புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனில் 300 ஜிகாவாட் (GW) என்ற திறனை இந்தியா எட்டியுள்ளது. இதன் மூலம் நமது நாடு பருவநிலை இலக்குகளை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. ஆனால், 2035-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் புதிய பருவநிலை இலக்குகள் என்ன? தூய எரிசக்தி மாற்றத்தை முன்னெடுப்பதில் சூரிய சக்தியின் பங்கு என்ன? பசுமை இல்ல வாயு வெளியேற்றச் செறிவு (greenhouse gas emission intensity) என்றால் என்ன, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு ஏன் முக்கியமானது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி
புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கில், இந்தியா 300 ஜிகாவாட் அல்லது 60 சதவீத அளவை எட்டியுள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகஸ்ட் 9 அன்று தெரிவித்தது. இந்த நிலையில், இந்தச்சாதனை மற்றும் இந்தியாவின் புதிய பருவநிலை இலக்குகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.
முக்கியக் குறிப்புகள்:
1. நாட்டின் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை இலக்குகளில் இந்தியா ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜூலை 31 மாத நிலவரப்படி, இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் அல்லாத (Non-Fossil Fuel) மின்சார உற்பத்தி நிறுவப்பட்ட திறன் 300 ஜிகாவாட்டை கடந்துள்ளது என்று அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
2. 300.50 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறன் (ஜூலை 31, 2026 நிலவரப்படி) சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், நீர்மின்சாரம், உயிரி-மின்சாரம் (bio-power) மற்றும் அனல் மின் நிலைய மின்சாரம் ஆகியவை அடங்கும்.
3. குறிப்பாக, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தின் முக்கிய சக்தியாக சூரிய மின் சக்தி உருவெடுத்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் வெறும் 2.8 ஜிகாவாட்டாக இருந்த இந்தியாவின் சூரிய மின் சக்தித் திறன், தற்போது 164.59 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, நாட்டின் புதைபடிவமற்ற மின் உற்பத்தித்திறனில் சூரிய மின் சக்தி திறனை மிகப்பெரிய ஒன்றாக மாற்றியுள்ளது.
4. காற்றாலை மின்சாரத் திறனும் கணிசமாக விரிவடைந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் 21 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை மின் திறன், தற்போது 58.14 ஜிகாவாட்டாக அதிகாரிதுள்ளது.
5. தற்போது, நீர்மின்சக்தி 57.24 ஜிகாவாட் திறனையும், உயிரிசக்தி 11.75 ஜிகாவாட் திறனையும் வழங்குகின்றன. அணுசக்தி மேலும் 8.78 ஜிகாவாட் திறனைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் அல்லாத நிறுவப்பட்ட திறனை 300 ஜிகாவாட் என்ற சாதனையை தாண்டி கொண்டு சென்றுள்ளன.
6. சூரிய மின்சக்தி திறனின் விரைவான விரிவாக்கம், வளர்ந்து வரும் காற்றாலை மின் உற்பத்தித் திறன், சாதனை அளவிலான வருடாந்திர சேர்ப்புகள், அதிகரித்த புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறையின் விரிவாக்கம் போன்ற பல்வேறு இணைப்பு நிகழ்வுகளால் இந்த சாதனை ஏற்பட்டுள்ளது.
2035-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் காலநிலை இலக்குகள் என்ன?
7. 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உதவும் ஒரு தொகுதி காலநிலை நடவடிக்கைகளைத் தீர்மானித்து, செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) எனக் குறிப்பிடப்படுகின்றன. இது, காலநிலை நடவடிக்கைகளின் தன்மை மற்றும் அளவை நாடுகளே தீர்மானிக்கின்றன என்ற உண்மையை வலியுறுத்துகிறது.
8. இந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அன்று, இந்தியா 2035-ஆம் ஆண்டுக்கான தனது திருத்தப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) வெளியிட்டது. இந்தப் புதிய இலக்குகள் ஒவ்வொன்றும், பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒரு கட்டாயத் தேவையாக உள்ள, 2030-ஆம் ஆண்டுக்கான தற்போதைய உறுதிமொழிகளைக் காட்டிலும் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
9. 2030-ஆம் ஆண்டுக்கு 50% என நிர்ணயித்திருந்த தனது இலக்கைவிட, 2035-ஆம் ஆண்டில் தனது மின்சார உற்பத்தித் திறனில் குறைந்தபட்சம் 60% புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து பெறப்படுவதை உறுதி செய்வதாக இந்தியா தெரிவித்துள்ளது.
10. 2005-ஆம் ஆண்டின் அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) ஒவ்வொரு அலகிற்கும் ஏற்படும் பசுமை வாயு வெளியேற்றத் தீவிரத்தை (Emissions Intensity) குறைந்தது 47% அளவுக்கு குறைப்பதாக உறுதியளித்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டுக்கான தற்போதைய 45% குறைப்பு இலக்கைவிட 2 சதவீதப் புள்ளிகள் அதிகமான அளவாகும்.
11. மேலும், 2005-ஆம் ஆண்டில் இருந்த அளவை விட, குறைந்தது 3.5 முதல் 4 பில்லியன் டன்கள் வரையிலான CO2-க்கு இணையான அளவைக் கொண்ட ஒரு 'கார்பன் உறிஞ்சு அமைப்பை' (carbon sink) உருவாக்கவும் அது உறுதியளித்துள்ளது.
பசுமை இல்ல வாயு வெளியேற்றச் செறிவு (Greenhouse gas emission intensity) என்றால் என்ன?
1. சில நாட்களுக்கு முன்னர், மத்திய அரசு இரும்பு மற்றும் எஃகுத் துறைக்கான பசுமை இல்ல வாயு வெளியேற்றச் செறிவு (greenhouse gas emission intensity (GEI)) இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், அவற்றை இந்தியாவின் கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தின் (carbon credit trading scheme (CCTS)) கீழ் கொண்டுவருவதற்கும் ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
2. பசுமை இல்ல வாயு வெளியேற்றச் செறிவு (GEI) என்பது ஒரு அலகு உற்பத்திக்கு வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) அளவைக் குறிக்கிறது. உதாரணமாக, சிமெண்ட் உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் வாயுக்களின் அளவு இதில் அடங்கும்.
3. பசுமை இல்ல வாயுக்கள் (GHGs) என்பவை வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைத்து, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தும் "பசுமை இல்ல விளைவுக்கு" (greenhouse effect) காரணமாக அமையும் வாயுக்களாகும். வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் ஐந்து பசுமை இல்ல வாயுக்கள்: நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவை போன்றவை ஆகும். குளோரோபுளோரோகார்பன்கள் (chlorofluorocarbons (CFCs)) மற்றும் ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள் (hydrochlorofluorocarbons (HCFCs)) போன்ற செயற்கை புளோரினேற்றப்பட்ட வாயுக்களும் பிற பசுமை இல்ல வாயுக்களில் அடங்கும்.
4. இந்தியாவின் பருவநிலை இலக்குகளை அடைவதற்குத் துறை சார்ந்த இலக்குகளை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானது. பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், அகற்றுதல் அல்லது தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் தொழில்துறைகளை குறைந்த கார்பன் கொண்ட வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்துவதே இதன் இறுதி நோக்கமாகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிப்பதில் உள்ள சவால்கள்
1. இந்தியாவின் பருவநிலை இலக்குகளை அடைவதற்காகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் வேகமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் மின்சார அமைப்பில் ஒரு முக்கிய சவால் எழுந்துள்ளது: சில நேரங்களில் மின்சார விநியோகம் அதிகமாகவும், மற்ற நேரங்களில் போதுமானதாக இல்லாமலும் இருப்பது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும் அது தேவைப்படும் நேரத்திற்கும் இடையே உள்ள இது போன்ற முரண்பாடு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இங்குதான் ஆற்றலைச் "சேமிக்கும்" (store) அமைப்புகளைச் செயல்படுத்துவது முக்கியமான ஒன்றாக மாறுகிறது. இருந்த போதிலும், இதில் இந்தியா இதுவரை போதிய முன்னேற்றத்தைக் காணவில்லை.
2. குறிப்பாக, ஆற்றல் சேமிப்பு என்பது, அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரங்களில் உபரி மின்சாரத்தைச் சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் அதேவேளையில் உற்பத்திக் குறைவாக இருக்கும் நேரங்களில் அதை வெளியிடும் அமைப்புகளை சுட்டிக் காட்டுகிறது. சூரிய ஒளி மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, சேமிக்கக்கூடிய வடிவங்களாக இந்த அமைப்புகள் மாற்றுகின்றன. பின்னர், தேவை ஏற்படும்போது அந்தச் சேமிக்கப்பட்ட ஆற்றலை மீண்டும் மின்சாரமாக மாற்றுகின்றன.
3. உலகம் முழுவதும் பல்வேறு வகையான ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. சில முக்கிய ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:
(i) நீரேற்று மின்நிலையம் (Pumped hydro storage (PHS)): இது உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி, தாழ்வான நீர்த்தேக்கத்திலிருந்து உயர்ந்த நீர்த்தேக்கத்திற்கு நீரை மேலே கொண்டு செல்கிறது. மின்சாரத் தேவை உச்சத்தை அடையும்போது, அது சேமிக்கப்பட்ட நீரை விசையாழிகள் (turbines) வழியாக கீழ்நோக்கி கொண்டு சென்று மின்சாரத்தை உருவாக்குகிறது.
(ii) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery energy storage systems (BESS)): இந்தத் தொழில்நுட்பம் மின்சாரத்தை வேதியியல் முறையில் சேமித்து, தேவைப்படும்போது அதை வெளியிடுகிறது. லித்தியம்-அயன் மின்கலங்கள், குறிப்பாக லித்தியம் இரும்பு பாஸ்பேட் (lithium iron phosphate (LFP)) மின்கலங்கள், அவற்றின் குறைந்துவரும் செலவுகள், அதிக செயல்திறன் மற்றும் நீண்ட செயல்பாட்டுக் காலம் ஆகியவற்றின் காரணமாக, தற்போது மின்கட்டமைப்பு அளவிலான சேமிப்பிற்கான முக்கிய தொழில்நுட்பமாக விளங்குகின்றன.
(iii) செறிவூட்டப்பட்ட சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: இந்த தொழில்நுட்பத்தில் கண்ணாடிகள் மூலம் சூரிய ஒளி சேகரிக்கப்பட்டு, அது ஒரு வெப்பத்தைப் பெறும் அமைப்பின் (Receiver) மீது குவிக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெறும் அமைப்பு வெப்பமடையும் போது, அதன் உள்ளே உருகிய உப்பு (Molten Salt) போன்ற பொருட்கள் சுழற்சி செய்யப்பட்டு அந்த வெப்பம் சேமிக்கப்படுகிறது. பின்னர், சேமிக்கப்பட்ட வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி (Steam) உருவாக்கப்படுகிறது. இந்த நீராவி ஒரு விசையாழியைச் சுழற்றி இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது. விசையாழியுடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
(iv) அழுத்தப்பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: இது உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி காற்றுக்கு அதிக அழுத்தை ஏற்படுத்தி, நிலத்திற்கு அடியில் உள்ள குகைகள் அல்லது தொட்டிகளில் சேமிக்கிறது. மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது, அழுத்தப்பட்ட காற்று விசையாழிகளை இயக்கவும் மின்சாரத்தை உருவாக்கவும் வெளியிடப்படுகிறது.
(v) சுழல்சக்கர ஆற்றல் சேமிப்பு (Flywheel) அமைப்புகள்: இது ஒரு சுழலியை மிக அதிக வேகத்தில் சுழற்றுவதன் மூலம், மின்சாரத்தை சுழற்சி ஆற்றலாகச் சேமிக்கிறது. இவை மின்கட்டமைப்பில் ஏறக்குறைய உடனடியாக மின்சாரத்தைச் செலுத்தக்கூடியவை என்பதால், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கும் குறுகியகால ஏற்ற இறக்கங்களைக் கையாளுவதற்கும் பயனுள்ளதாக இருக்கின்றன.
(vi) புவிஈர்ப்பு ஆற்றல் சேமிப்பு (Gravity energy storage systems) அமைப்புகள்: இவை கனமான பொருட்களை உயரமான இடங்களுக்கு கொண்டுசெல்ல மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் தேவைப்படும்போது, அந்தப் பொருட்கள் கீழே இறக்கப்பட்டு, ஜெனரேட்டர்கள் (generators) மூலம் புவிஈர்ப்பு ஆற்றல் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது.