வீட்டைவிட்டு வெளியில் சென்றபின் குப்பைகளுக்கு என்ன ஆகிறது, கழிவு மேலாண்மை முறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? - அக்ஷத் பட்னி & சலோனி ஸ்ரீவஸ்தவா

கழிவு மேலாண்மை விதிகளை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், இந்தியாவில் கழிவுகள் தவறாமல் ஈரக் கழிவு, உலர் கழிவு என தனித்தனியாக பிரிக்கப்படுவதையும், அவை முறையாகச் சரிபார்க்கப்படுவதையும் நிர்வாக அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 2026-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளை (Solid Waste Management Rules) யாராவது மீறினால், அவர்களிடம் இருந்து சுற்றுச்சூழலுக்கான இழப்பீட்டுத் தொகையை எவ்வாறு தொகையாக நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள் 2026, பழைய 2016-ஆம் ஆண்டு விதிகளை மாற்றியமைத்துள்ளன. இந்த புதிய விதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் கழிவுகளைக் கையாளும் முறையை மாற்றுகின்றன. இவை பெரிய குப்பைக் கிடங்குகளை மட்டுமே பெரிதும் நம்பியிருப்பதை தவிர்த்து, கழிவுகளைக் குறைத்தல், பொருட்களை மறுபயன்பாடு செய்தல் மற்றும் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை மறுசுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன.


இருப்பினும், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் குறிப்பிட்டது போல, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாகச் செயல்பட வலுவான சட்டங்கள் மட்டும் போதாது. அந்த விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யப் பொருத்தமான ஒழுங்குமுறை அமைப்புகளும், அதிகாரிகளின் பொறுப்புடைமையும் தேவைப்படுகின்றன.


இது இந்தியாவில் ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. நாட்டின் அதிகரித்து வரும் கழிவுப் பிரச்சனையையும், அதை எப்படிச் சரிசெய்யலாம் என்பதையும் குறித்து அறிந்துகொள்வோம். 


இந்தியாவில் குப்பைகள் வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, குப்பைக்கிடங்கைச் சென்றடையும் வரையிலான வழக்கமான பயணம் என்ன?




வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கள் பிரித்தெடுத்துப் பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும். அது முதலில் ஒரு சேகரிப்பு மையத்திற்கும், பின்னர் இடைநிலைச் சேமிப்பு நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக மறுசுழற்சி மையங்களை அடைகிறது. இதில் மக்கும் ஈரக் கழிவுகள் உரமாக்கல் அல்லது உயிரி எரிவாயு தயாரிப்பிற்கும், உலர் கழிவுகள் பொருள் மறுசுழற்சி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டுப் பிறகு மறுசுழற்சி மையங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். சுகாதாரக் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட வேண்டும். மேலும், சாயம் பூசப்பட்ட டப்பாக்கள், பல்புகள் மற்றும் காலாவதியான மருந்துகள் போன்ற சிறப்பு கவனம் தேவைப்படும் பொருட்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். எந்த வகையிலும் மறுசுழற்சி செய்ய முடியாத, எஞ்சியிருக்கும் கழிவுகள் மட்டுமே குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.


இந்தக் கழிவு மேலாண்மை நடைமுறை எவ்வளவு சீராகவும் எளிதாகவும் அமைந்திருக்கிறது?


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கழிவு மேலாண்மை முறை பல நிலைகளில் முடங்கிவிடுகிறது. நகராட்சிகள் 95 சதவீதத்துக்கும் அதிகமான கழிவுகளைச் சேகரிப்பதாகக் கூறினாலும், கிராமப்புறப் பகுதிகளில் நிலைமை அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. மேலும், சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலான நேரங்களில் தரம் பிரிக்கப்படுவதில்லை. கழிவுகள் உருவாகும் இடத்திலேயே வகை பிரிக்கப்பட்டாலும்கூட, அவை ஒரே ஒரு பகுதியைக் கொண்ட வாகனங்களிலேயே கொட்டப்படுகின்றன அல்லது கழிவு மாற்றும் நிலையங்களில் மற்ற அனைத்து கழிவுகளுடனும் ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றன. இறுதியில், அவை அனைத்தும் ஒன்றாகக் கலந்த கழிவாகவே குப்பைக் கிடங்குகளைச் சென்றடைகின்றன.


கழிவுகள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டால், அவை பெரும்பாலும் பயன்படுத்த முடியாததாகிவிடும். உரத் தயாரிப்பு ஆலைகளால் மாசடைந்த மட்கும் கழிவுகளைச் செயலாக்க முடியாது, மேலும் மறுசுழற்சி செய்பவர்களும் அழுக்கடைந்த காகிதம் அல்லது நெகிழிகளைப் பெற்றுக்கொள்வதில்லை. இதனால், அக்கழிவுகளைக் குப்பைக்கிடங்குகளில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது.


இந்தியாவின் கழிவு மேலாண்மைக் கொள்கை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது?


இந்தியா தனது முதல் நகராட்சி திடக்கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளை, (Municipal Solid Waste (Management and Handling) Rules, 2000) 2000-ஆம் ஆண்டில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றியது. மேலும், இந்தியாவின் மாற்றியமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள், 2016 கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2016-ஆம் ஆண்டின் விதிகள் நல்ல நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், கழிவுப் பிரித்தெடுத்தல் மற்றும் மேலாண்மை போன்ற முக்கிய விவகாரங்களில், கடுமையான நிபந்தனைகளோ அல்லது சட்டப்பூர்வத் தன்மையோ இல்லாமல் பலவீனமாகவே இருந்தன. இதன் காரணமாக, இந்த விதிகளைச் செயல்படுத்துவது தொடர்ந்து ஒரு சவாலாகவே நீடிக்கிறது.


இதன் தொடர்ச்சியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2016-ஆம் ஆண்டின் விதிகளை நீக்கிவிட்டு, புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளை 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


2016-ஆம் ஆண்டு விதிகளின் முன்னேற்றத்தையும் அதன் எல்லைகளையும் கருத்தில்கொண்டு, கழிவுகளைத் தரம் பிரித்தலை மேம்படுத்தவும், குப்பைக் கிடங்குகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் (circular economy) என்ற கோட்பாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் 2026-ஆம் ஆண்டு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகள், கழிவுகளை நான்கு பிரிவுகளாகப் பிரிப்பது, ஒரு தேசிய கண்காணிப்பு இணையதளத்தை உருவாக்குவது, அதிக அளவில் கழிவுகளை உருவாக்குபவர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளை வழங்குவது மற்றும் பழைய குப்பைக் கிடங்குகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றுவது ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.


விதிகள் அமலில் இருந்தபோதிலும், இந்தியாவின் கழிவு மேலாண்மைத்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால் என்ன?



இந்தியாவின் கழிவு மேலாண்மைப் பிரச்சனைக்கு போதிய விதிகள் இல்லாதது காரணமல்ல; மாறாக, அந்த விதிகளை ஒழுங்கற்ற முறையில் செயல்படுத்துவதே முக்கியக் காரணம் ஆகும். அடிப்படை கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்பே, ஒரு கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டப்படுகிறது அல்லது ஒரு குப்பை மேடு அகற்றப்படுகிறது. கழிவுகள் ஒரு சுத்திகரிப்பு மையத்தை அடையும்போது அவை இன்னும் தரம் பிரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனவா? ஒரு நகரத்தின் கழிவு மேலாண்மை பற்றிய தரவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா? மேலும், அக்கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களுக்குச் சந்தையில் உண்மையில் வரவேற்பும் மதிப்பும் இருக்கிறதா?


கழிவு மேலாண்மைத் துறையின் அடித்தளமாகச் சில முக்கிய நடைமுறைகள் அமைய வேண்டும். அதற்கு, அதிகாரிகளும் திட்டங்களைச் செயல்படுத்துபவர்களும் சரியான முறையில் திறம்படச் செயல்படுவது அவசியம்: முதலில் கழிவுகளைப் பிரித்தெடுக்க வேண்டும்; அடுத்து அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்; பின்னரே அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.


கழிவு மேலாண்மைத் துறையில் திட்டங்களைச் திறம்படச் செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்கான முதல்படி என்ன?


தரம் வாரியாக கழிவுகளைப் பிரித்தெடுப்பதே மிகவும் முக்கியமான முதல் படியாகும். கழிவு மறுசுழற்சி மற்றும் பதப்படுத்தும் மையங்கள் வடிவில் தேவையான அளவு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால், கழிவுகள் இந்த மையங்களைச் சென்றடைவதற்கு முன்பாகவே அவை தூய்மையாகவும், சரியாகப் பிரிக்கப்பட்டும் இருப்பதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய கழிவு மேலாண்மை அமைப்பில் பெரிய பிரச்சனையாக இருக்கும் "தரவுத் துல்லியம்" மற்றும் கடைசி நிலையில் கிடைக்கும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையின்மை போன்ற சிக்கல்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கின்றனர்.


உதாரணமாக, ஒவ்வொரு நிலையிலும் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கழிவுகளின் அளவு உண்மையில் சரியாகப் பொருந்துகிறதா? கழிவு மாற்றும் நிலையங்கள், மறுசுழற்சி மையங்கள் மற்றும் குப்பை கொட்டும் இடங்களில் உள்ள 'வாகனங்களின் எடையை அளவிடும் மேடை' (Weighbridge) மூலம் இதை எளிதாகக் கண்டறிய முடியும். இவை அனைத்து வசதிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும், ஆனால் நடைமுறையில் அனைத்து இடங்களிலும் இது பின்பற்றப்படுவதில்லை. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் ஒன்றாகக் கலந்தக் கழிவுகள் கொட்டும் இடங்களில் மீத்தேனை (methane) வெளியிடுவதாலும், திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பது காற்றை மாசுபடுத்துவதாலும், கழிவுகளைத் துல்லியமாகத் தனித்தனியாகப் பிரிப்பது காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும் பொது சுகாதாரத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.


சிறந்த முறையில் திட்டங்களைச் செயல்படுத்த வேறு எந்த நடவடிக்கைகள் உதவும்?


தரவுகளைச் சரிபார்ப்பதிலேயே முதன்மை கவனம் செலுத்தப்பட வேண்டும். தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் அமைவதில்லை. மேலும், தெரிவிக்கப்படும் கழிவு தொடர்பான புள்ளிவிவரங்களும் முழுமையாக நம்பகமானவையாக இல்லாமல் இருக்கலாம். இந்தப் பிரச்சனையைச் சரியாகத் தீர்ப்பதற்கும், ஒட்டுமொத்தத் துறையின் தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் பின்வரும் காரணிகளைக் கவனத்தில் கொண்டு தீர்வுகாண வேண்டும்:


போதிய திறனின்மை


உள்ளாட்சி அமைப்புகள் போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள், நிலையான நிதி அல்லது தொழில்நுட்ப அறிவு இல்லாமல் சிக்கலான விதிகளை நடைமுறைப்படுத்துகின்றன. இதன் காரணமாக, கழிவு மேலாண்மைச் சங்கிலியில் கழிவுகளைத் தரம் பிரிக்கும் முறை மேம்பட்டு, வேறுபட்ட வகையான கழிவுகளைக் கையாள வேண்டிய நிலை ஏற்படும்போது, ஒரே ஒரு குறிப்பிட்ட வகை கழிவை மட்டும் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகள் செயலிழந்துவிடுகின்றன.


போதிய அளவிலான நிலப்பரப்பு பகுப்பாய்வு மற்றும் சந்தை மதிப்பீடு இல்லாமை


விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக, கழிவுகளைப் பற்றி விரிவாக ஆராய்வது, வார்டு வாரியாகச் சரியான திட்டமிடலை மேற்கொள்வது மற்றும் இறுதியாக அதற்கான லாபகரமான சந்தை இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது போன்ற அத்தியாவசியமான அடிப்படைப் பணிகளைச் செய்வதற்கு முன்பாகவே, அவசர அவசரமாகத் தொழில்நுட்பத் தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


உதாரணமாக, டெல்லியில் உள்ள ஓக்லா (Okhla) உர ஆலை, நாள் ஒன்றுக்கு சுமார் 200 டன் உரம் (உயிரி உரம்) உற்பத்தி செய்யும் திறன்கொண்டது. ஆனால், 2018-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, அங்குள்ள சந்தையில் இதற்கான தேவை குறைவாக இருந்ததால், தினமும் 40 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சந்தைக்கு வேறு வகையான கழிவு சார்ந்த பொருட்களின் தேவைகளே அதிகமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, தொழில்நுட்பத் தீர்வுகள் என்பவை அந்தந்த பகுதியின் கழிவுத் தன்மை மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் துல்லியமான தரவுகள் மிகவும் அவசியமாகும்.


ஆனால், முடிவெடுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் இந்தத் தரவுகள் பெரும்பாலும் அவர்களாகவே அளிப்பவையாகவும், அரிதாகவே சரிபார்க்கப்படுபவையாகவும் இருப்பதால், திட்டங்கள் அல்லது செயல்பாடுகள் சரியாக அமையாமல் தவறான முடிவுகளுக்கே வழிவகுக்கின்றன. இதனால்தான், தரவுகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க மூன்றாம் தரப்பு தணிக்கைகளை வழக்கமான நடைமுறையாக மாற்றுவது மிகவும் அவசியமாகிறது.


நிர்வாகச் சீர்கேட்டைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?


தரவுகளின் அமைப்பில் தவறான தகவல்களை வேண்டுமென்றே பதிவு செய்வதற்கும், அதனால் ஏற்படும் தவறான நிர்வாகத்திற்கும் கடுமையான தண்டனை விதியை உறுதிசெய்வது அவசியமாகும். தரவுகளின் நம்பகத்தன்மையைக் கெடுப்பதற்கு உண்மையான, கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு மத்தியக் கழிவு மேலாண்மை இணையதளம் என்பது பல்வேறு பகுதிகளிலிருந்து அதில் பதிவேற்றப்படும் தரவுகளின் துல்லியத்தைப் பொறுத்தே சிறப்பாகச் செயல்பட முடியும். சரிபார்க்கப்படாத தரவுகளைத் தொடர்ந்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தால், இந்தியாவின் கழிவு மேலாண்மைத் திட்டம் முயற்சிகள் இயல்பாகவே தோல்வியடையும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே இந்தச் சிக்கல் நிலவுகிறது: குப்பை மேடுகள் வளர்ந்து கொண்டே செல்வதும், கழிவுகள் பிரிக்கப்படாமல் ஒன்றாகக் கலந்து வெளியேற்றப்படும் நிலை தொடர்ந்தாலும், கழிவுச் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சித் திறன் சிறப்பாக இருப்பதாகவே நகரங்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) தனது அறிக்கைகளில் கழிவுகளைப் பிரித்தெடுத்தல், சேகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் பலவீனமான நடைமுறைகளே உள்ளதாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அரசின் அதிகாரப்பூர்வத் தரவுத்தளங்களோ இதற்கு மாறான முடிவுகளையே காட்டுகின்றன. இதன் காரணமாகவே, கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்து சரிபார்ப்பது மிக மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது.


கழிவு மேலாண்மைத் துறையிலிருந்து பெறப்படும் நம்பகமான தரவுகளை எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம்?


இந்தியாவில் ஏற்கனவே திறமையான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன, அந்தத் திறனை நாம் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியக் கழிவு மேலாண்மை இணையதளம் (National Waste Portal), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவுப் பகுப்பாய்வு மூலம் இயங்கும் ஒரு முடிவு எடுக்கும் உதவி அமைப்பாகச் செயல்படும். இந்த அமைப்பு, நகரங்கள் மற்றும் கிராமங்களின் அடிமட்ட அளவிலான கழிவு மேலாண்மைத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சரியான முடிவுகளை எடுக்க பெருமளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது.


இதன் பிறகு, அந்தந்த பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ற கழிவு மேலாண்மை முறையையும், அங்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களையும் இந்த மாதிரி கண்டறிய உதவும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கு ஏற்ற சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டியாக இது செயல்படும். மேலும், உள்ளூர் அளவிலான தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கழிவு மேலாண்மை முடிவுகளை எடுப்பதை உறுதிசெய்கிறது. இதன் மூலம், நிதிஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை மிகச் சரியாகத் திட்டமிட்டு, நிதியை வீணடிக்காமல் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.



உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வளவு முக்கியமானது?


உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது.


2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவு மிகவும் வெளிப்படையாக அமைந்தது: “சட்டமன்றம் தனது கடமையைச் செய்துவிட்டது; இனி நாடாளுமன்றம் வகுத்துள்ள சட்டப்பூர்வக் கட்டளைகளை எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக அமல்படுத்துவதும், அதைப் பின்பற்றி நடப்பதும் நிர்வாகத் துறை மற்றும் குடிமக்களின் பொறுப்பாகும்.”


உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் சரியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக ஒரு உயர்மட்டக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைக்கப்பட்ட குழு, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் நடைபெறவிருந்த அடுத்த உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்னதாகத் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது.


தற்போது, 2026-ஆம் ஆண்டின் திடக் கழிவு மேலாண்மை (SWM) விதிகளின்கீழ் சுற்றுச்சூழல் இழப்பீட்டைத் தீர்மானிப்பதற்கான ஒரு வழிகாட்டு முறையை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. மேலும், இந்த இழப்பீட்டை விதிப்பதற்கும் வசூலிப்பதற்குமான விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கியபோது, இனி நமது கவனம் வெறும் சட்டங்களை உருவாக்குவதிலிருந்து, அவற்றை களத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


அக்ஷத் பட்னி, ‘Sustainology 360’ நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை நிர்வாக அதிகாரியும் ஆவார். மேலும், இவர் ‘Institute for Governance and Sustainable Development’ அமைப்பின் மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த புதிய தலைமுறை நிலையான வளர்ச்சி சிந்தனைக் குழுவானது (think tank), காலநிலை நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த மாற்றங்கள் மூலம் தூய்மையான காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.


சலோனி ஸ்ரீவாஸ்தவா, டெல்லியைச் சேர்ந்த 'Gateway Research' (IGSD India) அமைப்பில் காலநிலை பொருளாதாரம் மற்றும் நிதிப்பிரிவின் மூத்த ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.


Original Link: What happens to your waste once it leaves your door — and what needs to change?

Share: