உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழல் சட்டத்தை (Environmental law) வடிவமைத்துள்ளது. அது தனது மரபிலிருந்து விலகிச் செல்கிறதா? - உஜ்ஜல் புயான்

ஒரு குறிப்பிட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுகிறது என்ற நிலையுடன் ஒரு பொறுப்புள்ள குடிமகன் நீதிமன்றத்தை அணுகும்போது, ​​நீதிமன்றத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?


இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்பகால ஆண்டுகளில், தெளிவான சுற்றுச்சூழல் கொள்கை (Environmental policy) எதுவும் இல்லை. பின், இந்திய அரசியலமைப்பில் சுற்றுச்சூழல் தொடர்பான சில விதிகள் இருந்தன. இருப்பினும், "சுற்றுச்சூழல்" (Environment) என்ற சொல் அதில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.


1976-ல், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனிதச் சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் (UN Conference on the Human Environment) இந்தியா அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் நாடாளுமன்றம் செயல்பட்டது. இந்த ஸ்டாக்ஹோம் மாநாட்டில் (Stockholm Conference) விவாதிக்கப்பட்ட கருத்துக்களே இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைக்கான அடித்தளமாக அமைந்தன. இக்கருத்துகள் பின்னர் பல்வேறு சட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகளில் இடம்பெற்றன. அரசியலமைப்பு (நாற்பத்து இரண்டாவது திருத்தச்) சட்டம்-1976 (Constitution (Forty-Second Amendment) Act) இன் மூலம் இந்த விதிகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. இத்திருத்தச் சட்டம் பிரிவு 48A மற்றும் பிரிவு 51A(g) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.




பிரிவு 48A என்பது அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) ஒன்றாகும். சட்டங்களை இயற்றும்போதோ அல்லது கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தும்போதோ, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. பிரிவு 51A என்பது பகுதி IVA-ன் கீழ் குடிமக்களின் அடிப்படை கடமைகளை வரையறுக்கும் ஒரு தனி விதியாகும். இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்தப் பிரிவு கூறுகிறது.


அரசியலமைப்பு முகப்புரையில் (Preamble) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் தொடங்கி, அரசியலமைப்பில் பல பிரிவுகளை இந்தத் திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தியது. அப்போது உள்நாட்டு அவசரநிலை (internal Emergency) அமலில் இருந்ததால், அதன் சில பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கத்தைப் பற்றியது மட்டுமல்லாமல், அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்தும் பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 1977-ல் புதிய அரசு பதவியேற்றபோது, ​​இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவரான சாந்தி பூஷன் சட்ட அமைச்சரானார். அனைத்துத் திருத்தங்களையும் முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. பதவியிலிருந்து விலகிய பிரதமருடன் தனக்கு இருந்த வலுவான அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் மக்களின் பெரும் கோரிக்கையை மீறியும், பல பிரிவுகளை அவர் நீக்காமல் இருந்தது அவரது சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது.


ஸ்டாக்ஹோம் மாநாட்டிற்கு முன்னரும் பின்னரும் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும், 1984-ல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவு துயரச் சம்பவமே உச்சநீதிமன்றத்தை கடுமையாக தீர்வுகாண செயல்படத் தூண்டியது. 'யூனியன் கார்பைடு நிறுவனம் vs இந்திய அரசு' (Union Carbide vs Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் 'முழுமையான பொறுப்புடைமை' (absolute liability) என்ற கோட்பாட்டை உருவாக்கியது. ஒரு நிறுவனம் இயல்பாகவே ஆபத்தான செயல்பாட்டை மேற்கொள்ளும்போது, ​​அச்சிறப்புச் செயல்பாடு தொடர்பான விபத்தால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், காயமடைந்த அல்லது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அந்த நிறுவனம் இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்ற கொள்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. 'மாசுபடுத்துபவரே பணம் செலுத்துவார்' (polluter pays principle) என்ற கொள்கை 1982-ம் ஆண்டு ரியோ உச்சிமாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது இந்தியாவில் முதன்முறையாக 'இந்திய சுற்றுச்சூழல் சட்ட நடவடிக்கை மன்றம் vs இந்திய ஒன்றியம்' (Indian Council for Enviro-Legal Action vs Union of India) வழக்கில் பயன்படுத்தப்பட்டது.


வேலூர் குடிமக்கள் நல மன்றம் எதிர். இந்திய ஒன்றியம் வழக்கில், (Vellore Citizens’ Welfare Forum vs Union of India) முன்னெச்சரிக்கைக் கொள்கையானது மூன்று முக்கிய நிபந்தனைகளைக் கொண்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அரசு சுற்றுச்சூழல் சீரழிவிற்கான காரணங்களை முன்கூட்டியே கணிக்கவும், தடுக்கவும் மற்றும் அவற்றிற்குத் தீர்வு காணவும் வேண்டும். இது ஒரு தடுப்பு நடவடிக்கைக் கொள்கையாகும். இது முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் செயல்படுவதை வலியுறுத்துகிறது.

'வனசக்தி' (Vanashakti) வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்த, 'இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பு எதிர். வனசக்தி' (Confederation of Real Estate Developers of India (CREDAI) vs Vanashakti) வழக்கில் எனது மாறுபட்ட தீர்ப்பில், முன்னெச்சரிக்கைக் கொள்கையே சுற்றுச்சூழல் தொடர்பான சட்டவியலின் (environmental jurisprudence) அடித்தளம் என்று குறிப்பிடப்பட்டது. 'மாசுபடுத்துபவரே பணம் செலுத்த வேண்டும் என்ற கொள்கை’ என்பது இழப்பீடு வழங்குவதற்கான ஒரு கொள்கை மட்டுமே. வேறுவிதமாகக் கூறினால், சுற்றுச்சூழல் கோட்பாடுகளைத் தரவரிசைப்படுத்த வேண்டியிருந்தால், 'மாசுபடுத்துபவரே பணம் செலுத்துவார்' என்ற கோட்பாட்டிற்கு மேலாக முன்னெச்சரிக்கைக் கோட்பாடு வைக்கப்பட வேண்டும்.


நிலையான வளர்ச்சி (sustainable development) என்ற கோட்பாடு, அரசு சுற்றுச்சூழலுக்கும் மேம்பாட்டிற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. வேலூர் குடிமக்கள் நல மன்றம் வழக்கில், முன்னெச்சரிக்கைக் கோட்பாடு (precautionary principle) மற்றும் மாசுபடுத்துபவரே பணம் செலுத்தும் கோட்பாடு (polluter pays principle) ஆகியவை நிலையான வளர்ச்சியின் இன்றியமையாத பகுதிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலையான வளர்ச்சி (sustainable development) என்பது வழக்கமான சர்வதேசச் சட்டத்தின் (customary international law) ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

'ஸ்பான் மோட்டல் வழக்கு' (Span Motel case) என்று பரவலாக அறியப்படும் எம்.சி. மேத்தா மற்றும் கமல் நாத் இடையிலான வழக்கில், உச்சநீதிமன்றம் 'பொது அறக்கட்டளைக் கோட்பாட்டை' (public trust doctrine) உருவாக்கியது. 'மாசுபடுத்துபவரே பணம் செலுத்த வேண்டும்' என்ற கொள்கையின் கீழ் ஸ்பான் மோட்டல் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையையும் அபராதங்களையும் ஏற்க வேண்டியிருந்தாலும், பொது நம்பிக்கையை மீறியதற்காக இமாச்சலப் பிரதேச அரசு விமர்சிக்கப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்காகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய கடமை தற்போதைய தலைமுறைக்கு உள்ளது என்று கூறி, 'தலைமுறைகளுக்கு இடையிலான சமத்துவம்' (inter-generational equity) என்ற கொள்கையையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்புகள் மற்றும் பலவற்றிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். இந்தியச் சுற்றுச்சூழல் சட்டவியலுக்கு ஒரு தாய் உண்டு என்றால், அது உச்சநீதிமன்றம்தான். நீதிமன்றம் அதன் ஆரம்பக் கட்டங்களிலிருந்தே சுற்றுச்சூழல் சட்டத்தை வளர்த்தெடுத்துள்ளது. ஆனால் அதே வேளையில், நான் என்னையே கேட்டுக்கொள்வது இன்று, இந்தத் தீர்ப்புகள் மிகவும் தொலைவில் உள்ளதாகத் தோன்றுகின்றனவா?


மும்பை உயர்நீதிமன்றத்தில் எனது முன்னாள் நண்பரான நீதிபதி கௌதம் படேல், ’தொடர்ச்சியான முரண்பாடு: சுற்றுச்சூழல் சட்டமும் உச்சநீதிமன்றமும்' (Consistently Inconsistent: Environmental Law and the Supreme Court) என்ற கட்டுரையில், சுற்றுச்சூழல் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப் பகுப்பாய்வு செய்துள்ளார். அரசு சாரா அமைப்புகள் (NGOs) எழுப்பிய சுற்றுச்சூழல் சார்ந்த கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் பெரும்பாலும் ஆதரித்துள்ளதாக நீதிபதி படேல் கண்டறிந்துள்ளார். அதேசமயம், உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளுக்கு அதே அளவிலான ஆதரவை அளிக்கவில்லை. சரியாக இந்தத் துறையில்தான் உச்சநீதிமன்றத்தின் தலையீடு மிக முக்கியமானது என்று நீதிபதி படேல் கூறுகிறார். இருப்பினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆதரவளிப்பதில் ஒரு தயக்கம் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உச்சநீதிமன்றம் பரந்த அளவில் தொடர்ந்து வலியுறுத்தும் கொள்கைகளுக்கு எதிராக இந்தத் தீர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​சட்டரீதியான அந்த முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறுகிறார். இத்தகைய 'தொடர்ச்சியான முரண்பாடு'தான் (consistent inconsistency) சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.


சுற்றுச்சூழலுக்கும், மேம்பாட்டிற்கும் இடையே ஏதேனும் முரண்பாடு உள்ளதா? என்னைப் பொறுத்தவரை, இதற்கான பதில் திட்டவட்டமாக 'இல்லை' என்பதுதான். முப்பதாண்டுகளுக்கு முன்பு, வேலூர் குடிமக்கள் வழக்கில் (Vellore Citizens case), மேம்பாடும் சூழலியலும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற பாரம்பரியக் கருத்து இனி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. 'வனசக்தி' (Vanashakti) வழக்கின் மறுஆய்வுத் தீர்ப்பில், சுற்றுச்சூழலுக்கு எதிராக மேம்பாட்டை நிறுத்தி வைக்கும் வகையிலான ஒரு தவறான பிம்பம் உருவாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று நான் கூறியுள்ளேன். உண்மையில், சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் ‘நிலையான வளர்ச்சிக்கான அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பின்’ ஒரு பகுதியாகவே உள்ளன.


ஒரு குறிப்பிட்ட திட்டம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி, சமூக அக்கறை கொண்ட குடிமகன் ஒருவர் நீதிமன்றத்தை அணுகும்போது, ​​நீதிமன்றத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? "இந்தியாவில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாவது இதுவரை எவ்வித எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தப்பட்டுள்ளதா?" என்று தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டு, அந்த எதிர்ப்பை ஆரம்பத்திலேயே நீதிமன்றம் நிராகரித்துவிட வேண்டுமா?. மேலும், தேவையற்ற அல்லது ஆதாரமற்ற மனுக்களைத் தாக்கல் செய்யும் சிலர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய முயற்சிகளை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன. ஆனால், அதற்காக எதிர்ப்புக் குரல் எழுப்பும் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கருதிவிட முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் அர்ப்பணிப்புள்ள சூழலியலாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். நீதிமன்றங்களின் கதவுகள் அவர்களுக்கு மூடப்பட்டால், அவர்கள் எங்கு செல்வார்கள்? என்னைப் பொறுத்தவரை, ஒரு அரசியலமைப்புச் நீதிமன்றத்தின் அணுகுமுறை இப்படி இருக்கக்கூடாது. மாறாக, "இத்திட்டம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படுத்தப்பட்டுள்ளதா?" என்றுதான் நீதிமன்றம் கேட்க வேண்டும். பெரியதோ அல்லது சிறியதோ, உள்கட்டமைப்புத் திட்டமோ அல்லது வேறு ஏதேனும் திட்டமோ, அனைத்துத் திட்டங்களும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தனக்கும் குடிமக்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும்.


கட்டுரையாளர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.


Original Link: Supreme Court has nurtured environmental law. Is it distancing itself from its legacy?

Share: