இந்தியாவில் கல்வி சார்ந்த பாலின இடைவெளி, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. -கரண் பப்பர், ரவுனக் மைத்ரா

எந்தவொரு மாநிலத்திலும் கிராமங்களுக்கு மேல்நிலைக் கல்வி வசதி விரிவுபடுத்தப்படாத நிலையில், அந்த மாநிலங்களில் முதலில் கல்விக்கான வாய்ப்பை இழப்பது பெண் குழந்தைகள்தான்.


2023-24-ஆம் ஆண்டுகளின் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS))-6-வது, தரவுகளின்படி, 54.6% இந்திய ஆண்களும் 46.4% இந்தியப் பெண்களும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கல்வியை முடித்துள்ளனர்.  5-தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பைவிட இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் அதிகரித்துள்ளன. பெண்களுக்கான விகிதம் 5.4 சதவீதப் புள்ளிகளும், ஆண்களுக்கான விகிதம் 4.4 சதவீதப் புள்ளிகளும் அதிகரித்துள்ளதால், இருபாலருக்கும் இடையிலான இடைவெளி 9.2-லிருந்து 8.2-ஆகக் குறைந்துள்ளது.


அந்த ஒற்றை தேசிய அளவிலான புள்ளிவிவரமானது, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரண்டு குழுக்களின் சராசரி மதிப்பைக் குறிக்கிறது. நகர்ப்புற இந்தியர்களைப் பொறுத்தவரை, 64% ஆண்களும் 61.5% பெண்களும் 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான வித்தியாசம் 2.5 சதவீதப் புள்ளிகளாக உள்ளது. கிராமப்புற இந்தியர்களைப் பொறுத்தவரை, இந்தப்புள்ளிவிவரங்கள் முறையே 49.9% மற்றும் 39.7%-ஆக உள்ளன. இங்குள்ள இடைவெளி 10.2 புள்ளிகளாகும். இது நகர்ப்புற இடைவெளியைவிட நான்கு மடங்கு அதிகமான அளவாகும்.


இந்தியா நகரங்களில் இடைநிலைப் பள்ளிக் கல்வியில் (secondary schooling) பாலின இடைவெளி கணிசமான அளவு ஒழித்துள்ளது. ஆனால் கிராமங்களில் அவ்வாறு நிகழவில்லை.


6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியைப் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதத்தை வசிப்பிட வாரியாக எடுத்துக்காட்டுகின்றன.


பெண்கள் எங்கே முன்னணியில் இருக்கிறார்கள், எங்கே பின்தங்கியிருக்கிறார்கள்?


மாநில அளவில் பார்க்கும்போது இந்த வேறுபாடு இன்னும் தெளிவாகத் தெரிகிறது: சிக்கிம் (5.3 புள்ளிகள்), கேரளா (4.6), உத்தரகண்ட் (4.2), இமாச்சலப் பிரதேசம் (3.7), மேற்கு வங்கம் (2.2), மிசோரம் (2.0), உத்தரப் பிரதேசம் (1.7), பீகார் (0.6) மற்றும் சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி (தலா 0.1) போன்ற 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நகர்ப்புற ஆண்களைவிட நகர்ப்புறப் பெண்கள் இந்தக் குறியீட்டில் முன்னிலையில் உள்ளனர்.


கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரை,   பட்டியலில் மூன்று மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கிராமப்புறப் பெண்கள், கிராமப்புற ஆண்களைவிட அதிக அளவில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ள இடங்கள் கேரளா, சிக்கிம் மற்றும் மேகாலயா மட்டுமே. கேரளாவில் பெண்கள் 4.5 சதவீதப் புள்ளிகளும், சிக்கிமில் 4.3 புள்ளிகளும், மேகாலயாவில் 3.2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.


சில மாநிலங்களில் இந்த இரு நிலைகளும் ஒரே நேரத்தில் காணப்படுகின்றன. பீகாரில், நகர்ப்புறப் பெண்கள் 51.9% என்ற நிலையில், நகர்ப்புற ஆண்களின் 51.3%-ஐ விட சிறிதளவு முன்னிலையில் உள்ளனர். ஆனால், கிராமப்புற ஆண்கள் 44.6% என்ற நிலையில் இருக்கும்போது, கிராமப்புறப் பெண்கள் 30.6% மட்டுமே உள்ளனர். இதனால், கிராமப்புற ஆண்கள் பெண்களைவிட 14.0 சதவீதப் புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில், நகர்ப்புறப் பெண்கள் 1.7 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். ஆனால், கிராமப்புற ஆண்கள் பெண்களைவிட 8.8 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். புதுச்சேரியில் நகர்ப்புறப் பாலின இடைவெளி பூஜ்ஜியமாக இருந்தபோதிலும் கிராமப்புற இடைவெளி 15.1 புள்ளிகளாக உள்ளது. ஒரு மாநிலத்தின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான பாலின இடைவெளியானது, அந்த மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைவிட அதிகமாக உள்ளது.


கிராமப்புறப் பின்னடைவு அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை


கிராமப்புறங்களில் ஏற்படும் பின்தங்கிய நிலை மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும் ஒரு எளிய கதையாக இதனை எளிதாக கருதிவிடலாம். ஆனால், உண்மையில் நிலைமை அதுவல்ல. இந்திய ஆண்களை விட இந்தியப் பெண்களுக்கு, கிராமப்புறத்தில் வசிப்பது என்பது மிக அதிக அளவிலான பாதிப்பையே ஏற்படுத்துகிறது.


தேசிய அளவில், ஒரு கிராமப்புறப் பெண்ணை விட ஒரு நகர்ப்புறப் பெண் 10 வருடப் பள்ளிப்படிப்பை முடித்திருப்பதற்கான வாய்ப்பு 21.8 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாக உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, நகர்ப்புற ஆண்களுக்கு கிராமப்புற ஆண்களைவிட உள்ள முன்னிலை 14.1 புள்ளிகள் மட்டுமே. அதாவது, கிராமப்புறமாக இருப்பதால் ஏற்படும் கல்விப் பின்னடைவு பெண்களுக்கு ஆண்களைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது. நகரங்களைவிட்டு கிராமங்களை நோக்கிச் செல்லச் செல்ல பாலின இடைவெளி ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான முக்கியக் காரணம் இதுவாகும்.


இந்தப் நிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பல பெரிய மாநிலங்களில் இது தீவிரமாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில், நகர்ப்புறப் பெண்கள் கிராமப்புறப் பெண்களை விட 28.0 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். அதே, சமயம் நகர்ப்புற ஆண்கள் கிராமப்புற ஆண்களைவிட 22.9 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். ஜார்க்கண்டில், இந்த புள்ளிவிவரங்கள் முறையே 29.2 மற்றும் 18.1-ஆக உள்ளன. பீகாரில், இந்த புள்ளிவிவரங்கள் 21.3 மற்றும் 6.7-ஆக உள்ளன. கிராமப்புற ஆண்கள் நகர்ப்புற ஆண்களைவிட சிறிதளவு பின்தங்கியுள்ளனர். அதே, சமயம் கிராமப்புறப் பெண்கள் நகர்ப்புறப் பெண்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளனர்.


எந்த மாநிலத்தில் கிராமங்களுக்கு இடைநிலைக் கல்வி விரிவுபடுத்தப்படவில்லையோ, அங்கு மகள்கள்தான் முதலில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.


இப்போது பாலினத்தைவிட புவியியல் முக்கியமானதாகிறது


இரண்டு புள்ளிவிவரங்களை நெருக்கமாக வைத்துப் பார்க்கும்போது, இந்த வேறுபாட்டை புறக்கணிப்பது கடினம். கேரளாவில் 84.6% கிராமப்புறப் பெண்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ளனர். ஆனால் பீகாரில் நகர்ப்புறப் பெண்களின் விகிதம் 51.9% மட்டுமே. குஜராத்திலும் நகர்ப்புறப் பெண்களின் விகிதம் 51.9%-ஆக உள்ளது; மேற்கு வங்கத்தில் 52.1%-ஆகவும், ராஜஸ்தானில் 52.9%-ஆகவும் உள்ளது.


கேரளாவின் கிராமப்புறத்தில் வாழும் ஒரு பெண், பீகாரின் நகர்ப்புறத்தில் வாழும் ஒரு பெண்ணைவிட 30 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் அதிகக் கல்வி பெற்றிருக்கிறார். மேலும், அவரது கல்வி நிலை சராசரி இந்திய ஆணின் கல்வி நிலையையும்விட அதிகமாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலும், ஒரு மாநிலத்தின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் காணப்படும் இந்தப் பாலின வேறுபாடு போதுமான அளவு கவனம் பெறாத ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியாவில், ஒரு பெண் குழந்தை என்பதைக் காட்டிலும், அந்த பெண் எந்த இடத்தில் பிறக்கிறார் என்பதே அந்த பெண்ணிற்கு கிடைக்கும் கல்வியை  தீர்மானிக்கிறது.

கேரளாவைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது.  மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளன: நகர்ப்புறங்களில் 88.7% பேரும், கிராமப்புறங்களில் 84.6% பேரும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ளனர். இந்த இரண்டுக்குமான வேறுபாடு 4.1 சதவீதப் புள்ளிகள் மட்டுமே. ஆனால், தேசிய அளவில் இந்த வேறுபாடு 21.8 புள்ளிகளாக உள்ளது. இந்த வகையில் கேரளாவைப் போன்ற நிலை கொண்ட மாநிலங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் (6.6 புள்ளிகள்), புதுச்சேரி (6.8 புள்ளிகள்) மற்றும் கோவா (6.9 புள்ளிகள்) ஆகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வி இடைவெளி குறைந்துள்ள அனைத்து இடங்களிலும், அதற்கு முன்பாக நகர்ப்புற–கிராமப்புற இடைவெளியே குறைந்துள்ளது.


விதிவிலக்காக இருக்கும் புதிய திட்டம்


ஒரே ஒரு நிகழ்வு இந்தப் போக்கிலிருந்து வேறுபடுகிறது: மிகவும் இளைய வயதினருக்கான கல்வி. நகர்ப்புற இந்தியாவில், 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளின் முன்பள்ளி வருகை விகிதம் 50.0%-ஆக உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இது 46.0%-ஆக உள்ளது. இதற்கிடையிலான வேறுபாடு 4 சதவீதப் புள்ளிகள் மட்டுமே. இதனுடன் ஒப்பிடும்போது, பெண் குழந்தைகளின் பள்ளி வருகையில் 15 புள்ளிகளும், பெண்களின் இடைநிலைக் கல்வி அடைவில் 22 புள்ளிகளும் வேறுபாடு காணப்படுகிறது.


பல மாநிலங்களில், நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது: மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 68.0%-ஆகவும், நகர்ப்புறங்களில் 54.3% ஆகவும் உள்ளது. புதுச்சேரியில் இது 76.5%-ஆகவும், நகர்ப்புறங்களில் 60.7%-ஆகவும் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இது 72.1%-ஆகவும், நகர்ப்புறங்களில் 64.1%-ஆகவும் உள்ளது. தெலங்கானா, ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களிலும் இதேபோன்ற மாற்றம் காணப்படுகிறது.


இதற்கான மிகவும் சாத்தியமான விளக்கம் அங்கன்வாடி வலையமைப்பு (anganwadi network) ஆகும். இது ஒரு கிராமப்புற நிறுவனமாக அமைக்கப்பட்டு, தனியார் மழலையர் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் குழந்தைப் பருவக் கல்வியை வழங்குகிறது. நகர்ப்புறங்களில், பெற்றோர்கள் பெரும்பாலும் இந்தச் சேவைக்குக் கட்டணம் செலுத்துகிறார்கள். அதேசமயம் கிராமப்புறங்களில், பெற்றோர்கள் இதை பெரும்பாலும் அரசிடமிருந்து பெறுகிறார்கள். மேலும்,  பல மாநிலங்களில், அரசே இதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


அரசின் சேவைகள் எப்போதும் தனியார் சேவைகளைவிட பின்தங்கியிருக்கும் என்ற கருத்தைத் திருத்துவதற்கு இது ஒரு பயனுள்ள திருத்தமாகும். எடுத்துக்காட்டாகும். இந்தியாவில், அரசு நடத்தும், கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட முன்பள்ளி அமைப்பில்தான் நகர்ப்புற–கிராமப்புற இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குடும்பங்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பள்ளிகளைச் சார்ந்திருக்க வேண்டிய இடங்களில் இந்த மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.


இது என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது


கடந்த 20 ஆண்டுகளாக, இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விவாதம் பாலின இடைவெளியை மையமாகக் கொண்டே நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்குதல், நிபந்தனையுடன் கூடிய பணப் பரிமாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த அணுகுமுறை, ஒரு மகனையும் ஒரு மகளையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களை நோக்கியே செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கணிசமான அளவிலும் இந்த இடைவெளி நிலவும் ஒரு தேசத்தில், இந்தப் பிரச்சினையை இவ்வாறு கட்டமைப்பது பொருத்தமானதாக இருந்தபோதிலும், நகரங்களில் 2.5 புள்ளிகளாகவும், கிராமங்களில் 10.2 புள்ளிகளாகவும் மட்டுமே இருக்கும் நிலையில், அதே அணுகுமுறை அவ்வளவு பொருத்தமானதாக இல்லை.


6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியப் பெண் குழந்தைகளில் பெருமபாலனோர் எதிர்கொள்ளும் முக்கியத் தடையாக தற்போது குடும்பத்தின் முடிவு இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, அருகிலேயே ஒரு இடைநிலைப் பள்ளி இருக்கிறதா என்பதுதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. கேரளா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் அருகிலேயே இடைநிலைப் பள்ளி இருக்கும் போது, குடும்பங்களைச் சம்மதிக்க வைக்க எந்தவித முயற்சியும் தேவையில்லாமலேயே பாலின இடைவெளி மறைந்து விடுகிறது. ஆனால், பள்ளி வசதி இல்லாத பகுதிகளில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அந்த இடைவெளியை  குறைக்க முடியவில்லை.


குறிப்பு: அனைத்து புள்ளிவிவரங்களும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் (International Institute for Population Sciences) நிறுவனம் வெளியிட்ட NFHS-6 (2023–24) மற்றும் NFHS-5 (2019–21) உண்மைத் தாள்களிலிருந்து பெறப்பட்டவை. பள்ளிக் கல்வி தொடர்பான புள்ளிவிவரங்கள் 15–49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டவை. மணிப்பூர் 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பை கொண்டு கணக்கெடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. சிறிய யூனியன் பிரதேசங்களுக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மதிப்பீடுகள் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் புரிந்துகொள்ள வேண்டும்.


கரண் பப்பர், XLRI ஜாம்ஷெட்பூரில் பொருளியல் உதவிப் பேராசிரியராகவும், ரவுனக் மைத்ரா, அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளியல் கல்விசார் இணை ஆய்வாளராகவும் உள்ளனர்.


Original Link: India’s education gender gap four times wider in rural areas than urban.

Share: