130-வது அரசியலமைப்பு (திருத்த) மசோதா 2025-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன? - பிரியா குமாரி சுக்லா

சர்ச்சைக்குரிய 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தனது அறிக்கையை ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான குற்றங்களுக்காகத் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு நாடாளுமன்றக் குழு தங்களது அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்பது, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நடத்தப்படும் ஒரு வழக்கமான நடைமுறையாகும்.


முக்கிய அம்சங்கள்:


• பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது இதர அமைச்சர்கள் யாரேனும் கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவர்கள் தங்களது பதவியை தானாகவே இழப்பார்கள் என்ற சர்ச்சைக்குரிய முன்மொழிவு இந்த அறிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் சட்டம் அரசியல் பழிவாங்கல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான சில பாதுகாப்பு வழிமுறைகளும் இதில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


• ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், இந்த மசோதா பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


• மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். மேலும், இதனை விரிவாக ஆய்வு செய்வதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


• காங்கிரஸ் கட்சி உட்பட 'இந்தியா' கூட்டணியைச் (INDIA bloc) சேர்ந்த பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த நாடாளுமன்றக் குழுவின் கூட்டங்களைப் புறக்கணித்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளின் கவலைகளையும் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்காக மட்டுமே இந்த குழுவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் எனவே, இதில் பங்கேற்பது அர்த்தமற்றது என்றும் வாதிட்டனர்.


• குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே, வெறும் காவலில் வைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளைப் தண்டிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மற்றும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணானது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை, நாடாளுமன்றக் குழுவில் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


• 30 நாட்கள் என்பது ஒரு நபர் குறைந்தபட்சம் மூன்று முறையாவது பிணைக்கு (Bail) விண்ணப்பிப்பதற்குப் போதுமான கால அவகாசத்தை அளிக்கிறது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் 'இயற்கை நீதி கோட்பாட்டை' எந்தவிதத்திலும் மீறவில்லை என்று ஆளுங்கட்சித் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


• இருப்பினும், இந்த நாடாளுமன்றக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் — ஆளுங்கூட்டணி, எதிர்க்கட்சிகள் மற்றும் நடுநிலைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் இந்த மசோதாவின் வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்தப் பரிந்துரை அக்குழுவின் அறிக்கையில் ஒரு பகுதியாக இடம்பெறும். மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டம் எந்தெந்த வகையான குற்றங்களுக்குப் பொருந்தும் என்பதற்கான வரம்புகளையோ அல்லது தகுதிகளையோ நிர்ணயிப்பதற்கும் இக்குழு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2025-ஆம் ஆண்டின் 130-வது அரசியலமைப்பு (திருத்த) மசோதாவானது, ஒரு அமைச்சர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து                      30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கிறது. இந்த மசோதாவின்படி, பிரதமர் அல்லது முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், முறையே குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அந்த அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கலாம், அல்லது, அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருக்கும் 31-வது நாளில் தானாகவே பதவியை இழப்பார் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

Original articles : What are the key takeaways of 130th Constitution (Amendment) Bill, 2025? -Priya Kumari Shukla

Share:

இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் மின்-அட்டை (e-OCI Card) என்பது என்ன? -விஜய்தா சிங்

 மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை என்பது வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியாவிற்குள் வாழ்நாள் முழுவதும் பலமுறை நுழைந்து, எந்த விதமான காலவரம்பின்றி தங்க அனுமதிக்கும் சிறப்பு விசா (Lifelong Visa) ஆகும்.


தற்போதைய செய்தி: உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 30, 2026 அன்று மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையை (e-OCI) அறிமுகப்படுத்தினார். முழுமையான டிஜிட்டல் அமைப்பின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான OCI சேவைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட, குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சி இந்த அட்டை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை, 50 லட்சத்திற்கும் அதிகமான OCI அட்டைதாரர்களை பாதிக்கக்கூடும். தற்போது, மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகள் காகிதப் புத்தக (Paper Booklet) வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் (Overseas Citizen of India (OCI)) யார்?


இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காததால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைக் (passports) கொண்ட இந்திய வம்சாவளியினருக்கு சில வசதிகளை வழங்குவதற்காக, 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் (Citizenship Act) செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டில் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பிறகு இந்தியக் குடிமக்களாக இருந்தவர்கள் அல்லது அன்றைய தேதியில் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களாக இருந்தவர்கள், இந்தியா வெளிநாட்டுக் குடிமக்கள் அட்டையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார். இருப்பினும், பாகிஸ்தான் அல்லது வங்கதேச குடிமக்களாக இருப்பவர்கள், இருந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன், பாட்டி அல்லது கொள்ளுப் பாட்டன் ஆகியோர் அந்த நாட்டின் குடிமக்களாக இருந்தவர்கள் எனில் இதை பெறுவதற்கு தகுதி பெறமாட்டார்கள். OCI அட்டை என்பது வெளிநாட்டு இந்திய வம்சாவளியினர் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் வழங்கப்படும் ஒரு வாழ்நாள் விசா ஆகும். இது அவர்களைக் காவல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கிறது. வேளாண் நிலம் அல்லது தோட்டச் சொத்துக்களை வாங்குவதைத் தவிர்த்து, நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (Non-Resident Indians (NRIs)) இணையான சலுகைகளை இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் பெறுகின்றனர்.


மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையின் பல்வேறு அம்சங்கள் யாவை?


விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது, துணை ஆவணங்களைப் பதிவேற்றுவது, ஒப்புதல் கிடைத்த பிறகு டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அட்டையைப் பதிவிறக்கம் செய்வது என முழுமையான செயல்முறையையும் விண்ணப்பதாரர்கள் இணையவழியில் முடிக்க இந்த புதிய வசதி உதவும் என்று உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. ஏற்கனவே அட்டை வைத்திருப்பவர்களும் புதிய விண்ணப்பம் அல்லது நேரடி சரிபார்ப்பு இல்லாமல் தங்களின் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம். 20 வயதுக்குப் பிறகு புதிய கடவுச்சீட்டைப் பெறும்போது மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை கையேட்டை மீண்டும் பெறவேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், புதிய கடவுச்சீட்டு வழங்கப்படும் அனைத்து சூழல்களிலும் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் கடவுச்சீட்டு விவரங்களை இணைய வழியில் புதுப்பிக்க வேண்டும்.


இந்த மின்னணு அட்டைகள் நேரடி வருகையின் தேவையை நீக்குகின்றன. மொபைல் சாதனங்கள் மூலம் எந்த நேரத்திலும் அணுகலை அனுமதிக்கின்றன செயலாக்கத்தை விரைவுபடுத்துகின்றன, நேரடி ஆவணங்களைத் தொலைப்பது அல்லது சேதப்படுத்துவது போன்ற அபாயங்களை நீக்குகின்றன. மேலும், விரைவான குடிவரவு அனுமதியை வழங்குவதன் மூலம் சுமூகமான பயணத்திற்கு வழிவகுக்கின்றன என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு, மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை இணைய வழியில் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. காகித வேலை மற்றும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கிறது, தரவு மேலாண்மை மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பை வலுப்படுத்துகிறது. மேலும், விமான நிலையங்களில் நிகழ்நேர சரிபார்ப்புக்காக டிஜிட்டல் குடிவரவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், அடையாளத்தை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்க முடியும், பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், மோசடி நடைபெறும் அபாயமும் குறையும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.


பயனர்களிடம் ஏதேனும் கவலைகள் உள்ளனவா?


மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவு மற்றும் அதைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பயனர்கள் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாகப், பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த விண்ணப்பதாரர்களில் சிலர், ஆரம்பத்தில் பதிவு செய்யப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை இப்போது அணுக முடியாத நிலையில் உள்ளனர். பல மின்னஞ்சல் கணக்குகளைக் கையாள்வதில் சிரமப்படும் வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் வகையில், குடும்பத்தினர் அனைவரும் ஒரே பொதுவான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாமா என்றும் சிலர் கேட்டுள்ளனர். இணையதளம் அடிக்கடி முடங்குவதால் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் பயனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை பதிவின்போது மின்னஞ்சல் முகவரி எதுவும் பதிவு செய்யப்படாததால், தங்கள் விவரங்களை அணுகுவதிலோ அல்லது புதுப்பிப்பதிலோ சவால்களை எதிர்கொள்வதாகச் சில விண்ணப்பதாரர்கள் கூறியுள்ளனர்.


உள்துறை அமைச்சகம் என்ன விளக்கமளித்துள்ளது?


ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப்  பதிவின்போது பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை இப்போது அணுக முடியாத விண்ணப்பதாரர்கள், மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை இணையதளத்தின் (https://ociservices.gov.in/onlineOCI/) 'பல்வேறு சேவைகள்'  பிரிவின் கீழ் உள்ள 'மின்னஞ்சல் புதுப்பிப்பு வசதி'  மூலம் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை மாற்றிக்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார். மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப்பதிவுகளில் புதிய மின்னஞ்சல் முகவரி புதுப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் அந்தப் புதிய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தித் தங்கள் கணக்கை பயன்படுத்தி, இணையதளத்திலிருந்து மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.


முதியவர்கள் மற்றும் வயதான விண்ணப்பதாரர்கள் உட்படக் குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கான மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை சேவைகளை நிர்வகிக்க ஒரு பொதுவான பயனர் கணக்கையும் பயன்படுத்தலாம். இதைச் செயல்படுத்த, ஒவ்வொரு மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன்   அட்டையுடனும் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை முதலில் 'மின்னஞ்சல் புதுப்பிப்பு வசதி' (Email Updation facility) மூலம் தனித்தனியாகப் புதுப்பிக்க வேண்டும். அனைத்து மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன்  அட்டைப் பதிவுகளும் ஒரே மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்பட்ட பிறகு, ஒரே பயனர் கணக்கு மூலம் சமந்தப்பட்ட மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை எளிதாக அணுகவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளைப் பதிவிறக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்துப் பேசிய அந்த அதிகாரி, பின்னணிச் செயலாக்கம் (backend processing) மற்றும் கணினிச் சரிபார்ப்புத் தேவைகள் காரணமாக இது போன்றச்செயல்முறைக்கு சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுக்கலாம் என்று கூறினார். விண்ணப்பதாரர்கள் பதிவிறக்க செயல்முறையை இடையில் நிறுத்த வேண்டாம். பதிவிறக்கம் தாமதமாகிறது என்பதற்காக, இணையதளம் முடங்கிவிட்டது அல்லது செயல்பாட்டில் இல்லை என்பதாகிவிடாது  என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.


ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை பதிவின்போது மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யப்படாத நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி இணையதளத்தில் ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர், தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவுடன் தொடர்புடைய மின்னஞ்சலை விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை எண், பிறந்த தேதி மற்றும் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையுடன் இணைக்கப்பட்ட கடவுச்சீட்டு (Passport) எண் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், இதர சேவைகள் பிரிவின்கீழ் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பித்துக்கொள்ளும் வசதி உள்ளது. மின்னஞ்சல் முகவரி புதுப்பிக்கப்பட்டதும் அது மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன்  அட்டைப்பதிவுகளுடன் இணைக்கப்படும். இதன்மூலம் விண்ணப்பதாரர்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன்  அட்டை சேவைகளைப் பெறவும், இணையதளத்திலிருந்து தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன்  அட்டையை எளிதாகப் பதிவிறக்கம் செய்யமுடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


Original articles : What are e-OCI cards? -Vijaita Singh

Share:

இந்தியா-ஜப்பான் உறவுகளை வளர்த்தல் -சந்திரஜித் பானர்ஜி

 இருநாடுகளின் ஒத்துழைப்பு பாரம்பரியத் துறைகளைக் கடந்துசெல்ல வேண்டும்.


இந்தியா-ஜப்பான் உறவு குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்துள்ளது. காலப்போக்கில், இது ஒரு வழக்கமான இருதரப்பு கூட்டமைப்பிலிருந்து ஒரு சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி (Sanae Takaichi) இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், இந்த இருதரப்பு கூட்டாண்மையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகிறது.


இந்தக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு, குறிப்பாக உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலில், ஜப்பான் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். இன்றுவரை சுமார் 53 பில்லியன் டாலர் மதிப்பிலான விரிவான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (Official Development Assistance (ODA)) மற்றும் சுமார் 100 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதன் மூலம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இந்தியாவின் முன்னுரிமைத் துறைகளுக்கும், அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதில் ஜப்பான் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. மேலும், இந்தியா-ஜப்பான் கூட்டமைப்பு புத்தாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றையும் வளர்த்து வருகிறது.


மேம்பாட்டிற்கான வாய்ப்பு


2025-26 நிதியாண்டில் நமது இருதரப்பு வர்த்தகம் 27.47 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தாலும், இந்தியா-ஜப்பான் வர்த்தக உறவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளையும் நன்மைகளையும் உருவாக்கக்கூடிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) மறுபேச்சுவார்த்தை செய்வது முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியப் பகுதியாகும்.

இருப்பினும், தற்போதைய புவிசார் அரசியல் நிச்சயமற்றத் தன்மைகளுக்கு மத்தியில், நமது இராஜதந்திரரீதியில் ஒத்துழைப்புக்கான பாரம்பரிய துறைகளைத் கடந்துச் செல்ல வேண்டும்.


முதலாவதாக, எதிர்கால இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பிற்கு குறைக்கடத்திகள் (semiconductors) ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலகப் பொருளாதாரத்தில் மேலும் முக்கியமானதாகி வருவதால், குறைமின்கடத்தி உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் மீள்தன்மை ஆகியவை இராஜதந்திரரீதியில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு உற்பத்தியில் இந்தியாவின் பலம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தாக்கத்தில் ஜப்பானின் நிபுணத்துவத்தைப் பெறுகிறது.


குறைக்கடத்தி சூழல் அமைப்புகள் (semiconductor ecosystems), ஆராய்ச்சி, முதலீடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள், இரு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை உருவாக்க உதவும்.


இரண்டாவதாக, முக்கிய கனிமங்கள் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் மற்றொரு வளர்ந்துவரும் மையமாக உள்ளது. முக்கிய கனிமங்களின் ஆய்வு, பதப்படுத்துதல், மறுசுழற்சி மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் மூலம், இந்தியாவும் ஜப்பானும் பிராந்திய மற்றும் உலக அளவில் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தூய்மையான எரிசக்திக்கு மாறுவதற்கு ஆதரவளிக்கவும் முடியும்.


மூன்றாவதாக, தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் சூழலமைப்பும் திறமையான பணியாளர்களும், ஜப்பானின் தொழில்நுட்பத் திறன்களையும் ஆராய்ச்சி நிபுணத்துவத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.


நான்காவதாக, இணைப்பு என்பது இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் ஒரு வரையறுக்கும் அம்சமாகும். உயர்தர உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள், டிஜிட்டல் இணைப்புத்திறன் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவை ஆசியா முழுவதும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உதவுகின்றன.


ஐந்தாவதாக, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்தக் கூட்டமைப்பின் எதிர்கால வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான அதிகரித்த ஒத்துழைப்பு, இளம் தொழில் வல்லுநர்கள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய பாதைகளைத் திறக்க முடியும்.


ஆறாவதாக, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திரரீதியில் நடவடிக்கைகளின் மையமாக உருவெடுத்துவரும் நிலையில், மேலும் மீள்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு பிராந்திய ஒழுங்கை வடிவமைப்பதற்கு இந்தியாவும் ஜப்பானும் தனித்துவமான நிலையில் உள்ளன. நமது இரு பொருளாதாரங்களும் சர்வதேச விதிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைதியான, நிலையான மற்றும் செழிப்பான பிராந்தியத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. குவாட் (Quad) போன்ற தளங்கள் மூலமான நமது ஒத்துழைப்பு, பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையின் அடுத்த அத்தியாயம், பகிரப்பட்ட இராஜதந்திரரீதியில் பலன்களால் மட்டுமல்லாமல், அந்த ஒருங்கிணைப்பை வலுவான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மக்கள்சார்ந்த ஒத்துழைப்பாக மாற்றும் இருநாடுகளின் திறனாலும் வரையறுக்கப்படும்.


கட்டுரையாளர் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் ஆவார்.


Original article : Fostering India-Japan ties. -Chandrajit Banerjee

Share:

8-ஆவது மத்திய ஊதியக் குழு அமைக்கப்படவுள்ள நிலையில், இந்தியாவின் பொதுத்துறை ஊழியர்களின் மொத்த ஊதியமும் சலுகைகளும், அறிவிக்கப்பட்டதைவிட ஏன் அதிகமாக உள்ளன என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். -அனூப் சிங் மற்றும் ஷ்ருதி குப்தா

 8-வது மத்திய ஊதியக் குழு அரசு ஊழியர்களின் ஊதியங்களை மறுபரிசீலனை செய்துவரும் வேளையில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ தரவுகள் அரசு ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் அரசுத் திட்டப் பணியாளர்களின் உண்மையான முழுச் செலவையும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறதா இல்லையா என்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.


இந்தியா எட்டாவது மத்திய ஊதியக் குழுவிற்காக தயாராகி வருகிறது. இதன் பரிந்துரைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் பொது நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அரசு ஊழியர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக, இன்னும் அடிப்படையான ஒரு கேள்விக்கு நாம் விடையளிக்க வேண்டியுள்ளது: இன்று அரசாங்கங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக உண்மையில் எவ்வளவு செலவிடுகின்றன?

இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பது என்ன?


ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2015-16 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சராசரியாக 2.4%-ஆக இருந்தது. மாநில அரசாங்கங்களைப் பொறுத்தவரை, 2022-23-ஆம் ஆண்டில் இந்தச் செலவு அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5%-ஆக இருந்தது. ஒன்றிய அரசின் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் நான்கில் ஒரு பங்கும் (25%), மாநில அரசுகளின் வருவாய் வரவுகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கும் (33%) ஊழியர்களின் ஊதியத்திற்காகவே செலவிடப்படுகிறது.


இருப்பினும், இந்த அதிகாரப்பூர்வமான தகவல் முழுமையானது அல்ல. இந்தியா தனது பொதுத்துறை பணியாளர்களாக முக்கியமாக நிரந்தர ஊழியர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஒப்பந்தப் பணிகள், அரசுத் திட்டங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் பணிபுரியும் பெருமளவிலான மக்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.


ஒன்றிய அரசாங்கத்தில், நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21-ஆம் ஆண்டில் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு நிரந்தர ஊழியர்களுக்கு ஒரு ஒப்பந்தத் தொழிலாளி என்ற விகிதத்தில்தான் நிலைமை இருந்தது. ஆனால், இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.


அரசுச் செலவினங்களில் ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். பொது நிதி கணக்கியலுக்கான உலகளாவிய தரநிலையான, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) அரசு நிதி புள்ளிவிவரக் கையேட்டின்படி (Government Finance Statistics Manual (GFS Manual)), நிதிநிலை அறிக்கையில் எப்படிக் காட்டப்பட்டாலும், ஒரு முதலாளி-தொழிலாளி உறவின் அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு வழக்கமான பணபலனும் இந்த ஊதிய வரம்பிற்குள்ளேயே அடங்கும்.



செய்தி அறிக்கை முக்கியமாக மூன்று வழிகளில் மாறுபடுகிறது.


முதலில்: முக்கிய புள்ளிவிவரங்களுக்குள் விடுபட்டவர்கள் யார்?

ஒப்பந்தத் தொழிலாளர்கள்: இவர்கள் பல்வேறு அமைச்சகங்களில் பராமரிப்பு, தரவுப் பதிவு மற்றும் பாதுகாப்பு போன்ற வழக்கமான அரசுப் பணிகளைச் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இவர்கள் நிரந்தர ஊழியர்களுக்குப் பதிலாகப் பணியமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும், அரசாங்கத்தின் முக்கியச் ஊதியச் செலவினக் கணக்குகளில் இவர்கள் முற்றிலும் சேர்க்கப்படுவதில்லை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் இருந்து, தொடர்ச்சியற்ற 6 ஆண்டுகளுக்கெனக் கிடைத்த தரவுகளின்படி, ஒன்றிய அரசில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.6 லட்சத்திலிருந்து 24.3 லட்சம் வரை உள்ளது. இந்தத் தொழிலாளர்களைப் பற்றிய அமைச்சகம் வாரியான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் எதுவும் அரசிடம் இல்லை. இவர்களது ஊதியம் குறைந்தபட்ச கூலி விகிதத்தின்படி கணக்கிடப்பட்டால்கூட, ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்திற்காக ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14,000 கோடி ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், இந்தத் தொகை அரசாங்கத்தின் 'சம்பளக் கணக்கு') என்ற தலைப்பின்கீழ் சேர்க்கப்படுவதில்லை.


திட்டப் பணியாளர்கள்: பிரதமர் போஷான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)) திட்டத்தின்கீழ் உள்ள சுமார் 10 லட்சம் ஆஷா (Accredited Social Health Activist (ASHA)) பணியாளர்களும், ஏறத்தாழ 37 லட்சம் சமையல்காரர் மற்றும் உதவியாளர்களும் ஊதியம் பெறும் ஊழியர்களாகக் கருதப்படாமல், வெறும் 'கௌரவ ஊதியம்' மட்டுமே பெறும் 'தன்னார்வலர்களாகவே' நடத்தப்படுகிறார்கள். இவர்களைப் போலவே பல லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், துணை செவிலியர்களும் இதே போன்ற சேவைகளை வழங்கி வருகின்றனர். மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் ஆரம்பநிலை ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் இந்த ஊழியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அரசாங்க நிதிப் புள்ளியியல் (GFS) கட்டமைப்பின்படி, இத்தகைய திட்ட அடிப்படையிலான கொடுப்பனவுகள், அவை 'ஊதியம்' என்று அழைக்கப்பட்டாலும் அல்லது 'கௌரவ ஊதியம்' என்று அழைக்கப்பட்டாலும், அவை அரசு ஊழியர்களின் ஊதியமாகவே கணக்கிடப்படுகின்றன.


அரசாங்கங்கள் தங்களது பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசுத் திட்டங்களின்கீழ் பணியாற்றும் ஊழியர்களை அதிகளவில் நம்பியிருக்கத் தொடங்கியுள்ளதால், வழக்கமாக வெளியிடப்படும் ஊதியப் புள்ளிவிவரங்கள் உண்மையான அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கையையோ அல்லது அவர்களது நிதியாதாரம் பற்றிய விபரங்களையோ துல்லியமாகப் பிரதிபலிப்பதில்லை.


இரண்டாவது: அறிக்கைகள் தனித்தனியாக இருக்கின்றன 


பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கங்கள் உருவாக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஊழியர்களின் ஊதியத்திற்காக இந்த 'ஊதியங்களுக்கான மானிய உதவி' வழங்கப்படுகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences (AIIMS)), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology (IITs)), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (Indian Institutes of Management (IIMs)) மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் ஆராய்ச்சி முகமைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஊதிய மானியமாக சுமார் 60,000 கோடி ரூபாயைப் பெற்றுள்ளன. மாநில அளவில், 232 மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகை (சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல்), பெரும்பாலும் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊதியக் கணக்குகளில் சேர்க்கப்படுவதில்லை.


இந்தச் செலவு நிதிநிலை அறிக்கைகளில் விடுபடவில்லை. இது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஊதியப் பட்டியலுடன் சேர்க்கப்படாமல், அதற்குப் பதிலாக வெவ்வேறு நிதிநிலை அறிக்கைகளில் தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாக அரசுத் துறைகள் செய்யவேண்டிய பணிகளையே செய்கின்றன. எனவே, இவர்களுடைய ஊதியத்தை ஒட்டுமொத்தக் கணக்கில் சேர்க்காமல் தனியாக வைப்பது என்பது வெறும் நிதிநிலை வகைப்பாடு சார்ந்த விஷயமே தவிர, இதில் பொருளாதாரரீதியாக எந்த வேறுபாடும் இல்லை.


மூன்றாவது: வரையறைகள் சீரற்றதாக உள்ளன


ஒரே மாதிரியான செலவுகளைப் வெவ்வேறு அரசாங்கங்களும் நிறுவனங்களும் பெரும்பாலும் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் வகைப்படுத்துகின்றன. பொதுமக்களுக்கான ஒரே மாதிரியான வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையாக இருந்தாலும்கூட, அவை ஊதியங்கள், கௌரவ ஊதியங்கள், மானியங்கள், ஒப்பந்தக் கொடுப்பனவுகள் அல்லது திட்டச் செலவினங்கள் எனப் பலவாறாகப் பதிவேடுகளில் குறிக்கப்படலாம்.


இந்த வேறுபாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான தரவுகளையும், சர்வதேச அளவிலான தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை கடினமாக்குகின்றன. மேலும், இவை ஊதியக் குழுக்கள் மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் போன்ற கொள்கைகளால் ஏற்படும் நீண்டகால நிதி தாக்கங்களை மதிப்பிடுவதையும் கடினமாக்குகின்றன.


சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் எதைக் காட்டுகின்றன?


ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம், திட்டப் பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கான கௌரவ ஊதியம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் தனியாகக் கணக்கிடப்படும் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கூட்டும்போது, ஒன்றிய அரசின் மொத்த ஊதியச் செலவினமானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.4%-லிருந்து 3.8%-ஆக உயர்கிறது. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தையும் சேர்த்தால், இது மேலும் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6%-ஆக உயர்கிறது.


மாநில அரசாங்கங்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றி அமைக்கப்பட்ட ஊழியர் ஊதியக் கணக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5%-ல் இருந்து 4.1%-ஆக உயர்கிறது. மகாராஷ்டிராவின் மாற்றி அமைக்கப்பட்ட ஊழியர் ஊதியம், அந்மாநிலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த தொகையைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. கர்நாடகாவின் ஊதியம் 2.5 மடங்காகவும், உத்தரப் பிரதேசத்தின் ஊதியம் இரண்டு மடங்காகவும் உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் குறித்த ஓரளவுக்கு முழுமையான தரவுகள் கிடைக்கப்பெற்ற சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த மதிப்பீடுகளைச் செய்ய முடியும்.




புள்ளிவிவரங்களுக்கும் அப்பால்


ஊதியப் பட்டியலுக்கான உண்மையான செலவு மிகக் குறைவாக மதிப்பிடப்படும்போது, நாட்டின் நிதிப் பற்றாக்குறை இலக்குகளும், நடுத்தர காலச் செலவினக் கணிப்புகளும் முழுமையற்ற தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. சரிசெய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் வட்டிச் செலுத்தல்களையும் சேர்த்துக் கணக்கிட்டபிறகு, ஒன்றிய அரசின் கட்டாயச் செலவினம் என்பது அதன் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 82%-ஆக உள்ளது. இதனால், கூடுதல் கடன் வாங்காமல், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு முதலீடுகள் போன்ற விருப்பப் பூர்வமானச் செலவுகளைச் செய்வதற்கு அரசாங்கத்திடம் மிகக் குறைந்த அளவே நிதி உள்ளது.


ஒட்டுமொத்த தொழிலாளர் குழுக்களும் அதிகாரப்பூர்வ ஊதியப் புள்ளிவிவரங்களில் இருந்து விடுபடும்போது அல்லது சேர்க்கப்படாதபோது, அரசாங்கங்கள் தங்களிடம் உள்ள நிதி வசதியை மிக அதிகமாகக் கணித்துவிடுகின்றன. அதேநேரத்தில், பொதுத்துறை பணியாளர்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான நீண்டகாலச் செலவைக் குறைவாக மதிப்பிட்டுவிடுகின்றன.


மேலும் துல்லியமான ஒரு கணக்கியல் கட்டமைப்பு 


இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பல முக்கியமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.


அனைத்து வகையான தொழிலாளர்களையும் சர்வதேச தரமுறைகளைப் பின்பற்றும் ஒரே மாதிரியான ஊதியக் கட்டமைப்பின்கீழ் கணக்கிட வேண்டும். இதற்கு, ஊதியம் என்பதற்கான பொதுவான வரையறை அவசியமாகும். மேலும், இந்த வரையறையை ஒன்றிய அரசும் அனைத்து மாநில அரசுகளும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வெவ்வேறு மாநிலங்களின் தரவுகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியும். தற்போது கிடைக்கும் தகவல்களுக்குப் பதிலாக, மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது ஊதியம் குறித்த துல்லியமான, ஆண்டுத் தரவுகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.


8-ஆவது மத்திய ஊதியக் குழு, பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம், வகைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அளவிடும் முறையை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.


அரசாங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக மிக அதிகமாகச் செலவிடுகின்றனவா அல்லது மிகக் குறைவாகச் செலவிடுகின்றனவா என்பது  தற்போதைய பிரச்சினை இல்லை. அவர்கள் தாங்கள் உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்களா என்பதுதான் உண்மையான பிரச்சினை. நிதி , சிறந்த கொள்கை உருவாக்கம் மற்றும் நிதியின் நீடித்த நிலைத்தன்மையைச் சரியாகக் கணக்கிடுவது ஆகியவற்றுக்குத் துல்லியமான செலவினத் தரவுகள் மிகவும் அவசியமானவை ஆகும்.


அனூப் சிங், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் சிறப்பு உறுப்பினராகவும், ஸ்ருதி குப்தா, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : Ahead of 8th CPC, experts explain why India’s public sector compensation is higher than reported. -Anoop Singh and Shruti Gupta

Share:

இந்தியாவின் எஃகுத் தொழிற்துறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உருவெடுத்தது எப்படி? -ஷிஷிர் குப்தா மற்றும் ரிஷிதா சச்தேவா

 அதிகரித்துவரும் தேவை, அரசின் கொள்கை சீர்திருத்தங்கள், உற்பத்தித் திறனின் அதிகரிப்பு மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சிறப்பு எஃகு  (Speciality steel) தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற காரணங்களால், இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் எஃகு (Steel) உற்பத்தி மிக அதிகமாக வளர்ந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில், உலக ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியில் இந்தியா 1%-க்கும் குறைவாகவே உற்பத்தி செய்து, உலக அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்தது. உலகளாவிய எஃகு உற்பத்தியில் ஏறக்குறைய 9% பங்களிப்பை இந்தியா வழங்குகிறது. உலக எஃகு உற்பத்தியில் சுமார் பாதியை உற்பத்தி செய்து முதலிடத்தில் இருக்கும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையைச் செய்துள்ளது.


இந்தியாவின் கச்சா எஃகு (Crude steel) உற்பத்தி, 2002-ஆம் நிதியாண்டில்      28 மில்லியன் டன்னாக இருந்தது, 2025-ஆம் நிதியாண்டில் 152 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான உள்நாட்டு எஃகு பயன்பாடு காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியமானது. 2002 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எஃகு பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 7.6% என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. வேகமாக நகரமயமாகி வரும் மற்றும் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வரும் ஒரு வளரும் நாடாக இருப்பதால், இந்தியாவில் எஃகுக்கான தேவை மிகவும் வலுவாக உள்ளது; இது எதிர்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எஃகு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோமா?


இந்தியா தனது ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமான எஃகை உற்பத்தி செய்கிறது. இருந்தாலும், அது இன்னமும் 'சிறப்பு ரக எஃகை' (Speciality steel) இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறது. நம் நாடு முக்கியமாக உள்கட்டமைப்புத் துறைக்குத் தேவையான சாதாரண அடிப்படை எஃகையே உற்பத்தி செய்கிறது. இருப்பினும், வேகமாக வளர்ந்துவரும் வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளின் தேவைகளுக்கு, சில குறிப்பிட்ட தனித்துவமான பண்புகளைக் கொண்ட சிறப்பு ரக எஃகு தேவைப்படுகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நம் நாட்டுத் தொழில்துறைகள் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலிருந்து உயர்தர எஃகை இறக்குமதி செய்கின்றன. எனவே, எதிர்காலத்தில் இந்த வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு, இந்தியா தனது சொந்த நாட்டிலேயே இந்த சிறப்பு ரக எஃகு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.


இந்தியாவில் உள்ள முக்கிய எஃகு உற்பத்தியாளர்கள் யார் யார்?


இந்திய எஃகுத் தொழிற்துறையின் வளர்ச்சியானது, முக்கியமாகப் பெரிய தனியார் எஃகு நிறுவனங்களாலேயே இயக்கப்படுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, நாட்டின் ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியில் சுமார் 40 முதல் 45 சதவீதத்தை முதன்மையான ஐந்து முன்னணி உற்பத்தி நிறுவனங்களே இணைந்து வழங்கி வருகின்றன.


இந்த நிறுவனங்கள் ‘Tata Steel’, ‘JSW Steel’, ‘SAIL, ‘Jindal Steel & Power’ மற்றும் ‘ArcelorMittal Nippon Steel India’ ஆகியவை ஆகும். 2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி, ‘Tata Steel’ மற்றும் ‘JSW Steel’ ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சந்தையில் தலா 12% பங்கைக் கொண்டுள்ளன. இதற்கடுத்தபடியாக ‘SAIL’ நிறுவனம் 9% பங்கைக் கொண்டுள்ளது. இதே காலகட்டத்தில் (2000 முதல் 2024 வரை), ‘JSW Steel’ நிறுவனத்தின் சந்தைப் பங்கு 2000-ஆம் ஆண்டில் இருந்த 1%-லிருந்து, 2024-ஆம் ஆண்டில் 11.6%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், ‘SAIL’ நிறுவனத்தின் சந்தைப் பங்கோ 29%-லிருந்து 9%-ஆகக் குறைந்துள்ளது.


இந்த ஐந்து நிறுவனங்களுமே வெவ்வேறு அளவுகளில் தங்களுக்கெனச் சொந்தமாக இரும்புத் தாதுச் சுரங்கங்களை வைத்துள்ளன. அதாவது, எஃகு (Steel) தயாரிப்பதற்கான முக்கியமான மூலப்பொருளான இரும்புத் தாதுவை, இந்த நிறுவனங்கள் தங்களின் சொந்த சுரங்கங்களிலிருந்தே வெட்டி எடுக்கின்றன. சந்தையில் வெளிப்படையாக விலை கொடுத்து வாங்குவதைவிட, சொந்த சுரங்கங்களில் இருந்து இரும்புத் தாதுவை எடுப்பதற்கான செலவு 40-50% வரை குறைவாக இருக்கும். இதன் காரணமாக, சொந்தமாகச் சுரங்கங்களை வைத்திருப்பது இந்த எஃகு தயாரிப்பாளர்களுக்கு உற்பத்திச் செலவில் ஒரு மிகப்பெரிய சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.



எஃகு உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள முக்கியக் கொள்கை மாற்றங்கள் என்னென்ன?


எஃகுத் தொழில் இரண்டு முக்கியமான கொள்கைக் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. 1990-களின் தொடக்கத்தில், இத்துறைக்கான உரிமக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தாராளமயமாக்கப்பட்டது. இதன் மூலம் எஃகுத் துறையில் 51% வரை வெளிநாட்டு முதலீடுகளைப் பெறத் தானியங்கி அனுமதி வழங்கப்பட்டது. 1990 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இறக்குமதி வரிகள் 93%-லிருந்து 7%-ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அரசாங்கம் படிப்படியாக இத்துறைக்கான பாதுகாப்பையும் ஆதரவையும் அதிகரித்தது.


2007-ஆம் ஆண்டில், எஃகு தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான இரும்புத் தாது ஏற்றுமதிக்கு அரசாங்கம் ஏற்றுமதி வரியை விதித்தது. இந்த வரி முதலில் 15%-ஆகத் தொடங்கப்பட்டு, பின்னர் 30%-ஆக உயர்த்தப்பட்டது. இரும்புத் தாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் குறைத்து, உள்நாட்டு எஃகு தொழில்துறைக்கு தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பின்னர் 2017-ஆம் ஆண்டில், அரசாங்கத் திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஃகை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியது.            இது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் போட்டியைத் தடுத்தது. தற்போது, தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் எஃகு தொடர்பான 556 வகையான எட்டு இலக்க சரக்குக் குறியீடுகளுக்குப் (Harmonized System Codes (HS codes)) பொருந்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில், கலப்பு இல்லாத மற்றும் கலப்பு எஃகு தகடு பொருட்களின் (Non-alloy and alloy steel flat products) மீது, ஏற்கனவே உள்ள 7% வரியுடன் சேர்த்து மேலும், 12% கூடுதல் வரியை அரசாங்கம் விதித்தது. இந்தக் கூடுதல் வரியானது அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 0.5% வீதம் குறைக்கப்படும்.


(Harmonized System Codes (HS Codes)): சர்வதேச அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வகைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக 'சரக்குக் குறியீடு' ஆகும்.


எஃகு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள மிக சமீபத்திய திட்டங்கள் என்னென்ன?


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கவும், சிறப்பு ரக எஃகு (Speciality steel) தயாரிப்பிற்கான 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (Production-Linked Incentive Scheme (PLI)) திட்டத்தை அரசாங்கம் 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், உற்பத்தியை அதிகரித்தல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறனை விரிவாக்குதல் ஆகியவற்றிற்காக நிறுவனங்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை முற்றிலும் இல்லாததாக்க (Net-zero emissions) இந்தியா எடுத்துள்ள நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரும்பு மற்றும் எஃகுத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கான ஒரு வழிகாட்டி திட்ட வரைவை 2024-ஆம் ஆண்டில் மத்திய எஃகு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதற்கான முன்னோடித் திட்டங்களுக்காக 2029-30-ஆம் நிதியாண்டு வரை 455 கோடி ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில், எஃகை மூலப்பொருளாகப் பயன்படுத்தி மற்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள் (Downstream industries) எஃகு இறக்குமதி செய்வதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்களை நிதி ஆயோக் (National Institution for Transforming India (NITI Aayog)) பரிந்துரைத்தது. அதன்படி, 100 எஃகுப் பொருட்கள் மீதான 'தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை' நீக்க அது பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 எஃகுப் பொருட்கள் மீதான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை எஃகு அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


கார்பன் எல்லைச் சீரமைப்பு முறை இந்தியாவின் எஃகு தொழிற்துறையை எவ்வாறு பாதிக்கும்?


ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லைச் சீரமைப்பு முறை (European Union’s Carbon Border Adjustment Mechanism (EU-CBAM)) என்பது ஒரு காலநிலை மாற்றக் கொள்கையாகும். இது சுற்றுப்புறச் சூழல் விதிகளை அத்தனை கடுமையாகப் பின்பற்றாத ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 'கார்பன் வரிகளை' விதிப்பதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தைக் (Carbon leakage) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லைச் சீரமைப்பு முறையின்கீழ் (CBAM) கார்பன் வரி விதிப்பால் பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் ஏற்றுமதி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.2% மட்டுமே என்றாலும், இந்த ஏற்றுமதியில் 90% இரும்பு மற்றும் எஃகு துறையைச் சேர்ந்ததாகும். இதனால், இரும்பு மற்றும் எஃகு துறைதான் இந்த வரியால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய தொழிற்துறையாக மாறுகிறது.


சிஷிர் குப்தா, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் மூத்த ஆய்வாளராகவும், ரிஷிதா சச்தேவா, இணை ஆய்வாளராகவும் பணியாற்றுகின்றனர்.


Original article : How India’s steel industry became the world’s second-largest producer. -Shishir Gupta and  Rishita Sachdeva

Share:

இராமர் கோயில் நன்கொடை விவகாரம் : இந்தியாவின் கோயில்களை நிர்வகிப்பது யார்? இதில் அரசின் பங்கு என்ன? - ஷியாம்லால் யாதவ்

 காலனித்துவக் காலம் முதலே, இந்து கோவில்களைப் பல்வேறு வழிகளில் நிர்வகிப்பதில் அரசு ஒரு பங்குதாரராக இருந்து வருகிறது. இராமர் கோயில் தொடர்பான சமீபத்திய நிதி முறைகேடு சர்ச்சை, இந்த நிர்வாக முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் நிதி முறைகேடு நடந்ததாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள், அதன் நிர்வாகத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளன.


அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை இந்த அறக்கட்டளையை அமைப்பதற்கு வழிவகுத்ததை அடுத்து, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) 2020 பிப்ரவரி 5 அன்று உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த அறக்கட்டளைக்கு ரொக்க நன்கொடைகளாக மட்டும் சுமார் ரூ. 3,500 கோடி கிடைத்துள்ளது.


நிதி முறைகேடுகள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என இராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். மறுபுறம், இராமர் கோயில் இயக்கத்தின் முக்கியப் பங்காற்றிய விஸ்வ இந்து பரிஷத் (Vishwa Hindu Parishad (VHP)) அமைப்பு, தனது நீண்டகால கோரிக்கைக்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள கோயில்களை அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து 'விடுவிக்க' அழைப்பு விடுத்துள்ளது.


கோயில்களும் அவற்றின் சொத்துக்களும்


இந்தியாவில் உள்ள இந்து கோவில்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், தோராயமான மதிப்பீடுகளின்படி அவற்றின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை, காணிக்கைகளையும் நன்கொடைகளையும் பெறும் உள்ளூர் சமூகங்கள், குடும்பங்கள் அல்லது பரம்பரை அர்ச்சகர்களால் பராமரிக்கப்படும் சிறிய கிராமியக் கோயில்கள் அல்லது எளிமையான கட்டமைப்புகளாகும்.


குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெரிய கோயில்கள், மதிப்புமிக்க அசையும் மற்றும் அசையா சொத்துக்களை (நிலம், கட்டிடங்கள், நகைகள் போன்றவை) சொந்தமாகக் கொண்டுள்ளன. மேலும், பக்தர்களிடமிருந்து பெரும் நன்கொடைகளையும் காணிக்கைகளையும் பெறுகின்றன. இப்பெரிய கோயில்கள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. இருப்பினும், இவை குறிப்பாக அயோத்தி, வாரணாசி (காசி) மற்றும் ஹரித்வார் போன்ற நகரங்களிலும், தென்னிந்திய மாநிலங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.


பல கோயில்கள் அறக்கட்டளைகளால் (charitable trusts) நிர்வகிக்கப்படுகின்றன. பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், சில சமயங்களில் 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 80G பிரிவின்கீழ் வருமான வரி விலக்குக்குத் தகுதி பெறுகின்றன. ஆனால், ரொக்க காணிக்கைகள் மற்றும் பண்டமாற்று வடிவிலான குறிப்பிடத்தக்க நன்கொடைகள் பெரும்பாலும் கணக்கில் காட்டப்படுவதில்லை.


கோயில் நிர்வாகத்தின் மூன்று முக்கிய மரபுகள்


இந்தியாவில் கோயில்கள், அரசாங்கத்தின் ஈடுபாடு மாறுபட்ட அளவுகளில் இருக்கும் மூன்று பாரம்பரிய மாதிரிகளின் கீழ், பல்வேறு அமைப்புகளின்மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அவை,


1. குடும்ப நிர்வாகம் (பாண்டாக்கள் (Pandas) மற்றும் பூசாரி குடும்பங்கள் (Priest Families))


பெரும்பாலான கோயில்கள், பாண்டாக்கள் அல்லது பூசாரிகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட குடும்பங்கள் அல்லது பரம்பரை அர்ச்சகர்கள்  வம்சங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இங்கு, காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் சடங்கு சார்ந்த பொறுப்புகள் பாரம்பரியமாக நிர்வாகம் செய்யும் குடும்பத்தைச் (அல்லது குடும்பங்களைச்) சார்ந்ததாகவே அமைகின்றன.


பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​கட்டுப்பாடு பெரும்பாலும் ஒரு நிலையான கால அட்டவணையின் அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படும்.  சில நேரங்களில் பரபரப்பான கோயில்களில் தினசரி அல்லது மணிநேர அடிப்படையிலும், மற்ற கோயில்களில் நீண்டகால அடிப்படையிலும் இது நடைபெறும்.


சுழற்சி முறை நிர்வாகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் (Udupi Sri Krishna Mutt) ஆகும். இது 13-ம் நூற்றாண்டின் துறவி மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட அஷ்ட மடங்கள் அல்லது எட்டு மடாலயங்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மடமும் இரண்டு ஆண்டுகளுக்குக் கோயிலின் நிர்வாகத்தையும் தினசரி சடங்குகளையும் நிர்வகிக்கிறது. இதனால், ஒரு மடத்திற்கான அடுத்த சுழற்சி 16 ஆண்டுகளுக்குப் பிறகே வருகிறது.


2. மஹந்த் முறை (Mahant System)

இம்முறையில், ஒரே ஒரு ஆன்மீகத் தலைவர் (மகந்த், மதாதிஷ் அல்லது பிதாதீஸ்வரர்) முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மகந்த் கோயில் சொத்துக்கள், உடைமைகள், காணிக்கைகள் மற்றும் நிர்வாகத்தின்மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதுடன், பொதுவாகத் தனது வாரிசையும் நியமிக்கிறார் அல்லது பரிந்துரைக்கிறார்.


இதற்குத் தற்காலத்திய ஒரு சிறந்த உதாரணம், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடம் (Gorakhnath Math) ஆகும். இதன் தற்போதைய தலைவராக, மறைந்த மஹந்த் அவைத்யநாத்தால் வாரிசாக நியமிக்கப்பட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளார். ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கராச்சாரிய மடங்களிலும் இதேபோன்ற வாரிசு அடிப்படையிலான அமைப்புகள் செயல்படுகின்றன.


3. அகாதா (பஞ்சாயத்து) அமைப்பு (Akhada (Panchayati) System)


அகாதாக்கள் என்பவை சாதுக்கள் மற்றும் துறவிகளின் தன்னாட்சி அமைப்புகளாகும். மகா கும்பமேளாவின்போது, ​​இவற்றின் தகுதிக்கேற்ப புனித நீராடலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், இவை பெரும்பாலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அகாதாக்கள், பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான தலைவர்களைக் கொண்ட கூட்டு அல்லது பஞ்சாயத்து அமைப்புகளாகச் செயல்படுகின்றன. இவை "பஞ்சாயத்து அகாதா" (Panchayati Akhadas) என்றும் அழைக்கப்படுகின்றன.


தற்போது 13 முக்கிய அகாதாக்கள், ஏழு சைவ (தசநாமி), மூன்று வைணவ (பைராகி) மற்றும் மூன்று உதாசீன் அகாதாக்கள் (சைவம் அல்லது வைணவத்துடன் தொடர்பில்லாதவை) என மூன்று பிரிவுகளாகப் பரவலாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் பல கோயில்களையும் மத நிறுவனங்களையும் நிர்வகிக்கின்றன. அவை அர்ச்சகர்களை நியமித்து, தங்கள் பிரிவின் மரபுகளுக்கு ஏற்ப சடங்குகளை மேற்பார்வையிட்டு, நன்கொடைகளையும் சொத்துக்களையும் கட்டுப்படுத்துகின்றன.

இந்து கோவில்களை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் பங்கு


வரலாற்றுரீதியாக, பிரிட்டிஷார் 1863-ல் சமய அறக்கட்டளைச் சட்டத்தை (Religious Endowments Act) அறிமுகப்படுத்தினர். அச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குழுக்களிடம் கோயில்களின் கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், பிற சட்ட விதிகள் மூலம் அரசாங்கம் கணிசமான செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டது.


1925-ல், மெட்ராஸ் இந்து சமய அறநிலையச் சட்டம் (Madras Hindu Religious Endowments Act), அறநிலையங்கள் குறித்துச் சட்டம் இயற்ற மாகாண அரசுகளுக்கு அதிகாரம் அளித்தது. அதன் அதிகாரங்கள் படிப்படியாக விரிவடைந்து, மேற்பார்வை செய்யும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதுடன், கோயில் நிர்வாகத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, பல்வேறு மாநிலங்கள் கோயில்களை நிர்வகிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு 1925-ம் ஆண்டுச் சட்டம் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மாநிலங்கள் அதற்கென குறிப்பிட்ட துறைகளையும் அமைச்சர்களையும் கொண்டுள்ளன.


இந்திய அரசியலமைப்பின் 25(2)வது பிரிவு, "மத நடைமுறையுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளாதார, நிதி, அரசியல் அல்லது பிற மதச்சார்பற்ற நடவடிக்கையையும்" ஒழுங்குபடுத்த அல்லது கட்டுப்படுத்தவும், சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்திற்கான சட்டங்களை இயற்றவும் அரசுக்கு ஒட்டுமொத்தமாக அதிகாரம் அளிக்கிறது. இந்த ஏற்பாடு, கோயில் அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் மாநில சட்டங்களுக்கு இந்த விதியே அரசியலமைப்புரீதியான அடிப்படையாக அமைகிறது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களையும் மத நிறுவனங்களையும் சமூகத்தால் நடத்தப்படும் வாரியங்கள் அல்லது அறக்கட்டளைகள் மூலம் நிர்வகிக்கின்றனர்.


பெரிய கோயில் நிர்வாகத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்புகள் பங்கு வகிப்பதுடன், அவை அர்ச்சகர்களுக்குச் சம்பளம் வழங்குவதுடன், காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் பிரத்யேகக் கணக்குகளில் செலுத்தப்படுவதையும் உறுதிசெய்கின்றன. மேலும், மாநிலங்கள் பெரிய கோயில்களில் இருந்து கிடைக்கும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் மூலமான வருமானத்தின் ஒரு பகுதியை, அந்தப் பெரிய மற்றும் சிறிய கோயில்களின் நிர்வாகத்திற்கும் பராமரிப்பிற்கும், மற்றும் கோயில் சாரா நலப்பணிகளுக்கும் பயன்படுத்துகின்றன.


மாநில நிர்வாகத்தின்கீழ் உள்ள சில முக்கிய உதாரணங்கள் பின்வருமாறு,


தமிழ்நாடு : 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையச் சட்டத்தின்கீழ் (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) நிறுவப்பட்ட இந்து சமய மற்றும் அறநிலையத் துறை, 40,000-க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது.


ஆந்திரப் பிரதேசம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams (TTD)) என்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் மற்றும் அதனுடன் இணைந்த பல கோயில்களை நிர்வகிக்கும் ஒரு தன்னாட்சி அறக்கட்டளை ஆகும். இதன் அறங்காவலர் குழு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை அரசாங்கம் நியமிக்கிறது.


கேரளா : 1950-ல் உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் (Travancore Devaswom Board), சபரிமலை கோயில் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது.


உத்தரப் பிரதேசம் : 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம், அக்கோயிலில் ஒரு பெரிய திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இதில் தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டன; குறிப்பாக, வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் தங்கத்தாலான 'அர்கா' (ritual vessel) சடங்கு பாத்திரமும் இதில் அடங்கும். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீபதி மிஸ்ரா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசால் 'உத்தரப் பிரதேச ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் சட்டம்' இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்கீழ், கோயிலின் நிர்வாகம் ஒரு அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அரசு நியமித்த தலைமை நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.


ஜம்மு காஷ்மீர் : வைஷ்ணோதேவி கோயில், ஜம்மு & காஷ்மீர் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.


Original article : Ram Temple donation row: Who manages India’s temples, and what is the state’s role? -Shyamlal Yadav

Share:

வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம் அமலுக்கு வருகிறது: இந்தியாவின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? -ரோஷ்னி யாதவ்

 ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) Act (VB-G RAM G)) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.


தற்போதைய செய்தி


20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)), 2005-ஆம் ஆண்டிற்க்கு பதிலாக, 2025-ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அன்று, VB-G RAM G திட்டத்தின்கீழ் பணிபுரியும் திறனற்றத் தொழிலாளர்களுக்கான (unskilled manual workers) ஊதிய விகிதங்களையும் அறிவித்தது.


இந்தச் சூழ்நிலையில், ஜூலை 1 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் (MGNREGS) பதிலாக புதிய வேலைவாய்ப்புத் திட்டம் அமலுக்கு வருவதால் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வது முக்கியமானதாகிறது.



முக்கிய அம்சங்கள்:


மத்திய அரசு இந்த நிதியாண்டிற்கு (2026-27) VB-G RAM-G திட்டத்திற்காக ரூ.95,692.31 கோடியை ஒதுக்கியுள்ளது. வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்) சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,


1 உத்தரவாத ஊதிய வேலை நாட்கள் அதிகரிப்பு: VB-G RAM G சட்டம் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125-ஆக அதிகரிக்கிறது.


வேளாண் பருவங்களில் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு இடைநிறுத்தம்: வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கம் (கிராமப்புறம்)  சட்டம் உச்சகட்ட விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில், வேளாண் தொழிலாளர்கள் பண்ணை வேலைகளுக்கு போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது.


3.நிதிச் சுமையை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்திலிருந்து (MGNREGA) மாறுபட்டு, VB–G RAM-G Act சட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதிச் சுமையில் மாநிலங்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்மொழிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) மத்திய அரசு 100% ஊதியச் செலவைச் செலுத்தியதற்கு மாறாக, விபி-ஜி ராம் VB–G RAM G Act சட்டம் 40% நிதிச் சுமையை மாநிலங்கள்மீது சுமத்துகிறது. வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்கள் இதிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன. இந்த மாநிலங்களின் 90% நிதிச் சுமையை மத்திய அரசு ஏற்கும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, முழு நிதி சுமையையும் மத்திய அரசே ஏற்கும்.





4. மேலிருந்து கீழான வள ஒதுக்கீட்டு அணுகுமுறை: இது, மாநில தொழிலாளர் நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGS) மாதிரியைத் தலைகீழாக மாற்றுகிறது. இதில் தற்போது மத்திய அரசே அதிகாரப் பகிர்வுகளைத் தீர்மானிக்கிறது.


5. புதிய விதிகள்: ஊரக வளர்ச்சி அமைச்சகம் மே 23 அன்று, VB-G RAM G திட்டத்தின் ஊதிய வழங்கல், வேலையின்மை உதவித்தொகை, மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் திட்டச் செயலாக்கக் கண்காணிப்பு தொடர்பான விதிகளை உள்ளடக்கிய 8 வரைவு விதிகளை வெளியிட்டது. அந்த விதிகள் பின்வருமாறு:


• தேசிய அளவில் வழிநடத்தல் குழு விதிகள்


• குறை தீர்க்கும் விதிகள்


• நிர்வாகச் செலவுகள் தொடர்பான விதிகள்


• VB–G RAM G விதிகளின் கீழ் இடைக்கால ஏற்பாடுகள் தொடர்பான விதிகள்


• நெறிமுறை அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டிற்கான புறநிலை அளவுகோல் விதிகள்


• மத்திய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத மன்றத்தின் விதிகள்


• ஊதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை வழங்கும் முறை தொடர்பான விதிகள்


• சட்டமன்றம் இல்லாத யூனியன் மாநிலங்களுக்கான திட்டத்தின்கீழ், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு அதிகமாக மாநிலத்தால் மேற்கொள்ளப்படும் 2026-ஆம் ஆண்டு செலவினங்களின் முறை மற்றும் நடைமுறை விதிகள் ஆகும்.


 6. வேலை அட்டைகளுக்குப் பதிலாக 'கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை' (Gramin Rozgar Guarantee Card) அறிமுகம்: புதிய விதிகளில், இடைக்கால ஏற்பாடுகள் (Transitional Provisions) தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, மின்னணு வாடிக்கையாளர் அடையாளச் Electronic (Know Your Customer (e-KYC)) சரிபார்ப்பு மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு, தற்போது அவர்களிடம் உள்ள MGNREGS வேலை அட்டைகள், VB-G RAM G திட்டத்தின்கீழ் வேலை கோருவதற்கு செல்லுபடியாகத் தொடரும். மாநில அரசுகள் புதிய சட்டத்தின்படி கிராமிய வேலை உறுதி அட்டைகளை (Gramin Rozgar Guarantee Cards) வழங்கும் வரை, இந்த இடைக்கால ஏற்பாடு நடைமுறையில் இருக்கும். இது தற்போதைய பயனாளர்கள் எந்த இடையூறும் இல்லாமல் புதிய திட்டத்தின்கீழ் தொடர்ந்து வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்யும்.


VB-G RAM G திட்டமானது, திறன் தேவைப்படாத உடல் உழைப்புப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திலிருந்தும் வயதுவந்த ஒரு உறுப்பினருக்கு கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகளை வழங்க வழிவகை செய்கிறது. புதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொள்ள, இத்தகைய நபர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்திடம் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயது மற்றும் முகவரி போன்ற  விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.


மேலும், திருமணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கிராமிய வேலை உத்தரவாத அட்டைகளை வழங்குவதற்கான விதிகளும் இதில் உள்ளன. இந்தச் சிறப்பு அட்டை (special card) தனித்துவமான நிறத்தைக் கொண்டிருக்கும்.


கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு அட்டையை சரிபார்ப்பின் மூலம் புதுப்பிக்கலாம்.


7. மாநிலங்களுக்கான நெறிமுறைசார் ஒதுக்கீடு: '2026-ஆம் ஆண்டிற்கான நெறிமுறைசார் ஒதுக்கீட்டு விதிகளுக்கான குறிக்கோள் சார்ந்த அளவுகோல்கள்' (Draft Objective Parameters for Normative Allocation Rules) என்ற விதிகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும், இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள் சார்ந்த அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திற்குமான நிதியின் ஒதுக்கீட்டை மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்.


விதிகளின்படி, மாநிலங்களுக்கான வழக்கமான நிதியை தீர்மானிக்க, மத்திய அரசு 16-வது நிதிக் குழுவின் கிடைமட்ட பகிர்வு (Horizontal Devolution) பரிந்துரைகளைப் பயன்படுத்தும்.


#8 திறன்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள்: மத்திய அரசு, 2025-ஆம் ஆண்டு VB-G RAM G சட்டத்தின்கீழ், பணிபுரியும் திறன்சாராத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, VB-G RAM G திட்டத்தின்கீழ் வழங்கப்படும் திறன்சாரா உடல் உழைப்புக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், இந்தச்சட்டத்தின் பிரிவு 10-ன் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


சட்டத்தின்படி, மத்திய அரசு வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு ஊதிய விகிதங்களை அறிவிக்கலாம். VB G RAM G சட்டத்தின்கீழ் அறிவிக்கப்படும் ஊதிய விகிதமானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005-ன் பிரிவு 6-ன்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய விகிதத்திற்குக் குறைவாக இருக்கக்கூடாது என்றும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.


மத்திய ஊரக வளர்ச்சி (Ministry of Rural Development) அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலங்கள் முழுவதும் தினக்கூலி ரூ.300 முதல் ரூ.409 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கிமில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகளில் ரூ.450 என்ற சிறப்பு ஊதிய விகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், அசாம், திரிபுரா, சிக்கிம் மற்றும் மேற்குவங்கம் போன்ற வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு ஏற்ப்பட்டுள்ளது.


இதற்கு மாறாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்களில் 3 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான உயர்வு காணப்பட்டது.


இந்தியாவில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களின் பரிணாம வளர்ச்சி


1. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு ஊரக வளர்ச்சிக் கொள்கைகள் வறுமையைக் குறைத்தல், வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் உபரியாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரியும் ஊரகப் பகுதிகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஊதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள், அடிப்படை உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, ஊரக வளர்ச்சிக்கான முக்கியக் கருவிகளாகவும் படிப்படியாக மாறியுள்ளன.


2. 1960-ஆம் ஆண்டு கிராமப்புற மனிதவளத் திட்டம் (Rural Manpower Programme) மற்றும் 1971-ஆம் ஆண்டு கிராமப்புற வேலைவாய்ப்புக்கான விரைவுத் (Crash Scheme for Rural Employment) திட்டம் போன்ற ஆரம்பகாலத் திட்டங்கள் தொடங்கி, அரசாங்கம் அவ்வப்போது பல்வேறு ஊதிய வேலைவாய்ப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


3. இதைத் தொடர்ந்து 1980-கள் மற்றும் 1990-களில் கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 'தேசிய ஊரக வேலைவாய்ப்புத் (National Rural Employment Programme) திட்டம்' மற்றும் 'நிலமற்ற ஊரகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்' (Rural Landless Employment Guarantee Programme) ஆகியவை அடங்கும். இந்தத்திட்டங்கள் பின்னர் 'ஜவஹர் ரோஜ்கார் யோஜனாவில் (Jawahar Rozgar Yojana) 1993-ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டன. மேலும், செயல்பாட்டு வரம்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கதோடு, 1999-ல் இவை அனைத்தும் 'சம்பூர்ண கிராமீன் ரோஜ்கார் யோஜனா' (Sampoorna Grameen Rozgar Yojana) திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.


4. 1977-ஆம் ஆண்டின் மகாராஷ்டிர வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை என்ற கருத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஊதிய வேலைவாய்ப்புக் கொள்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) இயற்றப்பட்டது. இது கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்கியது.


Original article : VB-G RAM G comes into effect: What changes under India’s new rural employment scheme? -Roshni Yadav

Share: