Showing posts with label FCRA. Show all posts
Showing posts with label FCRA. Show all posts

வெளிநாட்டு பணப் பங்களிப்புகள் ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது: நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் என்பவை என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? -தீப்திமான் திவாரி

ஒரு மசோதாவின் பகுதிகளை விளக்கவோ, திருத்தவோ, தெளிவுபடுத்தவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவதே நாடாளுமன்ற கூட்டுக்குழுக்களின் (JPC) முக்கியப் பணியாகும். கடந்த காலங்களில், மசோதாக்களின் உண்மையான விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாடாளுமன்றக் குழுக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன, அவற்றின் இந்தச் செயல்பட்டிற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன?


மக்களவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை  திருத்த மசோதாவை, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. வெளிநாட்டு நிதியுதவி மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அரசு நியமிக்கும் அதிகார அமைப்பிடம் முன்தேதியிட்டு ஒப்படைக்கும் பிரிவு உள்ளிட்ட அம்சங்களுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திருச்சபையினரிடம் (Church) இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த பரிந்துரை மசோதாவை இரண்டாவது கட்டமாக ஆய்வுக்கு உட்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்றக் குழுவிலேயே ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை பலம் இருக்கும்போது, ​​அந்தக்குழுவால் உண்மையில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? கூட்டு நாடாளுமன்றக் குழுக்களின் (Joint Parliamentary Committee (JPC)) வரலாறு இதற்குச் சற்று சிக்கலான ஒரு பதிலையே வழங்குகின்றன.


நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் பணிகள் என்ன?


நாடாளுமன்றத்தின் அடிப்படைக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காகவே நாடாளுமன்றக் குழுக்கள் உருவாக்கப்பட்டன: அதிகரித்துவரும் சிக்கலான சட்டங்களையும் அரசாங்கக்கொள்கைகளையும் ஆராய்வதற்கு இரு அவைகளுக்கும் குறைந்த நேரமே உள்ளது. சிறிய குழுக்களால் ஒரு மசோதாவை ஆராய்வதற்கும், அதிகாரிகளிடம் கேள்வி கேட்பதற்கும், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும், அதன் விதிகளை உட்பிரிவு (clause) வாரியாக ஆய்வு செய்வதற்கும் அதிக நேரத்தைச் செலவிட முடியும்.


எனவே, அவையின் மைய அரங்கில் நடைபெறும் அரசியல் மோதல்களுக்கான மற்றொரு களமாக இந்தக் குழுவின் வரைமுறை அமையவில்லை. இது குறித்த மாநிலங்களவையின் அடிப்படை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றக்குழுக்களின் அடிப்படை நோக்கம் “நேரடி கட்டுப்பாடு அல்ல, தாக்கத்தை ஏற்படுத்துதல்; கட்டளையிடுவது அல்ல, ஆலோசனை வழங்குதல்; தடுப்பது அல்ல, விமர்சித்தல்; புதிய முயற்சிகளை மேற்கொள்வது அல்ல, ஆய்வு செய்தல்; முன்கூட்டியே ஒப்புதல் அளிப்பது அல்ல, பொறுப்புணர்வை உறுதி செய்தல்” என்பதாகும்.


பல்வேறு வகையான குழுக்கள் உள்ளன. துறை சார்ந்த நிலைக்குழுக்கள், அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்கின்றன. நிதிக்குழுக்கள் அரசாங்கத்தின் செலவினங்களைக் கவனமாக ஆராய்கின்றன. ஒரு குறிப்பிட்ட மசோதாவை ஆய்வு செய்வதற்காக ஒரு அவையால் தேர்வுக் குழுக்கள் (Select Committees) அமைக்கப்படுகின்றன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலிருந்தும் உறுப்பினர்களைக்கொண்ட ஒரு கூட்டுக் குழு, ஒரு குறிப்பிட்ட மசோதா அல்லது விவகாரத்திற்காக அமைக்கப்படுகிறது.



நாடாளுமன்ற குழுக்கள் தேவையான நபர்களை அழைத்து விசாரிக்கவும், ஆவணங்கள் மற்றும் பதிவுகளை கேட்டுப் பெறவும், சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெறவும் முடியும். இருப்பினும், அவற்றின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது.


ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால், ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழு எந்த அளவிற்கு சுதந்திரமாக செயல்பட முடியும்?


இதுதான் நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியமான வரம்பாகும். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை   நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தைப் காட்டும் வகையில் அமையும். ஆளும் கட்சி அல்லது கூட்டணி பொதுவாக மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருப்பதால், நாடாளுமன்றக் கூட்டு குழுவிலும் அதற்கு ஏற்றவாறு பெரும்பான்மை உறுப்பினர் எண்ணிக்கை இருக்கும். மேலும், குழுவின் தலைவர் பொதுவாக ஆளும் அரசங்கதைச் சேர்ந்தவராக இருப்பார். குழு தனது முடிவுகளை பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்க முடியும். வாக்குகள் சமமாகப் பிரியும் சூழ்நிலையில், குழுத் தலைவருக்கு தீர்மான வாக்கு (Casting Vote) அளிக்கும் அதிகாரம் உள்ளது.


ஆனால், இதனால் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடாது. குழுவிற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கலாம். அரசு அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கலாம், ஆதாரங்களைப் பதிவில் இடம்பெறச் செய்யலாம், வரைவு அறிக்கையில் மாற்றங்களை முன்மொழியலாம். இறுதியாக, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துடன் உடன்படவில்லை என்றால், மாறுபட்ட கருத்துக் குறிப்பு (Dissent Note) ஒன்றையும் தாக்கல் செய்யலாம். எனவே, முக்கியமான கேள்வி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்களின் கருத்து கேட்கப்படுகிறதா என்பதல்ல, அவர்கள் உண்மையில் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறதா என்பதுதான்.




இந்த விவகாரத்தில் கடந்தகாலப் பதிவுகள் போதிய அளவு நம்பிக்கையளிப்பதாக இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் பெரும்பாலும் கருத்துக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அரசு மிகவும் முக்கியமான அரசியல் நோக்கமாகக் கருதும் ஒரு மசோதாவில், எதிர்க்கட்சியின் நிலைப்பாடு இறுதியாக சட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவது அரிதான ஒன்றாகவே நடந்துள்ளது.


நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் உண்மையில் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனவா?


ஆம். ஆனால் பொதுவாக அரசின் முழுமையான சட்டத்திட்டத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, அதில் சில திருத்தங்களைச் செய்வதன் மூலமாகவே மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.


2001–02-ஆம் ஆண்டு பங்குச் சந்தை மோசடி தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு இதற்கு ஒரு உதாரணமாகும். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக்குழு, ஒழுங்குமுறை கண்காணிப்பு, பரிவர்த்தனைத் தீர்வு முறைகள், சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) மற்றும் பங்குச் சந்தைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் விரிவான பரிந்துரைகளை வழங்கியது. பின்னர், அந்தப் பரிந்துரைகளில் 236 பரிந்துரைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.


2004-ஆம் ஆண்டின் பூச்சிக்கொல்லி எச்சங்கள் தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு மற்றொரு உதாரணமாகும். குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் எச்சங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சிறந்த பரிசோதனை முறைகளை பரிந்துரை செய்தது. இதன் பணிகள் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கும், குளிர்பானங்களின் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவனத்திற்கும் முக்கியமானதாக அமைந்தன.


சமீபத்திய மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களிலும் இதேபோன்ற மாற்றத்தைக் காணமுடிகிறது. உதாரணமாக, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022 நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்ட கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு பிரதிநிதித்துவ முறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர், இயற்றப்பட்ட சட்டத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவின் பல பரிந்துரைகள் இடம்பெற்றன.


அதேபோல், 2021-ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மை (திருத்த) (Biological Diversity (Amendment) Bill) மசோதாவிலும், அரசின் அடிப்படை அணுகுமுறை தொடர்ந்தபோதிலும், சில பாதுகாப்பு விதிகள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் சேர்க்கப்பட்டன.


சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட சட்ட மசோதாவையே அரசு கைவிடுவதற்கும் நாடாளுமன்ற ஆய்வு காரணமாக அமைந்துள்ளது. நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு   மசோதா, (Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill), 2017-ல் சர்ச்சைக்குரிய பிணை (bail-in) விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. வைப்புதாரர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு மத்தியில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அரசு அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றது. இருப்பினும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் இதில் முக்கிய பங்கு வகித்தது.


இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற கூட்டு குழுவின் மதிப்பு என்பது அரசை ஒரு மசோதாவின் சில பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கவும், திருத்தம் செய்யவும், தெளிவுபடுத்தவும் அல்லது மறுபரிசீலனை செய்யவும் வைப்பதில்தான் உள்ளது.


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் என்ன ஆகின்றன?


தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு   எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவை பெரும்பான்மையால் ஏற்கப்படாமல் போனதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தக் குழு அரசுக்கு வழங்கப்பட்ட பரந்த அளவிலான விலக்குகளை தொடர்ந்து வைத்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விலக்குகள், கண்காணிப்பு தொடர்பான பாதுகாப்பு விதிகள் மற்றும் பிற விதிமுறைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையில் 6 உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்குறிப்புகளை (Dissent Notes) தாக்கல் செய்தனர்.


பின்னர், அரசு 2019-ஆம் ஆண்டின் மசோதாவைத் திரும்பப் பெற்று, 2022-ஆம் ஆண்டு புதிய தரவு பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. புதிய சட்டத்தின் அமைப்பு சிறப்பாக மாறியிருந்தாலும், அரசுக்கு பரந்த அளவிலான விலக்கு வழங்கும் அதிகாரங்கள் தொடர்ந்து இருந்தன.


2016-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவும், குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் ராஜேந்திர அகர்வால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த குறிப்பிட்ட முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவது என்ற மசோதாவின் அடிப்படை நோக்கத்தைத்தொடர்ந்து வைத்திருந்தது. மத அடிப்படையிலான அளவுகோல் மற்றும் அசாம் மாநிலம் மற்றும் மதச்சார்பின்மை மீதான அதன் தாக்கங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதன் முக்கியக் கட்டமைப்பை மாற்றவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டின் சட்டம் பரந்த அளவில் அரசாங்கத்தின் முக்கிய  அணுகுமுறையையே பின்பற்றியது.


UPA-II அரசின் காலத்தில் அமைக்கப்பட்ட 2G பற்றிய  நாடாளுமன்ற கூட்டுக் குழு, இதே பிரச்சினை வேறு அரசியல் சூழலிலும் இருந்ததற்கான ஒரு பழைய உதாரணமாகும். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் பி.சி.சாக்கோ தலைமையிலான இந்தக்குழு, தொலைத்தொடர்பு உரிமங்கள் ஒதுக்கீடு தொடர்பாக  அதிக அளவில் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்தது. இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்குறிப்புகளை (Dissent Notes) தாக்கல் செய்தனர்.


ஆனால்,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுகள் பின்னர் ஏற்பட்ட சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் அடுத்தகட்டத்தை இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General of India (CAG)) கண்டுபிடிப்புகள் மற்றும் உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் நேரடியாக தீர்மானித்தன.


இதிலிருந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் அரசியல் சார்பு என்பது தற்போதைய அரசுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல என்பதை புரிந்துகொள்ளலாம். ஒரு அரசு ஒரு விவகாரத்தை அரசியல்ரீதியாக முக்கியமானதாகக் கருதும்போது, குழுவில் அதற்குக் கிடைக்கும் பெரும்பான்மை பலம் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடும்.


அடுத்தடுத்த அரசுகளின் காலத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு பலவீனமடைந்துள்ளதா?


இங்கு குறிப்பிடத்தக்க மாற்றம் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் எண்ணிக்கையில் அல்ல, மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பும் நடைமுறையின் ஒட்டுமொத்த இடைவெளியில் தான் உள்ளது.


PRS Legislative Research தரவுகளின்படி, 14-வது மக்களவை (2004–09) காலத்தில்  60% மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டன. 15-வது மக்களவை (2009–14) காலத்தில்  இது 71%-ஆக இருந்தது. ஆனால், இந்த விகிதம் 16-வது மக்களவை (2014–19) காலத்தில் 25%-ஆகவும், 17-வது மக்களவை (2019–24) காலத்தில் சுமார் 16% ஆகவும் குறைந்தது. இந்த புள்ளிவிவரங்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களை மட்டும் குறிக்கவில்லை. பொதுவாக நாடாளுமன்றக்குழுக்களுக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட விகிதத்தைக் குறிக்கின்றன.


இதிலிருந்து உருவாகும் நிலை, வழக்கமான மசோதாவிற்கான ஆய்வு நடைமுறை பலவீனமடைந்துள்ளது. அதே நேரத்தில், குறிப்பாக கடுமையான சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.




வெளிநாட்டு பணப் பங்களிப்புகள் ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அரசு நினைத்துருந்தால், மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை எண்ணிக்கையைப் பயன்படுத்தி, அமளிக்கு இடையிலும் மசோதாவை நிறைவேற்ற முயன்றிருக்கலாம். ஆனால், வலுவான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பும் முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தங்களுடைய கவலைகளைப்பதிவு செய்வதற்கும், அவற்றில் எவற்றை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து அரசு முடிவெடுப்பதற்கும் இந்தக் குழு இப்போது ஒரு முறையான வாய்ப்பை வழங்கும்.


Original Link: FCRA Bill sent to JPC: What are Parliamentary committees and how do they work?

Share:

புதிய வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட விதிகளும் இந்தியாவில் மதமாற்றம் குறித்த வரலாற்று விவாதமும் -ராம் மாதவ்

வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட (Foreign Contribution (Regulation) Act (FCRA)) விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டது.                               இந்த விதிகளின்படி, வெளிநாட்டு நிதியுதவிகளை வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ, புனித நூல்களை அச்சிடுவதற்கோ மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதற்கோ, ஆன்மீகப் பயணிகளுக்கு வசதிகளை உருவாக்குவதற்கோ பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.


வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) புதிய விதிகளை இந்த வாரத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய விதிகளின்படி, வெளிநாட்டு நிதியைக் கொண்டு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும், புனித நூல்களை அச்சிடுவதற்கும் மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும், ஆன்மீகப் பயணிகளுக்கான வசதிகளை உருவாக்குவதற்கும், பொது அன்னதானக் கூடங்களை நடத்துவதற்கும், மற்றும் உள்ளூர் மற்றும் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டு நிதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு இந்த விதிகள் முற்றிலும் தடை விதிக்கின்றன.


இந்தச் சட்டத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அவை இந்தியா மற்றும் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) முன்மொழியப்பட்ட மாற்றங்கள், சமீபத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது ஒரு முக்கியத் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்தன.                   இந்த விவாதம் வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடம் (Capitol Hill) வரை எதிரொலித்தது. அங்கிருக்கும் செனட் வெளியுறவு உறவுக் குழுவின் தலைவரான ஜேம்ஸ் ரிஷ், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் மனித உரிமைகளை மீறும் நாடுகளைச் சுட்டிக்காட்ட அமெரிக்கா ஒருபோதும் தயங்காது என்று எச்சரித்தார். 


மத மாற்றங்கள் பற்றிய விவாதங்கள் ஆங்கிலயேர் ஆட்சியின் காலனித்துவக் காலத்திலிருந்தே நடந்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, ஒடிசா (1967), மத்தியப் பிரதேசம் (1968) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (1978) போன்ற மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டங்களை (Anti-conversion laws) அறிமுகப்படுத்தின.                 அதன் பிறகு, சத்தீஸ்கர் (2000), குஜராத் (2003), இமாச்சலப் பிரதேசம் (2006), ஜார்க்கண்ட் (2017), உத்தராகண்ட் (2018), உத்தரப் பிரதேசம் (2021), ஹரியானா (2022), ராஜஸ்தான் (2025) மற்றும் மகாராஷ்டிரா (2026) ஆகிய மாநிலங்களிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.


பல கிறிஸ்தவ அமைப்புகள், தங்களின் மதத்தைப் "பரப்பும் உரிமை" (Right to propagate) என்பதில் மற்றவர்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையும் அடங்கும் என்று வாதிடுகின்றனர். இருப்பினும், ரெவரெண்ட் ஸ்டெனிஸ்லாஸ் vs மத்தியப் பிரதேச அரசு (Rev. Stainislaus vs State of Madhya Pradesh (1977)) வழக்கின்போது, உச்சநீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு-25 (Article 25) மக்களுக்குத் தங்களுக்குப் பிடித்த மதத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறதே தவிர, மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமையை வழங்கவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அரசாங்கத்தின் தற்போதைய இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சுதந்திரத்திற்கு முன்பு, ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களும் சீர்திருத்தவாதிகளும் மதமாற்றங்கள் குறித்துக் கேள்விகளை எழுப்பினர். மார்ச் மாதம் 1931-ஆம் ஆண்டில் அளித்த ஒரு நேர்காணலில் காந்தி, "வெளிநாட்டு மதபோதகர்கள் (Missionaries) தங்களை வெறும் மனிதநேயப் பணிகளுடனும், ஏழைகளுக்கு உதவுவதுடனும் மட்டுமே நிறுத்திக்கொண்டால், அவர்கள் இங்கு தங்கலாம். ஆனால், அவர்கள் மக்களை மதமாற்றம் செய்வதற்காக மருத்துவ உதவியையோ அல்லது கல்வியையோ ஒரு கருவியாகப் பயன்படுத்தினால், நான் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வேன்" என்று குறிப்பிட்டார். 1935 மே மாதம் 11-ஆம் தேதி, 'Harijan' இதழில் வெளியான மற்றொரு நேர்காணலில் காந்தி, "எனக்குச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருந்தால், நான் நிச்சயமாக அனைத்து மதமாற்றங்களையும் தடுத்து நிறுத்துவேன்; ஏனெனில் அவை தேவையற்ற மோதல்களை உண்டாக்குகின்றன" என்று கூறினார்.


இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு ஒரு உறுதியை அளித்தார். அவர், "கிறிஸ்தவர்கள் இந்த நாட்டின் மூன்றாவது பெரிய மதக் குழுவாக இருக்கிறார்கள்; எனவே அவர்களின் மத அல்லது பிற உரிமைகள் மறுக்கப்படும் என்று நினைப்பது நியாயமற்றது" என்று கூறினார். அரசியலமைப்பு நிர்ணய சபையில், மதத்தைப் பரப்புவதற்கான உரிமை மற்றும் மதமாற்றங்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். இதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் சுதந்திரம் உண்டு என்று உறுதியளித்திருந்தது. ஆனால், மதபோதகர்கள் தங்களுக்கு மதத்தைப் பரப்புவதற்கான உரிமை வேண்டும் என்றும், அதில் மற்றவர்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையும் அடங்கும் என்றும் கோரினர்.                     கே. எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் மற்றும் சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் 'மதமாற்ற உரிமை' என்ற யோசனையை வலுவாக எதிர்த்தனர். சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத் போன்ற தலைவர்கள்கூட, மதபோதகர்கள் பெருமளவிலான மதமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வாதாடினர். இருப்பினும், இந்த கருத்துக்களுக்கு அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. இதன் விளைவாக,                                  இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவில் (Article 19) "மதத்தைப் பரப்புவதற்கு" (to propagate religion) என்ற சொற்றொடர் இறுதியாகச் சேர்க்கப்பட்டது.


கிறிஸ்தவ மதபோதகர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. மத்தியப் பிரதேச அரசால் 1954-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 'நியோகி குழு' (Niyogi Committee), அந்த மாநிலத்தின் பழங்குடியினப் பகுதிகளில் மதபோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.               அந்த அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு: மதமாற்றம் செய்வதையே தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள மதபோதகர்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்; மேலும், வெளிநாட்டு மதபோதகர்கள் இந்தியாவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளிநாட்டினர் இங்கு மதப்பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவும், சட்டவிரோத வழிகளில் மதமாற்றம் நடப்பதைத் தவிர்க்கவும் ஏதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். மேலும், தவறான வழிகளில் நடக்கும் மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த முறையான சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


ஆனால், அப்போதைய நேரு அரசாங்கம் இந்த நியோகி குழுவின் குற்றச்சாட்டுகளையும் பரிந்துரைகளையும் நிராகரித்தது. இப்போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கட்டுரையாளர், ‘India Foundation’ அமைப்பின் தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும் உள்ளார்.


Original Link: New FCRA Rules and the Historical Debate on Religious Conversion in India.

Share:

வெளிநாட்டுப் நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதால், சங்கம் அமைக்கும் உரிமை என்பது வெளிநாட்டு நிதிகளுக்கு வரம்பற்ற அதிகாரம் அல்ல என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. -கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

2026-ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள் Foreign Contribution (Regulation) Amendment Rules, 2026), தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு வாதத்தின் அடிப்படையில் சட்டபூர்வத் தன்மையைப் பெறுகின்றன. ஒன்றிய அரசு முன்வைத்த வாதம், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை உருவாக்கும் சுதந்திரம் என்பது வரம்பற்ற வெளிநாட்டு நிதியைப் பெறும் உரிமையையோ அல்லது அந்த நிதியை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர மாற்ற செயல்முறைகளுக்கு பயன்படுத்தும் உரிமையை (permissible activities’) கொண்டிருக்கவில்லை.


ஜூன் 22 அன்று உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தத் திருத்தங்களும், இதற்கு முந்தைய திருத்தங்களும், உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த வாதத்தின் அடிப்படையிலேயே சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. நிறுவனங்களை அமைப்பதற்கான சுதந்திரத்திலோ அல்லது தொண்டு சார்ந்த 'செயல்பாடுகளில்' ஈடுபடுவதிலோ, கட்டுப்பாடற்ற வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான உரிமையோ அல்லது 'அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை' தாண்டி மாற்ற செயல்பாடுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கபடாது என்பதே ஒன்றிய அரசின்  வாதமாகும்.


மற்ற மாற்றங்களுடன், விதி 9(1B)-ன் படி, தன்னார்வத் தொண்டு   நிறுவனங்கள் (NGOs) பெறும் பதிவுச் சான்றிதழில், அந்த அமைப்பின் நோக்கம் அல்லது நோக்கங்கள் மற்றும் அது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.  இந்த விதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை, மதமாற்றம் மற்றும் புவியியல் எல்லைகளைத் தவிர்த்து, குறிப்பிட்ட   நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற  வரம்பிருக்குள் கொண்டு வருகின்றன.


நீதிமன்றத் தீர்ப்புகளால் பலப்படுத்தப்பட்டது


வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒன்றிய அரசின் விரிவான அதிகாரங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளில்  உச்சநீதிமன்றம்  பல்வேறு தீர்ப்புகள் மூலம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 2022-இல் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 'நோயல் ஹார்பர் எதிர். இந்திய அரசு' (Noel Harper vs Union of India) வழக்கில், "வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது யாருடைய நிலைநிறுத்தப்பட்ட உரிமை (vested right) என்றும், அதிலும் குறிப்பாக முழுமையான உரிமை (absolute right) என்றும் எந்த ஒரு நபரலும் அதற்கு உரிமை கோர முடியாது" என்ற  தீர்ப்பை வழங்கியது.


நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளிடமிருந்து நிதி திரட்டும் போக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஏனெனில், அது “தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்ய இயலாத நாடு” என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அந்தத் தீர்ப்பு ஒழுக்கநெறி சார்ந்த (moralistic tenor) அணுகுமுறையைக் கொண்டதாக இருந்தது. ஒரு நாட்டின் முன்னேற்றமும் உயர்வும் அதன் குடிமக்களின் கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் முயற்சிகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும்; வெளிநாடுகளின் நன்கொடைகள் அல்லது தாராள உதவிகளை சார்ந்தது அல்ல என்று நீதிமன்றம் கூறியது.




மார்ச் 2020-ல் இந்திய சமூக செயல் மன்றம் (Indian Social Action Forum (INSAF)) vs இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, "வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவது தேசிய நலனைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே" என்ற ஒன்றிய அரசின் கருத்தை ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், சட்டத்தின் நோக்கத்திற்கும் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான தன்னார்வ அமைப்புகளின் உரிமைகளுக்கும் இடையில் ஒரு "சமநிலையை" ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. தீவிர அல்லது கட்சி அரசியலில் பங்கு வகிக்கும் அமைப்புகள் மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாக INSAF குறிப்பிட்டது.


தொண்டுப் பணிகள் தொடரலாம்: அரசு.


FCRA, அதன் விதிகள் மற்றும் திருத்தங்கள் ஆகியவை வணிகம் செய்யும் முறையை, குறிப்பாக வெளிநாட்டுப் பங்களிப்புகள் தொடர்பானவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டன என்று அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியது. FCRA-ன் நோக்கம் தொண்டுப் பணிகளை நிறுத்துவது அல்ல.


அரசியலமைப்பின் 19(1)(c) மற்றும் 19(1)(g) பிரிவுகளின்கீழ், நிறுவனங்களை அமைப்பதற்கோ, ஒரு தொழிலை மேற்கொள்வதற்கோ அல்லது ஒரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை நடத்துவதற்கோ தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை ஒழுங்குமுறை பாதிக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது.


இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலனுக்காகவோ அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காகவோ, சட்டப்பிரிவு 19(1)(c)-ன் கீழ் நிறுவனங்களை அமைப்பதற்கான அடிப்படை சுதந்திரத்தை நியாயமான முறையில் கட்டுப்படுத்த சட்டங்களை இயற்ற (fundamental freedom to form associations) முடியும் என்பதை நிரூபிக்க, ஒன்றிய அரசு சட்டப்பிரிவு 19(4)-ஐ மேற்கோள் காட்டியுள்ளது. அதேபோல, பிரிவு 19(1)(g)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வர்த்தகம், தொழில் அல்லது பணிபுரியும் உரிமை பொது நலனுக்கு எதிரானது என்று அரசு நிரூபிக்கும் பட்சத்தில், அந்த உரிமையின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை (impose reasonable fetters) விதிக்க பிரிவு 19(6) அரசுக்கு அனுமதி அளித்தது.


வெளிநாட்டு நிதியுதவியை (Foreign Contribution) பெறுவது எந்த நபருக்கும் முழுமையான உரிமையாக இல்லை என்பதில் உச்சநீதிமன்றமும் அரசும் ஒரே கருத்துடன் உள்ளன.


Original Link: As FCRA restricts NGOs, Supreme Court had agreed that right to associate is not carte blanche for foreign funds.


Share:

வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சமூக ஊடக கணக்கு தகவல் கட்டாயம், அரசியல் செயல்பாடுகளுக்கு தடை. - விஜயதா சிங்

2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதவின் கீழ் (Foreign Contribution (Regulation) Amendment Bill),                                   பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் சங்கங்கள், தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் தங்களது திட்டங்கள் எந்தெந்தப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.


ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA), 2011-ஆம் ஆண்டு 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகளை, திருத்துவதற்காக, 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள், 2026'-ஐ ஜூன் மாதம் 22-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு அறிவித்தது.


நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைச் செயல்படுத்த இந்த விதிகள் உதவுகின்றன. மேலும், இவை இந்திய அரசிதழில்  வெளியிடப்பட வேண்டும். முக்கியமாக, 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள்'                ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 2015, 2019, 2020, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும், கடந்த வருடம் மே மாதம் 26ஆம் தேதி, 2025 அன்றும் இந்த மசோதா மொத்தம் ஒன்பது முறை திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம், 2010'-ன்கீழ் உள்ள விதிகளில் மேற்கொள்ளபடும் 10-வது  திருத்தம் இதுவாகும்.



வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்புகளை ஏற்படுதாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2010-ஆம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. 2010-ஆம் ஆண்டுச் சட்டம் மே மாதம் 1-ஆம் தேதி,    2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 2015-ஆம் ஆண்டு முதல், 18,000-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 22-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 14,456 வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும்               ₹22,000 கோடி நிதியைப் பெறுகின்றன என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை  (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் யாவை? 


2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் அவை செயல்படுத்தப்படும் புவியியல் எல்லைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க  வேண்டும்.


இந்தப் புதிய விதிகள் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளின்கீழ் பொதுவான அனுமதியை வழங்காது. மேலும், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்த கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.

எந்தவொரு புதிய பதிவும் இந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் "முக்கிய நிர்வாகி" (key functionary) என்பதற்கான வரையறையை இந்த விதிகள் விரிவுபடுத்தியுள்ளன. இதன்படி, அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், அறங்காவலர்கள், அமைப்பை நிர்வகிக்கும்  நிர்வாகிகள் எந்த ஒரு நபரும் இதில் இடம்பெற்று இருப்பார்.


மேலும், இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள் ஆகியவற்றை கட்டாயமாக வெளிப்படுத்தக் கோருகிறது. அதோடு, அந்தச் சங்கமோ அல்லது அதன் முக்கியப் பொறுப்பாளர்களோ அந்த ஆண்டில் புத்தகம், பத்திரிகை அல்லது செய்தித்தாள் கட்டுரை உள்ளிட்ட ஏதேனும் வெளியீடுகளைக் கொண்டுவந்துள்ளனரா என்பதையும் அறிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் மற்றும் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுவதற்கும் கட்டணத்தை விதிக்கிறது. பல துறைகளில் அல்லது பல பிராந்தியங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதிகப் பதிவுச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர்.


ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நன்கொடைகளை பெற விரும்பும் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் என்னென்ன?


தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாச்சாரத் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறலாம்.                    திருத்தப்பட்ட விதிகளின்படி, பதிவுச் சான்றிதழ் அல்லது விண்ணப்பப் படிவத்தில் (புதிய பதிவுகளுக்கு) பின்வருவன குறிப்பிடப்பட வேண்டும்: அவை விதிகளுடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் உள்ள நோக்கங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பதிவுக்கான நோக்கம் அல்லது நோக்கங்கள் மற்றும் அந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஆகும்.



ஏற்கனவே வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (FCRA) விதிகளின்கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், ஒரு ஆண்டுக்குள் தங்களின் செயல்பாட்டு நோக்கங்களைப் புதுப்பித்து, அதனை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும். சில பிரிவுகள் அரசியல் நடவடிக்கைகளைத் திட்டவட்டமாகத் தவிர்க்கின்றன.


"கல்வி" சார்ந்த நோக்கம் 22 செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறது, ஆனால் "அரசியலமைப்பு உரிமைகள், அடிப்படைக் கடமைகள் மற்றும் குடிமைப் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள்" என்ற பிரிவுக்குப் பின்னால் முற்றிலும் அரசியல் சாராத தன்மை கொண்டது என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.


"கலாச்சாரம்" சார்ந்த நோக்கம் 18 பிரிவுகளுக்கு இடையே இந்திய மரபுகளால் ஈர்க்கப்பட்ட சமகால கலைகளின் ஊக்குவிப்பு என்பதைப் பட்டியலிடுகிறது.              ஆனால், "அரசியல்/கருத்தியல் உள்ளடக்கங்களைத் தவிர்த்து" என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.


மதச் செயல்பாடுகளின்கீழ் 16 பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன,                 இதில் "மதக் கல்வி, ஒழுக்கநெறி போதனை, சத்சங்கங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் தியான முகாம்களை நடத்துதல் மற்றும் மயானம்/சுடுகாடு மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். "பொருளாதாரம்" நோக்கத்தின்கீழ் 19 பிரிவுகளும், "சமூகம்" பிரிவின்கீழ் 30 அம்சங்களும் உள்ளன.


வேறு ஏதேனும் சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதா?


மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களுக்கான அபராதங்களைக் குறிப்பிட்டு மற்றொரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்வது, அபாயகரமான பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது, நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது, அனுமதியின்றி வெளிநாட்டுப் பங்களிப்புகளைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது, மற்றும் அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக அல்லது அங்கீகரிக்கப்படாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிதியைப் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்படும்.


வெளிநாட்டு நிதி எந்த நோக்கத்திற்காகப் பெறப்பட்டதோ, அதைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், தவறாகப் பயன்படுத்தப்பட்ட தொகையில் 30% வரை அல்லது ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம். அதேபோல், அந்தத் தொண்டு நிறுவனத்தின் (NGO) அனுமதி அல்லது பதிவில் குறிப்பிடப்படாத நோக்கங்களுக்காகவோ அல்லது பகுதிகளிலோ வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தினாலும், அந்தத் தொகையில் 30% அல்லது                   ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.                          மேலும், அனுமதிக்கப்பட்ட நிர்வாகச் செலவு வரம்பைத் தாண்டி செலவழிப்பது அல்லது நிதியை ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு, சம்பந்தப்பட்ட தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் அபராதம் கணக்கிடப்படும். இதற்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ₹1 லட்சம் ஆகும்.


Original Link: FCRA Rules tightened: NGOs must declare social media accounts, stick to specified activities; political content barred.

Share:

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா - குடிமைச் சமூகத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது. -பி. வில்சன்

 2026-ம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) மசோதாவானது, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் சார்ந்திருக்கும் நல சேவைகளைச் சீர்குலைக்கக் கூடும் என்ற கவலைகளை எழுப்புகிறது.


2026 மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா-2026 (Foreign Contribution (Regulation) Amendment Bill), ஒரு வழக்கமான ஒழுங்குமுறை நடவடிக்கை மட்டுமல்ல. இது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது முன்வைக்கப்பட்டாலும், இது நிர்வாக அதிகாரத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வெளிநாட்டு நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமாக முன்வைத்த, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA), அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் மற்றும் கல்வி, மத நிறுவனங்கள் மீது அரசின் விரிவான கட்டுப்பாட்டை அனுமதிக்கும் சட்டமாக இது மாற்றுகிறது.


கண்காணிப்பிலிருந்து வரம்பு மீறிய அதிகாரம் வரை


ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) நடைமுறை, எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் சிவில் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் மிகக் கடுமையான அமைப்புகளில் ஒன்றாக இருந்தது. 2020-ம் ஆண்டின் திருத்தங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதில், அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் புதுதில்லியில் உள்ள ஒரே ஒரு வங்கிக் கிளை (பாரத ஸ்டேட் வங்கி) வழியாகவே செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்குதல், நிர்வாகச் செலவின வரம்புகளை 50%-இலிருந்து 20%-ஆகக் குறைத்தல், சிறிய அமைப்புகளுக்கு நிதியை மறு-மானியமாக (sub-granting) வழங்குவதைத் தடை செய்தல் மற்றும் அமைப்புகளை இடைநீக்கம் செய்யும் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, குறிப்பாக விளிம்புநிலைக் குழுக்களுக்குச் (marginalised communities) சேவை செய்யும் சிறிய மதச்சார்புடைய மற்றும் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.


2026-ம் ஆண்டு மசோதா இன்னும் ஒரு படிநிலைகள் முன்னே செல்கிறது. இது ஒரு புதிய அத்தியாயம் IIIA-ஐ அறிமுகப்படுத்தி (முந்தைய பிரிவு 15-ஐ நீக்கி), தற்போதுள்ள சொத்து மேலாண்மை விதிகளை மாற்றுவதன் மூலம், இழப்பீடு அல்லது நிர்வாக உரிமைகளை வழங்காமல் நிறுவனங்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தடையின்றி அரசுக்கு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை இது உருவாக்குகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய அம்சம், முன்மொழியப்பட்ட பிரிவு 14B ஆகும். இந்தப் பரிவு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவின் தானியங்கி "நிறுத்தத்தை" அறிமுகப்படுத்துகிறது. ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், சரியான நேரத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கத் தவறினாலும், ஒரு புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும்கூட, அந்த நிறுவனம் தனது பதிவை இழக்க நேரிடலாம். இதன் பொருள், நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளுக்குப் பதிலாக, நடைமுறைத் தாமதங்கள் மூலம் நிறுவனங்களை முடக்கி, உரிய சட்ட நடைமுறையை பலவீனப்படுத்தி, நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகாரத்தை அதிகரிக்கிறது.


புதிய அத்தியாயம் IIIA-இன் கீழ் உள்ள பிரிவு 16A தான் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதன்படி, ஒரு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ரத்து செய்யப்படும்போதோ, ஒப்படைக்கப்படும்போதோ, அல்லது நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும்போதோ, அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களும், முன் நீதிமன்ற மறுஆய்வு அல்லது சுதந்திரமான தீர்ப்பு இல்லாமலேயே, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகார அமைப்பிடம் தானாகவே "தற்காலிகமாக ஒப்படைக்கப்படும்". இதன் பொருள், ஒரு எளிய நிர்வாக முடிவு, நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டைப் பறித்துவிடும் என்பதாகும்.


பிரிவு-14-ன் கீழ் ரத்துசெய்தல் என்பது “பொது நலன்” போன்ற பரந்த மற்றும் அகநிலை சார்ந்த காரணங்களின் அடிப்படையில் அமையக்கூடும் என்பதால், சிறிய, நடைமுறை சார்ந்த அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. பிரிவு 14-ன் கீழ் இரத்துசெய்வது, பிரிவு 16A-ன் பயன்பாட்டைத் தூண்டுவதால், நடைமுறை சார்ந்த, சிறிய அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது. பின்னர், நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பானது இந்தச் சொத்துக்களை நிர்வகிக்க, மாற்ற அல்லது அப்புறப்படுத்த அதிகாரம் பெறும். மேலும், விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படும்.


இந்த விதிமுறை குறிப்பாக விரிவானது. ஏனெனில், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதியளிக்கப்பட்ட சொத்துக்களை உள்ளடக்கி, பல பத்தாண்டுகளாகக் கட்டப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், மத நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும்.


நியமிக்கப்பட்ட அதிகார அமைப்புக்குள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அசாதாரணமானவை. அது சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் எடுக்கவும், நிறுவனங்களை நிர்வகிக்கவும், நிதிகளை மேற்பார்வையிடவும் மற்றும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட "பொது நலன்" என்ற அடிப்படையில் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும் முடியும். இது நிர்வாகத்திற்கு பரந்த அளவிலான தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது பதிவை மீட்டெடுக்கவோ அல்லது மறுபதிவு செய்யவோ தவறினால், அந்த அதிகாரம் நிரந்தரமாகிவிடும். அதன் பிறகு, அந்த அதிகார அமைப்பு சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ செய்யலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) வரவு வைக்கப்படும். இது சட்டப்பூர்வ செயல்முறைகள் மூலம் நிர்வாகம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வழிவகுக்கிறது.



இது நிறுவனங்களின் இருப்பிற்கு மட்டுமல்லாமல், சமூகங்கள் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் (FCRA) சொத்துக்களில் நிலம், கட்டிடங்கள், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் செலவிடப்படாத நிதிகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, நிறுவனங்கள் திறம்பட மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான உண்மையான சாத்தியக்கூறு உள்ளது.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்பாளர்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு உதவுவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் பிற பொதுநல இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியத் தொண்டு நிறுவனங்களுக்கு முக்கியமாக ஆதரவளிக்கின்றனர். இந்தப் பங்களிப்புகள், நிறுவனங்கள் உறுதியான சமூகப் பலன்களை வழங்குவதற்கு உதவுகின்றன.


பலவீனமான அல்லது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அத்தகைய நிதிகளைப் பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றுவது, இந்த நிதிப் பங்களிப்புகள் வழங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கிறது. எனவே, புதிய விதிகள் இந்திய நிறுவனங்களை அரசின் பறிமுதல் என்ற தொடர்ச்சியான அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன. இது பங்களிப்பாகப் பெறப்பட்ட நிதிகளையும், அந்த நிதிகளால் உருவாக்கப்பட்ட அல்லது ஆதரிக்கப்பட்ட சொத்துக்களையும் அபாயத்தில் ஆழ்த்துகிறது.


இந்தக் கட்டமைப்பு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட “நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம்” (Designated Authority) சொத்துக்களை “தற்காலிகமாக ஒப்படைப்பதற்கும்” “நிரந்தரமாக ஒப்படைப்பதற்கும்” விரிவான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது.


இந்தத் திருத்தங்கள், இடைநீக்கம் மற்றும் விசாரணைக் காலங்களில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன. திருத்தப்பட்ட பிரிவு-13, நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் இடைநீக்கக் காலத்தில் தங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதைத் தடை செய்கிறது. அவற்றின் செயல்பாடுகளைத் திறம்பட முடக்குகிறது. திருத்தப்பட்ட பிரிவு 43, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களை எந்தவொரு மாநில நிறுவனமும் விசாரிப்பதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று கோருவதன் மூலம் அமலாக்கத்தை மையப்படுத்துகிறது. கூடுதலாக, "முக்கியப் பொறுப்பாளர்கள்" என்பதற்கான விரிவான வரையறைகள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கான அதிகரித்த தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றுடன் இணைந்த இந்த மசோதா, குடிமைச் சமூகப் பங்கேற்பைத் தடுக்கக்கூடிய ஒரு அச்சச் சூழலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு


2026-ம் ஆண்டு மசோதாவானது, தற்போது செயலிழந்த அல்லது இயங்காத நிறுவனங்களின் சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான பிரிவு 22-ஐ ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள், அனுமதிகள், பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை அங்கீகரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ தெளிவான காலக்கெடு இல்லாததால், நிச்சயமற்ற தன்மையும் தாமதங்களும் ஏற்படுகின்றன. இது வெளிநாட்டு நிதியைச் சார்ந்திருக்கும் திட்டங்களைத் தடுப்பதோடு,, விளிம்புநிலைச் சமூகங்களை அதிக அளவில் பாதிக்கக்கூடும்.


பெரும்பாலும், தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது. நடைமுறைச் சார்ந்த குறைபாடுகள் காரணமாகவும் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். இது, சமூகங்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு வழிவகுக்கலாம்.


சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்கம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், பழங்குடியினர் நல அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளை நடத்துகின்றன. இவற்றில் பல, தேவாலயங்கள், புலம்பெயர் குழுக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான நிதியுதவியைப் பெறுகின்றன. கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயாவில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் அறக்கட்டளைகள் பெரும்பாலும் பெரும்பான்மையினருக்கே பயனளிக்கின்றன என்பது ஒரு உண்மையாகும். பிரிவு 16A-இன் கீழ், இவற்றின் பதிவு காலாவதியானாலோ, புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலோ, இந்நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அபாயம் உள்ளது. நீண்டகாலமாக இயங்கிவரும் கான்வென்ட் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளை மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற நிறுவனங்கள், நடைமுறை விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் மட்டுமே அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. ஆனால், அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவனங்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கிறது என்பதும், 2014 மற்றும் 2026-க்கு இடையில், சுமார் 22,000 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு  ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் எந்தவொரு சரியான அல்லது நம்பகமான காரணங்களும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அரசாங்கம் சிறுபான்மையினரின் சொத்துக்களைக் குறிவைப்பதாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது பெரும்பான்மையினருக்கே நன்மை அளிக்கிறது என்று கவலையுடன் கூறலாம்.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் ரத்து செய்யப்படுவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, தடுப்பூசி செலுத்துதல், பச்சிளம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, மழலையர் கல்வி, பெற்றோரின் பங்களிப்பு, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் அரசுத் திட்டங்களுக்கான அணுகல் ஆகியவற்றில் நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இத்துறை பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மற்றும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏறத்தாழ நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் வரையிலான தனிநபர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை இழக்க நேரிடுகிறது.


2014-ம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, குடிமைச் சமூக அமைப்புகள் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட, 27 லட்சம் வேலைவாய்ப்புகளையும் 34 லட்சம் முழுநேரத் தன்னார்வலர்களையும் உருவாக்குகின்றன. 515 தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் (NGOs) நடத்தப்பட்ட ஒரு தனி கணக்கெடுப்பில், அவற்றில் 47% நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்தத் திருத்தங்கள் நிறுவனங்களின் இருப்பை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக வளங்களையும் அச்சுறுத்துகின்றன. நிலம், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத நிதிகள் போன்ற சொத்துக்கள் பல நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.


அரசியலமைப்பு உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன


இந்த மசோதா சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினர் சார்ந்த அமைப்புகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள "பொது நலன்" (public interest) என்ற வரையறையானது, சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடியினர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் அல்லது மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, நிதிப் பங்களிப்பாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அத்தகைய அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதைத் தடுத்து, ஒருவித அச்சமூட்டும் தாக்கம் ஏற்படக்கூடும்.


இந்த மசோதா, சட்டப்பிரிவுகள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்றும் 300A ஆகியவற்றின் கீழ் அரசியலமைப்புரீதியான கவலைகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் துறைக்கு (அரசுக்கு) விரிவான அதிகாரங்களைக் குவிப்பதன் மூலம், இது சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், மத மற்றும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மற்றும் சொத்துரிமைகளைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகள் மீதான எந்தவொரு ஒழுங்குமுறையும், முறையான சட்ட நடைமுறைகள், சுதந்திரமான மேற்பார்வை மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்திருக்க வேண்டும். அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், இந்த மசோதா நவீன இந்தியாவில் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கும் மிகவும் அடக்குமுறைச் சட்டங்களில் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது.

பி. வில்சன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் (மாநிலங்களவை), இந்திய உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : FCRA Bill — expanding state control over civil society. -P. Wilson

Share: