டெல்லியில் உள்ள நஜஃப்கர் ஏரியில், 'கூர்வால் உள்ளான்' (Sharp-tailed Sandpiper) எனப்படும் அரிதான சைபீரியப் பறவை சமீபத்தில் காணப்பட்டது. இந்த அரிதான புலம்பெயர் பறவை எங்கே இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் குளிர்காலத்தைக் கழிக்கிறது? இதன் எண்ணிக்கைக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?
ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நஜஃப்கர் ஏரியில் கூர்வால் உள்ளான் (Sharp-tailed Sandpiper - Calidris acuminata) காணப்பட்டது. டெல்லி மற்றும் இந்தியாவில் இந்த வகை பறவைகளின் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், இது ஒரு அரிதான நிகழ்வாகும். இந்தச் சூழலில், கூர்வால் உள்ளான் பற்றியும், இந்தியாவில் அதன் வருகையின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. டெல்லியைச் சேர்ந்த இயற்கைப் பாதுகாப்பாளரும் பறவை நிபுணருமான அக்ஷித் துவா, கூர்வால் உள்ளான் (Sharp-tailed sandpiper) பறவையை ஆவணப்படுத்தினார். அது வயல்வெளிகளில், சாதாரண கொக்கு மற்றும் வன கொக்கு பறவைகளின் கூட்டத்திற்கு நடுவே தீவிரமாக இரை தேடிக் கொண்டிருந்தபோது பதிவு செய்யப்பட்டது.
2. கூர்வால் உள்ளான் பறவை காணப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், கடந்த ஒன்றரை நூற்றாண்டில் இந்தியாவில் இந்தப் பறவை இனம் பதிவு செய்யப்படுவது இது ஐந்தாவது முறை மட்டுமே ஆகும்.
3. இந்தியாவின் முதன்மையான பறவையியல் இதழாகக் கருதப்படும் 'Indian Birds' இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இதன் முந்தைய பதிவுகளை ஆவணப்படுத்துகிறது: 1880-ஆம் ஆண்டில் கில்கிட்டில் ஒரு ஆண் பறவை, 1915-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வண்டலூரில் ஒரு பெண் பறவை, 2004-டாம் ஆண்டில் சத்தீஸ்கரின் குருத் குளத்தில் உறுதிப்படுத்தப்படாத ஒரு பதிவு, மற்றும் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, 2019-ஆம் ஆண்டு நஜஃப்கர் சதுப்பு நிலத்தில் புகைப்படமெடுக்கப்பட்ட ஒரு பறவை ஆகியனவாகும்.
4. கூர்வால் உள்ளான் பறவைகள் வடக்கு சைபீரியாவில், கிழக்கு ஆர்க்டிக் பெருங்கடலின் லேனா நதிப் படுகையிலிருந்து தென்கிழக்கே கொலிமா பகுதி வரை பரந்து விரிந்துள்ள இடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர், கிழக்கு ஆசியாவின் வழியே தெற்கு நோக்கிப் புலம்பெயர்ந்து, தங்களின் முக்கிய வாழ்விடங்களான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அடைகின்றன.
5. குறைந்த எண்ணிக்கையிலான பறவைகள் மேற்கு புதிய கினியாவிற்கும் கிழக்கே பிஜிக்கும் இடையே தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளின் கூட்டமான மெலனேசியா பகுதிகளுக்குப் பறந்து செல்கின்றன. எனவே, இந்தப் பறவை இனம் இந்தியாவிற்கு மிக அரிதாகவே வரக்கூடிய ஒரு பறவை இனமாகும்.
6. கூர்வால் உள்ளான்கள் கடற்கரை மற்றும் உள்நாட்டு ஈரநிலங்கள், நன்னீர் மற்றும் அதிக உப்புத்தன்மை கொண்ட வாழிடங்கள் ஆகிய இரண்டிலும் உணவு தேடுகிறது. மழைக்குப் பிறகு இது விதைகள், புழுக்கள், மெல்லுடலிகள், ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. மேலும், இது வேளாண் புல்வெளிகளிலும் ஈரநிலங்களின் ஆழமற்ற நீர்நிலைகளின் ஓரங்களிலும் உணவு தேடுகிறது.
7. கூர்வால் உள்ளான்கள் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, இதன் எண்ணிக்கை ஏறக்குறைய 15 ஆண்டுகளில் சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாழிட இழப்பு மற்றும் சீரழிவு ஆகியவை இந்த இனத்திற்கு ஏற்படும் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இது இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிடும் சிவப்புப் பட்டியலில் 'பாதிக்கப்படக்கூடியவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
8. இந்தப் பறவையின் வருடாந்திர இடம்பெயர்வுப் பாதையில் ஒரு முக்கியமான இடைநிறுத்தப் பகுதியாக உள்ள சீனா மற்றும் கொரிய தீபகற்பத்திற்கு இடையிலான மஞ்சள் கடலைச் (Yellow Sea) சுற்றியுள்ள கடலோர வாழிடங்கள் குடியிருப்பு, தொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடுகளால் இழக்கப்பட்டுள்ளன. மாசுபாடு, வண்டல் படிமங்களின் ஓட்ட மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவையும் இதன் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் வறட்சி மற்றும் உள்நாட்டு ஈரநிலங்கள் குறைதல் ஆகியவை பெரும் கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன.
டெல்லியை உலகின் மிக அதிகப் பறவைகளின் பன்முகத்தன்மை கொண்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவது எது?
1. கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட டெல்லி பறவைகள் வரைபடத் தொகுப்பு, முதன்முறையாக நகரம் முழுவதும் உள்ள பறவை இனங்களின் பரவல் மற்றும் எண்ணிக்கையை வரைபடமாக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், இது பறவைகளின் பன்முகத்தன்மையில் உலகின் தேசியத் தலைநகரங்களில் நைரோபிக்கு அடுத்தபடியாக தலைநகரை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளது.
2. இந்தப் பறவைப் பட்டியல், டெல்லி வனத்துறை, ‘Bird Count India’, ‘World Wide Fund for Nature-India’ மற்றும் பிற அமைப்புகளால், பறவை நோக்குபவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டது. இந்த தகவல் தொகுதியின்படி, 1975-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்படாத 22 இனங்களைத் தவிர்த்து, டெல்லி பறவைகள் பட்டியலில் தற்போது 471 இனங்கள் உள்ளன.
3. இந்த நகரம் செழுமையான பறவைகள் பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதற்கு, அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே முக்கியக் காரணம் என்று அந்த வரைபடத்தொகுப்பு கூறுகிறது. இதில் ஆரவல்லி மலையின் வடக்குப் பகுதி, மேற்கு இமயமலைக்கு அருகில் அமைந்திருப்பது, யமுனை மற்றும் சாகிபி ஆற்றுப்படுக்கைகள் (வெள்ளச்சமவெளிகள்), மேலும் ஆர்டிக் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீளும் முக்கியமான பறவைகள் இடப்பெயர்வு பாதையான மத்திய ஆசிய பறக்கும் பாதைக்கு (Central Asian Flyway) அருகில் அமைந்துள்ளதும் முக்கியக் காரணங்களாகும்.
4.இந்தத் வரைபடத்தொகுப்பானது தன் ஆய்வுக்காக டெல்லியின் 11 சதவீதப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆய்வு ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. முதல் ஆண்டில், நகரம் முழுவதும் 221 பறவையினங்கள் பதிவாகியுள்ளன. இதில் குளிர்காலத்தில் 200 இனங்களும், கோடைக்காலத்தில் 152 இனங்களும் அடங்கும். அவற்றுள், 126 உள்ளூர் பறவையினங்கள் (resident species), 81 குளிர்கால வலசைப் பறவைகள் (winter migrants) மற்றும் 14 கோடைக்கால வலசைப் பறவைகள் (summer migrants) ஆகும்.
5. இந்த வரைபடத் தொகுப்பில் குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் 18 உள்ளூர் பறவை இனங்களும் பதிவிடப்பட்டுள்ளன. மேலும், இது ஆபத்தான நிலையில் உள்ள எகிப்திய கழுகு (Egyptian Vulture) மற்றும் கருப்பு வயிற்று ஆலா (Black-bellied Tern), பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஆற்று ஆலா (River Tern) மற்றும் காரை வாத்து (Common Pochard), அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைக்கு அருகில் இருக்கும் கருப்புவால் மூக்கன் (Black-tailed Godwit), வெள்ளைக்கண் வாத்து (Ferruginous Duck), வர்ண நாரை (Painted Stork), கருப்புத்தலை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis) மற்றும் பாம்புத் தாரா (Oriental Darter) போன்ற அழிவின் விளிம்பில் உள்ள பல பறவை இனங்களையும் பட்டியலிடுகிறது.
6. நிபுணர்களின் கூற்றுப்படி, டெல்லி ஒரு சூழலியல் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு பலவகையான பறவைகள் காணப்படுகின்றன. ஆரவல்லி நிலப்பரப்பை ரிட்ஜ் பகுதி தலைநகருக்குள் கொண்டுவருகிறது, அதேவேளையில் யமுனை வெள்ளப்பெருக்குப் பகுதிகளும் அருகிலுள்ள நீர்நிலைகளும் நீர்ப்பறவைகளுக்கும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குகின்றன.
7. அதேசமயம், டெல்லி மேற்கு இமயமலைக்கு அருகில் அமைந்திருப்பதும், பறவைகளின் பருவகால இடப்பெயர்வுக்கு சாதகமாக உள்ளது. மத்திய ஆசிய பறக்கும் பாதையின் (Central Asian Flyway) மையப்பகுதியில் டெல்லி அமைந்துள்ளது என்று இந்த வரைபடம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, மத்திய ஆசியா மற்றும் ஆர்டிக் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் பறவைகளுக்கு இது ஒரு பருவகால புகலிடமாக விளங்குகிறது.
8. அந்த வரைபடத்தொகுப்பானது டெல்லியை 'வரலாறு, புவியியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் சந்திப்புப் புள்ளி' என்றும் விவரிக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அழுத்தங்களுக்கு இடையிலும், இந்தச் செழிப்பான பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து நிலைத்திருப்பதை இது குறிப்பிடுகிறது.