சிறப்பு தீவிர திருத்த (SIR) தீர்ப்பு : நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு; குடியுரிமைச் சரிபார்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. -அபூர்வா விஸ்வநாத்


தேர்தல் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.


தேர்தல் ஆணையத்தால் (Election Commission (EC)) வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்கிய முக்கியத் தீர்ப்பு, ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடாக அமைந்துள்ளது.


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்முறையானது வாக்களிப்பதற்கான தகுதியைச் சரிபார்ப்பதோடு மட்டுமே நின்றுவிடும் என்றும், வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரை நீக்குவது என்பது "அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று அறிவிப்பதற்குச் சமமாகாது" என்றும் நீதிமன்றம் வலியுறுத்திய அதேவேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள், அடுத்த தேர்தல்களுக்கு முன்னதாகவே "தங்கள் குடியுரிமை தொடர்பான சட்டரீதியான தீர்ப்பிற்கு" (adjudication) உட்படுத்தப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர், அவர் இந்தியக் குடிமகன் அல்ல என்று தேர்தல் ஆணையம் கருதியதன் அடிப்படையில் நீக்கப்பட்டிருந்தால், அத்தகைய வழக்குகளை நான்கு வாரங்களுக்குள், 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (Citizenship Act) கீழ் செயல்படும் உரிய அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பிவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அந்த அதிகார அமைப்பு, பின்னர் சட்டத்திற்கு உட்பட்டு அந்த நபரின் குடியுரிமை தன்மையைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் எது முதலில் வருகிறதோ, அதற்கு முன்னதாகவே, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த அதிகார அமைப்பு அறிவிப்பு அனுப்ப வேண்டும். மேலும், தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய 124 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல் அமைந்திருந்தது.


உள்துறை அமைச்சகம், குடியுரிமைச் சட்டம் மற்றும் 'வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின்' (Foreigners’ Tribunals) கீழ், குடியுரிமை தொடர்பான கருத்துக்கணிப்புகளின் பல்வேறு அம்சங்களை விசாரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு நான்கு வார கால அவகாசம் அளிப்பதன் மூலம், நீக்கப்பட்ட நபர்களே தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் அவர்கள் மீது சுமத்துகிறது.


வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை ஆராய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குத் தெளிவாகவே வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை ”முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று வரையறுத்தது. அதன் "சரியான கண்ணோட்டத்தில்" புரிந்து கொள்ளும்போது, ​​"இது அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற பிரகடனத்திற்கு சமமாகாது. தேர்தல் நோக்கங்களுக்காக, சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதில் ஆணையத்திற்கு திருப்தி ஏற்படாததையே இது பிரதிபலிக்கிறது" என்று நீதிமன்றம் கூறியது.


லால் பாபு ஹுசைன் vs வாக்காளர் பதிவு அதிகாரி (Lal Babu Hussein vs Electoral Registration Officer) வழக்கில் 1995-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள் பெயர்கள் குடியுரிமை பெற்றதற்கான கருத்துகணிப்பிற்கு உரிமையுடையவர்கள் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அந்தத் தீர்ப்பில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது ஒரு அலுவல்சார்ந்த செயல் என்பதால், அது முறைப்படுத்தப்பட்டதற்கான கருத்துகணிப்பைக் கொண்டுள்ளது என்ற முன்னுதாரணத்தின் அடிப்படைக் கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும், அதை தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இந்த கருத்துகணிப்பு சான்று அடிப்படையிலானது மற்றும் ஆதாரத்துடன் இதை எதிர்த்து சவால் செய்ய கூடியது என்றும், இது ஒரு இறுதி அல்லது முழுமையான சட்டப் பாதுகாப்பு அல்ல. மேலும், இது ஆய்வுக்கு எதிரான ஒரு நிரந்தர உத்தரவாதமும் அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை நீதிமன்றம் எவ்வாறு நியாயப்படுத்தியது?


இந்தத் தீர்ப்பில், ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு தீவீர திருத்தம் (SIR) செயல்முறையானது, “ஆவணப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது அணுகல் தொடர்பாக நியாயமான கவலைகளை எழுப்பியது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. “இருப்பினும், தொடர்ச்சியான நீதித்துறைத் தலையீடுகள் மூலம் இந்தக் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அந்தச் செயல்முறையில் படிப்படியாகப் பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரிகிறது,” என்றும் நீதிமன்றம் கூறியது.


இந்தத் தலையீடுகளின் காரணமாக, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை "அரசியலமைப்புக்கு இணக்கமானதாக" மாறியது என்று நீதிமன்றம் கூறியது.


மேலும் "சிலரால் புறக்கணிப்பதாகக் கருதப்படக்கூடிய ஒரு செயல்முறையை, பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம், செயல்படுத்தும்போது அரசியலமைப்புக்கு இணக்கமானதாக மாற்ற முடியும்," என்று நீதிமன்றம் கூறியது.


சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் விலக்கப்பட்டதற்கான காரணங்களுடன், அவர்களின் முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான தனது முடிவை, "ஆரம்பத்தில் ஒரு வெளிப்படையற்ற நிர்வாகப் பயிற்சியிலிருந்து, சரிபார்க்கவும் சவால் செய்யவும் கூடிய ஒன்றாக மாற்றியது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


"இந்தத் தீர்ப்புகள், சிறப்பு தீவிர திருத்த செயல்முறையான நடைமுறை நியாயத்தின் தேவைகளுடன் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்யும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களாகச் செயல்பட்டன," என்று நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றம், 2025 ஜூலை மாதம் தொடங்கி ஏழு மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்து, நீதிமன்றம் ஜனவரி மாதம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.


வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் அல்லது திருத்தும் செயல்பாட்டின்போது, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.

Original link:

SIR ruling: Supreme Court tells Election Commission to report deleted names, sets stage for citizenship test.



Share:

மூத்த குடிமக்கள் நலனைப் பாதுகாப்பதற்காகக் கேரளா அரசு ஏன் ஒரு புதிய துறையை அறிவித்துள்ளது? - ஷாஜு பிலிப்

கேரளா, இந்தியாவின் மிக அதிக முதியோர்கள் கொண்ட மாநிலமாகும். அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கேரளாவின் சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில், குறிப்பாக முதியோர் நலப் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கென ஒரு துறையை அமைப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, ​​முதியோர் நலன் மாநில சமூக நலத்துறையின்கீழ் வருகிறது.


இந்தத் திட்டம் குறித்தும், கேரளாவின் மாறிவரும் மக்கள்தொகையியல் போக்குகள் எவ்வாறு இத்தகைய ஒரு நடவடிக்கைக்கு வழிவகுத்தன என்பது குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் குறிப்பிட்டுள்ளன.




முதியோர்கள் பெருகிவரும் ஒரு மாநிலம்


கேரளா மக்கள்தொகை மாற்றத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ள கேரளா, இந்தியாவின் அதிக முதியோர்கள் கொண்ட மாநிலமாகும். 2021-ஆம் ஆண்டின் 'இந்தியாவில் முதியோர்' (Elderly in India) குறித்த அறிக்கையின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 16.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அகில இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 13.1%-ஆக இருக்கும் நிலையில், 2031-ஆம் ஆண்டுக்குள் இது மொத்த மக்கள்தொகையில் 20.9%-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உழைக்கும் வயதில் உள்ள ஒவ்வொரு 100 நபர்களில் முதியோர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் 'முதியோர் சார்ந்திருப்பு விகிதம்' (Old age dependency ratio), 2011-ஆம் ஆண்டில் 19.6%-ஆக இருந்து 2021-ஆம் ஆண்டில் 26.1%-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2031-ஆம் ஆண்டுக்குள் 34.3%-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் தரவுகளின்படி, கேரளாவில் உள்ள முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2016-17-ஆம் ஆண்டில் 19,149-ஆக இருந்து 2024-25-ஆம் ஆண்டில் 37,895-ஆக அதிகரித்துள்ளது.


கேரளா ஏன் அதிவேகமாக முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறி வருகிறது?


கேரளாவில் முதியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் பங்களிக்கின்றன. பல ஆண்டுகளாக, கேரளாவின் மொத்த கருவுறுதல் விகிதமானது (total fertility rate (TFR)), ஒரு பெண் தன் வாழ்நாளில் பெறும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. மாநிலத்தின் முக்கிய புள்ளிவிவரத் தரவுகளின்படி 2023-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.35 குழந்தைகளாக உள்ளது. இது, தலைமுறைகள் கடந்து ஒரு மக்கள்தொகை தன்னைத்தானே ஈடுசெய்வதற்குத் தேவையான விகிதத்தைக் குறிக்கும் 2.1 என்ற தேசிய மாற்று அளவைவிடக் குறைவாகும்.


இரண்டாவதாக, மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாகக் கேரள மக்களின் சராசரி ஆயுட்காலம் (Life expectancy) கணிசமாக அதிகரித்துள்ளது.


மேலும், வேலை செய்யும் வயதுடைய மக்களில் பெருமளவில் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதால், கேரளா முதியோர்களின் பூமியாக மாறியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் அல்லாத நாடுகளுக்குக் குடிபெயர்பவர்களில் பெரும் பகுதியினர், தங்கள் வயதான பெற்றோரை வீட்டிலேயே விட்டுவிட்டு அங்கேயே குடியேறுகிறார்கள். எனவே, கேரளாவில் மூத்த குடிமக்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், பல வீடுகளில் வயதான பெற்றோர்கள் மட்டுமே உள்ளனர்.


அதே நேரத்தில், மேற்கு ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் வேலை செய்யும் வயதைக் கடந்த பிறகு பெருமளவில் திரும்புவது, மாநிலத்தின் முதியோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.


புவியியல் மற்றும் மக்கள்தொகை

2023-ஆம் ஆண்டின் 'இந்திய முதியோர் அறிக்கை' (India Ageing Report), கேரளாவின் கிராமப்புற மக்கள்தொகையில் சுமார் 17.5% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும், நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 15.4%-ஆக உள்ளது என்றும் தெரிவித்தது. கிராமப்புறங்களில் முதியவர்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு, உழைக்கும் வயதுடைய மக்கள் இடம்பெயர்வதே முக்கியக் காரணமாகும். குறிப்பாக முதுமைப் பருவத்தில், ஆண்களைவிட வயதான பெண்களே அதிகமாக உள்ளனர். இதில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1000 ஆண்களுக்கு 1651 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் உள்ளனர்.


ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள வேறுபாடு மற்றொரு காரணியாகும். பெண்களின் ஆயுட்காலம் சுமார் 78.4 ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம் 71.9 ஆண்டுகளாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழல் காரணமாக, தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் கணவரை இழந்த விதவைகளாக உள்ளனர். இவர்களில் பலருக்குப் போதுமான சமூக அல்லது நிதிசார் ஆதரவு கிடைப்பதில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) தரவுகளின்படி, கேரளாவின் தொழிலாளர் சக்தியில் 88-90% பெண்கள் உள்ளனர். அதேசமயம், தேசிய சராசரி சுமார் 55-59% ஆக உள்ளது. கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களில், சுமார் 38% பேர் 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மேலும் 1% பேர் 81 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இத்தரவுகள், அம்மாநிலத்தில் உள்ள பல முதியோர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகின்றன.


முதியோரின் ஆரோக்கியம்


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால முதியோர் குறித்த ஆய்வின் முதல் அறிக்கையின்படி (2017-18), கேரளாவின் 70%-க்கும் மேற்பட்ட முதியவர்கள் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி மற்றும் இதய நோய்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. கேரளாவில் உள்ள முதியவர்களில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் மன உளைச்சலின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Ageing Report 2023) கூறியது. மேலும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 4.86% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில மறதி நோய் முன்முயற்சி (ஸ்மிருதிபாதம்) மதிப்பிடுகிறது. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கும் ஆரம்பகால நோயறிதலை உறுதி செய்வதற்கும் மறதி நோய் பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை அவசியமாக்குகிறது.


கடந்த 2025-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் முதன்முறையாக ஒரு பகுதி-நீதிமன்ற அதிகாரம் கொண்ட 'மாநில முதியோர் ஆணையத்தை' (State Elderly Commission - Quasi-judicial forum) கேரளா அமைத்தது. அங்குள்ள முதியவர்களில் சுமார் 75% பேருக்கு நல ஓய்வூதியத் திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.


மேலும், கேரளா ஏற்கனவே 'வயோமித்ரம்' (நடமாடும் மருத்துவ சேவை) ‘Vayomithram’ மற்றும் 'சமயபிரபா' (பகல்நேரப் பராமரிப்பு) ‘Samayaprabha’ போன்ற சில சமூக நலத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. முதியோருக்கான தீவிர நோயாளிகளுக்கான வலி நிவாரண மற்றும் ஆறுதல் பராமரிப்பை (Palliative care) ஒருங்கிணைக்க, 'டிஜிட்டல் பல்கலைக்கழக கேரளா' உடன் இணைந்து 'கேரளா கேர் பாலியேட்டிவ் கிரிட்' (Kerala Care Palliative Grid) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் செயல்படும் அனைத்துத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்த அமைப்பின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் படுக்கையில் உள்ள நோயாளிகளும், 4 லட்சம் இதர நோயாளிகளும் பராமரிப்புப் பெற்று வருகின்றனர். இதில் 1,387-அரசு நிறுவனங்களும் 1,227-தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அடங்கும்.


எதிர்கால வள சவால்


மூத்த குடிமக்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கை, கேரளாவின் சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில், குறிப்பாக முதியோர் நலப் பராமரிப்பில் கவனம் செலுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, கேரளா ஒரு பராமரிப்புப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வலுப்படுத்த வேண்டியிருக்கும்.


2023-ஆம் ஆண்டில், மாநிலத்தில் சுமார் 120 முதியோர் நல மருத்துவர்கள், முதியோர் பராமரிப்பில் பயிற்சி பெற்ற 600 செவிலியர்கள், 400 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் 50 தொழில்சார் சிகிச்சையாளர்கள் இருப்பதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் கண்டறிந்தது. கணிக்கப்பட்ட சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பல்துறை பராமரிப்பு மாதிரியுடன் இணங்குவதற்கும், 2030-ஆம் ஆண்டிற்குள் கேரளாவில் ஏறத்தாழ 300 முதியோர் நல மருத்துவர்கள், 1,500 செவிலியர்கள், 900 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் 250 தொழில்சார் சிகிச்சையாளர்கள் கொண்ட ஒரு பணியாளர் குழு உருவாக்கப்பட வேண்டும்.

Original link:

 Why Kerala has announced a new department for welfare of senior citizens.


Share:

2022–2024 காலகட்டத்தில், அனைத்து இறப்புகளிலும் 60 சதவீதம் தொற்றா நோய்களே காரணமாக அமைந்தன -பிந்து ஷாஜன் பேரப்படன்

 தொற்றா நோய்கள், பெண்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும்  மக்களிடையேயும் இடையே, அதிகரித்து வரும் மரணத்திற்கான முக்கிய  காரணியாக இருந்து வருகின்றன.


இந்த மாதம் வெளியிடப்பட்ட மாதிரிப் பதிவு முறை (Sample Registration System (SRS)) புள்ளிவிவர அறிக்கை 2024-ன் படி, 2022-2024 காலகட்டத்தில் நிகழும் மொத்த இறப்புகளில் 60%-க்கு தொற்றா நோய்களே (Non-Communicable Diseases (NCDs)) காரணமாக இருப்பதால், இந்தியாவின் இளைஞர் இறப்பு நிலை மாறி வருகிறது. 2015-2017-ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7.3 சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். அந்தக் காலகட்டத்தில், தொற்றா நோய்களே மொத்த இறப்புகளில் 52.8%-க்கு முக்கிய காரணியாக இருந்தன. கீழேயுள்ள விளக்கப்படம், 2015-2017-ஆம் ஆண்டுகள் முதல் இந்தியாவில் நிகழ்ந்த இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களைக் காட்டுகிறது.


பகுப்பாய்வின்படி, தொற்றா நோய்களில், இருதய நோய்கள் மட்டுமே 2022-2024 காலகட்டத்தில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில் 32.1%-க்குக் முக்கிய காரணியாக அமைந்துள்ளன. இது 2015-2017 காலகட்டத்தில் 27.1%-ஆக இருந்ததைவிட, மீண்டும் ஐந்து சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். இதற்கிடையில், இந்தியாவில் இறப்பிற்கான முக்கியக் காரணியாக இருந்துவரும்  தொற்றுநோய்கள், தாய்வழி, மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்கு, 2015-2017 காலகட்டத்தில் 22%-ஆக இருந்ததிலிருந்து, 2022-2024 காலகட்டத்தில் 19.7%-ஆகக் குறைந்துள்ளது.


இந்தியாவில் இறப்புக்கான காரணங்கள்: 2022-2024-ஆம் ஆண்டுகளின் அறிக்கையில் வயது வாரியாக வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி, தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் இதய நோய்கள் 32.1% பங்கைக் கொண்டுள்ளனன். 30 முதல் 69 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மட்டும் இவை 37.3%-ஆகப் பதிவாகியுள்ளன. 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பெரியவர்களை இதய நோய்கள் அதிகளவில் பாதிப்பை சந்ததித்து வருவதாகச் சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் வேலை செய்துவரும் பணியாளர்களில்   இந்தப்பிரிவினர் அதிகமாக இருப்பதால், தரவு கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.


இந்தியாவில் கருவுறுதல் விகிதங்கள் (fertility level) குறைந்துவரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பல மாநிலங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று கருவுறுதல் அளவிற்குக் கீழே உள்ளன.


2022–2024 அறிக்கைக் காலத்தில், 69.3% இறப்புகள் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஏற்பட்ட அதேவேளையில், 30 முதல் 44 வயதுக்குட்பட்டோர் 19.5% இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தனர். இது இளம் வயதினரிடையே ஏற்படும் அகால மரணங்களை ஒரு பொருளாதார மற்றும் சமூகம் தொடர்பான கவலையாக மாற்றுகிறது.


பல ஆண்டுகளாக தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 64.8% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. அதே, சமயம் ஊரகப்பகுதிகளில் அவை மொத்த இறப்புகளில் 58.8% மட்டுமே காரணமாக இருந்தன. இதேபோல், ஆண்களிடையே ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 62.3% தொற்றா நோய்களாலும், பெண்களிடையே 56.9% தொற்றா நோய்களாலும் ஏற்பட்டன. இருப்பினும், ஊரகப் பகுதிகளில் வசித்து வரும்  மக்கள் மற்றும் பெண்களிடையே தொற்றா நோய்களே இறப்பிற்கான முக்கிய காரணமாக மாறும் போக்கு தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள விளக்கப்படம், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின்  அளவைக் காட்டுகிறது.


2022-2024 அறிக்கைக் காலத்தில், இருதய நோய்களுக்குப் பிறகு, இறப்புக்கான முக்கியக் காரணங்களாகப் புற்றுநோய் மற்றும் பிற கட்டிகள், சுவாச நோய்கள், செரிமான நோய்கள் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் ஆகியவை இருந்தன; இவை ஒவ்வொன்றும் மொத்த இறப்புகளில் 5%-க்கும் அதிகமாகப் பங்களித்தன. கீழேயுள்ள அட்டவணை, இந்தியாவில் அனைத்து வயதுப் பிரிவினரிடையேயும், மேலும் 15-29 மற்றும் 30-69 வயதுப் பிரிவினரிடையேயும் ஏற்பட்ட முதல் 10 இறப்புக் காரணங்களைக் காட்டுகிறது.

பல நடுத்தர மற்றும் அதிக அளவு வருமானம் பெறும் நாடுகளில் காணப்படுவது போன்ற ஒரு நோய்ப்பரவல் மாற்றத்தை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.  அது போன்ற நாடுகளில், இறப்புகள் ஏற்படுவதற்கு நாள்பட்ட நோய்களே முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. அதேவேளையில், தொற்றுநோய்கள் தொடர்ந்து சவாலானதாகவே இருந்து வருகின்றன. இது, பொது சுகாதார வல்லுநர்கள் “இரட்டை நோய்ச்சுமை” (double burden) என்று விவரிக்கும் நிலையை உருவாக்குகிறது.


15-29 வயதுக்குட்பட்டோரிடையே தற்கொலையே மரணத்திற்கான முக்கியக் காரணமாகத் தொடர்கிறது என்று அட்டவணை-1 காட்டுகிறது. 2015-2017-ல் 16.3%-ஆக இருந்த தற்கொலைகள், தற்போது இந்த வயதினரின் மரணங்களில் 19% ஆக உள்ளன. தற்கொலைகளின் இந்த அதிகரிப்பு, வேலையின்மை, கல்வி தொடர்பான மன அழுத்தம், நிதிச் சிக்கல்கள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அதிகரித்து வரும் மனநல அழுத்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது.


அசாம் மற்றும் பிற மாநிலங்களுடன் சேர்த்து, அரசாங்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் (Empowered Action Group (EAG)) கீழ் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட 8 மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கடுமையான வேறுபாடுகளையும் அந்த அறிக்கை காட்டியது. அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாமில், மொத்த இறப்புகளில் 53.9% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. மற்ற மாநிலங்களில் இது 63.5%-ஆக இருந்தது. கீழேயுள்ள விளக்கப்படம், அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாம் ஆகியவற்றுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே தொற்றா நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கைக் காட்டுகிறது.


வரைபடங்களுக்கான தரவுகள், மாதிரிப் பதிவு முறை புள்ளிவிவர அறிக்கைகள் மற்றும் இந்தியாவில் இறப்புகளுக்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டன. இந்த வரைபடங்களில், அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவின் (Empowered Action Group (EAG)) அறிக்கை என்பது அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவைக் குறிக்கிறது.

Original link:

Non-communicable diseases accounted for 60% of all deaths in 2022-2024 


Share:

பத்ம விருதுகள் வெறும் கௌரவம் சார்ந்தவை மட்டுமல்ல — அவை ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகின்றன. - தாரிக் மன்சூர்

ந்தியா தனது சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் காலனித்துவ காலப் பட்டங்களை (Colonial titles) ஒழித்தது. ஆனால், பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவிப்பதைக் கைவிடாமல், அதற்கென ஒரு குடிமக்கள் விருதுகள் முறையை (Civilian awards system) உருவாக்கியது. இந்த விருது வழங்கும் முறை, நம் நாட்டின் ஜனநாயகத்தின் (Democracy) வளர்ச்சிக்கு ஏற்ப இன்றும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது.


"யாராலும் சேவை செய்ய முடியும் என்பதால், ஒவ்வொருவரும் மகத்தானவராக ஆக முடியும்," என்று மார்ட்டின் லூதர் கிங் (Jr) ஒருமுறை கூறினார். மகாத்மா காந்தியும் சேவையைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டதாவது, "பிறருக்குச் சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி" என்று அவர் வலியுறுத்தினார். ஒரு வெற்றிகரமான ஜனநாயகம், சேவை மனப்பான்மையைப் பொது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கச் செய்கிறது. பத்ம விருதுகள், பொதுச் சேவையைக் கௌரவிப்பதன் மூலம் இந்த ஜனநாயக இலட்சியத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், உயரிய குடிமகன் விருது (civilian awardees) பெறுபவர்களின் பெயர்கள் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், சில சமயங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தினாலும் இந்த விருதுகளின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வரலாறு, சட்ட ரீதியான சவால்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவை பொதுமக்களின் மனதில் பெரிய அளவில் இடம்பெறுவதில்லை.


அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்கள்


அரசியலமைப்பு நிர்ணய சபை, பத்ம விருதுகள் குறித்து குறிப்பாக விவாதிக்கவில்லை. பிரிட்டிஷாரால் வழங்கப்பட்ட பட்டங்களை ஒழிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையே இந்தச் சபையில் இருந்தது. அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் அறிக்கையின்படி, அத்தகைய காலனித்துவப் பட்டங்கள் — அவை தனிப்பட்டவையாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரையாக வருபவையாக இருந்தாலும் சரி குடிமக்களிடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், பல்வேறு சமத்துவமின்மைகளையும் ஏற்படுத்தின. பொது வாழ்க்கையைச் சீர்குலைப்பதற்காகப் பட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சர்தார் வல்லபாய் படேல் வாதிட்டார். இந்த விவாதங்கள், அரசு பட்டங்களை வழங்குவதைத் தடைசெய்யும் அரசியலமைப்பின் 18-வது பிரிவுக்கு வழிவகுத்தன. இதன் மூலம், மற்றவர்களைவிட எந்த ஒரு வர்க்கமும் அதிக சமத்துவம் கொண்டதாக இருக்க முடியாது என்று குடியரசுக்கு மீண்டும் உறுதி அளிக்கப்பட்டது.


சுதந்திரத்திற்கு முந்தைய பட்டங்களைத் தொடர்வதற்கு கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சட்டமன்றம் ஓரளவு நெகிழ்வுத்தன்மையைக் காட்டியது. முதலாவதாக, இராணுவ மற்றும் கல்விச் சிறப்புகளுக்கு விலக்கு அளித்து                டி. டி. கிருஷ்ணமாச்சாரி கொண்டுவந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது, இராணுவப் பதவிகள், வீரதீர விருதுகள் மற்றும் மகாமகோபாத்யாயா (இந்து தத்துவத்தில் புகழ்பெற்ற அறிஞர்களுக்கானது) போன்ற கல்விசார் கௌரவப் பட்டங்களை அரசு வழங்குவதற்கு வழிவகுத்தது.


எம். ஆர். மசானி போன்ற உறுப்பினர்கள், பொது வாழ்வில் சிறந்து விளங்கும் மற்றும் சேவை செய்யும் குடிமக்களை அரசு கௌரவிக்கும் ஒரு முறையின் அவசியத்தை வலியுறுத்தினர். எனவே, “பட்டங்களுக்கும்” “கௌரவங்களுக்கும்” இடையே ஒரு வேறுபாடு வரையறுக்கப்பட்டது. ஒரு பட்டம் ஒருவரின் பெயருக்கு முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருக்கும் நிலையில், மற்ற (பிரிட்டிஷ் அல்லாத) நாடுகள் தங்கள் குடிமக்களைத் தகுதியான பணிகளுக்காகக் “கௌரவிக்கின்றன” என்று ஸ்ரீ பிரகாசா வாதிட்டார்.


பத்ம விருதுகளின் தோற்றம்


மேற்கூறிய சமரசமானது, வர்க்கம் மற்றும் செல்வாக்கு சார்ந்த பழைய படிநிலைகளைக் கடந்து, சேவை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலித்தது. இது 1954-ஆம் ஆண்டில் ஒரு நிர்வாக ஆணை மூலம் பத்ம விருதுகள் நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் பாரத ரத்னா (உயர்ந்த குடிமை விருது) மற்றும் மூன்று அடுக்கு பத்ம விபூஷன் ஆகிய இரண்டு குடிமை விருதுகளுடன் தொடங்கப்பட்ட இந்த விருதுகள், ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று அறியப்படும் மூன்று தனித்துவமான விருதுகளாக மறுசீரமைக்கப்பட்டன. அவை, 


  • பத்ம விபூஷண் — மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான சேவைக்காக

  • பத்ம பூஷண் — உயரிய வகையிலான தனித்துவமான சேவைக்காக

  • பத்மஸ்ரீ — தனித்துவமான சேவைக்காக


அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கங்களுக்கு இணங்க, இவ்விருதுகளின் பெயரைத் தலைப்பெழுத்துத் தாள்கள் (letterheads), சுவரொட்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதோ அல்லது ஒரு பட்டமாகச் சூட்டிக்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.


அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்கள்


ஆனால், பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மீது அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, 1969-ஆம் ஆண்டில், முன்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் தலைவராக இருந்த ஆச்சார்யா ஜே. பி. கிருபாலனி, அந்த விருதுகளை ஒழிப்பதற்காக ஒரு தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த விருதுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று வாதிட்ட அவர், விருதுகள் என்ற போர்வையில் பட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். விரிவான விவாதங்களுக்குப் பிறகு அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதிலும், பிற்காலத்தில் எழுந்த சட்டரீதியான மற்றும் அரசியல் சவால்களுக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது.


முதலில், கிருபாலனியின் மசோதா முன்வைத்த காரணங்களின் அடிப்படையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசாங்க 1978-79-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகளை இடைநிறுத்தியது. பின்னர் 1980-ஆம் ஆண்டில் இந்த விருதுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. இரண்டாவதாக, அவற்றின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால், 1993-97-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகள் மீண்டும் தடைபட்டன. இறுதியாக, பாலாஜி ராகவன் vs இந்திய ஒன்றியம்-1996 (Balaji Raghavan vs Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்தது. அதில் இந்த விருதுகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. இந்த விருதுகள் சட்டரீதியான சவால்களைக் கடந்தபோதிலும், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த விருதுகளைத் தகுதியுடன் தொடர்புபடுத்தாமல், செல்வாக்கு மற்றும் வெளிச்சத்துடன் தொடர்புபடுத்த அனுமதித்துவிட்டன என்ற ஒரு கருத்து பரவலாக எழுந்தது.


ஆதரவாளர்களுக்கான விருதிலிருந்து மக்களின் பத்ம விருது வரை


நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஒரு தொடர்ச்சியான அம்சம் என்னவென்றால், முந்தைய அரசாங்கங்கள் தோல்வியடைந்த அல்லது செயல்படுவதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாத பகுதிகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அது காட்டும் விருப்பமே ஆகும். பத்ம விருதுகளின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அதன் நோக்கத்திற்கு உண்மையாக, அந்த விருதுகளை "உயர் பிரிவினருக்கானது" (elite preserve) என்பதிலிருந்து "மக்களுக்கான விருதுகள்" (People’s Awards) என மறுசீரமைப்பதில்தான் முதன்மை சவாலாக இருந்தது.



பொதுமக்கள் நேரடியாகப் பரிந்துரை செய்யக்கூடிய இணையதளப் பக்கத்தை உருவாக்கியதன் மூலம், இந்த விருதுகளில் இருந்த "இடைத்தரகர்கள்" பண்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தமாகும். இதற்கு முன்பு, பரிந்துரைகள் அனைத்தும் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வழியாக மட்டுமே அனுப்பப்பட்டன. தகுதி இருந்தும் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதே ஒரு வகையானப் புறக்கணிப்பாகக் கருதப்படும் சமூகத்தில், இந்தச் சீர்திருத்தத்தின் தாக்கம் மிகத் தெளிவானது — 2014-ஆம் ஆண்டில் வெறும் 2,200-ஆக இருந்த பரிந்துரைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 50,000-க்கும் மேலாக உயர்ந்தது. இது ஒரு சங்கிலித் தொடர் வினையை (Domino effect) ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய 16 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்த்தால், விருது பெற்றவர்களில் 63 சதவீதத்தினர் வெறும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்த ஒரு புவியியல் ரீதியான சமநிலையின்மை இருந்தது. பொதுமக்கள் பங்கேற்கும் இந்தப் பரிந்துரை முறை அந்தப் பாகுபாட்டை நீக்கி, நாடு முழுவதிலும் உள்ள தகுதியான நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்துள்ளது.


மோடி அரசாங்கம், தேர்வுக்கான தகுதிகளை வெறும் "சிறப்புத் தகுதி" (excellence) என்பதிலிருந்து ​​"அடிப்படை நிலையை” அங்கீகரிக்கும் வகையில் விரிவுபடுத்தியது. இந்த மாற்றம், குடிமைப் பதவியேற்பு விழாக்களில் இப்போது காணப்படும் நபர்களிடம் பிரதிபலிக்கிறது. இவர்களில், கர்நாடகத்தின் ஹலக்கி (Halakki) பழங்குடியினத்தைச் சேர்ந்த, காலில் செருப்பணியாத 84 வயது சூழலியல் ஆர்வலர் ஒருவர் (இவர் 30,000 மரங்களை நட்டுள்ளார்); நாகாலாந்தைச் சேர்ந்த எளிய பழ விவசாயி ஒருவர் (இவர் விவசாயிகள் வேற்றுப் பயிர் வகைகளை வளர்ப்பது குறித்து வழிகாட்டியவர்); மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர் (இவர் இவ்விருதைப் பெறும் முதல் திருநங்கை ஆவார்) ஆகியோர் அடங்குவர். தொழில் மற்றும் அறிவியல் போன்ற வெளிப்படையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களுடன், “பெயர் அறியப்படாத நாயகர்களின்” (unsung heroes) அமைதியான சேவையையும் ராஷ்டிரபதி பவனின் அதே உயர்ந்த குவிமாட மண்டபங்களில் பாராட்டுவது, நமது வேற்றுமையில் ஒற்றுமையின் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாகும். 2026-ஆம் ஆண்டின் குடிமைப் பதவியேற்பு விழா, போட்டியிடும் வடிவமாக அல்லாமல், ஒன்றுக்கொன்று துணைபுரியும் இந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் வடிவத்தின் மற்றுமொரு வெளிப்பாடாக விளங்குகிறது.


தாரிக் மன்சூர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) முன்னாள் துணைவேந்தரும் மற்றும் உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் (UPLC) நியமன உறுப்பினரும் ஆவார்.

Original link:

The Padma Awards aren’t just about prestige — they’re about deepening democracy.



Share:

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது எப்போதும், நாட்டின் பொருளாதாரத் தோல்வியையே குறிக்கிறதா? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு இடையில், கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மதிப்பின் இந்தச் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது: ஒரு நாட்டின் நாணய மதிப்பு பலவீனமடைவது எப்போது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறுகிறது?


ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை மே மாதம் 26-ஆம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 0.16 சதவீதம் சரிந்து 95.38 என்ற அளவில் தொடங்கியது.


கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) தலையிட்டு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமா, அல்லது சந்தை நிலவரப்படி அதன் உண்மையான மதிப்பை அடைய அப்படியே விட்டுவிட வேண்டுமா என்று பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.


எனவே, ரூபாயின் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது. பலவீனமடையும் ஒரு நாணயம் எப்போது நெருக்கடியாக மாறுகிறது? ஒரு பொருளாதாரம் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க முடியாமல், அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க முடியாமல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றும் பொது நம்பிக்கையைத் தக்கவைக்க முடியாமல் போகும்போது ஒரு நெருக்கடி தொடங்குகிறதா? இதை நாம் இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


ஒரு நாணயத்தை உண்மையில் எது வலிமையாக்குகிறது?


அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பரிமாற்ற விகிதம், முக்கியமாக அந்நியச் செலாவணி (forex market) சந்தைகளில் இரு நாணயங்களுக்குமான தேவையைப் பொறுத்து மாறுகிறது. எண்ணெய், தங்கம், உரங்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியாவிற்கு அதிக டாலர்கள் தேவைப்படும்போது, ​​டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது, டாலரின் அளிப்பு பலவீனமடைகிறது. இதன் விளைவாக, ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.


ரூபாயின் மீதான தற்போதைய அழுத்தம், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், மூலதன வெளியேற்றம், அதிகரித்து வரும் தங்க இறக்குமதி மற்றும் விரிவடைந்து வரும் வர்த்தப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. ரூபாய் வீழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், அது ஒரு நெருக்கடியான சூழலையும் உணர்த்துகிறது. ரூபாயைச் சரிசெய்ய அனுமதிக்காவிட்டால், அந்த அழுத்தம் மறைந்துவிடாது. மாறாக, அது அந்நியச் செலாவணிக் கையிருப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் அல்லது இறக்குமதியைக் குறைத்தல் போன்ற பிற துறைகளுக்கு நகர்கிறது.


இதனால்தான் நாணய வலிமை என்ற கருத்தை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அது அதிக பெயரளவு மதிப்பைப் பற்றியது அல்ல. அது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும்  உலகப் பொருளாதார பாதிப்புகளைத் தாங்கும்திறன் ஆகியவற்றைப் பற்றியது. எனவே, உண்மையான கேள்வி என்னவென்றால், நமது பொருளாதாரம் இந்த அதிர்ச்சியைத் தாங்குமா என்பதுதான். ஒரு நாடு தனது நாணய மாற்று விகிதத்தை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதுதான் இந்த முழு செயல்முறைக்கும் மிக முக்கியமானதாக அமைகிறது.


இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு


இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு இரண்டு அதிகபட்ச நிலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதில் முதலாவது 'தூய்மையான மிதப்பு நிலை' (Pure Float) ஆகும். இந்த முறையில் ஒரு நாட்டின் நாணய மதிப்பு சந்தை சக்திகளுக்கு (தேவை மற்றும் விநியோகம்) ஏற்ப சுதந்திரமாக மாற அனுமதிக்கப்படும். இதற்கு நேர்மாறாக, 'நிலையான மாற்று விகித' (Fixed or Pegged Exchange Rate) முறையில், மத்திய வங்கி தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை மற்றொரு நாட்டின் நாணயத்திற்கு எதிராகவோ அல்லது பல நாணயங்களின் கூட்டு மதிப்புக்கு எதிராகவோ ஒரு குறிப்பிட்ட அளவில் நிலையாக வைத்திருக்கக் கடமைப்பட்டிருக்கும்.


இந்தியா இந்த இரண்டு மாதிரிகளையும் பின்பற்றுவதில்லை. மார்ச் மாதம் 1993-ஆம் ஆண்டு முதல், இந்தியா சந்தையினால் தீர்மானிக்கப்படும் மாற்று விகித முறையைக் கொண்டு வந்துள்ளது, அதே நேரத்தில் தேவைப்படும்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதில் தலையிடும். நடைமுறையில், இது 'நிர்வகிக்கப்படும் மிதப்பு நிலை' (Managed Float) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரூபாய் மதிப்பு மாற அனுமதிக்கப்படும், ஆனால் அது திடீரென வீழ்ச்சியடையாமல் ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 96 அல்லது 97 என்ற ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தொடும்போது, எந்த விலை கொடுத்தாவது அதை ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்று சந்தை நம்பத் தொடங்கினால், அவர்கள் மத்திய வங்கியின் திறனைச் சோதிக்க ஆரம்பிக்கலாம். இதனால் இறக்குமதியாளர்கள் டாலர்களை உடனே வாங்க முற்படலாம், ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த டாலர் வருவாயை இந்திய ரூபாயாக மாற்றுவதைத் தள்ளிப்போடலாம் மற்றும் வர்த்தகர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படத் தொடங்கலாம். இது, ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த நினைக்கும் அதே அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.


சமீபத்திய புள்ளிவிவரங்கள் இத்தகைய நிர்வாகத்தினால் ஏற்படும் சுமையைக் காட்டுகின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserves) கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 728.49 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது. ஆனால், மே மாதம் 8-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி அது 696.99 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. இதில் அந்நிய நாட்டு நாணயச் சொத்துக்கள் (Foreign Currency Assets (FCA)) சுமார் 552.39 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.


இவை பொருளாதார நெருக்கடிக்கான புள்ளிவிவரங்கள் அல்ல. இந்தியாவிடம் இன்னும் கணிசமான அளவு கையிருப்புப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், ரூபாய் மீதான அழுத்தம் உண்மையானது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை, அதன் தற்போதைய சந்தை விலையை மட்டும் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனுடன் சேர்த்து அந்நியச் செலாவணி கையிருப்பு, ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்பந்தப் புத்தகம், கச்சா எண்ணெய் விலைகள், அந்நிய வெளிநாட்டு முதலீடுகள் (FPI) மற்றும் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இந்தக் குறியீடுகள்தான் அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.


ரூபாயின் மீது அழுத்தம் கொடுக்கும் பல காரணிகள்


இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் அல்ல. பல அழுத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


கச்சா எண்ணெய்


முதலாவது காரணம், கச்சா எண்ணெய். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) இயங்கும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Petroleum Planning & Analysis Cell (PPAC)) தகவல்படி, 2025-26 நிதியாண்டில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு 144.009 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.


கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ​​இறக்குமதிச் செலவு அதிகரிக்கிறது, பணவீக்க அபாயங்கள் கூடுகின்றன, மேலும் நடப்புக் கணக்கின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா வாங்கிய கச்சா எண்ணெயின் அளவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, இறக்குமதிச் செலவு 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளில் இத்தகவல் தெரியவந்துள்ளது.


மொத்த இறக்குமதி மதிப்பு மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 14.45 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 17.90 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நிகர இறக்குமதி மதிப்பு 8.911 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 13.469 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.


மூலதன வெளியேற்றம்


அழுத்தத்திற்கான இரண்டாவது காரணி மூலதன வெளியேற்றமாகும் (capital outflow). உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வெளிநாட்டு முதலீடு, ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.64 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டு வரவுகளும் கடுமையாகக் குறைந்து, வலுவான நிகர வெளியேற்றத்தைக் காட்டுகின்றன. இது, சமீபத்திய மிகப்பெரிய எதிர்மறையான வெளிநாட்டு நிறுவன முதலீட்டு நகர்வுகளில் ஒன்றாகத் தோன்றுகிறது.




டாலர் முறை


மூன்றாவது காரணம், அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கம் ஆகும். உலகளாவிய நிதிச் சந்தையின் மையமாக டாலர் மட்டுமே உள்ளது. கச்சா எண்ணெயின் விலையும் டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான டாலர் சொத்துக்களை நோக்கித் திரும்புகின்றனர். அமெரிக்காவின் மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (US Federal Reserve) தனது வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்கும் போதோ, அல்லது உலக முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கும் போதோ, வளரும் சந்தைகளால் சந்தைச் சுழற்சியை வழிநடத்த முடியாது. அவர்கள் டாலரின் போக்கைப் பின்தொடர மட்டுமே முடியும்.


இதுதான் உலகப் பொருளாதாரத்தின் கசப்பான உண்மை. இந்தியா பெரிய நாடுதான், ஆனால் அதனால் டாலர் சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அந்தச் சுழற்சியின் தாக்கத்தை நிர்வகிக்க முடியும், ஆனால் போக்கின் நிலையை அதனால் கட்டுப்படுத்த முடியாது.


இந்தியா தற்போது ஒரு கடுமையான நாணய நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை, ஆனால் புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. சமீபத்திய வர்த்தகத் தரவுகள் அதற்கான காரணத்தைக் காட்டுகின்றன. 2025-26-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகரித்து, 860.09 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி அதைவிட வேகமாக 6.5 சதவீதம் அதிகரித்து, 979.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 2024-25-ஆம் நிதியாண்டில் 94.7 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டில் 119.3 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.


தஙகத்தின் இறக்குமதி


தங்க இறக்குமதியும் கவலையை அதிகரிக்கும் மற்றொரு காரணியாக உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி செலவு 71.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இயந்திரங்களை (Machinery) இறக்குமதி செய்வது எதிர்கால உற்பத்தியைப் பெருக்க உதவும். ஆனால், தங்கம் இறக்குமதி செய்யம்போது நாட்டின் டாலர்கள் வெளியேறுகின்றனவே தவிர, நேரடியாக ஏற்றுமதியை உருவாக்கும் எந்தவொரு சொத்தும் இங்கு உருவாவதில்லை.


இதுவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்த விவாதங்களில் தங்கத்தை மிக முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அத்தியாவசியமானது, ஆனால் தங்க இறக்குமதியை நாம் தவிர்க்க முடியும். ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க அதிக தங்கத்தை வாங்குகிறார்கள். ஆனால், இந்தச் செயல் அவர்கள் பயப்படும் அதே ரூபாய் வீழ்ச்சிக்குத் தங்களை அறியாமலேயே மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறது. அதிக தங்க இறக்குமதி என்பது டாலருக்கான தேவையை அதிகரிக்கும், டாலரின் தேவை அதிகரித்தால் அது ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தும். இந்த அழுத்தங்களே அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.


மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல் 


பொருளாதார வல்லுநர்கள் 'சாத்தியமற்ற மும்மை' (impossible trinity) அல்லது 'மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல்' (Mundell-Fleming trilemma) என்று அழைக்கும் ஒரு நிலையை இந்திய ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. எந்தவொரு மத்திய வங்கியாலும் ஒரே நேரத்தில் நிலையான நாணய மாற்று விகிதத்தைப் பராமரிப்பது, மூலதனத்தின் தடையற்ற இயக்கத்தை அனுமதிப்பது மற்றும் சுதந்திரமான பணவியல் கொள்கையைத் தக்கவைத்துக் கொள்வது ஆகிய மூன்றையும் செய்ய முடியாது.


இதற்குச் சரியான தீர்வு, மாற்று விகித மாற்றங்களை ஒரு ஒழுங்குமுறைக்குள் நிர்வகிப்பதே தவிர, நமக்குப் பழகிப்போன ஒரு குறிப்பிட்ட மாற்று விகிதத்தை மட்டுமே பாதுகாக்க முயல்வது அல்ல. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை 90 அல்லது 95 என்ற அளவில் தக்கவைக்க, ரிசர்வ் வங்கி தன்வசம் உள்ள அந்நியச் செலாவணி இருப்பை (Forex Reserves) செலவழித்தால், எதிர்காலத்தில் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகள் ஏற்படும்போது நம்மைப் பாதுகாக்கும் அந்த முக்கியக் கேடயத்தையே நாம் பலவீனப்படுத்தும் அபாயம் ஏற்படும். அதேபோல, வெளிநாட்டு மூலதன ஈர்ப்பை அதிகரிப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது நாட்டின் உள்நாட்டு முதலீடுகளையும், கடன் வளர்ச்சியையும் முடக்கிவிடும்; இந்த இழப்பை நம் பொருளாதாரத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.


ஒரு சீரான திட்டமிடப்பட்ட தலையீடே சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம் என்றாலும், இதற்கான வலுவான தீர்வு கட்டமைப்பு சார்ந்ததே ஆகும். இந்தியா கச்சா எண்ணெய் மீதான தனது சார்பைக் குறைக்க வேண்டும், உள்நாட்டு எரிசக்தி இருப்பை விரிவாக்க வேண்டும், தங்க மறுசுழற்சியை ஊக்குவிக்க வேண்டும், நிதிச் சேமிப்புகளை அதிகரிக்க வேண்டும், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதித் திறனை உயர்த்த வேண்டும், தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் நிலையான நீண்டகால வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி மட்டுமே நிலைநிறுத்திவிட முடியாது. அதற்கு நாட்டின் வலுவான உற்பத்தித் தளத்தின் ஆதரவு தேவை.


எனவே, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது ஒரு தோல்வியும் அல்ல, அதேசமயம் அது முற்றிலும் பாதிப்பில்லாத ஒன்றும் அல்ல. அது ஒரு எச்சரிக்கை, ஒரு சுய-சீரமைப்பு மற்றும் ஒரு சோதனை ஆகும். நெருக்கடியின் போது வளையும் ஒரு நாணயம், அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதைத்தான் செய்கிறது. இங்கிருக்கும் சவால், ஒவ்வொரு வீழ்ச்சியையும் தடுப்பது அல்ல; மாறாக அந்த வீழ்ச்சி ஒரு பொருளாதாரப் பேரழிவாக மாறிவிடாமல் தடுப்பதும், அத்தகைய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படுவதைக் குறைப்பதற்கான வலுவான பொருளாதார அடித்தளங்களை உருவாக்குவதுமே ஆகும்.

Original link:

 Is a weakening rupee always a sign of economic failure?


Share:

டெல்லியின் தூசு மாசுபாட்டை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அணுகுமுறையே தேவை, தற்காலிக நடவடிக்கைகள் அல்ல. -குஃப்ரான் பெய்க்

இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் இந்த முறை கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, வழக்கத்தைவிட மிக அதிக அளவில் காற்றில் தூசிகள் கிளம்பியுள்ளன. வீசும் காற்று, இந்தத் தூசிகளில் ஒரு பகுதியை இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்தும், மற்றொரு பகுதியை ராஜஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி அடித்துச் சென்றுள்ளது. இதனால் டெல்லி நகரம் பல பக்கங்களிலிருந்தும் வரும் தூசிப் பாதைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டுள்ளது.


சமீபகாலங்களில் டெல்லியில் தூசி மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சவாலை இன்னும் விரிவாக ஆராய்வதற்குமுன், காற்று மாசுபாடுகளுக்குக் காரணமான மூலங்கள் உள்ளூரிலேயேதான் இருக்கின்றன. எனவே கோட்பாட்டு ரீதியாக இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கே "உள்ளூர்" என்பதை ஒரு குறிப்பிட்ட நகர எல்லையை மட்டும் வைத்துப் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்தக் காற்றுப் பகுதியையும் கணக்கில் கொள்ள வேண்டும். வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள், இந்த மூலங்களிலிருந்து வரும் மாசுக்கள் எந்தத் திசையில் பரவுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.




குளிர்காலத்தில், குளிர்ந்த காற்றும் மெதுவான காற்றோட்டமும் மாசுக்களை காற்றில் பரவவிடாமல் தடுத்து, ஒரே இடத்தில் தேக்கி வைப்பதால் மாசுபாட்டின் அளவு மிக வேகமாக உயர்கிறது. ஆனால் கோடைகாலத்தில், அதிக வெப்பநிலையும் பலத்த காற்றும் காற்றின் இயக்கத்தை அதிகரித்து, தூசிகள் காற்றில் எளிதாகக் கிளம்பி வேகமாகப் பரவ வழிவகுக்கின்றன. இதைத்தான் இப்போது டெல்லியில் பார்க்கிறோம். முரண்பாடு என்னவென்றால், காற்றில் இயற்கையாகவே தூசி கிளம்புவது குறைவாக இருக்கும் குளிர்காலத்தில்தான் டெல்லியில் தண்ணீர் தெளிப்பதைப் பற்றிய விவாதங்கள் தீவிரமடைகின்றன. ஆனால் உண்மையில், கோடைகாலத்தில்தான் தண்ணீர் தெளிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.


தூசி மாசுபாட்டை மூன்று தனித்துவமான வகைகளாகப் புரிந்துகொள்ளலாம். முதலாவது இயற்கையான தூசி (natural dust). இது நிலப்பரப்பின் பண்புகள், நிலப் பயன்பாடு மற்றும் நிலப் பரப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இரண்டாவது மீண்டும் காற்றில் கலக்கும் தூசி (re-suspended dust). இது தார் மற்றும் தார் இல்லாத சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது உருவாகிறது. அதிக போக்குவரத்து நெரிசல், அதிக வாகன வேகம் மற்றும் மோசமான சாலை நிலைமைகள், குறிப்பாக குளிர்காலத்தில், தூசியின் அளவை கணிசமாக அதிகரிக்கின்றன. காற்றில் வேகம் இல்லாததால் இந்தத் தூசிகள் தானாகக் கலைந்து போகாது, அதே நேரத்தில் தொடர்ச்சியான வாகனப் போக்குவரத்து இந்தத் தூசிகளை காற்றில் பரவிக் கொண்டே இருக்கச் செய்கிறது.


மூன்றாவது வகை, கட்டுமானப் பணிகளின்போது முறையான விதிகளைப் பின்பற்றாததால் உருவாகும் தூசியாகும். இந்த மூன்று வகைகளில், கட்டுமானத் தூசியால் ஏற்படும் மாசுபாடு மிகக் குறைவுதான் என்றாலும், இதுவே நிர்வாக ரீதியாக மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. டெல்லியில் அமல்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்ட (Graded Response Action Plan(GRAP)) போன்ற அவசரகால வழிகாட்டுதல்களில் இதற்கான நடவடிக்கைகள் முக்கியமாக இடம்பெறுவதே இதற்குச் சான்றாகும்.


தற்போது, டெல்லி நகரம் மற்ற இரு தூசி ஆதாரங்களுடன் (Dust sources) சேர்த்து, முக்கியமாக இயற்கையாகவே காற்றில் அதிகளவில் தூசி பறக்கும் கடுமையானப் பிரச்சினையால் தவித்து வருகிறது. இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால்: 2026-ஆம் ஆண்டின் கோடைகாலம் ஏன் இவ்வளவு தீவிரமான பாதிப்பைக் கண்டுள்ளது? இதற்கான விடை, காலநிலை மாற்றத்தால் மேலும் தீவிரமடைந்துள்ள பெரிய அளவிலான வானிலை மாற்றங்களில்தான் உள்ளது. இந்தியா தற்போது 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) (பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான வெப்பமயமாதல்) சூழலுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் ஆரம்பகால விளைவுகளில் ஒன்றாக, வானிலை ஆய்வு அமைப்புகள் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளன.

பசிபிக் பெருங்கடல் வெப்பமடைவதால், சூப்பர் எல்-நினோ நிலைமைகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வெப்பத்தைத் தீவிரப்படுத்துகின்றன. இந்த ஆண்டு, இந்திய நகரங்கள் உலகின் வெப்பமான இடங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. தெற்காசியா முழுவதும் பரவலாக ஏற்பட்ட வெப்பமயமாதல், ஒரு பரந்த பிராந்தியத்தில் மேற்பரப்பு ஈரப்பதத்தை முற்றிலும் வறண்டுபோகச் செய்துள்ளது. இதன் விளைவாக, மண் தளர்ந்து, பலத்த காற்றினால் ஏற்படும் தூசி இடப்பெயர்ச்சிக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறியுள்ளது.


வழக்கமாக, கோடை காலத்தில் மேற்கு இந்தியாவில் கடுமையான தூசி கலந்த புயல் பாதிப்புகள் ஏற்படும். இருப்பினும், இந்த ஆண்டு, பரந்த இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் கடும் வெப்பம் நிலவியதால், வட மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக, தூசியானது மிகப் பெரிய அளவில் மேலே கிளம்பியுள்ளது. காற்றுகள் தூசியைப் பகுதியளவு இந்தோ-கங்கைப் பகுதியிலிருந்தும், பகுதியளவு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி எடுத்துச் செல்கின்றன. எனவே, டெல்லி பல தூசி செல்லும் பாதைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டுள்ளது.


உள்ளூரில் 'லூ' (Loo) என்று அழைக்கப்படும் பலமான கோடைகாலக் காற்று, இந்தத் தூசி மேலும் பரவ வழிவகுத்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, தற்காலிகமான உடனடித் தீர்வுகளைக் காட்டிலும், நீண்டகாலத் திட்டமிடலும் கட்டமைப்பு ரீதியான தலையீடுகளும் அவசியமாகின்றன.





எனவே, பல தீர்வுகள் முக்கியமானதாகின்றன


முதலாவதாக, கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு மாசு மூலத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியலையும், வானிலை மற்றும் பருவகால நிலைகள் அவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கத்திற்கான வழிமுறைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு மாசு மூலங்கள் வெவ்வேறு பருவகாலங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன, எனவே மாசைக் குறைப்பதற்கான உத்திகள் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய திட்டச் செயலாக்கம் இன்றியமையாததாகும். மூன்றாவதாக, இயந்திரமயமாக்கப்பட்ட சாலை பெருக்கும் இயந்திரங்களின் (Mechanical Road Sweeping Machines (MRSM)) பயன்பாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தூசிகள் கிளம்பும் இடத்திலேயே அதை அடக்குவதற்கு, திறமையான கூட்டுதல் மற்றும் உகந்த அளவில் தண்ணீர் தெளித்தல் ஆகிய இரண்டையும் இணைக்கும் தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்க வேண்டும்.


நான்காவதாக, சாலைத் தூசுகளைக் குறைப்பதற்குச் சிறந்த போக்குவரத்து மேலாண்மை மிகவும் முக்கியமானது. மின்சார வாகனங்கள் (EVs) எரிபொருள் உமிழ்வைக் குறைக்கலாமே தவிர, வாகனங்கள் செல்லும்போது காற்றில் மீண்டும் மிதக்கும் சாலைத் தூசுகளை அவற்றால் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அந்த சவாலை எதிர்கொள்ள மென்மையான போக்குவரத்து, சிறந்த சாலைப் பராமரிப்பு மற்றும் நிலையான போக்குவரத்து மேலாண்மை ஆகியவை தேவைப்படுகின்றன.


ஐந்தாவதாக, கட்டுமானப் பகுதிகளில் பசுமைப் போர்வை அமைப்பது உள்ளிட்ட கட்டுமான விதிகளானது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், தூசு மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் மற்ற பெரிய காரணிகளைவிடக் கட்டுமானத் தூசுகள் மட்டுமே பெரியதாகக் காட்டப்பட்டுவிடக் கூடாது. இறுதியாக, மண் பரப்பை நிலையாக வைத்திருக்கவும், தூசிகள் காற்றில் பறப்பதைத் தடுக்கவும் நகரங்களுக்கு கணிசமான அளவில் அதிக பசுமைப் போர்வையும் நீர்நிலைகளும் தேவைப்படுகின்றன.



காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருவதால், நாம் கூடுதல் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. மாறிவரும் தூசு மாசுபாட்டின் புவியியல் அமைப்பானது நமக்கு ஒரு எச்சரிக்கையாகும்: பருவநிலையுடன் தொடர்புடைய தீவிர இயற்கை நிகழ்வுகள் மிகவும் கணிக்க முடியாததாகவும், பரவலானதாகவும் மற்றும் மனிதர்களால் கையாள்வதற்குக் கடினமானதாகவும் மாறி வருகின்றன. 


குஃப்ரான் பெய்க், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் (IISc-Campus) அமைந்துள்ள தேசிய மேம்பட்ட படிப்புகளுக்கான நிறுவனத்தில் (NIAS) முதன்மைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) நிறுவனரும் ஆவார்.

Original link:

Delhi’s dust pollution needs science, not seasonal optics.


Share: