வெளிநாட்டு பணப் பங்களிப்புகள் ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது: நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் என்பவை என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? -தீப்திமான் திவாரி

ஒரு மசோதாவின் பகுதிகளை விளக்கவோ, திருத்தவோ, தெளிவுபடுத்தவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவதே நாடாளுமன்ற கூட்டுக்குழுக்களின் (JPC) முக்கியப் பணியாகும். கடந்த காலங்களில், மசோதாக்களின் உண்மையான விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாடாளுமன்றக் குழுக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன, அவற்றின் இந்தச் செயல்பட்டிற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன?


மக்களவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை  திருத்த மசோதாவை, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. வெளிநாட்டு நிதியுதவி மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அரசு நியமிக்கும் அதிகார அமைப்பிடம் முன்தேதியிட்டு ஒப்படைக்கும் பிரிவு உள்ளிட்ட அம்சங்களுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திருச்சபையினரிடம் (Church) இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த பரிந்துரை மசோதாவை இரண்டாவது கட்டமாக ஆய்வுக்கு உட்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்றக் குழுவிலேயே ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை பலம் இருக்கும்போது, ​​அந்தக்குழுவால் உண்மையில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? கூட்டு நாடாளுமன்றக் குழுக்களின் (Joint Parliamentary Committee (JPC)) வரலாறு இதற்குச் சற்று சிக்கலான ஒரு பதிலையே வழங்குகின்றன.


நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் பணிகள் என்ன?


நாடாளுமன்றத்தின் அடிப்படைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காகவே நாடாளுமன்றக் குழுக்கள் உருவாக்கப்பட்டன: அதிகரித்துவரும் சிக்கலான சட்டங்களையும் அரசாங்கக்கொள்கைகளையும் ஆராய்வதற்கு இரு அவைகளுக்கும் குறைந்த நேரமே உள்ளது. சிறிய குழுக்களால் ஒரு மசோதாவை ஆராய்வதற்கும், அதிகாரிகளிடம் கேள்வி கேட்பதற்கும், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும், அதன் விதிகளை உட்பிரிவு (clause) வாரியாக ஆய்வு செய்வதற்கும் அதிக நேரத்தைச் செலவிட முடியும்.


எனவே, அவையின் மைய அரங்கில் நடைபெறும் அரசியல் மோதல்களுக்கான மற்றொரு களமாக இந்தக் குழுவின் வரைமுறை அமையவில்லை. இது குறித்த மாநிலங்களவையின் அடிப்படை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றக்குழுக்களின் அடிப்படை நோக்கம் “நேரடி கட்டுப்பாடு அல்ல, தாக்கத்தை ஏற்படுத்துதல்; கட்டளையிடுவது அல்ல, ஆலோசனை வழங்குதல்; தடுப்பது அல்ல, விமர்சித்தல்; புதிய முயற்சிகளை மேற்கொள்வது அல்ல, ஆய்வு செய்தல்; முன்கூட்டியே ஒப்புதல் அளிப்பது அல்ல, பொறுப்புணர்வை உறுதி செய்தல்” என்பதாகும்.


பல்வேறு வகையான குழுக்கள் உள்ளன. துறை சார்ந்த நிலைக்குழுக்கள், அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்கின்றன. நிதிக்குழுக்கள் அரசாங்கத்தின் செலவினங்களைக் கவனமாக ஆராய்கின்றன. ஒரு குறிப்பிட்ட மசோதாவை ஆய்வு செய்வதற்காக ஒரு அவையால் தேர்வுக் குழுக்கள் (Select Committees) அமைக்கப்படுகின்றன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலிருந்தும் உறுப்பினர்களைக்கொண்ட ஒரு கூட்டுக் குழு, ஒரு குறிப்பிட்ட மசோதா அல்லது விவகாரத்திற்காக அமைக்கப்படுகிறது.



நாடாளுமன்ற குழுக்கள் தேவையான நபர்களை அழைத்து விசாரிக்கவும், ஆவணங்கள் மற்றும் பதிவுகளை கேட்டுப் பெறவும், சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெறவும் முடியும். இருப்பினும், அவற்றின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது.


ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால், ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழு எந்த அளவிற்கு சுதந்திரமாக செயல்பட முடியும்?


இதுதான் நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியமான வரம்பாகும். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை   நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தைப் காட்டும் வகையில் அமையும். ஆளும் கட்சி அல்லது கூட்டணி பொதுவாக மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருப்பதால், நாடாளுமன்றக் கூட்டு குழுவிலும் அதற்கு ஏற்றவாறு பெரும்பான்மை உறுப்பினர் எண்ணிக்கை இருக்கும். மேலும், குழுவின் தலைவர் பொதுவாக ஆளும் அரசங்கதைச் சேர்ந்தவராக இருப்பார். குழு தனது முடிவுகளை பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்க முடியும். வாக்குகள் சமமாகப் பிரியும் சூழ்நிலையில், குழுத் தலைவருக்கு தீர்மான வாக்கு (Casting Vote) அளிக்கும் அதிகாரம் உள்ளது.


ஆனால், இதனால் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடாது. குழுவிற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கலாம். அரசு அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கலாம், ஆதாரங்களைப் பதிவில் இடம்பெறச் செய்யலாம், வரைவு அறிக்கையில் மாற்றங்களை முன்மொழியலாம். இறுதியாக, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துடன் உடன்படவில்லை என்றால், மாறுபட்ட கருத்துக் குறிப்பு (Dissent Note) ஒன்றையும் தாக்கல் செய்யலாம். எனவே, முக்கியமான கேள்வி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்களின் கருத்து கேட்கப்படுகிறதா என்பதல்ல, அவர்கள் உண்மையில் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறதா என்பதுதான்.




இந்த விவகாரத்தில் கடந்தகாலப் பதிவுகள் போதிய அளவு நம்பிக்கையளிப்பதாக இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் பெரும்பாலும் கருத்துக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அரசு மிகவும் முக்கியமான அரசியல் நோக்கமாகக் கருதும் ஒரு மசோதாவில், எதிர்க்கட்சியின் நிலைப்பாடு இறுதியாக சட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவது அரிதான ஒன்றாகவே நடந்துள்ளது.


நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் உண்மையில் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா?


ஆம். ஆனால் பொதுவாக அரசின் முழுமையான சட்டத்திட்டத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, அதில் சில திருத்தங்களைச் செய்வதன் மூலமாகவே மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.


2001–02-ஆம் ஆண்டு பங்குச் சந்தை மோசடி தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு இதற்கு ஒரு உதாரணமாகும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக்குழு, ஒழுங்குமுறை கண்காணிப்பு, பரிவர்த்தனைத் தீர்வு முறைகள், சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) மற்றும் பங்குச் சந்தைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் விரிவான பரிந்துரைகளை வழங்கியது. பின்னர், அந்தப் பரிந்துரைகளில் 236 பரிந்துரைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.


2004-ஆம் ஆண்டின் பூச்சிக்கொல்லி எச்சங்கள் தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு மற்றொரு உதாரணமாகும். குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் எச்சங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிறந்த பரிசோதனை முறைகளை பரிந்துரை செய்தது. இதன் பணிகள் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கும், குளிர்பானங்களின் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவனத்திற்கும் முக்கியமானதாக அமைந்தன.


சமீபத்திய மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களிலும் இதேபோன்ற மாற்றத்தைக் காணமுடிகிறது. உதாரணமாக, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022 நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்ட கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு பிரதிநிதித்துவ முறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர், இயற்றப்பட்ட சட்டத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவின் பல பரிந்துரைகள் இடம்பெற்றன.


அதேபோல், 2021-ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை (திருத்த) (Biological Diversity (Amendment) Bill) மசோதாவிலும், அரசின் அடிப்படை அணுகுமுறை தொடர்ந்தபோதிலும், சில பாதுகாப்பு விதிகள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் சேர்க்கப்பட்டன.


சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட சட்ட மசோதாவையே அரசு கைவிடுவதற்கும் நாடாளுமன்ற ஆய்வு காரணமாக அமைந்துள்ளது. நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு   மசோதா, (Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill), 2017-ல் சர்ச்சைக்குரிய பிணை (bail-in) விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. வைப்புதாரர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு மத்தியில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அரசு அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றது. இருப்பினும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் இதில் முக்கிய பங்கு வகித்தது.


இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற கூட்டு குழுவின் மதிப்பு என்பது அரசை ஒரு மசோதாவின் சில பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கவும், திருத்தம் செய்யவும், தெளிவுபடுத்தவும் அல்லது மறுபரிசீலனை செய்யவும் வைப்பதில்தான் உள்ளது.


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் என்ன ஆகின்றன?


தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு   எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவை பெரும்பான்மையால் ஏற்கப்படாமல் போனதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தக் குழு அரசுக்கு வழங்கப்பட்ட பரந்த அளவிலான விலக்குகளை தொடர்ந்து வைத்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விலக்குகள், கண்காணிப்பு தொடர்பான பாதுகாப்பு விதிகள் மற்றும் பிற விதிமுறைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையில் 6 உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்குறிப்புகளை (Dissent Notes) தாக்கல் செய்தனர்.


பின்னர், அரசு 2019-ஆம் ஆண்டின் மசோதாவைத் திரும்பப் பெற்று, 2022-ஆம் ஆண்டு புதிய தரவு பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. புதிய சட்டத்தின் அமைப்பு சிறப்பாக மாறியிருந்தாலும், அரசுக்கு பரந்த அளவிலான விலக்கு வழங்கும் அதிகாரங்கள் தொடர்ந்து இருந்தன.


2016-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவும், குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் ராஜேந்திர அகர்வால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த குறிப்பிட்ட முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவது என்ற மசோதாவின் அடிப்படை நோக்கத்தைத்தொடர்ந்து வைத்திருந்தது. மத அடிப்படையிலான அளவுகோல் மற்றும் அசாம் மாநிலம் மற்றும் மதச்சார்பின்மை மீதான அதன் தாக்கங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதன் முக்கியக் கட்டமைப்பை மாற்றவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டின் சட்டம் பரந்த அளவில் அரசாங்கத்தின் முக்கிய  அணுகுமுறையையே பின்பற்றியது.


UPA-II அரசின் காலத்தில் அமைக்கப்பட்ட 2G பற்றிய  நாடாளுமன்ற கூட்டுக் குழு, இதே பிரச்சினை வேறு அரசியல் சூழலிலும் இருந்ததற்கான ஒரு பழைய உதாரணமாகும். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் பி.சி.சாக்கோ தலைமையிலான இந்தக்குழு, தொலைத்தொடர்பு உரிமங்கள் ஒதுக்கீடு தொடர்பாக  அதிக அளவில் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தது. இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்குறிப்புகளை (Dissent Notes) தாக்கல் செய்தனர்.


ஆனால்,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுகள் பின்னர் ஏற்பட்ட சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் அடுத்தகட்டத்தை இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General of India (CAG)) கண்டுபிடிப்புகள் மற்றும் உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் நேரடியாக தீர்மானித்தன.


இதிலிருந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் அரசியல் சார்பு என்பது தற்போதைய அரசுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல என்பதை புரிந்துகொள்ளலாம். ஒரு அரசு ஒரு விவகாரத்தை அரசியல்ரீதியாக முக்கியமானதாகக் கருதும்போது, குழுவில் அதற்குக் கிடைக்கும் பெரும்பான்மை பலம் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடும்.


அடுத்தடுத்த அரசுகளின் காலத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு பலவீனமடைந்துள்ளதா?


இங்கு குறிப்பிடத்தக்க மாற்றம் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் எண்ணிக்கையில் அல்ல, மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பும் நடைமுறையின் ஒட்டுமொத்த இடைவெளியில் தான் உள்ளது.


PRS Legislative Research தரவுகளின்படி, 14-வது மக்களவை (2004–09) காலத்தில்  60% மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டன. 15-வது மக்களவை (2009–14) காலத்தில்  இது 71%-ஆக இருந்தது. ஆனால், இந்த விகிதம் 16-வது மக்களவை (2014–19) காலத்தில் 25%-ஆகவும், 17-வது மக்களவை (2019–24) காலத்தில் சுமார் 16% ஆகவும் குறைந்தது. இந்த புள்ளிவிவரங்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களை மட்டும் குறிக்கவில்லை. பொதுவாக நாடாளுமன்றக்குழுக்களுக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட விகிதத்தைக் குறிக்கின்றன.


இதிலிருந்து உருவாகும் நிலை, வழக்கமான மசோதாவிற்கான ஆய்வு நடைமுறை பலவீனமடைந்துள்ளது. அதே நேரத்தில், குறிப்பாக கடுமையான சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.




வெளிநாட்டு பணப் பங்களிப்புகள் ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அரசு நினைத்துருந்தால், மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை எண்ணிக்கையைப் பயன்படுத்தி, அமளிக்கு இடையிலும் மசோதாவை நிறைவேற்ற முயன்றிருக்கலாம். ஆனால், வலுவான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பும் முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தங்களுடைய கவலைகளைப்பதிவு செய்வதற்கும், அவற்றில் எவற்றை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து அரசு முடிவெடுப்பதற்கும் இந்தக் குழு இப்போது ஒரு முறையான வாய்ப்பை வழங்கும்.


Original Link: FCRA Bill sent to JPC: What are Parliamentary committees and how do they work?

Share: