பொருளாதாரத்தை முறைப்படுத்துவது ஏன் இந்தியாவின் வளர்ச்சிக் கட்டமைப்பில் முக்கியமானது? -ரித்விகா பட்கிரி

முறைப்படுத்துதல் (Formalisation) என்பது சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுதல், அதிக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. புதிய தொழிலாளர் சட்டங்கள் (new labour codes), இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகக் காணப்படுகின்றன. ஆனால், கிக் தொழிலாளர்களுக்கு (gig workers) சட்ட அங்கீகாரம் வழங்குவது அவர்களுக்கு உண்மையிலேயே சமூகப் பாதுகாப்பை வழங்குகிறதா?


இந்தியாவின் 570 மில்லியன் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் முறைசாரா துறையில் (informal sector) பணிபுரிகின்றனர். இந்தச் சூழ்நிலையில், முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இந்தியாவின் வளர்ச்சி கட்டமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகின்றன.


முறைப்படுத்துதல் என்பது சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுதல், அதிக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர்களுக்கான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அரசாங்கம் இதை நான்கு வழிகளில் செயல்படுத்தி வருகிறது. அவை சட்ட சீர்திருத்தங்கள் (legal reforms), அமைப்பு ரீதியான மாற்றம் (systemic transformation), துறைசார் தலையீடுகள் (sectoral interventions) மற்றும் சமூகப் பாதுகாப்பு (social protection) ஆகும். சட்டச் சீர்திருத்தங்களில் தொழிலாளர் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் அடங்கும்.


புதிய தொழிலாளர் சட்டங்கள், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு (gig and platform workers) எப்படிப் பாதுகாப்பை வழங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம். ஆனால் முதலில், 29 சட்டங்களை ஒருங்கிணைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகள் பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.


புதிய தொழிலாளர் சட்டங்கள் (New labour codes)


மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Union Ministry of Labour and Employment), தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்வாங்கி ரத்து செய்து, நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை அறிவித்துள்ளது. அந்த 4 சட்டங்கள் - ஊதியச் சட்டம்-2019 (Code on Wages), தொழில்துறை உறவுகள் சட்டம்-2020 (Industrial Relations Code), சமூகப் பாதுகாப்பு சட்டம்-2020 (Code on Social Security) மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code) ஆகும்.


ஊதியச் சட்டம்-2019 (Code on Wages)


ஊதியச் சட்டம் முன்னர் இருந்த நான்கு சட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் 1948-ம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டமும் (Minimum Wages Act) அடங்கும். மேலும், பெண்களுக்கு சம ஊதியம் வழங்கும் ஏற்பாட்டிற்காக இது பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு முக்கியமான கவலை மத்திய அரசு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளைக்கு ரூ.168 என நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகை ஏறக்குறைய அனைத்து மாநில அரசுகளும் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவானது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்களைக் குறைக்க வழிவகுக்கும் என்று சில வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


தொழில்துறை உறவுகள் சட்டம்-2020 (Industrial Relations Code)


இது தற்போதுள்ள மூன்று சட்டங்களை ஒருங்கிணைத்து, ஆட்குறைப்பு, வேலைநிறுத்தங்கள், பணிநீக்கம் போன்ற விஷயங்களைக் கையாள்கிறது. முந்தைய தொழிலாளர் சட்டங்களின்கீழ், 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பணிநீக்கம் அல்லது மூடுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது. புதிய சட்டமானது, இந்த வரம்பை 300 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்தச் சட்டம் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்குவதையும், வேலைநிறுத்தங்களையும் ஊக்கப்படுத்தவில்லை என்று சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சமூகப் பாதுகாப்பு சட்டம்-2020 (Code on Social Security)


இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ள ஒன்பது சட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இந்தச் சட்டம், 'கிக் பணியாளர்கள்' மற்றும் 'டிஜிட்டல் இயங்குதள பணியாளர்களை' முதன்முறையாக அங்கீகரித்து வரையறுத்ததற்காகப் பாராட்டப்பட்டுள்ளது. ஒரு ‘கிக் பணியாளர்’ என்பவர், ஒரு வேலையைச் செய்பவர் அல்லது ஒரு வேலை ஏற்பாட்டில் பங்கேற்பவர் என வரையறுக்கப்படுகிறார். இத்தகைய நபர், பாரம்பரிய முதலாளி-ஊழியர் உறவுக்கு வெளியே இந்தச் செயல்பாடுகள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.


இருப்பினும், புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு விமர்சனம் என்னவென்றால், இந்தச் சட்டம் 'கிக் பணியாளர்களை' (gig workers) 'ஊழியர்களாக' (employees) வரையறுக்கத் தவறிவிட்டது. இதனால், Zomato மற்றும் Swiggy போன்ற தளங்கள் பணியாளர்களுக்கு நிலையான பங்களிப்புகளைச் செலுத்தக் தேவையில்லை. இந்தச் சட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை ஒரு சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.



தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code)


இது தற்போதுள்ள 13 சட்டங்களுக்குப் பதிலாக வருகிறது. மற்றும் 'தொழிற்சாலை' (factory) என்ற வார்த்தையை மறுவரையறை செய்கிறது. இந்த மறுவரையறையின்படி, ஒரு 'தொழிற்சாலை' (factory) என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடனோ அல்லது மின்சாரம் இல்லாமல் 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுடனோ இயங்கும் ஒரு உற்பத்தி வளாகத்தைக் குறிக்கிறது. இதன் மூலம், தொழிலாளர்களின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான சிறிய உற்பத்தி அலகுகள் தொழிலாளர் ஒழுங்குமுறைகளின் வரம்பிற்கு வெளியே உள்ளன.


நான்கு தொழிலாளர் சட்டங்களும் சட்டமன்ற அதிகாரங்களை நிர்வாகத் துறைக்கு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) மாற்றுவதைக் குறிக்கின்றன. இது, முன்பு 'சட்டங்களில்' குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான விவரங்களை, இப்போது அறிவிப்புகள் மூலம் மாற்றியமைக்க முடியும் என்பதையும் குறிக்கிறது. இதனால் நாடாளுமன்ற ஒப்புதலுக்கான தேவையைக் குறைக்கிறது.


இருப்பினும், புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.


முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல்


முறைசாரா துறையின் நிலையற்றத் தன்மை, குறிப்பாக அதில் ஆதிக்கம் செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கோவிட்-19 பெருந்தொற்றால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2021-ல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இ-ஷ்ரம் தேசிய தரவுத்தளத்தை (e-SHRAM National Database) அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்குகிறது மற்றும் முறைசாரா தொழிலாளர்களைக் கணக்கெடுப்பதையும், அவர்களை சமூகப் பாதுகாப்புப் பலன்களுக்குத் தகுதியாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய அமைப்பு ரீதியான தலையீடாக அமைகிறது.


நவம்பர் 2025 நிலவரப்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அணுகலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தில் 31.38 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், அழகுக்கலை நிபுணர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்குவர். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, கைபேசி மற்றும் ஒரு வங்கிக் கணக்கு (இரண்டும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்) தேவை. இந்தத் தேவை, வங்கி/நிதி உள்ளடக்கம் மற்றும் குடிமக்களின் டிஜிட்டல் அடையாளம் குறித்த முந்தைய அரசாங்கக் கொள்கைகளுடன் தரவுத்தளத்தை ஒருங்கிணைக்கிறது.


இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வது, தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் (Pradhan Mantri Suraksha Bima Yojana) கீழ் காப்பீட்டை வழங்குகிறது. இந்தத் திட்டம் விபத்து காப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்குகிறது. விபத்தினால் ஏற்படும் எந்தவொரு ஊனத்திற்கும் ரூ. 1 லட்சம் வழங்குகிறது. இந்த இணையதளம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G)), அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Yojana) போன்ற பல திட்டங்களையும் பட்டியலிடுகிறது. இருப்பினும், இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வது, குறிப்பிடப்பட்ட அனைத்துத் திட்டங்களிலிருந்தும் நேரடிப் பலன்களை வழங்குவதில்லை. ஏனெனில், தொழிலாளர்கள் ஒவ்வொரு திட்டத்தின் அந்தந்த இணையதளங்களிலும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.


முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கான மற்ற அமைப்பு ரீதியான முயற்சிகளில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) அமலாக்கமும் அடங்கும். துறைசார் தலையீடுகள், உத்யம் இணையதளத்தில் (Udyam portal) பதிவு செய்வதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) புத்துயிர் அளித்தல், தளர்வான விதிமுறைகள் மூலம் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதி உதவி, வரி விலக்கு மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister’s Employment Generation Programme (PMEGP)), பிரதான் மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme (PMFME)) மற்றும் முத்ரா கடன்கள் (Mudra loans) போன்ற பிற கடன் சார்ந்த திட்டங்களுடன் MSME-களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.


'அங்கீகரிக்கப்பட்ட' கிக் பணியாளர்கள், முழுமையான பணியாளர் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு


கூடுதலாக, முறைசாரா பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பில் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) போன்ற பல திட்டங்கள் அடங்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) பலன்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, "இந்தியாவின் பணியாளர்களின் போக்குகள் மற்றும் முறைப்படுத்துதலில் குவெஸ் கார்ப் பங்கு" (India’s Workforce Trends & Quess Corp Role in Formalisation) குறித்த குவெஸ் கார்ப்-ன் சமீபத்திய அறிக்கையானது, 2024-25 நிதியாண்டில் EPFO ​​தனது வரலாற்றிலேயே அதிகபட்ச உறுப்பினர்களைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது. புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2019 நிதியாண்டில் 61 லட்சத்திலிருந்து 2025 நிதியாண்டில் 139.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, முறைசாரா தொழிலாளர்களை இலக்காகக் கொண்ட முறைப்படுத்தும் கொள்கைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.


முறைப்படுத்துதல் செயல்முறையின் முக்கியத்துவத்தில் கண்ணியமான வேலைவாய்ப்பை வழங்குவது உள்ளது. உத்யம் பதிவு (Udyam registration), மின்னணுமயமாக்கல் (digitisation) மற்றும் இ-ஷ்ரம் பதிவு (e-SHRAM registration) போன்ற முன்முயற்சிகள் இதை நோக்கிய முக்கியமான முயற்சிகளாகும். இருப்பினும், முறைப்படுத்துதலை வெறும் பதிவுகளின் எண்ணிக்கை அல்லது அளவுசார் குறிகாட்டிகள் மூலம் மட்டும் மதிப்பிட முடியாது. மாறாக, அது குறைந்த பாதுகாப்பின்மை, சிறந்த ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். புதிய தொழிலாளர் சட்டங்களுடன் கூடிய கிக் பணியாளர்களின் நிலை, முறைசாரா பணியாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றிருந்தபோதிலும், போதுமான பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது.


சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020 (Social Security Code) கிக் பணியாளர்களை அங்கீகரித்து, சமூகப் பாதுகாப்புப் பலன்களை நீட்டித்தாலும், கிக் பணியாளர்கள் பெறக்கூடிய எந்தவொரு காலக்கெடுவையோ அல்லது குறிப்பிட்ட பலன்களையோ அது குறிப்பிடவில்லை. இந்தச் சட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை – கிக்/பிளாட்ஃபார்ம் பணியாளர்களுக்குச் செய்யப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய பணம் வழங்களில் 5 சதவீத வரம்பிற்கு உட்பட்டு ஒரு சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்தப் பங்களிப்பு, ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மற்றும் நிலையற்ற தொழிலாளர் குழுவிற்கு மிகக் குறைந்த பலனையே வழங்கும். இதனால், கிக் பணியாளர்கள் "அங்கீகரிக்கப்பட்டவர்களாக" மாறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் முழுமையான தொழிலாளர் உரிமைகளோ அல்லது முதலாளியால் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்போ கிடைக்கவில்லை.


மற்ற கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும்


மேலும், கிக் பணியாளர்கள் போக்குவரத்து, இணையம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான செலவுகள் உட்பட, செயல்பாட்டின் அதிக செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தச் சூழலில், கட்டாயப்படுத்தப்பட்ட பங்களிப்பு போதுமானதாகத் தெரியவில்லை. மிகக் குறைந்த பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது. மேலும், இது அர்த்தமுள்ள சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் வெகு தொலைவில் உள்ளது.


அதேநேரத்தில், நிரந்தரப் பணியாளர்களுக்கும், கிக் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி அதிகளவில் உள்ளது. குறிப்பாக, பெண் கிக் பணியாளர்கள் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத வேலைகளின் "இரட்டைச் சுமை" (double burden) காரணமாக பாதிக்கப்படக்கூடியவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் உள்ள கிக் பணியாளர்கள் அதிகப்படியான வேலைப்பளுவைக் கொண்டுள்ளனர் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இது தொழிலாளர் சட்டங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.


கூடுதலாக, கிக் வேலைகள் அல்காரிதம்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. பிளாட்ஃபார்ம் செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படையாக இருப்பதில்லை. இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து, "மேன்மைப்படுத்தப்பட்ட முறைசாரா மயமாக்கல்" என்று விவரிக்கப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கின்றன. இதில், தொழிலாளர்களின் கணக்குகள் தன்னிச்சையாக முடக்கப்பட்டாலோ அல்லது வேலை ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டாலோ அவர்களுக்கு முறையிட வழியில்லை. இந்தச் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் அது கிக் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்கள், முழு வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் அல்காரிதமிக் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் முதலாளியின் மீது சுமத்துகிறது.


குறிப்பிடும்படியாக, புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கியமான தொடக்கத்தைக் குறிக்கின்றன. இருப்பினும், முறைப்படுத்துதல் என்பது உத்யம் மற்றும் இ-ஷ்ரம் பதிவுகளின் எண்ணிக்கையைவிட மேலானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அது தொழிலாளர்களுக்கு கண்ணியமான வேலை மற்றும் மரியாதையான வாழ்க்கையை வழங்குவது பற்றியது. தற்காலிகப் பணியாளர்களை அங்கீகரிப்பது ஒரு முக்கியமான படியாக இருந்தாலும், மற்ற கட்டமைப்புரீதியான பாதிப்புகளும் கொள்கைரீதியான தலையீடுகளைக் கோருகின்றன.


ரித்விகா பட்ஜிரி, தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார்.

Original link:

Why formalisation of economy is central to India’s growth structure?


Share:

ஆரவல்லி மலைத்தொடர் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்? -ஜேக்கப் கோஷி

ஆரவல்லி மலைகளும் தொடர்களும் இந்திய-கங்கை சமவெளியின் பாலைவனமாவதை எவ்வாறு தடுக்கின்றன? மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (Central Empowered Committee) பரிந்துரைகள் என்னென்ன? ஆரவல்லி மலைகளுக்கு ஒரு சீரான வரையறையை (uniform definition) வகுப்பது ஏன் அவசியமாக இருந்தது? உச்சநீதிமன்றம் இந்த மலைத்தொடரில் சுரங்கத் தொழிலை முற்றிலுமாக தடை செய்துள்ளதா?


உச்சநீதிமன்றம், கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்களுக்கு ஒரே மாதிரியான வரையறையைத் தீர்மானித்தது, மேலும் டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் குஜராத் வரையிலான அதன் பகுதிகளுக்குள் புதிய சுரங்க குத்தகை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அந்த வீச்சின் முக்கியத்துவம் என்ன?


சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகவும், இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடராகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆரவல்லி மலைத்தொடர் இந்தோ-கங்கைச் சமவெளிகளைப் பாலைவனமாக மாறுவதிலிருந்து தடுக்கும் ஒரு முக்கியமான சூழலியல் தடையாகச் செயல்படுகிறது. இவை தார் பாலைவனம் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் நோக்கி கிழக்கே பரவுவதைத் தடுத்து, காலநிலையைச் சமநிலைப்படுத்தவும், பல்லுயிர்களை நிலைநிறுத்தவும், நிலத்தடி நீரின் அளவை பாதுகாக்க உதவுகின்றன. டெல்லியில் இருந்து குஜராத் வரை சுமார் 650 கி.மீ தூரத்திற்கு நீண்டுள்ள இந்த மலைத்தொடர், நீர் மீண்டும் நிரப்பும் அமைப்புகளை ஆதரிக்கிறது. மேலும் சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற நதிகளை உருவாக்குகிறது. இது மணற்கல் (sandstone), சுண்ணாம்புக்கல் (limestone), பளிங்குக்கல் (marble), கிரானைட் மற்றும் ஈயம், துத்தநாகம், செம்பு, தங்கம் மற்றும் டங்ஸ்டன் போன்ற கனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்தக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டாலும், கடந்த நான்கு தசாப்தங்களாக அளவுக்கு அதிகமான கல் மற்றும் மணல் குவாரிகள் காற்றுத் தரத்தை மோசமாக்கியதோடு, நிலத்தடி நீர் நிரப்பப்படுவதைக் கடுமையாகக் குறைத்துள்ளன. இதில் சில சுரங்கங்கள் சட்டவிரோதமானவை ஆகும். ஐ.நா.வின் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின்கீழ் (UN Convention to Combat Desertification) இந்தியா தனது கடப்பாடுகளின்படி, ஆரவல்லி மலைத்தொடர் போன்ற பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல்களைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


சுரங்கத் தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?


1990-களின் முற்பகுதியில் இருந்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கும் விதிகளை வகுத்துள்ளது, ஆனால் இவை பெரும்பாலும் மீறப்பட்டுள்ளன. 2009-ஆம் ஆண்டில், ஹரியானாவின் ஃபரிதாபாத், குருகிராம் மற்றும் மேவாட் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு உச்சநீதிமன்றம் முழுமையான தடை விதித்தது. 2024-ஆம் ஆண்டு மே மாதம், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கக் குத்தகைகளை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தியதுடன், அதன் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (Central Empowered Committee (CEC)) விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இந்த ஆய்வின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சில பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒரு விரிவான  ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆரவல்லி மலைத்தொடர் முழுவதையும் விஞ்ஞான ரீதியில் வரைபடமாக்குதல், சுரங்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஒரு பரந்த மதிப்பீடு, பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்கள், நீர்ப்பிடிப்புகள், புலிகள் வழித்தடங்கள், முக்கிய நிலத்தடி நீர் நிரப்பும் பகுதிகள் மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்குள் உள்ள பகுதிகள் போன்ற சுற்றுச்சூழல் உணர்திறன் நிறைந்த பகுதிகளில் சுரங்கத்திற்கு கடுமையான தடை போன்ற பரிந்துரைகளை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  மேலும், இது கல் உடைக்கும் அலகுகளின் (Stone-crushing units) மீதான விதிமுறைகளை இறுக்கப்படுத்தவும் வலியுறுத்தியது. முறையான வரைபடமாக்கல் மற்றும் மதிப்பீடுகள் முடியும் வரை புதிய குத்தகைகள் அல்லது புதுப்பித்தல்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றம் அதன் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாத உத்தரவில் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், குஜராத், இராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 29 மாவட்டங்களில், ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள ஐந்து கி.மீ. இடைவெளியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மத்திய அரசு ஆரவல்லி "பசுமைச் சுவர்" (Green Wall) திட்டத்தையும் தொடங்கியது. 2030-ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்க இந்தத் திட்டம் உதவும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.


ஏன் ஒரு சீரான வரையறை?


ஆரவல்லி மலைத்தொடர்களை அடையாளம் காண மாநிலங்கள் வெவ்வேறு மற்றும் முரண்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வன ஆய்வுக் கழகம் (Forest Survey of India (FSI)) போன்ற நிபுணர் அமைப்புகள்கூட 'ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்கள்' எதைக் குறிக்கிறது என்பதில் வேறுபட்ட வரையறைகளை வழங்கியுள்ளன. 2010-ஆம் ஆண்டில், வன ஆய்வுக் கழகமானது சரிவு (slope), அடிவாரப் பாதுகாப்புப் பகுதி (foothill buffer), மலைகளுக்கு இடையேயான தூரம் (inter-hill distance) மற்றும் உட்பட்ட பகுதி போன்ற அளவுருக்களைப் பயன்படுத்தி ஆரவல்லி மலைகளை வரையறுத்தது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, ஆரவல்லி மலைத்தொடருக்கான அறிவியல் பூர்வமான, ஒரே மாதிரியான வரையறையை உருவாக்க, சுற்றுச்சூழல் அமைச்சகம், வன ஆய்வுக் கழகம், மாநில வனத்துறைகள், இந்திய புவியியல் ஆய்வுத் துறை (Geological Survey of India) மற்றும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 2025-ஆம் ஆண்டில் சமர்ப்பித்ததுடன், 100-மீட்டருக்கு மேல் உள்ள மலைகளை மட்டுமே ஆரவல்லி மலைகளாகச் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தது. நீதிமன்றத்தின் நண்பர் (Amicus Curiae) கே. பரமேஸ்வர், இந்த வரையறை மிகவும் கட்டுப்பாடானது என்றும், இது தாழ்வான மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதித்து, அவற்றின் தொடர்ச்சியையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் என்றும் வாதிட்ட வேளையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, முந்தைய வன ஆய்வுக் கழகம் அளவுகோல் உண்மையில் மிகப்பெரிய பகுதிகளை விலக்கிவிடும் என்றும், எனவே 100-மீட்டர் அளவுகோல் அதிக பகுதிகளை உள்ளடக்கும் என்றும் வலியுறுத்தினார்.


உச்சநீதிமன்றத்தின்  வழிகாட்டுதல்கள் என்னென்ன?


ஆரவல்லி மலைத்தொடர் முழுவதற்கும் ஒரு விரிவான நிலையான சுரங்க மேலாண்மைத் திட்டம் (Management Plan for Sustainable Mining (MPSM)) தயாரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் திட்டமானது, சுரங்கம் தோண்டத் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தெளிவாகக் குறிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் சுரங்கம் அனுமதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண வேண்டும், உணர்திறன் கொண்ட வாழ்விடங்கள் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களை வரைபடமாக்க வேண்டும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் தாங்கும் திறனை மதிப்பிட வேண்டும், மேலும் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


சுரங்கத் தொழிலுக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை?


கடந்தகால அனுபவங்கள் காட்டுவது என்னவென்றால், மொத்தத் தடைகள் பெரும்பாலும் சட்டவிரோத சுரங்கங்களையும், வன்முறை மணல் மாஃபியாக்களையும், கட்டுப்பாடற்ற மணல் எடுப்பையும் அதிகரிக்கவே வழிவகுக்கின்றன. எனவே, நீதிமன்றம் சமநிலையான ஒரு அணுகுமுறையைத் தேர்வு செய்தது: ஏற்கனவே உள்ள சட்டப்பூர்வ சுரங்கங்கள் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் தொடர அனுமதிக்கப்படுகின்றன. அறிவியல் அடிப்படையிலான திட்டம் தயாராகும் வரை புதிய சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உணர்திறன் வாய்ந்த பகுதிகள் நிரந்தரமாக சுரங்கத்திற்கு தடைசெய்யப்பட்டவையாகவே இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Original link:

How is the Aravalli range to be protected?


Share:

இந்தியாவின் வெளிநாட்டு மசோதா புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது. -ரெஜிமோன் குட்டப்பன்

இந்தச் சட்டம் தொழிலாளர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், 1983-ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் நவீன வடிவம் என்ற பெயரில், செயல்திறன் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமான ஏற்பாடு ஆகும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதும், லட்சக்கணக்கான மக்கள் — குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் — கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆபத்தான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.


இவர்கள் இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள். வளைகுடா நாடுகளில் உயரமான கட்டிடங்கள் கட்டும் கட்டுமானத் தொழிலாளர்கள், அரபு நாடுகளில் வீடுகளை சுத்தம் செய்யும் வீட்டு உதவியாளர்கள், தென்கிழக்கு ஆசியாவில் தொழிற்சாலைகளில் பொருட்கள் தயாரிக்கும் ஊழியர்கள் ஆவர். இவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். இது குடும்பங்களுக்கு உதவுவதோடு, உலக வல்லரசாக உயர விரும்பும் இந்திய பொருளாதாரத்துக்கும் பங்களிக்கிறது. எனினும், தற்போது பாராளுமன்றத்தில் உள்ள வெளிநாட்டு இடம்பெயர்வு (வசதி மற்றும் நலன்) மசோதா, 2025, இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவில்லை. மாறாக, இது அவர்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிப்பதாகத்  தெரிவிக்கின்றனர். 

இந்தச் சட்டம், 1983 குடியேற்றச் சட்டத்தின் நவீன திருத்தம் என்று கூறிக்கொண்டு, “மேம்படுத்தல்” என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. “வசதி செய்தல்” என்று வாக்குறுதி அளித்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அலுவலக நடைமுறைகளுக்கே முன்னுரிமை அளித்து அவர்களை மேலும் பாதிக்கப்படுத்துகிறது. மாற்றங்கள் செய்யாமல் இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் உலகளாவிய தொழிலாளர் படையை இது இன்னும் பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 


முக்கியப் பிரச்சினைகள்


இந்த மசோதாவின் முக்கிய அம்சம்: வெளிநாட்டு (புலம்பெயர்) தொழிலாளர்களுக்கு இருக்க வேண்டிய சட்ட உரிமைகளைப் பறித்து, அவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும் வாய்ப்பை இழக்கச் செய்கிறது. 2021-ஆம் ஆண்டு வரைவு சட்டத்தில் குறைகள் இருந்தாலும், அது தொழிலாளர்களை சுயமாக செயல்படக்கூடியவர்களாகக் கருதியது. அதாவது, சுரண்டல்காரர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் நீதி கேட்க அவர்களுக்கு உரிமை அளித்தது. ஆனால் 2025-ஆம் ஆண்டு பதிப்பு இந்த உரிமையை முழுவதுமாக நீக்கிவிட்டது. இதனால் தொழிலாளர்கள், அலட்சியமாக இயங்கும் அரசு அமைப்பின் கருணையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இடப்பெயர்வில் கவனம் செலுத்துங்கள்


இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், இந்த மசோதா மிகவும் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கைவிட்டுவிடுகிறது. தொழிலாளர்களின் இடம்பெயர்வு பாலின அடிப்படையில் வேறுபடுகிறது; அதில் பெண்கள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். 2021 வரைவு மசோதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருந்தன. ஆனால் புதிய பதிப்பில் அதை “பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்” என்ற தெளிவில்லாத சொல்லால் மாற்றியிருப்பதால், அது பலவீனமடைந்துவிட்டது. இந்த தெளிவற்ற சொல், சட்டத்தை அமல்படுத்தும்போது தாமதம் ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கவும் வாய்ப்பளிக்கிறது.


மசோதாவில் மனிதக் கடத்தலைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறையை ஏற்படுத்துகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல; அவர்கள் பெற்றோரின் மக்கள்கள், மகள்கள். அவர்கள் அதிக ஆபத்தில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், அங்கு சுரண்டல் விதிவிலக்கல்ல — அது வழக்கமாகவே நடக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்தப் பாதுகாப்புகளை நீக்குவதால், மசோதா தொழிலாளர்களின் இடம்பெயர்வுக்கு உதவுவதில்லை; மாறாக, நவீன அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது.


இந்த மசோதா, ஆள்சேர்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்திய சுரண்டல் தடுப்பு வழிமுறைகளை அகற்றியதால், சுரண்டல் இப்போது தடையின்றி நடக்கிறது. 2021-ஆம் ஆண்டில் வெளிப்படையான கட்டண அறிவிப்பு கட்டாயம் என்று இருந்தது நீக்கப்பட்டுவிட்டது. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே கடன் சுமையால் மூழ்கிவிடும் நிலைக்கு ஒரு விதி முறைமைகள் இல்லாமல் போய்விட்டது.


இன்று, பீகாரின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, ரியாத்தில் “உறுதியான” வேலை என்று நம்பி, ஏமாற்றும் முகவருக்கு இலட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கலாம். அங்கு போனால், பாதி சம்பளத்துடன் மாற்றப்பட்ட ஒப்பந்தமே கிடைக்கும் — அல்லது அங்கு செல்லவே முடியாமலும் போகலாம்.


மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவர்களுக்கான “அங்கீகார” முறை பெரிய அளவில் மோசடிக்கு வாய்ப்பு அளிக்கிறது. குடியேற்றச் சோதனைச் சாவடிகள் மின்னணு ஒப்புதல்களால் மாற்றப்படுகின்றன — இது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கலாம், ஆனால் ஆபத்தான மற்றும் முறைசாரா ஒப்பந்தங்களுக்கு தள்ளப்படும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


வெளிநாடுகளில் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. 2021 வரைவுச் சட்டத்தில், வரவேற்பு, தகராறு தீர்வு, ஆவணப் புதுப்பித்தல் போன்ற பணிகளை தனியார் முகவர்களிடம் (agencies) ஒப்படைத்திருந்தது. ஆனால், இப்போதைய பதிப்பில், இந்தப் பொறுப்புகள் ஏற்கனவே அதிக வேலைச் சுமையும் போதிய வசதிகளும் இல்லாத நிலையில் உள்ள அரசு அமைப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.


புத்திசாலித்தனமான தீர்வு என்று சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு, உண்மையில் புலம்பெயர்ந்தோரின் தரவுகளை அவர்கள் ஒப்புதல் இல்லாமல் சேகரிக்கும் கண்காணிப்புக் கருவியாக மாறியுள்ளது. இது வெளிநாட்டில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இல்லாமல், அவர்களின் நடமாட்டத்தை அரசு கண்காணிப்பதற்காகவே உள்ளது. ஆனால் வெளிநாட்டு முதலாளிகள் மீது எந்த தண்டனையும் இல்லை. வாட்ஸ்அப் மோசடி வேலை வாய்ப்புகள் மூலம் தொழிலாளர் ஆட்சேர்ப்பு இணையவழி நடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களை முற்றிலும் புறக்கணிக்கிறது.


மறுஒருங்கிணைப்பு வீடு திரும்புவோருக்கு பலவீனமான ஆதரவாக  இருக்கிறது; இது சிறந்த தீர்வல்ல. மசோதா “பாதுகாப்பான திரும்புதல்” என்று பேசுகிறது, ஆனால் தொழில் பயிற்சி மற்றும் ஆலோசனைக்கான நிதியை குறைக்கிறது. மேலும், 182 நாட்களுக்குள் நாடுகடத்தப்படுபவர்களை “திரும்பி வராதவர்கள்” என்று வெளிப்படையாக நீக்குகிறது.


இந்த அதிக மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களை புறக்கணித்துவிட்டு, அதிகாரம் அனைத்தும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், உரிமைக் குழுக்களுக்கும் வெளிநாட்டு புலம்பெயர் கூட்டமைப்பில்  (Overseas Mobility Council) முக்கியத்துவம் இல்லை என்று கூறப்படுகிறது. 


2021 வரைவில் இருந்த மாநில முனைக் குழுக்கள் (State Nodal Committees) நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போது, முடிவுகள் வெகு தொலைவில் எடுக்கப்படுகின்றன. அபராதங்களும் பலவீனமாகவே உள்ளன: ஆள்சேர்ப்பு முகவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது; கடத்தல்காரர்களும் தவறாக நடத்தும் வெளிநாட்டு முதலாளிகளும் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.





செயல்பட வேண்டிய நேரம்


இந்தியாவின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் ஏற்றுமதிப் பொருள்கள் அல்ல என்று வாதிடப்படுகிறது. அவர்கள் நாட்டுக்கு இன்றியமையாதவர்கள், ஏனெனில் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை புறக்கணித்துவிட்டு, அவர்களின் பணப் பரிமாற்றங்கள் (remittances) மூலம் நாடு பெரும் பயனடைகிறது. 2025 மசோதா இந்த அநீதியை இன்னும் தீவிரமாக்கும் என்கின்றனர். அதனால், புலம்பெயர்ந்தோரின் தற்காப்புரிமையை மீட்டெடுக்கவும், வெளிப்படையான கட்டணங்களை உறுதி செய்யவும், வெளிநாடு சென்ற பிறகு பாதுகாப்புகளை வழங்கவும், குடிமைச் சமூகத்தின் பங்களிப்புடன் மத்திய கண்காணிப்பை வலுப்படுத்தவும், இழப்பீடு உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கவும் நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சட்டம் கடத்தலை தெளிவாக வரையறுக்க வேண்டும், “வேலை” என்பதை ஜிக் வேலைகள் (gig jobs) (நிரந்தர வேலைக்கு பதிலாக, குறுகியகால திட்டங்கள் அல்லது தற்காலிக பணிகள்)  வரை விரிவாக்க வேண்டும், மேலும் திரும்பிவரும் புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் மறு-ஒருங்கிணைப்பு (reintegration) திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இப்போது தேவை வெறும் வசதி அல்ல, உறுதியான பாதுகாப்பு என்கின்றனர். வெளிநாட்டில் பணம் சம்பாதித்து, உள்நாட்டில் குடும்பத்தை காப்பாற்றும் இந்தத் தொழிலாளர்களுக்கு இதைவிடக் குறைவாக கொடுப்பது சீர்திருத்தம் அல்ல – அது பெரிய அநீதியாகும்.


ரெஜிமோன் குட்டப்பன், ஒரு தொழிலாளர் இடம்பெயர்வு நிபுணர்.


Original link:

India’s Overseas Bill betrays migrant workers 


Share:

ஒரு இந்திய கடற்படைக் கப்பல் எவ்வாறு பண்டைய கடல்சார் மரபுகளை வெளிப்படுத்துகிறது? -மனஸ் ஸ்ரீவஸ்தவா

கப்பற்படையின் தைக்கப்பட்ட கப்பல் (stitched ship), பண்டைய கடல் வணிகப் பாதைகளை மீட்டெடுத்து ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளும்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய கடற்படையின் தைக்கப்பட்ட கப்பலான இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா (Indian Naval Sailing Vessel (INSV) Kaundinya) , டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி கார்வாரில் இருந்து போர்பந்தருக்குப் புறப்பட்டது. போர்பந்தரில் இருந்து, டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி ஓமனுக்கு ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 


2. இந்தியாவின் கடற்பயண மரபைக் கௌரவிக்கும் வகையில், இந்தக் கடற்பயணம் பண்டைய கடல் வணிகப் பாதைகளை மீட்டெடுக்கிறது.


3. அந்தக் கப்பல், அஜந்தா குகை ஓவியங்களில் காட்டப்பட்டுள்ள ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 


4. இதில் உலோக ஆணிகளுக்குப் பதிலாக பாரம்பரிய தையல் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் தேங்காய் நார், கயிறு, மரஇணைப்பு, இயற்கை பிசின்கள் மற்றும் பருத்திப் பாய்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 


5. இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா (Indian Naval Sailing Vessel (INSV) Kaundinya) மே மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பயணத்திற்கு முன்பு சோதனைகளுக்காக அது கார்வாரில் நிறுத்தப்பட்டிருந்தது.


6. இந்தத் திட்டம் இந்தியக் கடற்படை, கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹோடி புத்தாக்க (Hodi Innovations) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.


7. இந்திய கடற்படையைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழு இந்தக் கப்பலை இயக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  இவர்கள் பாரம்பரிய கைவினைஞர்களிடம் கயிறு பொருத்துதல், தச்சு வேலை போன்ற சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.


8. இந்தப் பாய்மரங்களில் கடம்ப வம்சத்தின் சின்னமான கண்டபெருண்டாவும் (இருதலைப் பறவை), சூரியனும் இடம்பெற்றுள்ளன.


9. வில்லில் சிம்ம யாளி உள்ளது, மற்றும் தளத்தில் ஹரப்பா பாணியிலான கல் நங்கூரம் உள்ளது.


10. இந்தக் கப்பலுக்குப் புகழ்பெற்ற இந்திய மாலுமியான கௌண்டின்யாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌண்டின்யா தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணித்தார் என்று ஒரு தொன்மக்கதை ஒன்று கூறப்படுகிறது. கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த பிறகு, அவர் ராணி சோமாவை மணந்து பூனன் (Funan) சாம்ராஜ்யத்தை நிறுவினார் என்றும் முதன்முதலில் தைக்கப்பட்ட கப்பல் (stitched ship) யோசனையை முன்வைத்தவருமான கௌண்டின்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்தக் கப்பலுக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் தெரிவித்தார்.


"தென்கிழக்கு ஆசியாவைப் பார்வையிட கடல்களைக் கடந்து உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முதல் இந்திய மாலுமி கௌண்டின்யா ஆவார்," என்று சன்யால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


11. ஐரோப்பியர்களின் காலனித்துவம் வந்தபிறகு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயன்பாட்டில் இருந்த பாய்மரக் கப்பல்கள் (dhows) படிப்படியாக குறைந்துவிட்டன. பீரங்கிகளின் பின்னுதைப்பை (recoil) தாங்கும் திறன் அவற்றுக்கு மிகக்குறைவாக இருந்ததால், பீரங்கிகளைப் பொருத்திப் போரிட அவை பொருத்தமற்றவையாக ஆகிவிட்டன.


12. இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) கௌண்டின்யா இந்தியாவின் பழங்கால கடல்சார் மரபுகளை வெளிப்படுத்துகிறது. இது வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் வரலாற்றுப் பங்கையும், நவீன கடல்சார் இராஜதந்திரத்தையும்  குறிப்பிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.


13.  பண்டைய காலத்தில் இருந்தே தைக்கப்பட்ட பாய்மரக்  கப்பல்கள் கடலைக் கடக்கப் பயன்பாட்டில் இருந்தன என்பது நமக்குத் தெரியும் என்றும் குஜராத்தில் இருந்து ஓமன், பஹ்ரைன், மெசோபடோமியா வரை இந்தியர்கள் வணிகத்திற்காகப் பயணம் செய்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆகவே, இப்படிப்பட்ட கப்பல்களை எப்படி செய்வது என்பது நமக்குத் தெரியும் என்று சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.


“பிரச்சனை என்னவென்றால், ஹரப்பா காலத்தில் கடலுக்குச் செல்லும் கப்பல்கள் எப்படி இருந்தன என்பதற்கு துல்லியமான பதிவுகள் எதுவும் இல்லை. பண்டைய கப்பலின் மிகத் தெளிவான முதல் சித்திரம் உண்மையில் அஜந்தா ஓவியம்தான், அது ஒரு வகையான வடிவமைப்பாகத் தொடங்கி அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டது. பிறகு யுக்திகல்பதரு போன்ற சில வரலாற்று நூல்கள் இருந்தன. இந்தியப் பெருங்கடலுக்கு வந்த வேறு நாடுகளைச் சேர்ந்த பண்டைய பயணிகளின் சாட்சியங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம், அவர்கள் இந்த தைக்கப்பட்ட கப்பல்களைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்,” என்றார் அவர்.


14. யுக்திகல்பதரு (Yuktikalpataru) என்பது போஜராஜாவால் தொகுக்கப்பட்ட சமஸ்கிருத நூலாகும். இது கப்பல் கட்டும் முறை, பல்வேறு வகை கப்பல்கள், அவற்றின் அளவுகள், பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.


இந்தியப் பெருங்கடல் கப்பல் சாகர் (Indian Ocean Ship (IOS சாகர்)) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் ஒரு முன்முயற்சியாகும். இதன்கீழ், இந்தியக் கடற்படைக் கப்பலான இந்தியக் கடற்படை கப்பல் சுனைனா (INS Sunayna), இந்தியா மற்றும் கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், செஷல்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் பணியாளர்களுடன் தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்படுகிறது.


ஆப்பிரிக்க நாடுகளுடன் நடத்தப்படும் ஒரு பெரிய பலதரப்பு கடல் பயிற்சிக்கு “ஆப்பிரிக்கா இந்தியா முக்கிய கடல்சார் ஈடுபாடு” (Africa India Key Maritime Engagement) என்று பெயர். இது சுருக்கமாக “AIKEYME” என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் சமஸ்கிருதத்தில் “ஒற்றுமை” ஆகும். இந்தப் பயிற்சி, பல்வேறு கடற்படைகளும் கடல்சார் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் முதல் பதிப்பை இந்தியக் கடற்படையும் தான்சானியா மக்கள் பாதுகாப்புப் படையும் (Tanzania Peoples’ Defence Force (TPDF)) இணைந்து நடத்தின.

Original link:

How is an Indian Navy ship showcasing ancient maritime traditions?


Share:

MGNREGA மறுசீரமைப்பு விளக்கம்: VB-G RAM G மசோதாவின் முக்கிய அம்சங்கள், முந்தைய திட்டத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பன குறித்து… -ஹரிகிஷன் சர்மா

முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவில் உள்ள முக்கிய மாற்றங்கள்: மாநிலங்களிடம் குறைந்த நிதி இருக்கும் நேரத்தில், அவற்றின் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும், இது 125 நாள் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பயனடைவதற்கான கால அளவையும் குறைக்கிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) மறுசீரமைப்பு விளக்கம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2005ஆம் ஆண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஊரக பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வலையாக (social security net) நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை திறம்பட மாற்றியமைக்க முன்மொழியும் ஒரு மசோதாவை அரசு கொண்டு வரப் பார்க்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) மசோதா அல்லது VB-G RAM G மசோதா, ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை ஆண்டுக்கு 100-லிருந்து 125-ஆக உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தில் ஒன்றிய அரசு பெரும்பாலான செலவை ஏற்றது போல் இல்லாமல், இந்த புதிய மசோதா நிதியை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இது மாநிலங்கள் மீது அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும்.


மேலும், முதன்முறையாக, இந்த மசோதா, அதிகபட்ச விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் இந்தத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் இருப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை என்று ஒன்றிய அரசால் கூறப்படுகிறது.


தற்போதைய ஊரகப் பகுதிகளில் உள்ள வேலை உறுதியளிப்பு கட்டமைப்பில் VB-G RAM G மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்கள் இங்கே:


உத்தரவாதமான கூலி வேலை நாட்கள் (Guaranteed wage employment days)


முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 5(1), திறமையற்ற உடல் உழைப்பைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில்  வசித்துவரும் குடும்பத்திற்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளித்தாலும், கிடைக்கும் வேலைகளைப் பல தொழிலாளர்கள் பகிர்ந்துகொள்வதால், மிகச் சில குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது.


உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில், ஒரு வீட்டிற்கு சராசரியாக வேலை நாட்கள் 50 மட்டுமே வேலை நாட்கள் கிடைத்தன.


உண்மையில், கடந்த நிதியாண்டில் 100 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாள் வேலை உச்சவரம்பை எட்டியுள்ளன. மொத்தம் 8.61 கோடி வேலை அட்டைகள் உள்ளன. இது வேலை செய்துவரும் 12.16 கோடி தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ளது..


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின் பிரிவு 3(1) ஒரு நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு "நூறு நாட்களுக்குக் குறையாத" வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆனால், ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ பிரத்யேகமாகக் கோரினால் தவிர, 100 நாட்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்கான தரவுகளைப் பதிவு செய்ய அந்தத் திட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு புதிய உச்சவரம்பாக மாறிவிட்டது.


இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தாண்டி கூடுதலாக 50 நாட்களுக்கு ஊதிய வேலைவாய்ப்பை அரசாங்கம் அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது வேறு ஏதேனும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஊரக பகுதிகளில், 100 நாள் வரம்பிற்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை அரசாங்கத்தால் வழங்க முடியும்.


நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா முன்மொழியும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, நிதிப் பகிர்வு முறை (fund-sharing pattern) ஆகும். MGNREGA போல் இல்லாமல், ஒன்றிய அரசு முழு ஊதிய மசோதாவையும் செலுத்துகிறது. VB-G RAM G திட்டத்தின்கீழ், ஊதிய சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.


ஏற்கனவே பல மாநிலங்களிடம் செலவிடுவதற்குப் போதிய நிதி இல்லாத நிலையில், ஒன்றிய அரசு இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறையை முன்மொழிந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு வரிகளை அதிக அளவில் பயன்படுத்தியதன் காரணமாக மாநிலங்களின் வருவாய்  குறைந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களின் நிதிநிலை நல்ல நிலையில் இல்லாத நிலையில், பல மாநிலங்கள் பணப் பரிமாற்றம் (cash transfers,) போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் உள்ளிட்ட அதிகரித்து வரும் கடன் மற்றும் கட்டாயப் பொறுப்புகளையும் எதிர்கொண்டுள்ளன.


கடந்த நித்தியாண்டின் செலவினத் தரவுகளின் அடிப்படையில், இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,000 கோடி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024-25-ஆம் ஆண்டு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. இந்தத் தொகையில் ஒன்றிய அரசு ரூ.85,640 கோடியை வழங்கியதுடன், ரூ.73,337 கோடி மதிப்பிலான முழு ஊதியச் செலவையும் செலுத்தியது.


புதிய மசோதாவின் பிரிவு 22(1) இதை "ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டம்" என்று கூறினாலும், பிரிவு 22(2) கூறுகிறது: இந்தச் சட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் (உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர்) ஒன்றிய அரசு 90 சதவீதமும், மாநிலங்கள் 10 சதவீதமும் நிதி வழங்கும். சட்டமன்றங்களைக் கொண்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் நிதி வழங்கும்.


சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, ஒன்றிய அரசு முழு செலவையும் ஏற்கும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டத்தின்கீழ், ஒன்றிய  அரசு செலுத்துகிறது.


திறமையற்ற உடலுழைப்பு வேலைக்கான முழுமையான ஊதிய மசோதா.


திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட (அட்டவணை II-இன்படி) இந்தத் திட்டம் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% வரை உள்ளடக்கியது.

நிர்வாகச் செலவுகளுக்காக மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் திட்டத்தின் மொத்த செலவில், திட்ட அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், மத்திய கவுன்சிலின் நிர்வாகச் செலவுகள், அட்டவணை II-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.


மாநில அரசுகள் இதற்கு பணம் செலுத்துகின்றன:


வேலையின்மை உதவித்தொகைக்கான செலவு


அட்டவணை II-ன்படி, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள 25% பொருள் செலவுகள், திறமையான மற்றும் ஓரளவு திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் தனித்தனியாக வழங்கப்படும்.


மாநில அரசுகளுக்கான நிர்வாகச் செலவுகள்.


‘இயல்பான ஒதுக்கீடு’: மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறை


புதிய “நெறிமுறை ஒதுக்கீடு” சூத்திரம், வளங்களை ஒதுக்கும் முறையை முற்றிலும் மேலிருந்து கீழான செயல்முறையாக (top-down process) மாற்றுகிறது. இந்த மசோதா இதை, “ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு” என்று வரையறுக்கிறது.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவின் பிரிவு 4(5)-ன் படி: ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசாங்கம் தான் வகுக்கும் விதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும்.


பிரிவு 4(6)-ன் படி, ஒரு மாநிலம் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால், ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, அந்த கூடுதல் செலவை மாநிலமே ஏற்க வேண்டும்.


நெறிமுறை அடிப்படையிலான (Normative allocation) நிதி ஒதுக்கீடு என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் (MGNREGA) தற்போது செயல்படும் விதத்திலிருந்து வேறுபட்டது. தற்போது, ​​மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசுக்கு ஒரு வருடாந்திர பணித் திட்டத்தையும் ஒரு 'தொழிலாளர் வரவுசெலவுத் திட்டத்தையும்' சமர்ப்பிக்கின்றன. மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டம், மக்களுக்கு எவ்வளவு திறனற்ற வேலை தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மாநிலம் அதைத் தொகுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. பின்னர், ஒன்றிய அரசு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.


இந்த விதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் அதிக தேவை உள்ள மாநிலங்களைப் பாதிக்கக்கூடும். 2024-25ஆம் ஆண்டில், 5.78 கோடி குடும்பங்கள் (மேற்கு வங்காளத்தைத் தவிர்த்து) ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்திற்கான தேவை அதிகமாக இருந்தது.


விவசாயப் பருவத்தின்போது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் இடைநிறுத்தம்.


வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதாவானது, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேலைவாய்ப்புத் திட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அனுமதிக்கிறது.


"இந்தச் சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் எதுவாக இருந்தாலும், விவசாயப் பருவங்களின் உச்சத்தில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை எளிதாக்கும் வகையில், துணைப்பிரிவு (2)-ன் கீழ் அறிவிக்கப்படும் உச்சத்தில் இருக்கும் பருவங்களில், இந்தச் சட்டத்தின்கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது" என்று வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மசோதாவின் பிரிவு 6(1) கூறுகிறது.


மாநிலங்கள் இந்த 60 நாள் காலக்கெடுவை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வேளாண்-காலநிலை மண்டலங்கள் (agro-climatic zones), உள்ளூர் விவசாய நடவடிக்கைகளின் முறைகள் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில், வெவ்வேறு பகுதிகளுக்கு அவை தனித்தனி அறிவிப்புகளை வெளியிடலாம்.


இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பது, விவசாயப் பணிகளுக்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. ஆனால், இது தொழிலாளர்கள் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தையும் குறைக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுவதால், இந்த விதி முக்கியத்துவம் வாய்ந்தது.


உதாரணமாக, காரீஃப் பருவத்தில் நெல் விதைப்பு காலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். அறுவடை செப்டம்பர் முதல் ஜனவரி வரை நடைபெறும்.


முக்கிய ரபி பயிரான கோதுமை விதைப்பு அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை தொடர்கிறது. அறுவடை பிப்ரவரி முதல் ஜூன் வரை நடைபெறும்.


உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டங்கள்


இந்த மசோதாவின்படி, புதிய திட்டத்தின்கீழ் உள்ள அனைத்துத் திட்டங்களும் கிராம அளவில் தொடங்கப்பட்டு, பின்னர் வட்டார, மாவட்ட மற்றும் மாநில நிலைகளில் ஒருங்கிணைக்கப்படும். பின்னர் இந்தத் திட்டம், நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தக்கூடிய திட்டங்களை உள்ளடக்கிய 'வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்பு அடுக்கு' (Viksit Bharat National Rural Infrastructure Stack) எனப்படும் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படும்.


வளர்ந்த இந்தியா தேசிய ஊரக உள்கட்டமைப்புத் திட்டம் நான்கு கருப்பொருள் சார்ந்த மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: அவை


(அ) ​​நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பு


(ஆ) அடிப்படை உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்


(இ) வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்பு


(ஈ) தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் ஆகும்.


இந்தத் திட்டங்கள் e PM Gati Shakti தேசிய முதன்மைத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.


வேலை அட்டைகளுக்குப் பதிலாக கிராமின் வேலைவாய்ப்பு (Gramin Rozgar) உத்தரவாத அட்டை


ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் திறமையற்ற உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு வயதுவந்த உறுப்பினருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்க வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) மசோதா வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக, அத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயதுகள் மற்றும் முகவரிகளைச் சமர்ப்பிக்கலாம்.


மேலும், தனிமையில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமைத் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகளை வழங்கும். இந்த அட்டைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவை ஒரு தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.


ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் தற்போதைய வேலை அட்டைகளைப் போல் இல்லாமல், கிராமின் வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு சரிபார்ப்பின் பின்னர் அதைப் புதுப்பிக்கலாம்.


அதிக அபராதம்


புதிய மசோதாவின் பிரிவு 27, விதிகளை மீறினால் அதிக அபராதம் விதிக்க வழங்குகிறது. அபராதம் முன்பு ரூ.1,000-ஆக இருந்தது; இப்போது அது ரூ.10,000-ஆக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.


ஆண்டு பட்ஜெட்


இந்த ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) அரசாங்கம் ரூ.86,000 கோடியை ஒதுக்கியுள்ளது. புதிய திட்டத்திற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் மொத்த ஆண்டுச் செலவை ₹1,51,282 கோடி என மதிப்பிட்டுள்ளது. மாநிலங்களின் பங்கு உட்பட இந்த திட்டத்திற்காக  ஒன்றிய அரசு ரூ.95,692 கோடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

original link:

MGNREGA Revamp Explained: Key features of VB-G RAM G Bill, how its different from earlier scheme.


Share: