இந்தியாவின் பெரும்பாலான அமைப்புசாரா தொழிலாளர்கள் (Gig workers) அரசின் நலத்திட்டங்களைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர். -சச்சின் ஸ்வராஜ்

‘e-Shram’ இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவுகள் அதிகரித்திருந்தாலும், அது அனைத்து மாநிலங்களிலும் சீராக இல்லை.


‘e-SHRAM’ என்பது இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமாகும்.


2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘e-Shram’ இணையதளத்தில் பதிவுசெய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு, தனது 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. "புதிய யுக சேவைப் பொருளாதாரத்திற்கு" அமைப்புசாரா தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு தனது நிதிநிலை உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அதன் பிறகு அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு அதிகரித்திருந்தாலும், புள்ளிவிவரங்களில் உள்ள இடைவெளியானது, பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்னும் இந்த அறிவிப்பின் பயனைப் பெறவில்லை என்பதைக் காட்டுவதுடன், நாட்டின் அதிவேகமாக வளர்ந்து வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் புரிந்து கொள்வதிலும் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.


ஒரு கோடி என்ற எண்ணிக்கையை அமைச்சர் குறிப்பிட்டிருந்தாலும், ஜனவரி மாதம் 29-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த பதிலின்படி, 'e-Shram' இணையதளத்தில் 8.58 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் (gig workers) மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்திற்குப் பிறகு இந்தப் பதிவுகள் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கருதினாலும்கூட, அது மதிப்பிடப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 15 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



இதன் பொருள், ஒவ்வொரு ஆறு தற்காலிகப் பணியாளர்களில் ஐந்து பேர் அரசாங்கத்தின் நலத்திட்டப் பயன்களைப் பெற முடியாடக் நிலையில் இருக்கிறார்கள் என்பதாகும்.


கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அளித்த பல பதில்களில் பெரும்பாலும் ஒரு கோடிக்கும் மேல் எனக் குறிப்பிடப்பட்ட இந்தியாவின் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஒரு தனிப்பட்ட ஆதாரத்தில் இருந்தே உருவானதாகத் தெரிகிறது. அது ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் குழு (NITI Aayog) தயாரித்த 'India’s Booming Gig and Platform Economy' என்ற அறிக்கையாகும். அந்த அறிக்கை 2020-21-ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 77 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது.



அமைப்புசாரா (Gig) தொழிலாளர்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான பிரத்யேக முயற்சிகள் எதுவும் இல்லாத நிலையில், இந்தியாவின் மதிப்பீடுகள் நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பின் அறிக்கையை மட்டுமே நம்பியுள்ளன. இந்த அறிக்கை 2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை முறையே 1.27 கோடி மற்றும் 1.43 கோடியாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

‘e-Shram’ இணையதளத்தை ஆதார் இணைக்கப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமாக (National Database of Unorganised Workers (NDUW)) வடிவமைத்து, அரசின் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிவை ஒரு முன்நிபந்தனையாக்கியதன் மூலம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த தளமாக ‘e-Shram’ தளத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது.

2025-ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தியாவின் மொத்த தொழிலாளர் சக்தியான 61.6 கோடியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 2 சதவீதமாக உள்ள போதிலும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கைகள் இன்னும் அமைப்புசாரா தொழிலாளர்களை ஒரு தனிப்பிரிவாகப் பதிவு செய்யவில்லை. 

கடந்த ஆண்டு அமலுக்கு வந்த சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ல் (Code on Social Security, 2020) மட்டுமே, அமைப்புசாரா தொழிலாளி என்பவர் யார் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக வரையறுத்தது. இந்தச் சட்டம் விபத்துக் காப்பீடு, மகப்பேறு சலுகைகள் மற்றும் பிரத்யேக சமூகப் பாதுகாப்பு நிதி போன்ற கூடுதல் பலன்களை உறுதியளித்த போதிலும், பெரும்பாலானவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 

இருப்பினும், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சுகாதாரக் காப்பீட்டின் வாக்குறுதி, பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.


ஆனால், இந்தப் பதிவுகள் மாநிலங்கள் முழுவதும் சீராக இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், அதிக நகரமயமாக்கப்பட்ட தமிழ்நாடும் (31,654), தெலங்கானாவும் (29,951) மற்றும் கேரளமும் (11,219) முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் கூட இடம்பெறவில்லை.

நிதிஆயோக் குழுவின் 2022-ஆம் ஆண்டு அறிக்கை அமைப்புசாரா தொழிலாளர்களைக் கொண்ட 21 துறைகளைப் பட்டியலிட்டுள்ளது. இதில் வேளாண்மை, சுகாதாரம், கல்வி மற்றும் சில்லறை விற்பனை ஆகியவை அடங்கும் என்றாலும், ‘e-Shram’ இணையதளப் பதிவுகளின்படி, அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை உணவுத் துறை, போக்குவரத்து மற்றும் வீட்டு வேலைகளிலேயே அதிகமாக உள்ளது.


Original Link: Majority of India’s gig workers remain out of the government’s reach 
Share: