சுற்றுலா ஒழுங்குமுறைப்படுத்தல், 'அனைவரையும் உள்ளடக்கிய' அரசாங்கத்திற்கான அழுத்தம் : இந்த ஆண்டு அண்டார்டிகா நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? - அஞ்சலி மரார்

அண்டார்டிகா ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அண்டார்டிகா  98% அடர்த்தியான பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. அண்டார்டிகா பூமியின் நன்னீர் இருப்புகளில் (freshwater reserves) 75%-ஐக் கொண்டுள்ளது.


கடந்த மாதம், கொச்சியில் 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) இந்தியாவில் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு முதல் அண்டார்டிகாவில் கட்டுப்பாடற்ற சுற்றுலா பற்றிய கவலைகளை இந்தியா எழுப்பியது மற்றும் முதல் முறையாக அண்டார்டிக் சுற்றுலாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பணிக்குழுவை அறிமுகப்படுத்தியது.


இந்த ஆண்டு அண்டார்டிகா ஆலோசனைக்  கூட்டத்தின்  முக்கிய அம்சங்கள்:


1. அனைத்தையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை (all inclusive governance)   

    ஊக்குவித்தல். 


2. முதல் சுற்றுலாக் கட்டமைப்பை (tourism framework) அறிமுகப்படுத்தி அதன் 

    வளர்ச்சியைத் தொடங்குதல்.


3. மைத்ரி-II  (Maitri-II) ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதாக அறிவித்தல்.


2007-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா முதலில் அண்டார்டிகாவில் சுற்றுலாப் பயணிகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியது. பல ஆண்டுகளாக, அண்டார்டிக்காவிற்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் (tour operators) நிர்வகிக்கப்படுகிறது. 2023-ல் அண்டார்டிகாவிற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட சென்றதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.


துருவ அறிவியலில் (polar sciences) உள்ள வல்லுநர்கள், சுற்றுலா அண்டார்டிகாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை  யாரும்  இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நம்புகிறார்கள். கொச்சியில் நடந்தக் கூட்டத்தில், அண்டார்டிகா ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் சுற்றுலாக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஒப்புக்கொண்டனர்.


கொச்சியில், அண்டார்டிகாவின் செயல்பாடுகளுக்கான சுற்றுச்சூழல் பொறுப்பை மையமாகக் கொண்ட தீர்மானம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்குவது சவாலானது. ஏனெனில், இது சட்ட பொறுப்பு மற்றும் பிற சிக்கலான சிக்கல்களை உள்ளடக்கியது. பல நாட்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தரப்பினரிடமிருந்து ஒப்பந்தம் தேவைப்படுகிறது.


2025-ல் இத்தாலியில் அடுத்த அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) சுற்றுலா கட்டமைப்பு பற்றிய கூடுதல் விவாதங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  கட்டமைப்பைப் பற்றி  ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன், அண்டார்டிகாவில் சுற்றுலாவை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.


 கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே உள்ள 35 ஆண்டுகால மைத்ரி தளத்திற்கு பதிலாக புதிய மைத்ரி-II ஆராய்ச்சி தளத்திற்கான திட்டங்களை இந்தியா வெளிப்படுத்தியது. இந்த முடிவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ​​இந்தியா தனது கட்டடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புகளைத் திட்டமிடத் தொடங்கும், அவை அரசாங்கத்திற்கு வழங்கப்படும். தயாரானதும், மைத்ரி II-க்கான சுற்றுச்சூழல் அறிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். 2030-ஆம் ஆண்டு  முற்பகுதியில்  இந்தியாவின் மைத்ரி-II செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் நடைபெற்றக் கூட்டத்தில், ​​அண்டார்டிக் ஒப்பந்தக் கட்சிகளுடன் சவுதி அரேபியாவும் இணைந்தது.


கொச்சியில் உள்ள அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM))  56 நாடுகளைச் சேர்ந்த 400 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடல் பனி மாற்றங்கள், பேரரசப் பென்குயின்களைப் (Emperor penguin) பாதுகாத்தல், முக்கிய நடவடிக்கைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை மேம்படுத்துதல் மற்றும் அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலைக் கண்காணிப்பதற்கான சர்வதேச கட்டமைப்பை உருவாக்குதல் பற்றி விவாதித்தனர்.


"வசுதைவ குடும்பகம் - உலகம் ஒரு குடும்பம்" (Vasudhaiva Kutumbakam) என்ற நெறியைப் பின்பற்றுபவர்கள் என்ற முறையில், அண்டார்டிகாவையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள நாடுகளுடன் உள்ளடங்கிய அணுகுமுறையை விரும்புவதாக அண்டார்டிக் நாடாளுமன்றத்தில் இந்தியா தெரிவித்தது. ஆளுகை, ஆராய்ச்சி மற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒன்றாக உருவாக்குவதற்கான பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள அண்டார்டிக் ஒப்பந்தத்தில் சேர அதிக நாடுகளை அழைப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது.


புவிசார் அரசியல் அண்டார்டிக் நிர்வாகத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தியது. கொச்சியில், அண்டார்டிக் ஒப்பந்தம் ஒரு சில நாடுகளின் பிரத்யேக மன்றமாக (‘exclusive club’) இருக்கக்கூடாது என்று ஆலோசனைக் கட்சிகளுக்கு (முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள்) இந்தியா நினைவூட்டியது. கனடாவும் பெலாரஸும் ஆலோசனை உறுப்பினர்களாக மாற முயற்சி செய்துவருகின்றன. இன்னும் இந்த நிலையை இரு நாடுகளும் அடையவில்லை.


அண்டார்டிகா உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அண்டார்டிகாவின் 98% தடிமனான பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. இது பூமியின் நன்னீர் இருப்புகளில் 75%-ஐக் கொண்டுள்ளது. இந்தக் கண்டம் அதன் தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் அழகிய சூழலுக்கு புகழ் பெற்றது. தென் துருவத்திற்கு அருகில் அமைந்துள்ள அண்டார்டிகா மிகவும் குளிரான, வறண்ட மற்றும் காற்றுடன் கூடிய இதமான சூழல் நிலவுகிறது.

 

புவி வெப்பமடைதலின் கீழ், பூமியின் மூன்று துருவங்கள் - வடக்கு, தெற்கு மற்றும் இமயமலை - மிகவும் பாதிக்கப்படுகின்றன. கொச்சி கூட்டத்தில், அண்டார்டிகாவின் கூடுதல் பகுதிகள் 'பாதுகாக்கப்பட்ட' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த துருவப் பகுதிகளில் நிலத்தடி உறைபனி (permafrost) வேகமாகக் கரைவது ஒரு கவலையாக உள்ளது. நிலத்தடி உறைபனி (permafrost) என்பது செயலில் உள்ள பனிக்கட்டிக்கு அடியில் உறைந்த பாறை மற்றும் மண்ணாகும். வெப்பமான வெப்பநிலை, தாவரங்கள் போன்ற கரிமப் பொருட்களை வெளிப்படுத்தி, சிதைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மீத்தேனை காற்றில் வெளியிடுகிறது. இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. ஒரு காலத்தில் ஆரம்பகால அண்டார்டிக் பயணங்களால் ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளை இப்போது கரைக்கும் நிலத்தடி உறைபனி ஆபத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க, அண்டார்டிகாவின் பல பகுதிகள் 'பாதுகாக்கப்பட்டவை' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூட்டத்தின் போது, ​​அண்டார்டிகா சிறப்புப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு 17 புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய மேலாண்மைத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.


வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் அண்டார்டிகாவில் மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza (HPAI)) அபாயத்தை ஏற்படுத்துகிறது. கொச்சி கூட்டத்தில், விஞ்ஞானிகள் அண்டார்டிகாவின் காற்று மற்றும் வளிமண்டலம் மாசுபட்டுள்ளது மற்றும் பூர்வீக வனவிலங்குகளுக்கு மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என்ற சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்து விவாதித்தனர். அண்டார்டிகாவில் உள்ள மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளிடையே மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza (HPAI)) பரவுவதைத் தடுக்கவும் குறைக்கவும் உயிர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை கூட்டம் வலியுறுத்தியது.

 

Original link : https://indianexpress.com/article/explained/explained-global/antarctic-parliament-meet-9394309/

Share:

காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் எவ்வாறு சிறுத்தைகளுக்கான இந்தியாவின் இரண்டாவது இருப்பிடமாக உருவாக்கப்படுகிறது? -ஆனந்த் மோகன் ஜே

    குனோ தேசிய பூங்காவைத் (Kuno National Park) தொடர்ந்து, மேற்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் சிறுத்தைகளுக்கான இந்தியாவின் இரண்டாவது வீடாக மாற உள்ளது. இநத சரணாலயம் வேட்டையாடும் பூனையினங்களுக்கு சிறந்த வாழ்விடமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அதில் சவால்களும் உள்ளன.


சம்பல் ஆற்றின் மீது காந்தி சாகர் அணைக்கு அருகில் அமைந்துள்ள இந்த சரணாலயம் சிறுத்தைகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மத்தியப் பிரதேச அரசு இந்த லட்சியத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை முடித்துள்ளது.


நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்வது குறித்து மழைக்காலத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில், சிறுத்தைகள் தொற்றுநோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படலாம், குறிப்பாக குளிர்கால பூச்சிகளால்.


காந்தி சாகரை சிறுத்தைகளுக்கு ஏற்ற வாழ்விடமாக மாற்றுவது எது?


காந்தி சாகர் சரணாலயம் 368.62 சதுர கி.மீ பரப்பளவில், ராஜஸ்தான் எல்லையில் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் மண்ட்சவுர் (187.12 சதுர கி.மீ) மற்றும் நீமுச் (181.5 சதுர கி.மீ) மாவட்டங்களை உள்ளடக்கியது. இது சம்பல் நதியால் பிரிக்கப்பட்ட ஒரு தட்டையான பாறை பீடபூமியில் அமைந்துள்ளது, காந்தி சாகர் அணை மற்றும் சரணாலயத்திற்குள் அதன் 726 சதுர கி.மீ நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியாகும், இது இந்தியாவின் மூன்றாவது பெரிய சரணாலயமாகும்.


பாறை நிலப்பரப்பு மற்றும் ஆழமற்ற மேற்புற மண்,  காந்தி சாகரில் ஒரு சவானா சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துகிறது, இதில் வறண்ட கால இலையுதிர் மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த திறந்த புல்வெளிகள் உள்ளன. சரணாலயத்திற்குள் உள்ள ஆற்றங்கரை பள்ளத்தாக்குகளில் பசுமையான தாவரங்கள் உள்ளன.


காந்தி சாகர் சிறுத்தைகளுக்கு சிறந்த வாழ்விடத்தை வழங்குகிறது என்று மத்திய பிரதேச வனவிலங்கு அதிகாரிகள் நம்புகின்றனர். கென்யாவின் மாசாய் மாராவுடன் இதை ஒப்பிடுகையில், குனோவுக்குப் பிறகு இந்தியாவில் சிறந்த சிறுத்தை வாழ்விடமாக இதை அவர்கள் கருதுகின்றனர்.


ராஜஸ்தானின் பைன்ஸ்ரோட்கர் சரணாலயம் மற்றும் மண்ட்சவுர் மற்றும் நீமுச் நிர்வாகப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பொறுத்து, காந்தி சாகரில் உள்ள சிறுத்தை வாழ்விடத்தை சுமார் 2,000 சதுர கி.மீ வரை விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விரிவாக்கத் திட்டம் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசு ஒரு ஒருங்கிணைந்த மேலாண்மை இராஜதந்திரத்தை உருவாக்குவதைச் சார்ந்துள்ளது.


காந்தி சாகரில் சிறுத்தைகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எவ்வாறு தயாராகியுள்ளனர்?


சிறுத்தைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, சரணாலயத்தை விரிவுபடுத்த நிதி தேவைப்பட்டது. தற்போது, 17.72 கோடி ரூபாய் செலவில், 64 சதுர கி.மீ., சிறுத்தைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


சிறுத்தைகள் வந்தவுடன் அவைகளை பாதுகாப்பாக தங்கவைக்க நான்கு பகிர்வுகளுடன் 1 சதுர கி.மீ மென்மையான வெளியீட்டு அடைப்பை அதிகாரிகள் கட்டி வருகின்றனர். சிறுத்தைகளுக்கென பிரத்யேகமாக மருத்துவமனை ஒன்றையும் கட்டி வருகின்றனர்.


வனவிலங்கு அதிகாரிகள் அதன் சுற்றுச்சூழல் சமநிலையைப் புரிந்துகொள்ள சரணாலயத்தில் உள்ள தாவரஉண்ணிகள் மற்றும் வேட்டையாடும் விலங்குகளின் நிலையை மதிப்பிடுகின்றனர்.


சிறுத்தைகளை அதன் இயற்கைச் சூழலில் ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சரணாலயத்தின் தயார்நிலையை சிறுத்தைகள் வழிநடத்தல் குழுவின் தலைவர் மேற்பார்வையிடுகிறார்.


காந்தி சாகரை ஒரு சாத்தியமான சிறுத்தை வாழ்விடமாக மாற்றுவதற்கான மிகப்பெரிய சவால், உணவு ஆகும். சிறுத்தைகள் நீடித்த முறையில் செழித்து வளர இரை பரப்பை அதிகரிப்பது முக்கியம். ஆண் சிறுத்தைகள் மூன்று முதல் ஐந்து சிறுத்தைகள் கொண்ட கூட்டமாக இருக்கும், அதே நேரத்தில் பெண் சிறுத்தைகள் பொதுவாக தங்கள் குட்டிகள் தவிர தனிமையான வாழ்க்கையை வாழ்கின்றன. ஒரு சிறுத்தை கூட்டணி சராசரியாக ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் உணவிற்காக வேட்டையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒரு சிறுத்தைக் குடும்பம் வாழ, சுமார் 350 அன்குலேட்டுகள் (குளம்புள்ள விலங்குகள்) தேவை. அன்குலேட்டுகள் மான் போன்ற பெரிய குளம்புள்ள பாலூட்டிகள் ஆகும்.


சுமார் 1500 புள்ளி மான்கள், 1000 பிளாக்பக் மற்றும் 350 சிங்காரா இந்திய சிறுமான் ஆகியவற்றை காந்தி சாகருக்கு இடமாற்றம் செய்வது 7-8 சிறுத்தைக் குடும்பங்களுக்குப் போதுமான இரையை வழங்கும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் கன்ஹா, சாத்புரா மற்றும் சஞ்சய் போன்ற காப்பகங்களிலிருந்து சித்தல் மற்றும் காட்டெருமை இந்திய காட்டெருமை போன்ற இரை விலங்குகளை காந்தி சாகருக்கு மாற்றியுள்ளனர்.


இருப்பினும், குனோவில் உள்ள நிலைமையைப் போலவே காந்தி சாகருக்கு இன்னும் போதுமான இரை விலங்குகள் இல்லை. சுமார் 5,000 மான்களை காந்தி சாகருக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். ஆனால் இந்த திட்டம், பிடிப்பு மற்றும் இடமாற்றத்தின்போது மன அழுத்தம் தொடர்பான இறப்புகளின் ஆபத்து உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்கிறது.


காந்தி சாகரில் சிறுத்தைகள் எதிர்கொள்ளும் பிற சவால்கள் என்ன?


குனோவைப் போலவே காந்தி சாகரிலும், வேங்கைப் புலிகளின் (leopards) எண்ணிக்கை சிறுத்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது, ஏனெனில் இரண்டு வேட்டையாடும் விலங்குகளும் ஒரே இரையை வேட்டையாடுகின்றன, மேலும் காடுகளில் மோதல் ஏற்படும்.


சிறுத்தைகளைத் தவிர, காந்தி சாகர் சரணாலயம் சோம்பல் கரடிகள், கழுதைப்புலிகள், சாம்பல் ஓநாய்கள், தங்க நரிகள், காட்டுப் பூனைகள், இந்திய நரிகள் மற்றும் சதுப்பு நில முதலைகள் போன்ற பிற வேட்டையாடும் விலங்குகளுக்கும் வாழ்விடமாக உள்ளது.


பிராந்தியத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வேட்டையாடுவது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்று வனத்துறை கூறுகிறது, ஆனால் 2021 மதிப்பீட்டின்படி, உள்ளூர் சமூகங்கள் இறைச்சிக்காக வேட்டையாடுவதால், அன்குலேட் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை வெளிப்படுத்துகிறது.


குனோவைப் போலல்லாமல், காந்தி சாகரின் பாதுகாக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைகள் மற்றும் மனிதக் குடியிருப்புகளின் எல்லையாக உள்ளது.


காந்தி சாகர் காலப்போக்கில் எவ்வாறு உருவாக்கப்படும்?


2021 அறிக்கையின்படி, விரிவாக்கத்தின் முதல் படி சம்பல் ஆற்றின் மேற்குப் பகுதியை குறிவைக்க வேண்டும். போதுமான இரை கிடைத்தவுடன் சிறுத்தைகளை மீண்டும் விட வேண்டும்..


வனவிலங்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டு காந்தி சாகருக்குள் சம்பலின் நீமுச் பக்கத்தில் முதலில் கவனம் செலுத்த பரிந்துரைக்கின்றனர். சம்பல் நதி சரணாலயத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையில் வனவிலங்கு இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு தடையை உருவாக்குகிறது.


தற்போது, கிழக்கு முனையில் உள்ள மண்ட்சௌர் பக்கத்தில் அதிக மனித நடவடிக்கைகள் உள்ளன. அணையில் நீர்மின் திட்ட ஊழியர்கள் வசிக்கும் காந்தி சாகர் டவுன்ஷிப் அங்கு அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் கால்நடைகள் நீர்த்தேக்கத்தின் கரையோரங்களில் காணப்படுகின்றன, வணிக மீன்பிடித்தல் நீர்த்தேக்கத்திலேயே நடைபெறுகிறது.


Share:

பாகிஸ்தான், சமூக ஊடகத் தளங்களை தணிக்கை செய்ய ஃபயர்வால் (firewall) இணையப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறதா? -சஹானா வேணுகோபால்

சீனா பாணியில் பாகிஸ்தானில் ஃபயர்வால் (firewall) பயன்படுத்தப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இணையத்தை அணுக மெய்நிகர் தனியார் பிணையங்களைப் (Virtual Private Networks (VPN)) பயன்படுத்துபவர்கள் கூட இந்த தடுப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் தகவல் அமைச்சர் மறுத்துள்ளார்.


டிஜிட்டல் தனியுரிமை ஆராய்ச்சிக் குழுவான Top-10 மெய்நிகர் தனியார் பிணையங்களின் (Virtual Private Networks (VPN)) மதிப்பீட்டின்படி, பாகிஸ்தான் 2024-ல் இதுவரை 1,752 மணிநேரங்களுக்கு இணையத்தை முடக்கியுள்ளது. பாகிஸ்தான் ஊடகங்கள் அந்நாட்டின் திட்டங்களைப் பற்றி கடந்த வாரம் செய்தி வெளியிட்டன. சீனாவைப் போன்ற ஃபயர்வாலைச் செயல்படுத்த அவர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர். இந்த ஃபயர்வால் பயனர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுக்கும்.


X வலைதளம் (முன்னர் ட்விட்டர்), முகநூல் (Facebook) மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகலைத் தடுக்கும் நோக்கில், சீனாவை ஒத்த ஒரு புதிய 'தேசிய ஃபயர்வால்' (National Firewall) திட்டங்களுக்கான முடிவை பாகிஸ்தான் ஊடகங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்தக் கொள்கையை அமல்படுத்தவும், தேவையற்ற உள்ளடக்கத்தைத் தடுக்கவும் முக்கியமான வார்த்தைகளை நீக்க அரசாங்கம் விரும்புகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மெய்நிகர் தனியார் பிணையங்களைப் (Virtual Private Networks (VPN)) பயன்படுத்தும் நபர்கள்கூட இந்த தடுப்பால் பாதிக்கப்படலாம் என்று சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.


இருப்பினும், பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டா தாரர், ஜூன் 10 அன்று சமாவுக்கு (Samaa) அளித்த அறிக்கையில் இந்த அறிக்கைகளை மறுத்தார். வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறானத் தகவல்களைக் கையாள்வதில் அரசாங்கத்தின் கவனத்தை அவர் வலியுறுத்தினார். ஆனால், 'சீன வடிவிலான ஃபயர்வால்' (Chinese-style firewall) எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.


இந்தக் குழப்பம் இணைய கட்டுப்பாடுகள் குறித்த பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு குறித்த நிச்சயமற்றத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, 2017-ம் ஆண்டில் X வலைதளத்தைத் தடுப்பது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல்களின்போது இணைய சேவைகளை சீர்குலைப்பது போன்ற இணைய அணுகலை பாகிஸ்தான் தடை செய்துள்ளது.


டிஜிட்டல் ஃபயர்வால் (digital firewall) எப்படி வேலை செய்கிறது?


ஃபயர்வால்கள் சில வலைத்தளங்களுக்கான ஆன்லைனில் பாதுகாக்கும் கருவிகள், பயனர்களின் கணினிகள் மற்றும் பிணையங்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கின்றன.


அரசாங்கத் தணிக்கையுடன் சமீபத்திய செயல்பாடுகள் இருந்தபோதிலும், ஃபயர்வால்கள் முதலில் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டன. இதை, அணுகலுக்கான நிலைகளைக் கட்டுப்படுத்த, உங்கள் தனிப்பட்ட கணினியில் பாதுகாப்புச்சுவர் அமைப்புகளை பொதுவாக சரிசெய்யலாம். ஃபயர்வால்கள் பயனர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்பியல் சாதனங்கள் அல்லது மென்பொருள் அடிப்படையிலானதாக இருக்கலாம்.


பெரிய அளவில், சீனாவின் கிரேட் ஃபயர்வால் (Great Firewall of China) போன்ற சிக்கலான ஃபயர்வால்கள் இணையத்தின் பரந்த பகுதிகளுக்கான அணுகலைத் தடுக்க அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள் குடிமக்கள் சமூக ஊடகங்கள் அல்லது தகவல் தளங்கள் போன்ற பிரபலமான வலைத்தளங்களை அடையமுடியாமல் போகலாம்.


மெய்நிகர் தனியார் பிணையங்கள் (Virtual Private Networks (VPN)) மற்றும் தனியுரிமை உலாவிகள் (privacy browsers) பயனரின் இருப்பிடத்தை மறைக்க முடியும் என்றாலும், ஃபயர்வாலைத் தவிர்ப்பதற்கு பெரும்பாலும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது மற்றும் குறைந்த அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு கடினமாக இருக்கும்.


மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது?


அரசாங்கங்கள் பயன்படுத்தும் ஃபயர்வால்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களை அணுகுவதைத் தடுக்கின்றன. இணைய முடக்கம் மற்றும் சமூக ஊடகத் தடைகள் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் வன்முறையின்போது அரசாங்கங்கள் அல்லது இராணுவம் பொறுப்புக்கூறுவதைத் தடுக்கின்றன.


இணைய முடக்கம் அல்லது தடை திடீரென செயல்படுத்தப்படும் போதெல்லாம், நாட்டின் குடிமக்கள் பெரும்பின்னடைவை சந்திக்கிறார்கள், கல்வி சீர்குலைக்கப்படுகிறது, மேலும் சுகாதார நிறுவனங்கள் தரமான சேவையை வழங்க போராடுகின்றன.


டிஜிட்டல் தனியுரிமை ஆராய்ச்சி குழுவான Top10 மெய்நிகர் தனியார் பிணையங்களின் (Virtual Private Networks (VPN)) மதிப்பீடுகளின்படி, 2024-ம் ஆண்டில், பாகிஸ்தான் 1,752 மணிநேரம் இணையத்தை முடக்கியுள்ளது.


Top10 VPN-ன் அறிக்கை, தேர்தல்களின் போது பாகிஸ்தானின் பணிநிறுத்தத்திற்கு $351 மில்லியன் செலவாகும். இது கடந்த ஆண்டு மொத்தம் $9.13 பில்லியன் இணைய பணிநிறுத்தங்களின் உலகளாவிய பொருளாதாரத் தாக்கத்திற்கு பங்களித்துள்ளது.


ஃபயர்வால் தங்கள் எல்லைகளுக்குள் இணையத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் சர்வாதிகார நாடுகளுக்கு ஒரு தீர்வாகத் தோன்றினாலும், இதேபோல் ஒன்றை அமைப்பதும் பராமரிப்பதும் விலை உயர்ந்தது. சிறிய நிறுவனங்களுக்குக் கூட, ஃபயர்வால்களை செயல்படுத்துவதும் பராமரிப்பதும் விலை உயர்ந்தது. ஹேக்கர்களைத் தடுக்கவும், பாதுகாப்பு சிக்கல்களை உடனடியாக சரிசெய்யவும் அவர்களுக்கு நிலையான கண்காணிப்பு தேவை. தேசிய அளவில், பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செலவுகள் மிக அதிகம்.


ஃபயர்வால்கள் போட்டியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையற்ற கவலைகளை எழுப்புகின்றன. பொதுவாக அதிக பயனர்களை ஈர்க்கும் வெற்றிகரமான நிறுவனங்கள் தடுக்கப்படலாம். குறைந்த தனியுரிமை மற்றும் சேவை தரங்களுடன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுகளால் மாற்றப்படலாம். இது இணையதள பயனரின் அனுபவத்தை மோசமாக்கும்.


கூடுதலாக, புதிய, சுதந்திரமான மாற்று வழிகளை ஆராய பயனர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அதிகாரிகள் தங்கள் வசதிக்காக பயன்பாடுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கலாம். சீனாவின் பெரிய ஃபயர்வால் இந்த சிக்கலை விளக்குகிறது.


இந்தியாவும் பாகிஸ்தானும் இணையத்தை தணிக்கை செய்கின்றன அல்லது முடக்குகின்றன. கீப் இட் ஆன் கூட்டமைப்பு அறிக்கையின்படி (Keep It On coalition report), 2023-ம் ஆண்டில், இந்தியா 116 முறை இணைய அணுகலைத் தடுத்தது.


இதற்கு முன்பு இணையம் அல்லது சமூக ஊடகங்களை பாகிஸ்தான் தடை செய்துள்ளதா?


பாகிஸ்தான் ஒரு பத்தாண்டிற்கு மேலாக இணையம் மற்றும் குறிப்பிட்ட சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை அடிக்கடி தடை செய்துள்ளது. பாகிஸ்தானில் சீன வடிவிலான தேசிய ஃபயர்வாலை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் 2012-ம் ஆண்டில் தொடங்கின. ஆனால், அதன் தற்போதைய நிலை குறித்து அதிகளவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.


2012-ம் ஆண்டில், யூடியூப் (YouTube) உட்பட சுமார் 20,000 வலைத்தளங்களை பாகிஸ்தான் அரசாங்கம் முடக்கியதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணைய (Pakistan Telecommunication Authority (PTA)) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2017-ம் ஆண்டில், ஜாக் டோர்சி தலைமையிலான ட்விட்டர், பாகிஸ்தான் அரசாங்கம் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக சேவைகளைத் தடை செய்ததாக வெளியான செய்திகளை ஒப்புக் கொண்டது.


2024-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், பாகிஸ்தான் தேர்தலுக்குத் தயாராகி வருவதால், எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைதளத்திற்கான அணுகல் பல நாட்களுக்கு நெரிக்கப்பட்டது. மேலும், ஒட்டுமொத்த இணைய சேவையும் கணிசமாகப் பாதிக்கப்பட்டது. ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைகளை எதிர்த்தனர். ஆனால், அரசாங்க அதிகாரிகள் கணினி மேம்பாடுகளுக்குக் காரணம் என்று கூறினர்.


"இந்த தேர்தல் சுழற்சியின் போது, பாகிஸ்தான் அதிகாரிகள் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் பல பணிநிறுத்தங்களை விதித்துள்ளனர். கடந்த தேர்தல் ஆண்டில் 2018ஆம் ஆண்டில் குறைந்தது 11 இணைய முடக்கங்கள் ஏற்பட்டதாக டிஜிட்டல் உரிமைகள் வாதிடும் குழுவான அக்சஸ் நவ் பிப்ரவரியில் கூறியது. 2022, 2023 மற்றும் இப்போது 2024-ல் பணிநிறுத்தங்களின் சர்வாதிகாரப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Share:

இரண்டடிகள் பின்னே : இந்தியா மற்றும் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2024 குறித்து . . .

கல்வியிலும் அரசியலிலும் பாலின வேறுபாடுகளை இந்தியா குறைக்க வேண்டும்.


உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி 68.5%ஆக உள்ளது. இது 2023-ல் 68.4%ஆக இருந்தது. இந்த விகிதத்தில், முழு பாலின சமத்துவத்தை அடைய 134-ஆண்டுகள் ஆகும். இந்த காலக்கெடு 2030 நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal (SDG)), இலக்கைத் தாண்டி சுமார் ஐந்து தலைமுறைகளை நீட்டிக்கிறது.


ஐஸ்லாந்து அதன் பாலின இடைவெளியில் (gender gap) முதலிடத்தை (93.5%) தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், அதன் பாலின இடைவெளியில் 90%-க்கும் மேல் தக்கவைத்துக் கொண்ட ஒரே பொருளாதாரம் இதுவாகும். கடந்த ஆண்டு 127-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 146 நாடுகளில் 129-வது இடத்தில் உள்ளது. 2022-ல், 135-வது இடத்திலிருந்து முன்னேறியது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா தனது பாலின இடைவெளியை 64.1% தக்கவைத்துளது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது.


சிறிய பின்னடைவுக்கு (“slight regression”) கல்வி மற்றும் அரசியல் அதிகார அமைப்பில் ஏற்பட்ட சிறிய சரிவுகளே காரணம் என அறிக்கை கூறுகிறது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், ஒரு சிறிய பின்னடைவுகூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், அதன் 2012-ஆம் ஆண்டு  தரவரிசை  46 சதவீதத்தை எட்ட இன்னும் 6.2 சதவீத புள்ளிகள் அதிகரிக்க வேண்டும்.


இந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழி, தொழிலாளர் பங்கேற்பு போன்ற பகுதிகளில் பாலின இடைவெளியைக் குறைப்பதாகும். இது தற்போது 45.9%-ஆக உள்ளது. இதற்கு, பெண்களை உயர்கல்வியில் படிக்க வைத்தல், வேலைத் திறன்களை வழங்குதல், பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்தல், திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் வேலைகளைத் தக்கவைக்க உதவும் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.


கல்வியில், ஆண்கள் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 17.2 சதவீத வித்தியாசத்துடன் பெரிய அளவில் உள்ளது. இந்தியா இதில் 124-வது இடத்தில் உள்ளது. அரசியல் அதிகாரப்பகிர்வில் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. சமீபத்திய மக்களவைத் தேர்தலில், ஏறக்குறைய 800 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால், இப்போது 74 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது 2019-ல் 78 ஆக இருந்தது. இது மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 13.6% ஆகும்.


குறிப்பாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா (Women’s Reservation Bill) 2023-ஐ கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா முன்மொழிகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் பொருளாதாரத் தேவையாக பாலின சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வணிக மற்றும் குடிமை சமூக ஒத்துழைப்பை ஆதரிக்கும் நிலைமைகளை மேம்படுத்துமாறு உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) நிர்வாக இயக்குநர் சாடியா ஜாஹிடி (Saadia Zahidi’s) கேட்டுக்கொள்கிறார்.


Share:

சொற்களைக் குற்றமாக்குதல் : பிளவுபடுத்தும் பேச்சுகள் குறித்து . . .

வன்முறையைத் தூண்டாத பேச்சுக்கள் சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்படக்கூடாது.


எழுத்தாளர்-ஆர்வலர் அருந்ததி ராய் மற்றும் கல்வியாளர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது வழக்குத் தொடரும் முடிவு தேவையற்றதாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டுக்கு முந்தையது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அக்டோபர் 2023-ல் ஒப்புதல் அளித்தார். புக்கர் பரிசுபெற்ற எழுத்தாளர் ராய் மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடர அவர் அனுமதியளித்தார். தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் பேச்சுக்களை பேசியதாக இந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன.


சக்சேனா முதலில் டெல்லி அரசாங்கத்துடனான தனது அதிகாரத்தில் இந்த ஒப்புதலை வழங்கினார். இது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196 (Section 196 of the Code of Criminal Procedure)-ன் கீழ் இருந்தது. அதே பேச்சுகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) பிரிவு 13-ஐப் பயன்படுத்தவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முறை அவர் மத்திய அரசின் சார்பில் செயல்படுவதாகத் தெரிகிறது. யுஏபிஏ சட்டத்தின்கீழ் சில குற்றங்களுக்கான வழக்குகளை அங்கீகரிக்க மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.


இந்த வழக்கு முதன்முதலில் 2010-ல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டது. இது இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அடக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. சக்சேனாவின் இரண்டு ஒப்புதல்களுக்கு இடையில் எட்டுமாதகால இடைவெளி உள்ளது. இந்தக் கால தாமதத்தைப் புரிந்துகொள்வது கடினம், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதே உண்மைகள் அதிகாரத்திற்கு கிடைத்தன.


அக்டோபர் 2010-ல், டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசியவர்கள் மீது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் இருந்தபோதிலும், அந்த நேரத்தில் ஆளும் கட்சியால் வழக்குத் தொடரப்படவில்லை. இந்தப் பேச்சுகளை டெல்லி போலீசார் தேசத்துரோகமாக பார்க்கவில்லை. காஷ்மீரில் அமைதி முயற்சிகளை சீர்குலைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பதால் இந்த தயக்கம் இருக்கலாம். காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர்கள் இடைத்தரகர்களைப் பயன்படுத்தினர்.


இந்தப் பேச்சு குறித்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. போலீசில் புகார் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எவ்வாறாயினும், இந்த பேச்சுக்கள் தேசத்துரோகமாகக் கருதப்படும் அளவுக்கு தீவிரமானவை என்று டெல்லி காவல்துறை நினைக்கவில்லை. நவம்பர் 27, 2010 அன்று, பெருநகர மாஜிஸ்திரேட் காவல்துறையுடன் உடன்படவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) பிரிவு 13 உட்பட முதல் தகவல் அறிக்கை (First Information Report) தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்தப் பிரிவு "சட்டவிரோத நடவடிக்கைகளை" தண்டிப்பதைக் குறிக்கிறது.


மாநாட்டு பேச்சுக்கள் காஷ்மீரின் நிலையை விமர்சித்திருக்கலாம். எவ்வாறாயினும், வன்முறைக்கான நேரடி அழைப்பு அல்லது வன்முறையைத் தூண்டுதல் இல்லாமல், இந்த உரைகள் உண்மையிலேயே யுஏபிஏ சட்டத்தின் கீழ் "சட்டவிரோத நடவடிக்கை" என்பதை உள்ளடக்கியதா என்பது கேள்விக்குரியது.


அப்போதிருந்து, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இப்பகுதி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மாற்றங்களால், தற்போதைய அரசாங்கம் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் பேச்சுக்களை குற்றமயமாக்குவதை நிறுத்தி, மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதில் முந்தைய அரசாங்கத்தின் கவனத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.


Share:

திடக்கழிவு மேலாண்மை மேல் வரி (SWM cess) என்றால் என்ன? கழிவை உருவாக்குபவர்களிடம் ஏன் வசூலிக்கப்படுகிறது? -புஷ்கரா எஸ்.வி.

திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) மேல் வரி (cess) இதுவரை எவ்வாறு வசூலிக்கப்பட்டது மற்றும் அது ஏன் இப்போது  தலைப்புச் செய்திகளில் உள்ளது? பெங்களூரு அதன் திடக்கழிவுகளை எவ்வாறு நிர்வகிக்கிறது. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் வரப்போகிறது?


ப்ருஹத் பெங்களூரு மஹாங்கரா பாலிகே (Bruhat Bengaluru Mahangara Palike (BBMP)) ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ₹100 என்ற திடக்கழிவு மேலாண்மை (SWM) மேல் வரி வசூலிக்கத்  திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  திடக்கழிவு மேலாண்மை மேல் வரி ஏன் வசூலிக்கப்படுகிறது என்பதை அறிவது முக்கியம். மேல் வரி (cess) திடக்கழிவுகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.


இந்தியாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) திடக்கழிவு மேலாண்மையை நிர்வகிப்பதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. திடக்கழிவு மேலாண்மை மேல் வரி என்பது இந்த சவால்களை தீர்ப்பதற்கான ஒரு வழியாகும்.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் அடிப்படையில் பயனர் கட்டணம் அல்லது  திடக்கழிவு மேலாண்மை மேல் வரியை வசூலிக்கின்றனர். பொதுவாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை மேல் வரி சொத்து வரியுடன் சேர்த்து மாதத்திற்கு ₹30-50 வசூலிக்கப்படுகிறது.


இப்போது, ​​நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  இந்த வரி விகிதங்களைத் திருத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றன. மொத்தமாக கழிவுகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கு அதிகக் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளனர். இது திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட உதவும்.


செலவுகள் என்ன?


திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகள் சிக்கலானவை மற்றும் அதை நிர்வகிப்பதற்கு நிறைய வளங்கள் தேவைப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தொழிலாளர்களில் 80% மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளுக்காக தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் 50% வரை பயன்படுத்துகின்றன.


பெங்களூரில், ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.6 கிலோ கழிவுகளை உருவாக்குகிறார்கள். இது ஆண்டுக்கு 0.2 டன்கள் வரை சேர்க்கிறது. முழு நகரமும் தினமும் சுமார் 5,000 டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளை நிர்வகிக்க, சுமார் 5,000 வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் வாகனங்கள், 600 சுருக்கி எந்திரங்கள் (compactors) மற்றும் சுமார் 20,000 தூய்மை பணியாளர்கள் (Paurakarmikas) தேவை.


திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகளில் நான்கு பகுதிகள் உள்ளன: திடக்கழிவு மேலாண்மைச் சேவைகளில் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் அகற்றல் ஆகியவை அடங்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பு மற்றும் போக்குவரத்தை ஒரு குழுவாகவும், பதப்படுத்துதல் மற்றும் அகற்றலை மற்றொரு குழுவாகவும் இணைக்கின்றன. சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு நிறைய வளங்களும் உழைப்பும் தேவை. திடக்கழிவு மேலாண்மை பட்ஜெட்டில் 85-90% வரை ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒதுக்கப்பட்டதில் 10-15% மட்டுமே கழிவுகளை பதப்படுத்தவும் அகற்றவும் செலவிடப்படுகிறது.


சவால்கள் என்ன?


இந்திய நகரங்களில், திடக்கழிவுகள் முக்கியமாக 55-60% ஈரமான மக்கும் பொருள் மற்றும் 40-45% மக்காத பொருள். உலர் கழிவுகளில் 1-2% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ளவை மறுசுழற்சி செய்ய முடியாதவை மற்றும் மக்காதவை.


55% ஈரக் கழிவுகளை கரிம உரமாகவோ அல்லது உயிர் வாயுவாகவோ மாற்ற முடியும் என்றாலும், உண்மையான மகசூல் 10-12% மட்டுமே. இந்த குறைந்த மகசூல் திடக்கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் மற்றும் உயிர்வாயு உற்பத்தி ஆகிய இரண்டையும் நிதி ரீதியாக நீடிக்க முடியாததாக ஆக்குகிறது.


நிதி சவால்களுக்கு கூடுதலாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் SWM சேவைகளில் உள்ள பிற சிக்கல்களைக் கையாளுகின்றன:


           1. அவர்கள் திறந்த புள்ளிகள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.


2. அவர்கள் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை (open littering) தடுக்க            

    வேலை செய்கிறார்கள்.


3. கழிவு உற்பத்தி (waste generation) பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.


4. அவர்கள் தொடர்ந்து துப்பறவு பணிகளை மேற்கொள்கின்றனர்.


மேலும், மக்காத மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத உலர் கழிவுகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், ஜவுளிக் கழிவுகள் மற்றும் மந்தமான பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது விலை அதிகம். நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் அல்லது கழிவுகளில் இருந்து எரிசக்தித் திட்டங்களுக்கு இந்தக் கழிவுகள் நீண்ட தூரம், பொதுவாக 400-500 கி.மீ தூரம் கொண்டு செல்லப்பட வேண்டும்.


பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில், திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management (SWM)) சேவைகளுக்காக அவர்கள் தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 15% - ₹11,163 கோடியில் ₹1,643 கோடியை ஒதுக்குகிறார்கள். இருப்பினும், இந்த சேவைகள் மூலம் அவர்கள் ஆண்டுக்கு சுமார் ₹20 லட்சம் மட்டுமே திரும்பப் பெறுகிறார்கள். சிறிய நகரங்கள் தங்கள் பட்ஜெட்டில் 50% வரை திடக்கழிவு மேலாண்மைக்கு செலவு செய்யலாம். ஆனால், அவற்றின் வருவாய் குறைவாக உள்ளது. இதனால் தான் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த செலவுகளை ஈடுகட்ட திடக்கழிவு மேலாண்மை  மேல் வரி வசூலிக்கின்றன.

தீர்வு என்ன?


கழிவுகளை சேகரித்தல் மற்றும் கொண்டு செல்வது பணத்தைக் கொண்டு வராது, ஆனால், செலவுகளைக் குறைக்கவும் கழிவு மேலாண்மைக்கான கட்டணங்களைக் குறைக்கவும் வழிகள் உள்ளன. கழிவுகள் உருவாகும் இடத்தில் பிரிக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் குறைவாகப் பயன்படுத்தவும். உள்ளூரில் குப்பைகளை உரமாக்கத் தொடங்குங்கள், குப்பை போடவேண்டாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுங்கள். பெரிய கழிவுகளை உருவாக்குபவர்கள் தங்கள் கழிவுகளை சொந்தமாக கையாளச் செய்யுங்கள்.


ஒரு சமநிலையான அணுகுமுறை, சிறிய பயனர் கட்டணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் விஷயங்களை நன்றாக இயக்குதல், நமது நகரங்களை தூய்மையாக வைத்திருக்க உதவும்.


புஷ்கரா எஸ்.வி., பெங்களூருவில் உள்ள மனித குடியேற்றங்களுக்கான இந்திய நிறுவனத்தில் (Indian Institute for Human Settlements)  பணிபுரிகிறார்.


Share:

திருமணச் சட்டத்தின் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிமைகளைப் பறிக்கிறது - மனுராஜ் சண்முகசுந்தரம், ஹரிப்ரியா வெங்கடகிருஷ்ணன்

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவு சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) அடிப்படைக்கே எதிரானது.


மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், மதங்களுக்கு இடையேயான திருமணங்கள் பற்றிய தவறானப் புரிதல்களுக்கு வழிவகுக்கும் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act), 1954 பற்றிய சந்தேகங்களை எழுப்பும் உத்தரவை பிறப்பித்தது. இதை தெளிவுபடுத்தப்படாவிட்டால், இது மதங்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு சட்டப்பூர்வ விருப்பத்தை வழங்கும் சட்டத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.


உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புக் கோரி திருமணமாகாத இந்து-முஸ்லிம் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவில் இந்தப் பிரச்சினை எழுந்தது. விசாரணையின் போது, இந்த சட்டத்தின் கீழ் "ஒரு முஸ்லிம் பையனுக்கும் ஒரு இந்து பெண்ணுக்கும்" இடையிலான திருமணம் செல்லுபடியாகுமா என்று நீதிமன்றம் விவாதித்தது. அவர்களின் திருமணம் செல்லாது என்று கூறிய நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு ஒருவரின் துணையைத் தேர்ந்தெடுப்பதை ஆதரிக்கும் சட்டக் கொள்கைகளில் பின்னடைவைக் குறிக்கிறது மற்றும் சிறப்பு திருமணச் சட்டத்தின் நிறுவப்பட்ட இலக்குகளை சவால் செய்கிறது.


தவறான பரிசீலனைகள்


தம்பதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் போலீஸ் பாதுகாப்புக் கோரி மனுத் தாக்கல் செய்யும்போது, ​​அவர்களின் உரிமை மீறல்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் அளவை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்கிறது. பொதுவாக, இந்த மனுக்கள் கலப்பு அல்லது சாதிகளுக்கு இடையே திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளிடமிருந்து வருகின்றன. சமீபகாலமாக, சமூகத்திலிருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திருமணமாகாத நபர்களுக்கு உயர்நீதிமன்றங்களும் பாதுகாப்பு வழங்கத் தொடங்கியுள்ளன.


உதாரணமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ஒரே பாலின தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்களை ஒப்புக்கொண்டார். ஒரு பெண் ஒருபாலின தம்பதியினரின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை அங்கீகரிப்பதற்காக அவர் காவல்துறை பாதுகாப்பை வழங்கினார்.


இதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் லைவ்-இன் தம்பதிக்கு (live-in couple) போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. முக்கியப் பிரச்சினை அவர்களின் உறவு சட்டப்பூர்வமானது அல்ல, இது சட்டத்தின் கீழ் சிவில் அல்லது குற்றவியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மாறாக அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை.


இதற்கு நேர்மாறாக, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பாதுகாப்புக் கோரும் ஒரு கலப்பு திருமணத் தம்பதிகள் எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்துகளை மதிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, அது அவர்களின் வரவிருக்கும் திருமணத்தின் தகுதிகளை ஆராய்ந்தது. திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும், அரசியலமைப்பின் 21வது பிரிவின்கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் பாதுகாப்புக்கான அவர்களின் உரிமை பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும்.


சிறப்புத் திருமணச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல்


மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு சிறப்பு திருமணச் சட்டம் குறித்து பல சிக்கல்களை எழுப்புகிறது. முகமது சலீம் vs சம்சுதீன் 2019 (Mohammed Salim vs Shamsudeen (2019)) என்ற உச்சநீதிமன்ற வழக்கை இது மேற்கோள் காட்டியது, இது முகமதிய சட்டங்களின்கீழ் முஸ்லீம் ஆண்களுக்கும் இந்து பெண்களுக்கும் இடையிலான திருமணங்களில் சொத்து வாரிசு தொடர்பானது. மதங்களுக்கு இடையேயான திருமணங்களின் செல்லுபடியை தீர்மானிக்கவோ அல்லது போலீஸ் பாதுகாப்பை தீர்மானிக்கவோ இந்த வழக்கு பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடாது.


இந்த உத்தரவு சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 4க்குள் செல்கிறது, இது "தடைசெய்யப்பட்ட உறவுமுறைகளுக்கு" உள்ள நபர்களுக்கு இடையேயான திருமணங்களை விலக்குகிறது. மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இந்தத் தடையை நம்பியிருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் உண்மைக் குறைபாடுடையது, ஏனெனில் இந்த விதி உறவினர்களுக்கிடையேயான திருமணங்களை மட்டுமே தடுக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தச் சட்டத்தின் நோக்கம் எந்த இரு இந்திய நாட்டினருக்கும் இடையே திருமணத்தை எளிதாக்குவதாகும் என்பதை உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கத் தவறிவிட்டது.


இன்றைய இந்தியா மற்றும் சிறப்புத் திருமணங்கள்


இன்றைய சமூக மற்றும் அரசியல் சூழலில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது. பெற்றோரின் அனுமதியின்றி மதங்களுக்கு இடையேயான மற்றும் சாதிகளுக்கிடையேயான கலப்புத் திருமணங்களை குறிவைக்கும் விழிப்புணர்வு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. லவ் ஜிகாத், சதி மற்றும் வலதுசாரி பிரச்சாரம் போன்ற காரணிகள் இந்த விழிப்புணர்வைத் தூண்டி, அரசியலமைப்பு ஒழுக்கத்தை நேரடியாக சவால் செய்கின்றன. இதற்கிடையில், சிறப்புத் திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பிற்கு முரணான அம்சங்களை சவால் செய்யும் பல மனுக்கள், முன் அறிவிப்பு தேவைகள் போன்றவை, உச்சநீதிமன்றத்தில் தீர்வுக்காக காத்திருக்கின்றன. இந்த வழக்குகள் தனிநபர் சுயாட்சி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகின்றன. 


ஷஃபின் ஜஹான் vs அசோகன் வழக்கில் கே.எம். (2018) (Shafin Jahan vs Asokan K.M. (2018)), உச்சநீதிமன்றம் "திருமணத்தின் நெருக்கம்" தனிப்பட்டது மற்றும் மீற முடியாது என்று தீர்ப்பளித்தது. நீதிபதி டி.ஒய். தீர்ப்பை எழுதிய சந்திரசூட், சமூக அங்கீகாரம் தனிப்பட்ட முடிவுகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும் அரசியலமைப்புச் சட்டம் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.


ஷஃபின் ஜஹான் வழக்கில், நம்பிக்கை அல்லது சாதி அடிப்படையிலான விதிகளைக் கருத்தில் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபரின் முழுமையான உரிமையை நிறுவிய முக்கிய சட்டக் கோட்பாடு முதன்மைப்படுத்துகிறது. சமீபத்தில், இந்தத் தீர்ப்பின் உணர்வு கவனிக்கப்படாமல் உள்ளது, இது நாடு முழுவதும் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றங்கள், சட்ட முன்னேற்றம் சுயாட்சி, தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.


மனுராஜ் சண்முகசுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) ஊடக செய்தித் தொடர்பாளராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார். ஒரே பாலின தம்பதியினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கிய வழக்கில் அவர் மனுதாரர்கள் சார்பில் ஆஜரானார். ஹரிப்ரியா வெங்கடகிருஷ்ணனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.


Share: