல் பணி என்று அது மேலும் கூறுகிறது. இது, பரிசீலனையில் உள்ளவை அனைத்தும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
நிச்சயமற்ற 'ஆரம்பகட்டத் தீர்வு' (Early Harvest)
"ஆரம்பகட்ட மற்றும் கணிசமான தீர்வு" (Early and Substantial Harvest) என்ற சொற்றொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது இந்தியாவால் உருவாக்கப்பட்டது. பெய்ஜிங் (சீனா) முதலில் சிக்கிம் பகுதியை மட்டும் தீர்வுகாண முன்மொழிந்தபோது, 2019-ல், இந்தியாவின் மாற்று ஆலோசனையான பதில், சிக்கிம் மாநிலத்தின் பகுதியையும் முழு மத்தியப் பகுதியையும் உள்ளடக்கிய ஒரு “ஆரம்ப மற்றும் கணிசமான தீர்வு” (Early and Substantial Harvest) என்ற எதிர்முன்மொழிவை முன்வைத்தது. இதில் சிக்கிம் பிரிவுடன், முழு மத்தியப் பிரிவையும் சேர்த்து, எல்லையை நீர்ப்பிரிப்பு முகடு (watershed) வழியாக வரையறுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. சீனா இந்தப் பரிந்துரையை நிராகரித்தது. "ஆரம்பகட்டத் தீர்வு" (Early Harvest) குறித்த அடுத்தடுத்த விவாதங்களில், சிக்கிம் பகுதியையும் மத்தியப் பகுதியின் சில சர்ச்சைக்குரிய அல்லாத பகுதிகளையும் மட்டும் இதில் சேர்க்க சீனா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பரிந்துரையை இந்தியா ஏற்கவில்லை.
இந்தியா முன்பு முன்மொழிந்த அதே குறிப்பிட்ட வரைவு இப்போது ஒரு கூட்டு ஆவணத்தில் (joint document) மீண்டும் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள், பெய்ஜிங் (சீனா) இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்பதாக இருக்கலாம். இருப்பினும், உண்மையில் அப்படி நடைபெற்றதா என்று கட்டுரையாளருக்குச் சந்தேகம் உள்ளது. சீனா இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், நீர்ப்பிடிப்பு எல்லைக்கோட்டிற்குத் தெற்கே உள்ள மத்தியப் பகுதியில் (பரஹோதி (Barahoti), கியூ-கௌரிக் (Giu-Kaurik), நிலாங்-ஜதாங் (Nilang-Jadhang), சாங்சா மல்லா (Sangcha Malla) மற்றும் லப்தல் (Lapthal)) 2,450 பரப்பளவிலான பகுதிக்கான சீனாவின் உரிமைக் கோரிக்கையை விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும். இதற்கு மற்றொரு சாத்தியக்கூறும் உள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து முன்பே நிராகரித்த ஒரு விஷயத்தை இந்தக் கூட்டு ஆவணம் குறிப்பிடக்கூடும். அதாவது "தளர்வுகள் நிறைந்த ஒப்பந்தம்" (agreement with holes) ஆகும். அத்தகைய ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இரு பகுதிகளையும் (sectors) உள்ளடக்கியதாக தோன்றினாலும், இந்தியா மற்றும் சீனாவின் உரிமைக் கோரல்கள் ஏற்கனவே ஒத்துப்போகும் பகுதிகளுக்கு மட்டுமே அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய தீர்வில், 'மத்தியப் பகுதியில் (Middle Sector) உள்ள மும்முனைச் சந்திப்புப் புள்ளிகளும் (trijunctions) சர்ச்சைக்குரிய பகுதிகளும் வரையறுக்கப்படாமல் விடப்படலாம்.
நிலைமை அப்படியிருந்தால், அதன் விளைவு சிக்கிம் பகுதிக்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட தீர்வைப் போலவே இருக்கும். இந்தியா தனது நிலைப்பாடு வலுவாக உள்ள இடங்களில் விட்டுக்கொடுக்கும். அதே சமயம், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இருக்காது. அந்தப்பகுதிகளில் சீனா தனது கடுமையான நிலைப்பாட்டையே (அதாவது "கிழக்குப் பகுதியில் இந்தியா அர்த்தமுள்ள மாற்றங்களைச் செய்வதும், அதற்கு பதிலாக மேற்குப் பகுதியில் சீனா சலுகைகளை அளிக்க வேண்டும்" என்ற "டாங் டியோக்ஸி ராங்" (dong tiao xi rang) கொள்கை) தொடர்ந்து கொண்டிருக்கும். இத்தகைய ஏற்பாடு, 'இந்தியா-சீனா எல்லைத் தீர்வுக்கான அரசியல் அளவுகோல்கள் மற்றும் வழிகாட்டும் கொள்கைகள் குறித்த 2005-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்' ஒரு முக்கிய விதியான 'பிரிவு III'-ஐயும் கைவிடுவதாக அமையும். இந்த ஒப்பந்தம் "எல்லையின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தொகுப்புத் தீர்வை" (package settlement) வலியுறுத்துகிறது. ஆனால் அதற்குப் பதிலாக, கடினமான சிக்கல்களைச் சீனாவின் நிபந்தனைகளுக்கு ஏற்பத் தீர்க்கப்படாமல் விட்டு, உடனடியாகக் கிடைக்கும் எளிதான ஆதாயங்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகும். இந்தியா-சீனா எல்லையின் நான்கு பகுதிகளும் இராஜதந்திர ரீதியாக ஒன்றோடொன்று தொடர்புள்ளதாகவும், அவற்றுக்கிடையே பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் தேவைப்படுவதாலும் தான் அந்த 'தொகுப்புத் தீர்வு' விதி (package settlement clause) உருவாக்கப்பட்டது.
எளிதில் தீர்க்கக்கூடிய விவகாரம் அல்ல
சிக்கிம் பகுதி விவகாரமும் சிலர் கருதுவது போல எளிதில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. இந்தப் பகுதியில் எல்லையை வரையறுப்பதற்கான அடிப்படை நிலை 1890-ம் ஆண்டின் ஆங்கிலோ-சீன உடன்படிக்கைதான் (Anglo-Chinese Convention) என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முதல் பிரிவில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதன் முதல் நிபந்தனை 'நீர்நிலை முகட்டை' (watershed crest) எல்லையாகக் குறிப்பிடுகிறது. ஆனால், இரண்டாவது நிபந்தனை பூட்டான் எல்லையில் உள்ள 'கிப்மோச்சி மலையை' (Mount Gipmochi) தொடக்கப் புள்ளியாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், 1907 மற்றும் 1913-ம் ஆண்டுகளின் பிரிட்டிஷ்-இந்திய வரைபடங்கள், மும்முனைச் சந்திப்புப் புள்ளியை (trijunction) கிப்மோச்சியில் (Gipmochi) குறிக்காமல், அதிலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் வடக்கே, உண்மையான நீர்நிலை முகட்டில் குறித்திருந்தன. இந்தியா மற்றும் பூட்டான் நாடுகள் 'நீர்நிலைக் கொள்கை'யே முதன்மையானது எனக் கருதி மும்முனைச் சந்திப்புப் புள்ளியை 'பட்டாங் லா' (Batang La) பகுதியில் அமைத்துள்ளன. ஆனால், சீனா, கிப்மோச்சி பற்றிய நேரடிக் குறிப்பை மட்டும் பிடித்துக்கொண்டு, மும்முனைச் சந்திப்புப் புள்ளியைத் தெற்கே 'ஜாம்ஃபெரி மலைத்தொடருக்கு' (Jampheri Ridge) மாற்ற முயற்சிக்கிறது. 1890-ஆம் ஆண்டு ஒப்பந்த உரையின் அடிப்படையில் சிக்கிம் எல்லை வரையறை செய்யப்பட்டால், அதில் கிப்மோச்சி பற்றிய குறிப்பு மறுக்கப்படாத பட்சத்தில், தெற்கு மும்முனைச் சந்திப்புப் புள்ளியை இந்தியா விட்டுக்கொடுத்துவிட்டதாகவே பெய்ஜிங் கருதும்.
மும்முனைச் சந்திப்புப் புள்ளி எல்லையை இந்தத் தீர்விற்கு வெளியே வைக்கப்பட்டாலும் கூட, இருதரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக பூட்டானுக்கு அறிவுரை வழங்கும் தனது நிலையை இந்தியா இழந்துவிடும். மும்முனைச் சந்திப்புப் புள்ளி எல்லை தீர்க்கப்படுவதற்கு முன்பே, இந்தியா அருகிலுள்ள ஒரு பிரச்சினையைத் தீர்த்திருக்கும். சீனா பூட்டானுக்கு ஒரு "தொகுப்பு முன்மொழிவை" முன்வைத்துள்ளது. அதாவது, டோக்லாம் பீடபூமி உட்பட வடமேற்கில் சுமார் 269 சதுர கி.மீ. பகுதியை பூட்டான் விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக, வடக்கில் உள்ள சுமார் 495 சதுர கி.மீ. உரிமை கோருவதை விட்டுக்கொடுப்பது, புதிய உத்வேகத்தைப் பெறும். இது சும்பி பள்ளத்தாக்கில் (Chumbi Valley) சீனாவின் இருப்பை வலுப்படுத்துவதோடு, ஜாம்பேரி மலைமுகட்டிற்கு (Jampheri Ridge) ஒரு பாதையையும் திறக்கும். அங்கிருந்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே தரைவழி இணைப்பான முழு சிலிகுரி வழித்தடமும் (Siliguri Corridor) நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும். இது கற்பனையானது அல்ல. 2017 டோக்லாம் மோதலுக்குப் பிறகு, சீனா பல ஆண்டுகளாக மேற்கு பூட்டான் முழுவதும் சாலைகள், கிராமங்கள் மற்றும் இராணுவ வசதிக்காக கட்டமைப்பைக் கட்டி வருகிறது. இதன் விளைவாக, டோக்லாம் மீதான நடைமுறைக் கட்டுப்பாட்டை சீனா பெற்றுள்ளது.
ஒரு உண்மையான “ஆரம்பகட்ட மற்றும் கணிசமான தீர்வு” (Early and Substantial Harvest) கிடைப்பதற்கு மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவதாக, எல்லை வரையறைப் பணியானது இரு பகுதிகளிலும் உள்ள முழு நீளத்திற்கும் ‘உயர்ந்த நீர்நிலை’ (highest-watershed) கொள்கையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியா மற்றும் சீனாவின் நிலைகள் ஏற்கனவே ஒன்றிணையும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இதைத் தேர்ந்தெடுத்துச் செய்யக்கூடாது. அத்தகைய அணுகுமுறை இந்தியாவுக்கு எந்தப் பயனும் அளிக்காது. இரண்டாவதாக, படாங் லா (Batang La) மற்றும் மத்தியப் பகுதியில், மூன்று நாட்டுக்கு பொதுவாக உள்ள பிற மும்முனைச் சந்திப்புப் புள்ளிகள் (trijunction points) நிபுணர் குழுவின் அதிகார வரம்பிலிருந்து வெளிப்படையாக விலக்கப்பட வேண்டும். மேலும், இரு பிராந்தியத் தீர்மானங்களுக்கு இடையேயான 2012 பொதுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சம்பந்தப்பட்ட நாட்டுடன் கலந்தாலோசித்து மட்டுமே அவை தீர்க்கப்பட வேண்டும். இருப்பினும், மிக உயர்ந்த-நீர்மட்டக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், பூட்டானில் மும்முனைச் சந்திப்புப் புள்ளி விவகாரத்தைத் தீர்க்காமல் விட்டுவிடுவது, களத்தில் பெய்ஜிங்கிற்குச் சாதகமாகவே அமையும். மூன்றாவதாக, நிபுணர் குழுவின் அதிகார வரம்புகள், இந்தியாவின் 2019-ம் ஆண்டு முன்மொழிவை அடையாளம் காண முடியாத அளவிற்கு நீர்த்துப்போகச் செய்வதற்குப் பதிலாக, நல்லெண்ணத்துடன் அதை விரிவுபடுத்த வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 25 அன்று சீனா வெளியிட்ட அறிக்கை, ஒரு "தொகுப்பு" தீர்வுக்கான (package settlement) உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால் இந்த உறுதிப்பாடு, தீர்வுக்கான ஒரு பகுதிக்கு பகுதியளவு அணுகுமுறையுடன் எவ்வாறு இணக்கப்படுத்தப்படும்? எல்லை வரையறை (delimitation) குறித்த நிபுணர் குழுவை அமைப்பது, 2005-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10-வது பிரிவில் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு (SRs) அளிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது? அந்த அறிவுறுத்தல்கள், "இந்தியா-சீனா எல்லைக்கான வரையறை மற்றும் எல்லைக் குறியீடு அமைத்தல் (delineation and demarcation) பணிகளுக்கு அடிப்படையாக அமையக்கூடிய, எல்லைத் தீர்வுக்கான ஒரு உடன்பட்ட கட்டமைப்பை (agreed framework) உருவாக்கும் நோக்கத்துடன் தீவிரமான ஆலோசனைகளைத் தொடர வேண்டும்" என்று வலியுறுத்துகின்றன. இதுவரை இன்னும் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆனால் "எல்லை வரையறை" (delimitation) செயல்முறையைத் தொடங்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, "எல்லை வரையறை" (delimitation) மற்றும் "எல்லைக் குறியீடு அமைத்தல்" (demarcation) ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், 2005-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் "எல்லை வரையறை" (delimitation) என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. சிறப்புப் பிரதிநிதிகள் "ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு" குறித்த பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக முன்னெடுப்பார்களா? அல்லது, அத்தகைய கட்டமைப்பு இல்லாமலேயே அதிகாரிகள் ஒரு பகுதி அளவிலான எல்லை வரையறைப் பணியில் ஈடுபடும்போது, அவர்கள் இந்தக் கட்டமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்களா? இதில் 'எட்டு அம்சத் திட்டத்தின்' பிற கூறுகளான, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள பொது நிலை வழிமுறைகளுக்கான (General Level Mechanisms) கூடுதல் சந்திப்பு இடங்கள் மற்றும் நேரடித் தொடர்பு இணைப்புகள் (hotlines), புனிதப் பயணம் மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தைத் தொடர்வது மற்றும் எல்லை தாண்டிய ஆறுகள் குறித்த செப்டம்பர் மாதச் சந்திப்பு ஆகியவையும் இதில் அடங்கும். இவை பயனுள்ள, படிப்படியான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளாகும். ஆனால், அவை எல்லைத் தீர்வுக்கான பாதையிலிருந்து வேறுபட்டவை. எனவே, பொது விவாதங்களில் இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ளக் கூடாது.
இந்த 'எட்டு அம்சத் திட்டங்களில்' யாருலுங் சாங்போ (Yarlung Tsangpo) ஆற்றின் மீதான மெடோக் கவுண்டி (Medog County) திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதே சமயம், "நீரியல் தரவுகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட (எல்லை தாண்டிய நதி) விவகாரங்களில் தொடர்பைப் பாதுகாப்பது" குறித்து இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகக் கூறினாலும், அதில் எந்த முன்னேற்றமும் தெரிவிக்கப்படவில்லை. உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான இந்தத் திட்டம், கிழக்குப் பிரிவில் எல்லைக்கு அருகில், அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளங்களும் சுட்டிகாட்டுகின்றன. எனவே, செப்டம்பர் மாதக் கூட்டத்தில் இந்தத் திட்டம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
வெளித்தோற்றத்தை மட்டும் முன்னிறுத்துவதைத் தவிர்க்கவும்
இரண்டு விவாகாரங்களை மீண்டும் வலியுறுத்த வேண்டும். முதலாவதாக, 23 ஆண்டுகளாக நடைபெற்ற சிறப்புப் பிரதிநிதிகளின் (SR) பேச்சுவார்த்தைகளின் ஒரே குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கபூர்வமான முடிவான 2005-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படக்கூடாது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, சீனா அதை மறுவிளக்கம் செய்து பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இரண்டாவதாக, இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் ஆசையிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்டகால ராஜதந்திர நலன்களை, குறுகியகால வெளிப்படையான முன்னேற்றத்திற்காக சமரசம் செய்யும் தூதரக அணுகுமுறை, இறுதியில் பாதகமான விளைவையே ஏற்படுத்தும்.
அசோக் கே. காந்தா, சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதரும், பெங்களூருவில் உள்ள சாணக்கியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையின் 'சுபாஷ் சந்திர போஸ் இருக்கை' பேராசிரியரும் ஆவார். எல்லைத் தீர்வுக்கான அரசியல் அளவுகோல்கள் மற்றும் வழிகாட்டும் கோட்பாடுகள் குறித்த ஒப்பந்தம் (2005)-ஐ எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் முதன்மைப் பிரதிநிதியாக அவர் செயல்பட்டார்.