மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சாதியைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கலான பிரச்சினைகள். - பி.சி. மோகனன், அமிதாப் குண்டு

சாதிப் பெயர்கள், மாற்றுப் பெயர்கள் மற்றும் உட்பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலைத் தயாரிப்பதற்கு பரந்த அளவிலான ஆலோசனைகளை  மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


மிகவும் தாமதமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கான வீடுகள் பட்டியலிடும் பணி (house-listing operations) தற்போது முடிவடைந்து, முதன்மை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கணக்கெடுப்பு முன்னோட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அதில் என்னென்ன கேள்விகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.


மேலும், பதிலளிப்பவர் கூறுவதுபோலவே சாதிப்பிரிவு பதிவு செய்யப்படும் என்று மூத்த அதிகாரிகள் கூறியதாகப் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இது சாதிகளைக் கணக்கிடுவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் அவ்வாறு திரட்டப்படும் தரவுகளின் பயன்பாடு ஆகிய இரண்டைப் பற்றியும் அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின் (Socio-Economic and Caste Census (SECC)) தாக்கம் தற்போதும் நினைவில் இருக்கும் வேளையில், இத்தகையதொரு முடிவு பெரும் கவலையளிப்பதாக அமையும் என்கின்றனர்.





பிரம்மாண்டமான பணி 


எந்தவொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் துல்லியத்திற்கும், கணக்கிடப்படும் விவரங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட வேண்டும். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற ஒரு பிரம்மாண்டமான பணியில், வினாத்தாளில் சேர்க்கப்படும் கேள்விகள் தரப்படுத்தப்பட்டதாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், எவ்வித குழப்பமும் இன்றி பதிவு செய்யக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும். மாதிரி ஆய்வுகளில் (Sample surveys) கணக்கெடுப்பாளர்கள் தனிநபர்களின் பதில்களை விரிவாக ஆராய முடியும் என்பதால் அதில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும். மாறாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கணக்கெடுப்பாளர்களால் பின்பற்றப்படுவதால், அது ஒரேமாதிரியான கருத்துருக்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிமுறைகளையே சார்ந்திருக்க வேண்டும்.


பொதுவாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வினாத்தாள்கள் தீவிர தொழில்நுட்ப பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். இது, சேகரிக்கப்படும் தரவுகளின் பின்னணியில் உள்ள கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் பற்றிய புரிதலைப் பயனர்களுக்கு வழங்கும். உதாரணமாக, 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டபோது, வினாத்தாளில் சாதி தொடர்பான கேள்வியைச் சேர்க்கும் திட்டம் எதுவுமில்லை. இருப்பினும், கணக்கெடுப்போடு இணைந்து தேசிய மக்கள்தொகை பதிவேடும் (National Population Register (NPR)) புதுப்பிக்கப்படும் என்றும், அது தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் (National Register of Citizens (NRC)) தயாரிப்பதற்கான வழியை அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சரால் விவரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியது.


சாதி தொடர்பான கேள்வியை நடைமுறைப்படுத்துவது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாகும். 2011-ஆம் ஆண்டின் 'சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு' அனுபவம் இதற்கு ஒரு பெரிய எச்சரிக்கையாகும். சாதி பெயர்கள் தரப்படுத்தப்படாமலும், பதில்களை வகைப்படுத்துவதற்கான முழுமையான பட்டியல் இல்லாமலும் இருந்ததால், அந்தச் சாதி தரவுகளைச் சரியாக அட்டவணைப்படுத்த முடியாமல் போனது. இந்த நடைமுறை லட்சக்கணக்கான சாதி மற்றும் சமூகப் பெயர்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் அந்தத் தரவுகளைச் சரியாக ஒருங்கிணைப்பது முற்றிலும் சாத்தியமில்லாமல் போனது.


சாதி பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பொறுப்பை முழுமையாகப் பதில் அளிப்பவரிடமே விட்டுவிடும்போது எத்தகைய சிக்கல்கள் ஏற்படும் என்பதற்குப் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளே போதுமான சான்றாகும். பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்கள் அண்மையில் நடத்திய சாதி ஆய்வுகள், சாதிப் பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட வரையறையை வழங்கி வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றின. இருந்தபோதிலும், இந்த மாநில அளவிலான அனுபவங்களை அப்படியே தேசிய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், ஒரு மாநில அரசு நடத்தும் கணக்கெடுப்பில் அம்மாநிலத்திற்குள் இருக்கும் சாதிகளை மட்டுமே பட்டியலிட முடியும். ஆனால், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கு இடையே பெருமளவில் மக்கள் புலம்பெயர்வதால், ஒரு தேசிய கணக்கெடுப்பில் அவ்வாறு செய்ய முடியாது.


மாநிலங்களின் அனுபவங்கள்


பீகாரில், பொதுமக்களால் கூறப்பட்ட சாதிப் பெயர்கள் அம்மாநிலத்தின் 214 தனித்துவமான சாதிகளைக் கொண்ட முதன்மைப் பட்டியலோடு ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டன. தெலங்கானாவில், சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் பெயர்கள் அரசு பயன்படுத்தும் சாதிப் பிரிவுகளுடன் சேர்த்துப் பதிவுசெய்யப்பட்டன. இருப்பினும், இந்த இரண்டு முறைகளிலுமே ஒரு சிக்கல் உள்ளது. வேறு மாநிலத்தில் பட்டியலிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர், அவர் குடிபெயர்ந்து வாழும் உள்ளூர் மாநிலப் பட்டியலில் இல்லை என்றால், அவர் பட்டியலில் இருந்து விடுபடும் அபாயம் உள்ளது. அவர்கள் "இதரப் பிரிவினர்" (Others) என வகைப்படுத்தப்பட்டு, தேசிய அளவில் சரியான கணக்கெடுப்பை நடத்துவதற்குத் தேவையான அடையாளத்தை இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்தச் சிக்கல் வெறும் கற்பனையானது அல்ல. டெல்லியில் கணிசமான எண்ணிக்கையில் பட்டியல் சாதியினர் (Scheduled Castes) வாழ்கின்றனர். ஆனால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) யாருமில்லை. ஏனெனில், இந்த அங்கீகாரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும். இருப்பினும், 2011-12-தேசிய மாதிரி கணக்கெடுப்பு மதிப்பீட்டின்படி, டெல்லியில் ஏறத்தாழ 5 லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர், பழங்குடியின தகுதிநிலை அங்கீகரிக்கப்பட்ட பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். தேசிய அளவிலான சாதிச் சான்றிதழ் கணக்கெடுப்பு முழுக்க முழுக்க மாநிலப் பட்டியல்களை மட்டுமே நம்பியிருந்தால், இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த மக்கள் "இதரப் பிரிவினர்" என்ற தெளிவற்ற பிரிவுக்குள் மறைந்து போக வாய்ப்புள்ளது. அதிக அளவில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறும் மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இந்தச் சிக்கல் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


எனவே, இந்த சாதிப் பட்டியல்களைத் தயாரிப்பதே மிகவும் முக்கியமான பணியாகும். 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட சாதிப் பட்டியல்கள், 1980-களில் தயாரிக்கப்பட்ட சாதி மற்றும் சமூகங்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், மற்றும் சமூக மற்றும் கல்விரீதியாகப் பின்தங்கிய வகுப்பினரின் ஆவணங்கள் ஆகியவை இதற்கான நல்ல தொடக்கப் புள்ளிகளாக அமையும். ஆனால், எந்தவொரு பழைய பட்டியலையும் அப்படியே பயன்படுத்த முடியாது. பெயர்களில் உள்ள வேறுபாடுகள், மாற்றுப் பெயர்கள், உட்பிரிவுகள் மற்றும் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க விரிவான நடவடிக்கைகள் அவசியமாகிறது.


இதற்குச் சில மாதங்கள் வரை காலஅவகாசம் தேவைப்படலாம்; ஆனால், சாதிச் சான்றிதழ் கணக்கெடுப்பு துல்லியமானதாகவும் அரசு திட்டங்களுக்குப் பயன்படும் வகையிலும் அமைய வேண்டுமானால், இத்தகைய தயாரிப்புப் பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். போதிய தயாரிப்பின்றி அவசர அவசரமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு, அதிக அளவிலான தகவல்களைத் தருமே தவிர, கொள்கை முடிவுகளுக்குத் தேவையான பயனுள்ள புள்ளிவிவரங்களைத் தராது என்கின்றனர்.


சிக்கலான பிரச்சினைகள்


கருத்தியல் தெளிவு (conceptual clarity) ஏன் முக்கியம் என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்று அனுபவம் விளக்குகிறது. உதாரணமாக, 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, அப்போது செல்வாக்கு மிக்க சமூகமாக இருந்த "ஆங்கிலோ-இந்தியர்" (Anglo-Indian) என்ற பிரிவை வரையறுப்பதில் சிரமங்கள் எழுந்தன. 1921-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, ஆங்கிலம் பேசும், ஐரோப்பிய பாணி ஆடைகளை அணிந்த சில கிறிஸ்தவர்களும் தகுந்த நியாயமின்றி இப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததாக திருவிதாங்கூர் (Travancore) மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை சுட்டிக்காட்டியது. அதன் பிறகு, தந்தை வழியில் ஐரோப்பிய வம்சாவளியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற துல்லியமான வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இயற்கையாகவே, இந்த புதிய வரையறையின் காரணமாக பெருவாரியான மக்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எப்போதும் நிலவும் ஒரு சிக்கலை இந்த நிகழ்வு உணர்த்துகிறது: ஒரு வகைப்பாடு (category) முற்றிலும் எல்லைகளற்றதாகவும் இருக்க முடியாது; அதேநேரத்தில் புள்ளிவிவரரீதியாக ஒப்பிடக்கூடியதாகவும் இருக்க முடியாது.


இன்றைய சாதிவாரி கணக்கெடுப்பு சிக்கலான கோட்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளை முன்வைக்கிறது. ஒருவர் தனது பரந்த சாதிப் பிரிவு, உட்பிரிவு, சமூகத்தின் பெயர், உள்ளூர் மாற்றுப்பெயர் அல்லது வேறு மாநிலத்தில் பயன்படுத்தப்படும் சாதிப் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது எதைப் பதிவு செய்வது? ஒன்றோடொன்று தொடரக்கூடிய பெயர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? ஒரு சாதி மற்றொரு சாதிக்கு இணையானது அல்லது வேறுபட்டது என்ற கோரிக்கைகளை எவ்வாறு அணுகுவது? கோடிக்கணக்கான மக்களின் தரவுகள் சேகரிக்கப்பட்ட பிறகு அல்லாமல், கணக்கெடுப்புத் தொடங்குவதற்கு முன்பே இந்தக் கேள்விகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.


கேள்வித்தாளில் சாதி பற்றிய கேள்வி எந்த இடத்தில் கேட்கப்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும். அதை ஆரம்பத்திலேயே கேட்பது, அடுத்து கேட்கப்படும் சமூக-பொருளாதார கேள்விகளுக்கான பதில்களைப் பாதிக்கக்கூடும். ஏனெனில், பதிலளிப்பவர்கள் தங்களின் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளைச் சாதியின் வழியே பார்க்கத் தொடங்குவர். எனவே, கேள்விகளின் வரிசையை கவனமாகத் திட்டமிட வேண்டும். குறிப்பிடத்தகுந்த விஷயமாக, 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய கேள்வி கேள்வித்தாளின் கடைசியில்தான் கேட்கப்பட்டிருந்தது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்படும் மாற்றங்கள், அது எதையெல்லாம் உள்ளடக்கும் என்பதில் உள்ள நிச்சயமற்றத்தன்மை மற்றும் சேகரிக்கப்படும் தரவு இறுதியில் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதில் தொடரும் தெளிவின்மை ஆகியவை, இந்தியாவின் மிகவும் முக்கியமான புள்ளிவிவரப் பணிகளில் ஒன்றான இந்த கணக்கெடுப்பின் மீதான நம்பிக்கையை ஏற்கனவே சீர்குலைத்துள்ளன. தொழில்நுட்பத் துல்லியத்தைச் சீர்குலைத்துவிட்டு, அரசியல் சமரசங்களுக்கும் சுயநலன்களுக்குமான ஒரு செயலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மாறிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது.


ஒருவேளை சாதி பற்றிய கேள்வி சேர்க்கப்பட வேண்டும் என்றால், அரசியல்ரீதியாக உணர்வுபூர்வமான ஒரு பணியை மிக உயர்ந்த புள்ளிவிவர மற்றும் நிர்வாகத் திறமையுடன் வடிவமைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாகவே இது அமைய வேண்டும்.


மோகனன், கேரள மாநில புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அமிதாப் குண்டு, 'IORA Ecological Solutions' நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்.                              


Original Link: Census, and tricky issues in recording caste.

Share: