Showing posts with label solar energy. Show all posts
Showing posts with label solar energy. Show all posts

சூரிய ஆற்றல் மூலம் செய்யப்படும் நீர்ப்பாசனம் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சினால், அதைத் தவறான முறையில் செய்கிறீர்கள் என்று பொருள். -முகமது ஃபைஸ் ஆலம், அலோக் சிக்கா

PM-KUSUM : Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Uttan Mahaviyaan : பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான்


கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் வேளாண் சார்ந்த சூரிய ஆற்றல் திட்டமான PM-KUSUM, 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரியசக்தி நீர் இறைப்பான்களை (solar pumps) நிறுவியுள்ளது. இதன் மூலம், மானியங்கள் வழியாக சிறு விவசாயிகளுக்கு அவை மலிவு விலையில் கிடைக்கின்றன. அரசாங்கம் PM-KUSUM-2.0 திட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், நிலத்தடி நீரைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமாகச் சுரண்டாமல், தூய ஆற்றல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதே சவாலாக உள்ளது.



"சூரியசக்தி மூலம் நீர்ப்பாசனம் செய்வது நிலத்தடி நீர் நெருக்கடியை மோசமாக்கும்." இந்தியாவில் சூரியசக்தி நீர்ப்பாசனத்தின் விரைவான வளர்ச்சி குறித்த விவாதங்களில் இந்தக் கவலை பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இங்கு, பல பகுதிகளில் அதிக மானியம் அல்லது இலவச மின்சாரம், நீடிக்க முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும், நீர்நிலைகள் வற்றுவதற்கும், மின்சாரப் பயன்பாட்டு நிறுவனங்கள் மீதான நிதிச் சுமை அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது.


இவ்வாறு, சூரியசக்தி நீர்ப்பாசனம் கிட்டத்தட்ட இலவச மின்சாரத்தை வழங்குவதாலும், நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த எந்த ஊக்கமும் இல்லாததாலும், விவசாயிகள் அதிக நிலத்தடி நீரைப் பயன்படுத்தவும், நீண்டநேரம் நீரை இறைக்கவும் வாய்ப்புள்ளது.


இருப்பினும், இந்தக் கண்ணோட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று குறிபாடுகள் உள்ளன. முதலாவதாக, தற்போதைய விவாதங்கள் பெரும்பாலும் சூரியசக்தி நீர்ப்பாசனத்தை ஒரே மாதிரியான ஒரு திட்டமாகவே கருதுகின்றன. அதாவது, ஒரு விவசாயி தனிப்பட்ட முறையில் சூரியசக்தி இறைப்பானை இயக்குவதாகவும், அவருக்கு நீரைச் சேமிப்பதற்கான எந்த ஊக்கமும் இல்லை என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.


உண்மையில், சூரியசக்தி நீர்ப்பாசன மாதிரிகள் வடிவமைப்பு, உரிமை அமைப்பு மற்றும் விலை சார்ந்த சலுகைகள் ஆகியவற்றால் வேறுபடுத்தப்பட்டு, பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவை அனைத்தும் நிலத்தடி நீர் தொடர்பான விளைவுகளைப் பாதிக்கின்றன.


மாதிரியைச் சார்ந்திருத்தல்


உதாரணமாக, மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரியசக்தி மாதிரிகள், விவசாயிகள் தங்கள் உபரி சூரிய மின்சாரத்தை மீண்டும் மின்கட்டமைப்பிற்கு விற்க அனுமதிக்கின்றன. இது தண்ணீரை மிகவும் திறமையாகப் பயன்படுத்த ஒரு ஊக்கத்தை உருவாக்குகிறது. குஜராத்தின் சூர்யசக்தி கிசான் யோஜனா (Suryashakti Kisan Yojana (SKY)) திட்டத்தில், சுமார் 100 விவசாய மின் இணைப்புகள் சூரிய ஆற்றல்மயமாக்கப்பட்டன (solarised). சூரிய ஆற்றல் விவசாயிகள், சூரிய ஆற்றல் அல்லாத விவசாயிகளைவிட ஆற்றல் நுகர்வு மற்றும் நீர்ப்பாசனப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருந்தனர் என்பது இதிலிருந்து கிடைக்கும் சான்றுகள் காட்டுகின்றன. இது மிகவும் நிலையான நீர் பயன்பாட்டைக் குறிக்கிறது.

சூர்யசக்தி கிசான் யோஜனா (SKY) திட்டம், ஒரு யூனிட் ஆற்றலுக்கு சுமார் ரூ.7 ஊக்கத்தொகையாக வழங்கியது. இது விவசாயிகளுக்கு மின்சாரத்தைச் சேமித்து, அந்த உபரி மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு விற்க ஒரு வலுவான காரணத்தைக் கொடுத்தது. மேலும், ஆற்றலை ஏற்றுமதி செய்வதன் மூலம், விவசாயிகள் ஆண்டுக்குச் சராசரியாக சுமார் ரூ.21,900 சம்பாதித்தனர். இது அவர்களை ஆற்றல் நுகர்வோரிலிருந்து ஆற்றல் உற்பத்தியாளர்களாகத் திறம்பட மாற்றியது.


அதேபோல், வங்காளதேசத்தில், 'சேவைக்கான கட்டணம் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட சூரியசக்தி மாதிரி' (fee-for-service centralised solar model) எனப்படும் மிகவும் பொதுவான சூரியசக்தி மாதிரியில், நீரேற்று நிலைய உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள பல விவசாயிகளுக்கு நீர் வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். சூரியஆற்றல் நீர்ப்பாசனம் 20-30% மலிவானதாக இருந்தபோதிலும், டீசலைப் பயன்படுத்திய விவசாயிகளை விட, சூரிய நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்திய விவசாயிகள் அதிக நீரைப் பயன்படுத்தவில்லை என்பதை இந்த மாதிரி காட்டியது. இதற்குக் காரணம், ஒரு விவசாயி அதிக நீரைப் பயன்படுத்தினால், மற்ற விவசாயிகளுக்கு நீர் வழங்குவதற்கான விசைக் குழாய் இயக்குபவரின் திறன் குறைகிறது. இதனால், நிதிரீதியாக நிலைத்திருக்க விரும்பும் வணிகங்களுக்கு, நீர்ப்பாசனத்திற்காக நிலத்தடி நீரைத் திறமையாகவும் சமமாகவும் பயன்படுத்துவது அவசியமாகிறது.


எனவே, சூரியஆற்றல் நீர்ப்பாசனம் நிலத்தடி நீருக்கு இயல்பாகவே நல்லதா அல்லது கெட்டதா என்பது உண்மையான கேள்வி அல்ல. மாறாக, எந்த வகையான சூரியஆற்றல் நீர்ப்பாசன மாதிரி, எங்கு பயன்படுத்தப்படுகிறது?, என்ன ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன? என்பதே உண்மையான கேள்வியாகும்.


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் உள்ள மின்கட்டமைப்புடன் தொடர்பில்லாத தனித்த விசைக் குழாய்களில்கூட (standalone off-grid pumps), சூரியப் விசைக் குழாய்களின் பயன்பாடு மற்றும் டீசல் மற்றும் மின்கட்டமைப்பு மின்சாரத்தை எந்த அளவிற்கு மாற்றுகின்றன என்பது பம்பின் நிறுவப்பட்ட திறன், நிலத்தடி நீர் மட்டத்தின் ஆழம் மற்றும் விவசாயிகள் விசைக் குழாய்களைப் பயன்படுத்திய ஆண்டுகளின் எண்ணிக்கைகளைப் பொறுத்து பரவலாக மாறுபடுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன.

பல்வேறுபட்ட விளைவுகள்


இரண்டாவதாக, தற்போதைய விவாதம், உள்ளூர் நீரியல் புவியியல் மற்றும் விவசாயத்தின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டு, நிலத்தடி நீர் விளைவுகளைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக சூரிய ஆற்றலைக் கருதுகிறது. விவசாயிகளின் நீர்ப்பாசனப் பழக்கவழக்கங்களில் சூரியஆற்றல் நீர்ப்பாசனத்தின் தாக்கம், உள்ளூர் நீரியல் நிலவியல், பயிர் சாகுபடி முறைகள், நீர்ப்பாசனத்தின் இறுதிநிலை வருமானம் மற்றும் மண் வகை போன்ற பல காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.


குறைந்த நீர் சேமிப்புத் திறன் கொண்ட கடினப் பாறை நீர்ப்படுகைகள் உள்ள பகுதிகளிலும், மழையை நம்பிப் பயிரிடப்படும் பகுதிகளிலும், ஒவ்வொரு கூடுதல் அலகு நீர்ப்பாசன நீரும் அதிக இறுதிநிலை நன்மைகளைத் தருவதால், சூரியஆற்றல் மற்றும் சூரியஆற்றல் அல்லாத பயன்பாடுகளுக்கு இடையே நீர் பயன்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை (பிந்தைய நிலையில், ஆற்றல் மூலத்தைப் பொருட்படுத்தாமல்). கொள்கைகளை வடிவமைக்கும்போது, விளைவுகளில் ஏற்படும் இந்த வேறுபாட்டை ஒரு முக்கியக் கருத்தாகக் கொள்ள வேண்டும்.


பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற பகுதிகளில், நீர்ப்பாசனம் ஏற்கனவே பரவலாக இருப்பதாலும், நெல் மற்றும் கோதுமை போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்துவதாலும், நீர்ப்பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்பில்லை. இதனால், சூரியஆற்றல் நீர்ப்பாசனம் மேலும் நிலத்தடி நீர் அதீத சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்பது சாத்தியமற்றதாகிறது. இத்தகைய பகுதிகளில் உள்ள முக்கியக் கேள்வியானது, சூரியஆற்றல் நிலத்தடி நீருக்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்பதல்ல, மாறாக அது நீர், ஆற்றல் மற்றும் உணவு அமைப்புகளை மேலும் நிலையானதாக மாற்ற முடியுமா என்பதுதான். மானியம் பெறும் புதைபடிவ எரிபொருள் மின்சாரத்திற்குப் பதிலாக மின்கட்டமைப்புடன் (grid) இணைக்கப்பட்ட சூரிய ஆற்றலையைப் பயன்படுத்துவது, மானியச் செலவுகளைக் குறைத்து, வெளியேற்றப்படும் புகையின் அளவைக் குறைத்து, மேலும் திறமையான நீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.



மறுபுறம், கிழக்கு இந்தியா ஒரு மாறுபட்ட தன்மையை அளிக்கிறது. அங்கு நீரை விட எரிசக்தி கிடைப்பதாலேயே நீர்பாசன விரிவாக்கம் அதிகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் பகுதிகள் மழையை நம்பியே இருக்கின்றன. இதனால் விவசாயிகள் அதிக டீசல் விலை மற்றும் பாசனத்திற்கான நம்பகமற்ற மின்சாரம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். அத்தகைய பகுதிகளில், சூரிய ஆற்றல் மூலம் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசனம் விவசாய உற்பத்தித்திறனையும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறனையும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும்.


நிலத்தடி நீர் தொடர்பான சூரியப் பாசனக் கொள்கையானது, சூழலுக்கு ஏற்ற சூரியப் பாசன மாதிரிகளைப் பயன்படுத்துதல், வலுவான நிலத்தடி நீர் கண்காணிப்பு மற்றும் உருவாகும் அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறியும் தகவமைப்பு மேலாண்மை ஆகியவற்றுடன் இணைந்த ஒரு வேறுபட்ட பிராந்திய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதை இது காட்டுகிறது.


உமிழ்வுகள், மானியச் சுமைகள்


மூன்றாவது குறைபாடு என்னவென்றால், சூரிய ஆற்றல் நீர்ப்பாசனத்தை ஒரு நீர் அல்லது ஆற்றல் சார்ந்த நடவடிக்கையாகவோ மட்டும் தனித்து மதிப்பிடும்போது, அதன் விளைவுகள் நீர், ஆற்றல் மற்றும் உணவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது. உதாரணமாக, இந்தியாவில் நிலத்தடி நீர் பாசனம் ஆண்டுக்கு 45-62 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை உருவாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்கள் முழுவதும் விவசாய மின்சார மானியங்கள் ஆண்டுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளன. சூரிய ஆற்றல் நீர்ப்பாசனம் கார்பன் உமிழ்வு மற்றும் இந்த மானியங்களால் ஏற்படும் நிதிச் சுமை ஆகிய இரண்டையும் குறைக்க உதவும்.


குஜராத்தில் இருந்து வரும் மதிப்பீடுகளின்படி, மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு சூரிய விவசாயியும், பண்ணையில் பயன்படுத்தும் சூரிய ஆற்றல் மற்றும் மின் கட்டமைப்புக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு சுமார் 12.3 டன் CO2 உமிழ்வைத் தவிர்க்க முடிகிறது. அதே நேரத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் அரசாங்க முதலீடுகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை மானியங்கள் ஈடு செய்தன. இந்தியாவின் 25 மில்லியனுக்கும் அதிகமான விவசாயப் விசைக் குழாய்களில் இதை விரிவுபடுத்தும்போது, தணிப்பு மற்றும் நிதிசார் தாக்கங்கள் கணிசமானவையாக இருக்கும்.


எனவே, சூரிய ஆற்றல் நீர்பாசனம் நிலத்தடி நீர் அபாயங்களை மோசமாக்குமா என்பதல்ல நாம் கேட்கவேண்டிய கேள்வி. மாறாக, அதன் பலன்களை அதிகபட்சமாகப் பெறுவதற்கு சூரிய ஆற்றல் பாசனத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்பதே ஆகும்.


அணுகலை விரிவுபடுத்துதல்


கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் வேளாண் சூரிய ஆற்றல் திட்டமான PM-KUSUM, 2.5 மில்லியனுக்கும் அதிகமான சூரிய ஆற்றல் விசைக் குழாய்களை நிறுவியுள்ளது. இதன் மூலம், மானியங்கள் வழியாக சிறு விவசாயிகளுக்கு அவை மலிவு விலையில் கிடைக்கின்றன. அரசாங்கம் PM-KUSUM 2.0 திட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், நாட்டின் ஏற்கனவே அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்பட்ட நிலத்தடி நீரை மேலும் மோசமாக்காமல், தூய்மையான ஆற்றல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதே சவாலாக உள்ளது.


நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய ஆற்றலைத் தனிப்பட்ட விசைக் குழாய்கள் மூலமாகவோ அல்லது முழு வேளாண் மின்சார விநியோக அமைப்புகளையும் சூரிய ஆற்றலாக மாற்றுவதன் மூலமாகவோ விரிவுபடுத்தலாம். சிறந்தபட்சமாக, இந்த இரண்டு மாதிரிகளும் நீரைச் சேமிக்கும் விவசாயிகளுக்குப் பலனளிப்பதோடு, ஆற்றல் விநியோக நிறுவனங்கள் (distribution companies (DISCOMs)) தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கும் உதவ வேண்டும்.


இருப்பினும், உபரி மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு விற்பதன் மூலம் நீரைச் சேமிக்க விவசாயிகளுக்குப் பணம் வழங்கும் தற்போதைய அணுகுமுறை குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்வழங்கி அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ஆனால் அதன் தற்போதைய வடிவம் விசைக் குழாய்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை மாற்றுவதற்குப் பெரிதாக உதவுவதில்லை. எனவே, இரண்டு மாதிரிகளையும் மேம்படுத்த வேண்டும்.



தனிநபர் நீரேற்று விசைக் குழாய் மாதிரிக்கு, எளிமையான மின்கட்டமைப்பு இணைப்பு நடைமுறைகளும், நீர் மற்றும் பயிர்களின் உள்ளூர் மதிப்பை பிரதிபலிக்கும் கவர்ச்சிகரமான மீள் கொள்முதல் விலைகளும் (attractive buyback prices) தேவைப்படுகின்றன. மேலும், இதற்கு ஆதரவளிக்க மின் விநியோக நிறுவனங்களும் (DISCOMs) ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்கிடையில், விநியோக நிறுவனங்களுக்கு (DISCOMs) மட்டும் பயனளிக்காமல், நீர் மற்றும் ஆற்றல் பயன்பாடு இரண்டையும் குறைப்பதற்காக, மின் விநியோகக் குழாய் மட்டத்திலான சூரிய ஆற்றல் பயன்பாட்டானது நீர் சேமிப்பு ஊக்கத்தொகைகளுடன் இணைக்கப்பட வேண்டும். பஞ்சாபின் ‘நீரைக் காப்பாற்று, பணத்தைக் குறை’ (Pani Bachao, Paisa Kamao) மற்றும் ஹரியானாவின் ‘என் நீர் என் விராசத்’ (Mera Pani Meri Virasat) திட்டங்களைப் போலவே, நுண் பாசனத்திற்கான ஆதரவு மற்றும் நீரேற்றுவதைக் குறைப்பதற்கான நேரடிப் பணப் பரிமாற்றங்கள் போன்றவை இதில் அடங்கும்.


இருப்பினும், விவசாயிகளுக்கு இன்னும் நம்பகமான நீர்ப்பாசன வசதி இல்லாத இடங்களில், நீரைச் சேமிப்பதைவிட, நீர் கிடைப்பதை விரிவுபடுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, குறைந்த நீர்ப்பாசனம், மோசமான மின் கட்டமைப்பு வசதி மற்றும் குறைந்த நிலத்தடி நீர் அபாயம் உள்ள பகுதிகளில், தனித்த சூரிய ஆற்றல் விசைக் குழாய்களே விரும்பத்தக்க தேர்வாக இருக்க வேண்டும். தனிநபர் உரிமையில் கவனம் செலுத்துவதை விட, இந்தியாவின் மிகவும் நீர்ப்பாசன வசதியற்ற பகுதிகளில் உள்ள நீர் பயனர் சங்கங்கள், நீர் விற்கும் தொழில்முனைவோர் மற்றும் விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவற்றை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


முகமது ஃபைஸ் ஆலம், சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் மூத்த பிராந்திய ஆராய்ச்சியாளர் ஆவார். அலோக் சிக்கா, சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி மற்றும் இந்தியா, பங்களாதேஷுக்கான முன்னாள் நாட்டுப் பிரதிநிதி ஆவார்.


Original Link: If solar irrigation is over-drawing groundwater, you’re doing it wrong

Share:

மேற்கூரை சூரியமின் சக்தி உற்பத்தியில் சாதனை அளவிலான வளர்ச்சி இருந்தபோதிலும், கேரளா ஏன் இன்னும் மின்விநியோகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது? - ஷாஜு பிலிப்

வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் சூரியஒளி மின்தகடுகள் அமைப்பது மின்சார விநியோகத்தை மேம்படுத்த வேண்டுமல்லவா? ஆனால், இதற்கான விடை நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளாவின் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டு முறைகள், அம்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியமின் உற்பத்தியால் கிடைக்கக்கூடிய நன்மைகளை எவ்வாறு குறைக்கின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.



பிரதமரின் சூர்ய கர் யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின்கீழ், வீடுகளின் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகளைப் பொருத்துவதில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா திகழ்கிறது.


பிரதமரின் சூர்ய கர் திட்டம் (PM Surya Ghar Scheme): வீடுகளின் மேற்கூரையில் சூரியஒளி மின்தகடுகள் அமைத்து இலவச / குறைந்த செலவில் மின்சாரம் பெற ஒன்றிய அரசு வழங்கும் மானியத் திட்டம். 


இந்தத் திட்டம் நாடு முழுவதும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், கேரள மாநிலம் இதை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. மேற்கூரை சூரியமின் உற்பத்தியில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைவிட உற்பத்தி அளவில், கேரளா தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.


இருப்பினும், இந்த வெற்றி கேரளாவின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு புதிய சவாலையும் உருவாக்கியுள்ளது. முதன்முதலில் இது முரண்பாடாகத் தோன்றலாம்—அதிகப்படியான மேற்கூரை சூரியஒளி மின் உற்பத்தி அமைப்புகள் மின் விநியோகத்தை மேம்படுத்தத்தானே செய்ய வேண்டும்?


ஆனால், இதற்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளா மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை, அந்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியஒளி மின் உற்பத்தியின் பலன்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது.


கேரளாவின் சூரிய மின்சக்தி வெற்றிப் பயணம்


மாநில அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு மே மாத முடிவில் கேரளாவின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் 2,508 மெகாவாட்டாக (MW) உயர்ந்துள்ளது. இதில் பெரும் பகுதியை வகிப்பது வீடுகளின் மேற்கூரைகளில் பொருத்தப்படும் சூரியஒளி மின்தகடுகள் ஆகும். இவை, மட்டுமே 2,036 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.



பிரதமரின் சூர்ய கர் (PM Surya Ghar) திட்டத்தின்கீழ், கேரளாவில் 2.96 லட்சம் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, 3,03,531 குடும்பங்கள் இதனால் பயன்பெற்று வருகின்றன. இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே 1,150 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் கூடுதலாகக் கிடைத்துள்ளது.


இதனுடன் ஒப்பிடுகையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் 22,383 சூரியஒளி மின் அமைப்புகள் மூலம் 33,843 குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளன. அங்கு நிறுவப்பட்டுள்ள மொத்த மின்திறன் 91 மெகாவாட் ஆகும்.


ஒட்டுமொத்தமாக, கேரளாவின் அனைத்து வகையான ஆற்றல் மூலங்களில் இருந்தும் கிடைக்கக்கூடிய மொத்த மின் உற்பத்தியில் சூரியஒளி மின்சாரம் மட்டுமே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிக அதிகம் ஆகும். இந்திய அளவில் உள்ள மொத்த மின்திறனான 532 ஜிகாவாட்டில் (GW), சூரியஒளி மின்சாரம் 150 ஜிகாவாட் என்கிற அளவில் மட்டுமே பங்களிக்கிறது.

அப்படியானால் இதிலுள்ள பிரச்சனை என்ன?


தொழில்துறையில் நன்கு வளர்ச்சியடைந்த பல மாநிலங்களில், மின்சாரத்தின் பயன்பாடு பகல் நேரத்திலேயே மிக அதிகமாக இருக்கும். ஆனால், கேரளாவில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரத்திலேயே மின்சாரத் தேவை அதிகரிக்கிறது. ஏனெனில், அங்குள்ள மின்சாரத் தேவையில் 75 சதவீதம் வீடுகளுக்கே தேவைப்படுகிறது. மேலும், தொழிற்துறை மற்றும் வணிகரீதியான மின்சாரப் பயன்பாட்டின் அளவு மொத்தப் பயன்பாட்டில் சுமார் 20 சதவீதம் மட்டுமே ஆகும்.


இது ஒரு பெரிய முரண்பாட்டை உருவாக்குகிறது: பகல் நேரத்தில் சூரியஒளி மின்சாரம் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் மின்சாரத்திற்கான தேவயோ சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படாத இரவு நேரத்தில்தான் மிக அதிகமாக உள்ளது.


இந்தப் பிரச்சினை கேரள மாநிலத்தில் மட்டும் அல்ல. இந்தியா முழுவதிலும் உள்ள மின்சாரக் கட்டமைப்புகளும் இரவு நேரத்தில்தான் மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இரவு நேரத்தில் குறைவான மின்சாரத் தேவை இருந்தபோதிலும், போதிய மின் விநியோகம் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும். ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை வேறுபட்டதாகும், அங்கு இரவு நேரத்தில்தான் மின்சாரத் தேவை அதிகரிக்கின்றன.


இதன் விளைவாக, பகலில் உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்தில் பெரும்பகுதி உடனுக்குடன் பயன்படுத்தப்படுவதில்லை.


கேரள மாநில மின்சார வாரியத்தின் (Kerala State Electricity Board (KSEB)) தரவுகளின்படி, மேற்கூரை சூரியஒளி மின்தகடுகளை அமைத்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்—அதாவது 'உற்பத்தியாள நுகர்வோர்கள்' (Prosumers)—தாங்கள் பகலில் உற்பத்தி செய்யும் சூரியஒளி மின்சாரத்தில் 36 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றன/ர். மீதமுள்ள 64 சதவீதம் மின்சாரம் மாநிலத்தின் முதன்மை மின் தொகுப்பிற்குப் அனுப்பப்படுகிறது. பிறகு இரவு நேரத்தில், இந்த உற்பத்தி நுகர்வோர்கள் தாங்கள் மின் தொகுப்பிற்கு அனுப்பிய மின்சாரத்தில் சுமார் 45 சதவீத அளவை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.

உற்பத்தியாள நுகர்வோர் (Prosumer) என்பது, சொந்தப் பயன்பாட்டிற்காகத் தங்களது வீட்டுக் கூரையில் சூரியஒளி மின்உற்பத்தித் தகடுகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், தங்களுக்கு மிஞ்சிய கூடுதல் மின்சாரத்தை மாநில மின் தொகுப்பிற்கு வழங்கும் வீடுகள் அல்லது வணிக நிறுவனங்களே உற்பத்தி நுகர்வோர் (Prosumer) என்று அழைக்கப்படுகின்றன.


உற்பத்தியாள நுகர்வோர் (Producer + Consumer = Prosumer): நுகர்வோரே உற்பத்தியாளராக மாறுவது. அதாவது மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராக மட்டுமே இருக்காமல், அதை அவரே சொந்தமாக உற்பத்தியும் செய்யும் வாடிக்கையாளர் ஆவார்.


இது மின் விநியோகக் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது?


பகல் நேரத்தில், வீட்டின் கூரைகளில் நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்த மின்னழுத்த விநியோகக் கட்டமைப்பில் செலுத்தப்பகிறது. மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் நேரத்தில், சூரியமின் சக்தி அதிகமாக விநியோகிக்கப்படும்போது கட்டமைப்பின் மின்னழுத்தம் உயர்கிறது. இதனால் மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.


பொதுவாக 3 கிலோவாட் (kW) திறன் கொண்ட ஒரு மேற்கூரைச் சூரியமின் சக்தி அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 12 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.  ஆனால், ஒரு வீடு சராசரியாக 6 யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, நுகர்வோரே உற்பத்தியாளராகவும் இருக்கும் 'உற்பத்தி நுகர்வோர்கள்' (Prosumers) தங்கள் மின்சாரப் பயன்பாட்டை மாலை மற்றும் இரவு நேரங்களுக்கு மாற்றுகின்றனர். இது மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் மின்சாரத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது.



மேற்கூரை சூரியஒளி மின்தகடுகள் கட்டமைப்பு பரவலான பிறகு, கேரளாவில் மின்சாரத்தில் இயங்கும் சமையல் அடுப்புகளின் (Induction cookers) விற்பனை அதிகரித்ததை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகக் கூறலாம்.


இதன் காரணமாக, தேசிய மின்சாரச் சந்தையில் இரவில் மின் விநியோகம் குறைவாக இருக்கும் போது, அதிகரித்து வரும் நுகர்வோரின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கேரளா மின்வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


கேரளாவின் மின்சார உற்பத்தி கலவை 


கேரளா பாரம்பரியமாக நீர்மின்சாரத்தையே (Hydroelectric power) பெருமளவில் நம்பியிருக்கிறது. இருப்பினும், சமீபத்திய தரவுகளின்படி, அம்மாநிலத்தின் தினசரி மின்சாரத் தேவையில் 83 சதவீதம் இப்போது தேசியச் சந்தையில் இருந்து பெறப்படும் மின்சாரக் கொள்முதல் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கேரளாவின் சராசரி தினசரி மின்சாரப் பயன்பாடு 88.45 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது.


இதில், கேரளா நீர், காற்று மற்றும் சூரியசக்தி மூலமாகத் தினசரி 15 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 73.41 மில்லியன் யூனிட்கள் தேசிய மின்சாரச் சந்தையிலிருந்து போட்டி விலையில் வாங்கப்படுகின்றன. மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரங்களில் இதன் விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் வரை உயரக்கூடும் என்கின்றனர்.


கடந்த பத்து ஆண்டுகளில், கேரளா தனது நீர்மின் உற்பத்தித் திறனில் வெறும் 150 மெகாவாட் (MW) அளவை மட்டுமே அதிகரித்துள்ளது. அதேவேளையில், அதன் சூரிய மின்உற்பத்தித் திறன்  2,400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.


முன்னோக்கிச் செல்லும் பாதை 



நாட்டின் பிற பகுதிகள் எதிர்கொள்ளும் அதே சிக்கலைத்தான் கேரள மாநிலமும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Renewable energy) பயன்பாடு அதிகரிக்கும் போது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும் மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரத்திற்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வாக அமைவது மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் 'ஆற்றல் சேமிப்பு' (Energy storage) முறைதான் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


இதற்காகக் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை மீண்டும் மின் விநியோகக் கட்டமைப்பிற்கு அனுப்பாமல், அதனைச் சேமித்து வைக்க 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பை' (Battery Energy Storage System (BESS)) நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை, இரவில் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


மாநில மின்சார வாரியங்களில் இத்தகைய புதிய அணுகுமுறையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் கேரளா மாநில மின்சார வாரியமும் (KSEB) ஒன்றாகும். இதன் முதல் 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு' (BESS) திட்டம், 125 மெகாவாட் (MW) சேமிப்புத் திறனுடன், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மைலாட்டி (Mylatti) பகுதியில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்தடுத்த கட்டங்களில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மலப்புறத்தில் உள்ள அரீக்கோடு (Areekode) ஆகிய இடங்களில் வெவ்வேறு சேமிப்புத் திறன்களுடன் கூடிய, பல மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) திட்டங்கள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 3 கிலோவாட்டுக்கு (kW) மேல் திறன் கொண்ட அனைத்து சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மின்கலன் சேமிப்பு அமைப்புகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த முன்மொழிவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.


Original Link: Kerala is seeing record rooftop solar adoption. So why is it still facing power supply issues?

Share:

சூரிய ஆற்றலை அறுவடை செய்தல்: கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை சூரிய ஆற்றல் எவ்வாறு வழிநடத்துகிறது? - ஸ்ரேயாஸ் கௌடா

இது ஒரு வலுவான வாக்குறுதியை அளிக்கிறது: சூரிய ஒளியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், வாய்ப்புகள், சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை உருவாக்குவதே அந்த வாக்குறுதியாகும்.


வேளாண்மையோடு நெருங்கிய தொடர்புடைய இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம், தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளி என்ற ஆதாரத்தைக் கொண்டு அமைதியாகவும் அதேசமயம் வலிமையாகவும் மாறி வருகிறது. காலநிலை மாற்றங்கள், உயர்ந்துவரும் செலவுகள் மற்றும் நம்பகமற்ற மின்சாரம் போன்ற சவால்களை உழவர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், சூரிய ஆற்றல் என்பது ஒரு மாற்று வழி என்பதோடு நின்றுவிடாமல், நிலையான வேளாண் வளர்ச்சியின் முக்கியத் தூணாகவும் மாறி வருகிறது.


வேளாண் தொழிலின் அடிப்படைத் தேவை அதிகப்படியான ஆற்றல் ஆகும். நீர் பாசனம் மற்றும் நீர் மேலாண்மை முதல், விளைபொருட்களைச் சேமித்து வைப்பது மற்றும் பதப்படுத்துவது வரை, வேளாண்மையின் உற்பத்தித் திறனில் மின்னாற்றல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்திய வேளாண் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இரண்டு முக்கிய சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒன்று, மானியம் வழங்கப்பட்டாலும் நம்பகத்தன்மை இல்லாத மின்சாரக் கட்டமைப்பு வசதியைச் சார்ந்திருப்பது; மற்றொன்று, டீசல் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்காகத் தொடர்ந்து செலவிடப்படும் அதிகப்படியான தொகை. சூரிய ஆற்றல் இந்தத் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. இது வேளாண் நிலங்களிலேயே சுத்தமான, நம்பகமான மற்றும் சிக்கனமான மின்சாரத்தை நேரடியாக வழங்குகிறது.


சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பாசனம்: வேளாண் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்.


சூரிய ஆற்றலால் இயங்கும் நீர் பாசனம், வேளாண் தொழிலில் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்றாகும். இது டீசல் பம்புகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற மின்சார விநியோகத்திற்கு மாற்றாக அமைகிறது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களுக்கு பகல் நேரத்தில் நிலையான மின்சாரம் கிடைப்பதுடன், பயிர்களுக்கு சரியான நேரத்தில் நீர் பாய்ச்சவும் உதவுகிறது.


இந்த மாற்றம் தெளிவான பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தும் விவசாயிகள், தங்கள் வருமானத்தில் சுமார் 30-35% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், சிறந்த விளைச்சல் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அதிக லாபம் தரும் பயிர்களை சாகுபடி முடிவதே ஆகும். நம்பகமான நீர்ப்பாசன வசதி பயிர்களின் வாட்டத்தைக் குறைப்பதோடு, குறிப்பாக, சீரற்ற மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.


அதேபோல, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். வேளாண் சாகுபடி செலவுகளில் பெரும்பகுதியாக இருக்கும் டீசல் செலவுகள், இதன் மூலம் முற்றிலும் இல்லாமல் போகின்றன. இந்தச் சூரிய ஆற்றல் அமைப்புகள் நீண்டகால சேமிப்பையும், கணிக்கக்கூடிய எரிசக்தி செலவுகளையும் வழங்குகின்றன. இது இந்தியாவின் வேளாண் சமூகத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்களுக்கு பெரும் பயனை அளிக்கிறது.


சூரிய மின்சக்தி விரிவாக்கம்: கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் தேசிய அளவிலான தாக்கம்.


இந்தியாவின் கொள்கைகள் வேளாண்துறையில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன. பிரதம மந்திரி - விவசாயிகளுக்கான சூரிய சக்தி மின்சார திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டிற்குள் சுமார் 34,800 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தியை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன முறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.


இந்த முயற்சி தூய்மையான எரிசக்தியைப் பெறுவது மட்டுமல்லாமல், உள்ளூரிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றல் திட்டமானது, வேளாண் தொழிலாளர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டும் இருக்காமல், மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் மாற உதவுகிறது. அவர்கள் தங்களிடம் மீதமுள்ள கூடுதல் மின்சாரத்தை அரசு மின்தொகுப்பிற்கு விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும் என்கின்றனர்.



ஆற்றல் வளங்களைக் கடந்து : கிராமப்புற மீள்திறனைக் கட்டமைத்தல்


சூரிய ஆற்றலின் தாக்கம் பணத்தைச் சேமிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இது கிராமப்புற வாழ்க்கையை மூன்று முக்கிய வழிகளில் மாற்றியமைத்து வருகிறது:


1. ஆற்றல் சுதந்திரம்: வேளாண் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மின்சார விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், சீரற்ற மின்சாரக் கட்டமைப்பு மற்றும் அடிக்கடி மாறும் எரிபொருள் விலைகளைச் சார்ந்திருக்கும் நிலை குறைகிறது.


2. கிராமப்புற தொழில்முனைவோர்: கூட்டு நீர் பாசனம் மற்றும் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சிறு தொழில்கள் போன்ற பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. பல மாநிலங்களில், சமூக சூரிய மின்சக்தி திட்டங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பெண்கள் தலைமையேற்று நிர்வகிக்கும் தொழில்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றன.


3. காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன்: அதிகரித்துவரும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கணிக்க முடியாத வானிலை சூழலில், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் நீர்ப்பாசனம் ஒரு நம்பகமான தீர்வை வழங்குகிறது. இதை சொட்டு நீர் பாசனம் போன்ற சிக்கனமான முறைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, நீரின் பயன்பாடு பெருமளவு மேம்படுகிறது. இது நிலையான பயிர்சாகுபடிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.


அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் புதிய கண்டுபிடிப்புகள்


வேளாண் நிலங்களில் பயிர்களோடு சேர்த்து சூரிய மின்சக்தி தகடுகளையும் அமைக்கும் 'Agrivoltaics' போன்ற புதிய கண்டுபிடிப்புகள் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இத்தகைய முறைகள் நிலத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதுடன், மண்ணின் ஈரப்பதம் குறைவதைத் தடுக்கின்றன. மேலும், சில நேரங்களில் இவை பயிர் விளைச்சலை அதிகரிப்பதோடு, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியையும் உற்பத்தி செய்கின்றன.


மேலும், சூரிய ஆற்றலால் இயங்கும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், உணவுப் பதப்படுத்தும் அமைப்புகள் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் முயற்சிகள் ஆகியவை மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துகின்றன. இதன்மூலம் சூரிய ஆற்றலின் நன்மைகள் வேளாண்துறையைத் தாண்டி பல்வேறு துறைகளுக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

சவால்களும் எதிர்காலப் பாதையும்


சூரிய ஆற்றல் மிகுந்த நம்பிக்கையை அளித்தாலும், இந்தியாவின் கிராமப்புறங்களில் அதனைச் செயல்படுத்துவதில் இன்னும் சில தடைகள் நீடிக்கவே செய்கின்றன. ஆரம்பக்கட்டக் கட்டுமானப் பணிகளுக்கான அதிகப்படியான செலவு, கடன் வசதிகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை சில பகுதிகளில் இதன் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகின்றன. இந்தச் சவால்களைச் சரிசெய்ய, புதிய நிதி உதவித் திட்டங்கள், சிறு கிராமங்கள் வரை சென்றடையும் சிறப்பான விநியோக முறை மற்றும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு ஆகியவை அவசியமாகிறது.


இருப்பினும், நீண்டகால அடிப்படையில் சூரிய ஆற்றலின் வளர்ச்சி மற்றும் அதன் முன்னேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.


முடிவுரை: சூரிய ஒளியிலிருந்து நிலையான வளர்ச்சி வரை


சூரிய ஆற்றல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த தீர்வு மட்டுமல்ல. அது கிராமப்புறங்களில் ஒரு பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. வேளாண் தொழிலாளர்களுக்கான முதலீட்டுச் செலவுகளைக் குறைப்பது, அவர்களின் வருமானத்தை உயர்த்துவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்துவது எனப் பல முக்கிய சவால்களைத் தீர்க்கிறது.


வேளாண் துறையின் எதிர்காலம் கிராமங்களின் நலனைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், சூரிய ஆற்றல் ஒரு வலுவான நம்பிக்கையை அளிக்கிறது: இது சூரிய ஒளியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் மற்றும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை ஏற்படுத்தவும் உதவுகிறது.


ஸ்ரேயாஸ் கௌடா, ‘Oorjan’ நிறுவனத்தின் விற்பனை மற்றும் செயல்பாட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.


Original link:

Harvesting the sun: How solar energy is powering the future of rural farming economies   

 

Share: