கெட்ட கொழுப்பைக் (Bad Cholesterol) குறைக்க ஒரே ஊசியா? புதிய மரபணு-திருத்த சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது? -ரிங்கு கோஷ்

      VERVE-102 என்பது கெட்ட கொழுப்பான, குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் (Low-Density Lipoprotein(LDL)) கொழுப்பைக் குறைக்க உருவாக்கப்பட்ட ஒரு ஒற்றை-டோஸ் மரபணு திருத்த (Gene-editing) சிகிச்சையாகும். இது உடலில் உள்ள PCSK9 மரபணுவை குறிவைத்து, மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.


ஒரு ஆரம்பகட்ட சோதனையில், வெர்வ்-102 (VERVE-102) மருந்தானது குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் (LDL) கொழுப்பை சுமார் 62% குறைத்தது. குடும்பத்தில் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு வரலாறு கொண்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை குறிப்பாகப் பயனுள்ளதாக அமையலாம். ஆனால் இதன் விளைவு பல பத்தாண்டுகளுக்கு நீடிக்குமா என்பதை அறிய இன்னும் பலதரப்பட்ட சோதனைகள் தேவை.

அமெரிக்காவின் முன்னணி மருந்து நிறுவனமான எலி லில்லி (Eli Lilly) மற்றும் அதன் துணை நிறுவனமான வெர்வ் தெரபியூடிக்ஸ் (Verve Therapeutics) வழங்கும் ஒரு புதிய பரிசோதனை சிகிச்சையானது, இதயநோய் நிபுணர்களிடையே தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிகிச்சையானது, ஒரே ஊசி மூலம் செலுத்தப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) அல்லது கெட்ட கொழுப்பை (bad cholesterol) ஒரேயடியாக அழிக்கக்கூடும். மேலும், ஒரு சோதனையில், சிகிச்சைக்குப் பிறகு 18 மாதங்கள் வரை குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) அளவை 62% அளவுக்குக் கடுமையாகக் குறைத்தது. இந்த சிகிச்சையானது, கல்லீரலுக்குள் இருக்கும் PCSK9 எனப்படும் கொழுப்பு தொடர்பான மரபணுவை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்வதன் மூலம், LDL-ஐ நிரந்தரமாகக் கட்டுப்படுத்துகிறது.


        PCSK9 (Proprotein convertase subtilisin/kexin type 9) என்பது மனித உடலில் உள்ள ஒரு வகையான புரதமாகும். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த புரதம் அதிகமாக இருந்தால், கல்லீரல் எல்.டி.எல் கொழுப்பை இரத்தத்தில் இருந்து நீக்குவதைக் குறைக்கிறது. இதனால் உடலில் கெட்டக் கொழுப்பு அதிகரிக்கிறது.


LDL "கெட்டக் கொழுப்பு" (bad cholesterol) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் அளவு அதிகமாக இருக்கும்போது அது தமனிகளின் சுவர்களில் ஒட்டிக்கொண்டு, பிளேக் (plaque) எனப்படும் கடினமான கொழுப்புப் படிவுகளை உருவாக்குகிறது. இந்தப் படிவுகள் தமனிகளைச் சுருக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.


VERVE-102 ஒரு பாரம்பரிய மருந்து அல்ல. இது உடலுக்குள் (நோயாளியின் உடலுக்குள் நேரடியாகச் செலுத்தப்படும்) செலுத்தப்படும் ஒரு வகை மரபணுத் திருத்தம் ஆகும். இது, டி.என்.ஏ-வை மாற்றி, மரபணுவின் செயல்பாட்டையும் மாற்றியமைக்க விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. மருந்துகள் மூலம் கொலஸ்ட்ரால் உற்பத்தியைத் தற்காலிகமாகத் தடுப்பதற்குப் பதிலாக, ஆராய்ச்சியாளர்கள் நரம்பு வழி உட்செலுத்துதல் மூலம் (intravenous infusion) வழங்கப்படும் மரபணு வழிமுறைகளைப் பயன்படுத்தி, கல்லீரல் செல்கள் அதை உற்பத்தி செய்வதிலிருந்து நிரந்தரமாக மாற்றுகின்றனர்.


VERVE-102 முதல் கட்ட மருத்துவப் பரிசோதனையின் இணை ஆசிரியரும், பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் எடின்பர்க் இதயவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் டேவிட் ஈ. நியூபி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “பாரம்பரிய சிகிச்சையில், குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தைக் (LDL) குறைக்கும் விளைவைத் தக்கவைக்க நீங்கள் தொடர்ந்து மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். VERVE-102 இல், கல்லீரல் செல்களுக்குள் இருக்கும் டி.என்.ஏ-வில் ஒரு முறை மட்டும் இலக்கு வைக்கப்பட்ட மாற்றத்தைச் செய்வதன் மூலம் அந்த விளைவு தொடர்கிறது,” என்று கூறினார்.


"ஒரே ஒரு நரம்பு வழி உட்செலுத்தலுக்குப் பிறகு, கல்லீரலின் PCSK9 உற்பத்தி செய்யும் திறனை நிரந்தரமாகக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த 'ஒரே ஒரு முறை' (one-and-done) மேற்கொள்ளப்படும் இந்தக் கொலஸ்ட்ரால் சிகிச்சையானது, காலப்போக்கில் வழக்கமான மருந்துகளுக்கு மாற்றாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.


வாழ்நாள் முழுவதும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கான, ஒரே ஒரு முறை மரபணு சிகிச்சையே, ஒரு காலத்தில் எதிர்காலக் கருத்தாகக் கருதப்பட்ட ஒன்று, தற்போது மனித மருத்துவப் பரிசோதனைக்குள் நுழையத் தொடங்கியிருப்பதைக் காட்டுவதால் இந்த ஆய்வு உற்சாகமளிக்கிறது. இத்தகைய மாற்றத்தை வாழ்நாள் முழுவதும் நீடிக்கச் செய்வதால் கிடைக்கும் நன்மைகள், அதனால் ஏற்படும் அபாயங்களை உண்மையாகவே அதிகமாக உள்ளன என்பதை நிரூபிப்பதே இப்போதுள்ள சவாலாகும். தற்போதைய நிலையில், ஸ்டேடின்கள் (statins), எசெடிமிப் (ezetimibe), PCSK9 தடுப்பான்கள் (PCSK9 inhibitors) அல்லது இங்க்லிசிரான் (inclisiran) போன்ற சிகிச்சைகளுக்கு மாற்றாக இல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இது எதிர்காலத்தில் பயன்படக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய வழியாகும்.


PCSK9-ஐ ஏன் குறிவைக்க வேண்டும்?


PCSK9 என்பது இரத்தத்தில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபடும் ஒரு புரதமாகும். PCSK9 மரபணுவில் இயற்கையாகவே சில 'செயல்-இழப்பு' (loss-of-function) மாற்றங்களைக் கொண்டவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் குறைந்த அளவிலான LDL கொழுப்பும், கரோனரி இதய நோய் (coronary heart disease) வருவதற்கான குறைந்த அபாயமும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது ஒரு முக்கியமான குறிப்பை வழங்கியது. அது, PCSK9-இன் செயல்பாட்டைக் குறைப்பது, இதய-இரத்த நாள நோய்களுக்கான (cardiovascular) அபாயத்தைக் குறைக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாக அமையலாம்.


அந்தக் கண்டுபிடிப்பு பின்னர் மருந்து சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. PCSK9 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் (monoclonal antibodies) போன்ற மருந்துகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பையும், இதய-இரத்த நாள பாதிப்பு நிகழ்வுகளையும் கணிசமாகக் குறைக்கக்கூடியவை. பாரம்பரிய மருந்துகள் PCSK9-ஐ தற்காலிகமாகத் தடுக்கின்றன அல்லது அதன் உற்பத்தியைக் குறைக்கின்றன. எனவே, அவற்றின் பலனைத் தக்கவைக்கத் தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், மருந்துகளைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை மாற்றியமைக்கும் வகையில் VERVE-102 வடிவமைக்கப்பட்டுள்ளது.


நோயாளிகளுக்கு ஒரே ஒரு முறை மருந்து செலுத்தப்பட்ட பிறகு, இந்த ஆய்வில் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பின் அளவில் சுமார் 60% குறைவு ஏற்பட்டதை இந்த ஆய்வு காட்டியது. ஆனால், இந்தக் குறைப்பு எவ்வாறு மாரடைப்பு அல்லது பக்கவாதம் (stroke) ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்?


இந்தக் குறைப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பின் அளவில் ஒவ்வொரு 1 mmol/L (மில்லிமோல்/லிட்டர் - இரத்தத்தில் உள்ள பொருட்களின் செறிவை அளவிடும் அலகு) குறைப்பிற்கும், இதய-இரத்த நாள பாதிப்பு நிகழ்வுகளுக்கான அபாயம் சுமார் 20–22% வரை குறைகிறது.


எனவே, ஒருவரின் LDL கொழுப்பு அளவு ஆரம்பத்தில் 4.0 mmol/L-ஆக இருந்தால், அது தோராயமாக 155 mg/dL (மில்லிகிராம்/டெசிலிட்டர்) ஆகும். ஒரு லிட்டரில் பத்தில் ஒரு பங்கில் உள்ள சர்க்கரை அல்லது கொழுப்பு போன்ற பொருளின் செறிவை அளவிட இந்த அலகு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பு அளவு 1.6 mmol/L-ஆகக் குறைந்தால், அது 60% குறைப்பைக் குறிக்கிறது. அவ்வாறான நிலையில், உங்கள் பாதிப்புக்கான அபாயம் பாதியாகக் குறைகிறது.


நான்கு வாரங்களுக்குப் பிறகு, அதிக அளவு மருந்து கொடுக்கப்பட்ட குழுவில் குறிப்பிடத்தக்க அளவிலான குறைப்பு காணப்பட்டது. PCSK9 அளவுகள் சுமார் 88% குறைந்தனடன், LDL கொழுப்பு அளவு சுமார் 62% குறைந்தது. மேலும், LDL கொழுப்பு சராசரியாக சுமார் 78 mg/dL அளவு குறைந்தது.


குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பைக் குறைப்பது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், VERVE-102 மருந்தே மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைத் தடுக்கும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தற்போதைய முடிவுகளைப் புரிந்துகொள்வதில் நோயாளிகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?


எப்போதும் பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைத் தரவுகள் இன்னும் தேவைப்படுகின்றன. இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட கொழுப்பு குறைப்பு தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளும், குறைந்த கொழுப்பு அளவுகள் இதய நோய் தொடர்பான பாதிப்புகள் குறைவதோடு தொடர்புடையவை என்பதைக் காட்டுகின்றன.


மேலும், PCSK9 புரதத்தைத் தடுக்கும் மருந்துகளும் மாரடைப்பைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த புதிய அணுகுமுறைக்கு இது மிகவும் சாத்தியமானதே, ஆனால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.



சில பங்கேற்பாளர்கள் குறைந்தது ஒரு வருடமாவது கண்காணிக்கப்பட்டனர். மேலும், மிக நீண்ட கண்காணிப்புக் காலம் 18 மாதங்களை எட்டியது. இந்தக் காலகட்டத்தில் PCSK9 மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதக் (LDL) கொழுப்பின் குறைப்புகள் ஒப்பீட்டளவில் நிலையானதாகத் தோன்றின. இருப்பினும், ஒரு விளைவு பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்பதை நிரூபிப்பதிலிருந்து 18 மாத காலம் என்பது மிகவும் வேறுபட்டது. இந்தக் குறைப்புகள் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பலனளிக்கின்றனவா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.


மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதற்கோ அல்லது மீண்டும் மீண்டும் ஊசி போட்டுக்கொள்வதற்கோ சிரமப்படும் நோயாளிகளுக்கு, ஒருமுறை மட்டும் அளிக்கப்படும் சிகிச்சை மிகவும் ஈடுபானதாகத் தோன்றுகிறது. ஆனால், ஒரு நிரந்தர மரபணு மாற்றத்திற்கான சாத்தியக்கூறை இந்த வசதி நியாயப்படுத்துகிறதா?


இது மிக முக்கியமானது. நான் ஸ்டேடின் மருந்துகளை (statins) எடுத்துக்கொள்கிறேன். அது ஒரு பெரும் தொல்லை. தொடர்ந்து மருந்துச் சீட்டுகளைப் பெறுவது, அவற்றை எடுத்துக்கொள்ள நினைவில் கொள்வது, இப்படிப் பல சிக்கல்கள் உள்ளன. இது பாதுகாப்பானதாக இருந்தால், ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும். இது ஒரு நிரந்தரமான மாற்றம். மேலும், இதன் நீண்டகால விளைவுகள் என்னவென்று நமக்கு இன்னும் தெரியவில்லை. ஏனெனில், நாம் இந்த மக்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


இருப்பினும், இந்த மரபணுவில் இயற்கையாக நிகழும் மாற்றங்களும் உள்ளன. அவற்றை உடையவர்களுக்கு இதய நோய் குறைவாக இருப்பதுடன், அவர்கள் நீண்ட காலம் வாழவும் வாய்ப்புள்ளது. இந்தச் சோதனை நடத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.


இறுதியில் இது போன்ற ஒரு சிகிச்சைக்கு யார் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இது பரம்பரையாக வரும் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு அல்லது இதய நோய்க்கான மிக அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட வேண்டுமா?


இவர்கள்தான் அதிகப் பலன்களைப் பெறுவார்கள் என்பதால், இவர்களிடமிருந்துதான் நாம் முதலில் தொடங்குவோம். அதன் பிறகு, பரவலான பயன்பாட்டிற்கு முன்பு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுகின்றனவா என்பதை நாம் கவனிக்கலாம்.


Original Link: One shot to lower bad cholesterol? An Expert Explains how new gene-editing therapy works

Share: